
ஈழத்தின் விதைகள் – இளந்தளிர் 2020
இளந்தளிர் நிகழ்வு தமிழ் இளையோர் அமைப்பால் 2005 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 28ஆம் நாள், முதல் முதலாக நடைபெற்றது. பின்னர் 2006, 2007ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. 2009 ஆம் ஆண்டு எமது தேசியப் போராட்டம் பின்னடைவைச் சந்தித்த பின்னர் தமிழ் இளைளோர் அமைப்பு, இலங்கை அரசாங்கத்தினால் நிறைய அறைகூவல்களைச் சந்தித்தது. இருந்த போதும் அனைத்திற்கும் முகம்கொடுத்து அறைகூவல்களைச் சமாளித்து, 2011, 2015ஆம் ஆண்டுகளில் நடாத்தப்பட்டது. இவ் ஆண்டு 15ஆவது ஆண்டாக இளந்தளிர் இடம்பெற்றது. தலைவரின் சிந்தனையை மனத்தில் கொண்டு ‘ஈழத்தின் விதைகள்’ எனும் பொருளைவைத்து நடாத்தப்பட்டது. ‘‘இலட்சிய விதை வளர்த்து விருட்சமாகி எமது மாவீரர்களின் கனவை நனவாக்கும்.’’ என்ற தலைவரின் கூற்றை மெய்யாக்கும் வகையில் தமிழ் இளையோர்கள் இளந்தளிர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
தமிழ் இளையோர் அமைப்பு, பிரித்தானியாவால் இந்நிகழ்ச்சி பங்குனி மாதம் 15ஆம் நாள் இல்போர்டு (Ilford) நகரில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக யாழ்ப்பாண மண்ணில் சுதந்திரன் பத்திரிகை வந்த காலம் தொட்டும் ஈழநாடு போன்ற பத்திரிகைகளிலும் தன் எழுத்துகளால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து பிரித்தானியவில் செந்நெறிச் செம்மல் சமுதாய சோதி என மதிப்பளிக்கப்பட்ட ஆசிரியராகவும் ஊடகவியலாளராகவும் அரசியல் ஆய்வாளராகவும் பன்முக மக்கள் பணி செய்து கொண்டிருக்கும் திரு சூசைப்பிள்ளை இயோசப்பு பற்றிமாகரன் ஐயா அவர்கள் கலந்துகொண்டார். இவர் உரையாற்றுகையில், தமிழ் இளையோர் அமைப்பு 15 ஆண்டுகளாகப் பிரித்தானியாவால் நடைபெறும் அனைத்து நாடு சார்ந்த செய்திகளில் முதன்மைப் பங்கு வகித்ததாகவும் இளையோர்களின் இந்தத் தன்னம்பிக்கைக்கும் தியாகத்திற்கும் நாங்கள் தலைவணங்குகிறோம் எனக் குறிப்பிட்டதுடன் பெற்றோர்கள் சிறுவர்களுக்குத் தாங்கள் கடந்நு வந்த இன அழிப்பு நிகழ்வுகளின்ன் உண்மைத்தன்னையை சொல்லி வளர்க்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஈழத்தின் சிறப்பையும் தமிழின் முதன்மைத்துவத்தையும் தனது வரிகளில் வெளிப்படுத்தும் இராவணன் இரௌத்திரம் இலண்டனில் முதல் முறையாக அரங்கேறவிருந்த வேளை பிரான்சு நாட்டு பயணத்தடை காரணமாக அவர் கலந்துகொள்ளமுடியாமை வருத்தத்திற்குரியது.
அகவணக்கத்துடனும் ஈழக்கொடியேற்றலுடனும் தொடங்கியது இளந்தளிர் 2020. நடனங்கள் ஈழப்பாடல்களுக்கான வில்யாழ் இசை நாடகங்கள் முதலியன அனைத்தும் சிறப்பாக நடைபெற்றன. மேலும் இயற்கையை மேன்மைப்படுத்தும் முறையாக ‘இயற்கை’ எனும் நாட்டிய நாடகம் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் விழிப்பூட்டும் விதம் அமைந்திருந்தது.
தமிழர்களின் வரலாற்றில் யாழ்ப்பாணத்தை ஆண்ட மன்னனும் பிரித்தானிய அரசுக்குத் தலை வணங்க மறுத்து இரண்டகர்களால் காட்டிக்கொடுக்கப்பட்ட பண்டாரவன்னியனைப் பற்றி எடுத்துக்காட்டி ஈழத்தின் இளையோர்கள் அழகான நாடகத்தை அரங்கேற்றினர். நாம் கடல் கடந்து தாயகத்திலிருந்து வெகுதொலைவில் இருந்தாலும் இளைய தலைமுறை தமிழ் மன்னர்களைப் பற்றி அறிந்துகொண்டு அவர்களுடைய கதைப்பாத்திரங்களைப் புரிந்துணர்வுடன் நடித்தனர்.
தாயகத்தின் மேன்மையைக் கூறும் ‘தாய் மண்ணை முத்தம் இட வேண்டும்’ என்ற பாடலுக்கு நன்றாக நடனம் ஆடப்பட்டது. ஈழப்போரின் இறுதிக் கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்ட வன்னி மண்ணைச் சிறப்பிக்கும் முறையாக ‘வன்னி மயில்’ என்ற பாடலுக்கும் மாணவர்கள் நடனம் ஆடினர். கடந்த ஆண்டு தேசிய மாவீரர் நாளில் “இனிதான உலகத்தில் அழகான தமிழீழம் உருவாக காண்போமே மாவீரரே” என்ற பாடலைப் பாடி அனைவரின் மனத்திலும் அவர் குரலைப் பதிய வைத்தவரும் வன்னியின் குரல் 2019, செருமனியில் நடைபெற்ற கலைச்சாரல் 2019, பிரித்தானியாவில் பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டு பலராலும் பாராட்டுகளையும் பெற்ற தேனுகா சிவநேசராசா பாடல்களும் இடம்பெற்றன.
அத்தோடு தேசத்தின் இளஞ்சுடர் செல்வி திக்சிகாவுக்கு ஒரு காணொளியும் படைக்கப்பட்டது. சிறுவர்கள் இருவரின் ஒன்றாகும் காலமிது வென்றாடும் நேரமிது என்னும் பாடல் அனைவரையும் எழுச்சியூட்டும் விதமாக இருந்தது. இறுதியில் பிரபாகரன் எங்கள் வழிகாட்டி என்னும் பாடலுக்கான நடனத்துடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுபெற்றது.
தமிழர் வரலாற்றையும் தமிழ்ப் பண்பாட்டையும் புதிய தலைமுறைக்குத் தெரியவைப்பத தமிழ் இளையோர் அமைப்பின் முதன்மை நோக்கமாகும். இவ்வகையில் இளந்தமிழ் நிகழ்ச்சிக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பு நன்றி கூறுகிறது.
ஈழத்தின் விதைகளாக விளங்கும் எங்களுடைய புதிய தலைமுறையை ஊக்குவிக்கும் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.






























கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக