தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை 


“தமிழ் படித்தால் இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக் கிடைக்குமா?” என்பது குறித்து தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தமிழ்ப்புலத் தலைவர், புதுதில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, உறுப்பினர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை உறுப்பினர், கல்வியாளர், எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலில் மாணவர்களுக்கான பல புதிய தகவல்கள். 


  • தற்போதைய சூழலில் உயர்கல்விக்கான வாய்ப்பு – வசதிகள் எப்படி உள்ளன?

உலக அரங்கில் இந்தியா “உயர்கல்விக்கான மையமாகத்” திகழ்கிறது. 903 பல்கலைக்கழகங்கள், 30,050 கல்லூரிகள், இது தவிர 1,0011 தனிப் பாடக் கல்வி நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என விரிந்து பரந்துள்ளது.


  • தற்போது எந்த மாதிரியான படிப்புகளுக்கு மாணவர்களிடம் ஆர்வம் உள்ளது? எந்தெந்தப் படிப்புகளில் விரும்பிச் சேருகின்றனர்?

இந்திய அளவில் சென்ற 2017 – 2018 கல்வியாண்டில் மட்டும் 36.4% கலைப்படிப்புகளிலும் (Arts Subjects), 17.1% அறிவியல் படிப்புகளிலும் (Science Subject), 14.1% வணிகவில் படிப்புகளிலும் சேர்ந்துள்ளனர். இப்படிப் பார்க்கின்றபோது 53.5% மாணவர்கள் கலை-அறிவியல் படிப்புகளிலே அதிகம் தேர்வு செய்துள்ளனர். இப்படிப்புகளில் தான் தற்போது ஆர்வமாகச் சேருகின்றனர்.

  • தற்போது தமிழ் பட்டப் படிப்பில் சேர்ந்து படிப்பவர்கள் குறைந்து வருகின்றனரே?
இதற்கு அறியாமைதான் காரணம்! இந்தியாவில் தற்போது மொழிப்பாடங்களுக்காக மட்டும் 20 பல்கலைக்கழகங்கள் உள்ளன. இதில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகமும் ஒன்று! இது மட்டுமல்ல. உலகம் முழுவதுவும் உள்ள 50க்கும் மேற்பட்ட, உலகத் தர வரிசைப் பட்டியலில் இடம் பெற்ற பல பல்கலைக்கழகங்கள் தமிழ்பட்டப் படிப்பில் இருந்து ஆராய்ச்சிப் படிப்பு வரை வழங்குகின்றன. இதில் கேம்பிரிட்சு பல்கலைக்கழகம், தொறன்டோ பல்கலைக்கழகம், ஆர்டுவர்டு பல்கலைக்கழகம், கலிபோர்னியா, கொலம்பியா, ஏல், தெக்சாசு போன்ற பல்கலைக்கழங்களும் அடங்கும்!
  • தமிழ் படித்தால் தற்போது வேலை வாய்ப்புக் கிடைக்குமா?

தமிழ்நாட்டைப் பொருத்த வரை 13,576 பள்ளிகள், 2,470 கல்லூரிகள் உள்ளன. இங்குத் தமிழ் கட்டாயம் ஒரு பாடமாகக் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இ.ஆ.ப., இ.கா.ப., போன்ற குடிமைப் பணித் தேர்வுகளில் இந்தியா முழுவதுவும் ஆண்டு தோறும் ஏறத்தாழ 1000 முதல் 1200 பேர் வரை தேர்வாகிறார்கள் இவர்களில் ஏறத்தாழ 10% தமிழ் நாட்டைச் சார்ந்தவர்கள். அப்படித் தேர்வாகிறவர்களில் 10% தமிழினை ஒரு பாடமாகத் தேர்வு செய்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது! இதே போல் த.நா.ப.தேர்வாணையம் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகளிலும் தமிழ் படித்தவர்கள் எளிதில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

  • தமிழ்நாட்டினைத் தாண்டி தமிழ்படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு என்பது எப்படி உள்ளது?
இன்று உலகம் முழுவதுவும் தமிழ் மொழியைத் தாய் மொழியாக 6 கோடியே 80 இலட்சம் பேர்களும், இரண்டாவது மொழியாக 90 இலட்சம் பேர்களும் பேசுகின்றனர். தமிழ்மொழியினை 7 கோடியே 70 இலட்சம் பேர் பேசுகின்றனர் என Ethnologius Report – 2017 கூறுகிறது. எனவே தமிழ் மொழியை முறையாகக் கற்பிக்க வெளிநாடுகளில் ஆசிரியர்கள் இல்லை. ஆசிரியர் பணி வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரிசியசு, அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் தமிழ், அரசின் அங்கீகரிக்கப்பட்ட மொழியாகவும் தற்போது உள்ளது. இங்கு பள்ளிகளிலும், பல்கலைக் கழகங்களிலும், தனியார் மொழிப்பயிற்சி மையங்களிலும் தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. தமிழ்நாட்டில் இருந்தே இணைய வழியாகக் கற்பிப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன.
  • ஆசிரியப் பணி அல்லாமல் வேறு என்னமாதிரியான பணி வாய்ப்புகள் உள்ளன?

