01.02.1965 உலகில் மொழிக்காகக் கைதான முதல் பேராசிரியர் சி.இலக்குவனார்
மறைமலை இலக்குவனார் :
என்னுடைய பதிவு 2/5/65 அன்று என் தந்தையார் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தின் படி தளைப்படுத்தப்பட்ட செய்தியைக் குறித்தது. இது தொடர்பாக இன்னும் பல செய்திகளைக் கூறவேண்டும். ஆனால் இதற்கு முன்னதாக 1/2/65 அன்று இந்தியக் குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்ட செய்தியைக் கூறவேண்டும். இதற்கு முன்னர் இதனைப் பதிவு செய்துள்ளேன். எனினும் புதிய நண்பர்கள் பலர் கேட்பதால் அந்தச் செய்தியை மீண்டும் இங்குப் பதிவு செய்கிறேன்.ஏற்கெனவே படித்தவர்கள் கடந்து செல்க.
1/2/1965 மாலை 5/30 இருக்கும். திருப்பரங்குன்றம் பேருந்து நிலையத்திற்கு எதிரில், மலைப்பாதையில் அமைந்திருந்த ‘குறள்நெறி அச்சகம்’ பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. அந்த இந்திஎதிர்ப்புக் கொந்தளிப்புச் சூழலில் அடுத்துவரும் இதழ் அச்சாகிக்கொண்டுள்ளது. முந்தைய நாள் திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியற்கல்லூரியில் காவல்துறையினர் அத்துமீறி நுழைந்து மாணவர்கள் மீது தடியடித்தாக்குதல் நடத்திய கொடுமையை விளக்கும் மாணவர் கையறிக்கை ஒன்று அப்போதுதான் அச்சுப்பொறியில் (டிரெடில்) ஏற்றப்பட்டிருந்தது.
வரவேற்பறையாகச் செயல்பட்ட முன்னறையில் மேலாளர் இருக்கையின் எதிரே என் தந்தையார் அமர்ந்திருந்தார். நான் பொறி இயங்கும் உள்கூடத்திலிருந்து வெளியே வரவேற்பறைக்குத் தற்செயலாக வந்தபோதுதான் காவல்துறையின் ஈப்பு அச்சகத்தின் முன்வந்து நிற்பதைக் கவனித்தேன். பருமனாகவும் நடுத்தர உயரத்துடனும் இரட்டைநாடிக் கட்டமைப்புடன், சதுரமான சட்டகம்கொண்ட மூக்குக் கண்ணாடி அணிந்த ஆய்வாளர் உள்ளே நுழைந்தார்.
இரும்புக்கம்பிகள் மட்டுமே சுற்றுவேலிபோல் அமைந்திருந்தமையால் குறைந்தது பத்துக்காவலர்களாவது வெளியே, திசைக்கொருவராகச் சிதறிய நிலையில் நின்றுகொண்டிருந்தார்கள் எனத் தோன்றியது.
உள்ளே நுழைந்த ஆய்வாளரை நோக்கி’ஐயா, வாருங்கள்! என்ன செய்தி?” என என் தந்தையார் வினவினார்.
“Dr. Ilakkuvanaar! I am Sachchithaanantham,Inspector at Thirupparankundram police station.”
“ம்ம்..சொல்லுங்கள்”
“Dr.Ilakkuvanaar, You are under arrest”
“என்ன காரணத்திற்காக எனத் தெரிந்துகொள்ளலாமா?”
““Dr.Ilakkuvanaar. You are the father of Anti-Hindi agitation”
‘ஐயா! அவ்வளவு பெருமைக்கு நான் உரியவன் அல்லன். இது மாணவர்கள் நடத்தும் போராட்டம். தங்கள் வருங்காலம் குறித்த கவலையில் போராடுகிறார்கள்.”
“No. Dr.Ilakkuvanaar! We know everything. You are leading this agitation. Come on! Let us go”
ஆய்வாளர் சச்சிதானந்தம் சற்று உரத்த குரலுக்கு சொந்தக்காரர். அழுத்தம் திருத்தமாகவும் சுருக்கமாகவும் அவர் நிகழ்த்திய உரையாடல் ஐம்பத்தைந்தாண்டுகள் கடந்தபின்னும் இன்னும் என் அகச்செவியில் ஒலிக்கிறது.
ஒரு பெரிய நீலவண்ணக் காவல்துறைப்பேருந்தும் இரண்டு ஈப்புகளும் வெளியே நின்றுகொண்டிருப்பதை அப்போதுதான் முழுமையாகப் பார்த்தேன்.