உலகம் முழுவதுவும் 80-க்கும் மேற்பட்ட பண்பலை வானொலி நிலையங்களும், இணைய வானொலியும் தமிழ் ஒலிபரப்பு செய்து வருகின்றன. தமிழ்நாட்டிலும் சரி, வெளிநாடுகளிலும் சரி காட்சி ஊடகங்கள் (T.V) அதிகரித்து வருகின்றன. அவற்றில் திரையில் தோன்றுவது மட்டுமல்லாது திரைக்குப் பின்னால், செய்தி எழுதுதல், செப்பனிடுதல், வடிவமைத்தல், வாசித்து வழங்குதல், திருத்தல், தொகுத்து அளித்தல், ஒருங்கிணைத்தல் என்று அதிக வாய்ப்புகள் உள்ளன. பன்னாட்டு நிறுவனங்கள் ஊடகத்துறையில் அதிக முதலீடுகளைச் செய்கின்றன. புறப்பணி முறையிலும்(outsourcing) முறையிலும் ஆட்களைத் தேர்வு செய்கின்றனர்.


இதுமட்டும் அல்லாமல் பதிப்புத் துறைகளிலும் விளம்பரத் துறைகளிலும் வாய்ப்புகள் அதிகம், சிறப்பான விளம்பர வாசகங்கள் எழுதுவதற்கும் மெய்ப்புத் திருத்துவதற்கும் தமிழ்நாட்டில் ஆள் கிடைப்பதில்லை. கொஞ்சம் கற்பனைத் திறனும் தொழில் நுட்பமும் பெற்றிருந்தால் போதும்.
  • தகவல் தொழில் நுட்பத் துறையில் (I.T.) வேலை வாய்ப்பு குறைந்ததனால். இதுபோன்ற கலைப்பாடங்களுக்கு வாய்ப்புகள் அதிகம் உருவாகிறதா?

இல்லை. தகவல் தொழில் நுட்பத் துறைகளிலும் ((I.T.) “தமிழ் இலக்கணம்” படித்தவர்களுக்கும், “மொழியியல் படித்தவர்களுக்கும் இப்போது அதிகமான வாய்ப்புகள் உள்ளன. “கூகுள் நிறுவனமும் கி.பீ.மா.கோ.((KPMG) -உம் இணைந்து நடத்திய ஆய்வில் இந்திய மொழிகளிலே இணையப் பயன்பாட்டில் தமிழ் மொழிதான் முதலிடத்தில் உள்ளது. புதிய புதிய தமிழ் கணியன்களை(மென்பொருள்களை), கணிணியிலும் சரி, அலைபேசியிலும் அதிக அளவில் பயின்படுத்தி வருகின்றனர். “ஆப்பிள்” நிறுவனம் கூடத் தமிழ்க் கணியன்(மென் பொருள்) இல்லாமல் எந்தக் கருவியையும் தற்போது உருவாக்குவதில்லை. எனவே தமிழ் படித்தவர்களின் தேவை தற்போது தொழில் நுட்பத் துறைக்கும் தேவையாக இருக்கிறது தகவல் தொழில் நுட்பத் துறையில் “தமிழ்ச் செயலிகள்” (APPS) உருவாக்கத்திற்குத் தமிழ் மொழி கற்றவர்கள் தான் தேவை. 


  • இவ்வளவு இருந்தும் தமிழ்ப்படிப்பில் மாணவர்கள் சேரத் தயங்குவது ஏன்?

போதிய விழிப்புணர்வு இல்லை! என்ன மாதிரியான வேலை வாய்ப்புகள் புதிதாக உருவாகியுள்ளன. அதற்கு என்ன மாதிரியான தனிப் பயிற்சிகள் பெற வேண்டும், திறன் வேண்டும், என்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவேண்டும். திரு.முத்துநெடுமாறன், பேராசிரியர், தெய்வசுந்தரம், கல்யாணசுந்தரம், திரு.இளங்கோவன், போன்றவர்களின் தகவல் தொழில்நுட்பச் செயல்பாடுகளை அறிந்தாலே இந்த துறையில் மாணவர்களுக்கு  ஆர்வம் அதிகரிக்கும்.
பாரதிபாலனிடம் செவ்வி கண்டவர், சுந்தரபுத்தன்
புதிய தலைமுறை – கல்வி
சுந்தரபுத்தன்