ஓர் ஈப்பில் தந்தையாரை ஏற்றிக்கொண்டு ஆய்வாளர் சச்சிதானந்தம் ஏறிக்கொண்டார்.பிறகு உசுபுசு என மூச்சுவிட்டும் உர்ரென உறுமியவாறும் வண்டிகள் கிளம்பின.வெளியே சீருடையில் பத்துப்பேரும் வெள்ளுடையில் பதினைந்துபேரும் நின்றிருந்தார்கள் என்பது அப்போதுதான் எனக்கு உறைத்தது.
ஒருவரைக் கைது செய்ய ஏன் இத்துணைக் காவலர்கள்?? எனக்கு அப்போது விளங்கவில்லை. காலம் செல்லச்செல்லத் தான் அந்தக் கைது—மாணவர் மனங்கவர்ந்த ஒரு பேராசிரியரைத் தளைப்படுத்தும் கைது_எவ்வளவு முதன்மையான நிகழ்ச்சி என்பது எனக்கு விளங்கியது.தங்கள் தலைவராக மாணவர்கள் கொண்டாடும் பேராசிரியரைக் கைது செய்வதனை ஒருவேளை அந்த மாலைப்பொழுதில் மாணவர்கள் அறிந்துகொள்ளநேரிட்டால் எவ்வளவு கொந்தளிப்பும் குழப்பமும் ஏற்பட்டிருக்கும்?
காவல்நிலையத்தின் எண்ணை நான் இப்போது மறந்துவிட்டேன். பி2 என எண்ணுகிறேன். ஆய்வாளர் ஒருவர் எங்கள் வீட்டுக்குவந்து இரண்டு மாற்று உடைகள் வாங்கிச்சென்றார். நாங்கள் கேட்ட எந்த வினாவுக்கும் அவர் விடைவழங்கவில்லை,”இதோ நாளை வந்துவிடுவார்.இரண்டு மாற்று உடைகள் போதும்.”எனக் கூறிச் சென்றார்.
அரைமணி நேரம் கழித்துத் தொலைபேசி வந்தது.”நாளைக் காலை எட்டரையிலிருந்து ஒன்பது மணிக்குள் காலைச்சிற்றுண்டி கொண்டுவாருங்கள். இன்னும் நடுவர்முன் முன்னிலைப்படுத்தவில்லை. ஆகவே சிறைக்கு அழைத்துப்போகவில்லை. காவல்நிலையத்தில்(ரிமாண்டு) தளைப்படுத்தியுள்ளனர். எனவே வீட்டு உணவு கொடுக்கலாம்.”எனக் காவல்நிலையத்திலிருந்து கூறினார்கள்.
மறுநாள் காலை, சிற்றுண்டியை எடுத்துச்சென்றேன். அங்கே அவர் பி2 காவல்நிலையத்தில் இல்லை. பி4-க்குக் கொண்டுபோயுள்ளனர்.’என மறுமொழி கூறினர்.
பி4 காவல்நிலையம் சென்றேன்.
”அவர் பி6 நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கே ஆய்வாளர் தமது வீட்டிலிருந்து சிற்றுண்டி கொடுத்துவிட்டார். கவலையின்றி வீட்டுக்குச் செல்லுங்கள்” என என்னை ஆற்றுப்படுத்தினர்.
வீட்டுக்கு வந்தவுடன் தந்தையார் கைது நாளிதழ்களில் பரபரப்புச் செய்தியாக வெளிவந்ததைப் படிக்கவே நேரம் போதவில்லை. காலையில் அலைந்தது அலுப்புத்தரவில்லை; சிற்றுண்டி அருந்தவேண்டும் என்னும் எண்ணமும் ஏற்படவில்லை.
கல்லூரி மூடப்படிருந்தமையால் வெளியே செல்லும் வேலையில்லை. எனினும் கடைத்தெரு வரை காலார நடக்க விழைவு உந்தியது.
வெளியே புறப்பட்டவுடன் சற்றுத்தள்ளி எதிர்ப்புறம் அமைந்திருந்த வீட்டில் தமிழ்நாடு பல்தொழில்நுட்பநிறுவனத்தின் முதல்வர் திருஞானசம்பந்தன் கல்லூரி கிளம்பிக்கொண்டிருந்தார்.
வாயிற்படியிலிருந்து கீழிறங்கித் தெருவுக்கு வந்தவர் எதிர்ப்பட்ட என்னைக் கண்டு என் காதில்” The fools have arrested a great scholar. Time will teach them befitting lessons,” என் காதில் கிசுகிசுத்தார்.
பத்திரிகைக்கடையில் சுவரொட்டி காற்றில் அசைந்துகொண்டிருந்தது.
“சித்தப்பாவுக்கு அரிவாள் வெட்டு
இலக்குவனார் கைது”
என்னும் தொடர்கள் தினத்தந்தி சுவரொட்டியில் இடம்பெற்றிருந்ததை நான் மறந்தாலும் என் மனக்கண்முன் இன்றும் அவை பசுமையாகக் காட்சியளிக்கின்றன.
மறைமலை இலக்குவனார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக