களி மண்ணும் கையுமாக…
இன்று (செட்டம்பர் 15) அறிஞர் அண்ணாவின் 110ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா – 60ஆம் ஆண்டில் அடி எடுத்து வைப்பதற்குள்ளாகவே தனது இறுதிப் பயணத்திற்கு அடி எடுத்து வைத்தது – தமிழர் நல கண்ணோட்டத்தில் மிகப் பெரிய இழப்பு.
அண்ணா என்றால் அவர் முதலமைச்சர், திமுகவின் நிறுவனர் என்கிற அளவில்தான் இந்தத் தலைமுறையினர் தெரிந்து வைத்துள்ள ஒரே தகவலாகும். அண்ணாவின் சிந்தனை எத்தகையது? விநாயக சதுர்த்தி, விநாயகர் ஊர்வலம் நடக்கும் இந்தக் காலக் கட்டத்தில் அண்ணாவைப் பேச விடுவோமா?
“களி மண்ணும் கையுமாக நாம் ஏன் இருக்கிறோம்?” என்று நான் வீரனைக் கேட்டேன். “கைவண்ணம் காணத்தானே போகிறாய், திங்கட்கிழமை நமது தீராதி தீரர்களின் வேலை என்னவாக இருக்கும் தெரியுமோ! களி மண்ணும் கையுமாக இருப்பர், வினாயக சதுர்த்தி அப்பா – அன்று வீட்டுக்கு வீடு களிமண்ணும் கையுமாக இருப்பர், யானை முகத்தானை, மத்தள வயிற்றானை, மகேசுவரன் மைந்தனை ஈரக் களி மண்ணால் செய்து எள் உருண்டையும், அப்பமும், கொழுக்கட்டையும், அவல், பொரியும் படைத்து குட்டிக் கொண்டு தோப்புக் கரணம் போட்டு, விநாயக சதுர்த்தி பூசை செய்வர் என்று வீரன் விளக்கிய பிறகே, “அடடே! அதையா சொன்னாய்? வேடிக்கைதான், களிமண்ணும் கையுமாகத்தான் இருப்பர்” என்று கூறிக் கொண்டே நான் சிரித்தேன். “கையில் மட்டுமல்ல களிமண்! மண்டையிலும் அதுவேதான்” என்றான் நண்பன் கோபத்தோடு. “திட்டாதே! தேவ நிந்தனை செய்யாதே. ஏதோ பழைய வழக்கம் நடக்கிறது” என்று நான் அடக்கினேன். அவனா அடங்குபவன்!
“வினாயகருடைய உருவத்தைக் கவனி! மனித உடல், யானை முகம், மத்தள வயிறு, ஒற்றைத் தந்தம் – நமது கடவுளின் உருவம் இதுவென்று கூறிப் பார் நாகரிக மக்களிடம். வயிறு குலுங்க நகைப்பர். அவருக்கு வாகனம் பெருச்சாளி! இது கேட்டால் எவன் தான் இந்த மக்கள் தன்னாட்சிக்கு இலாயக்குள்ளவரென்று கூறத் துணிவான்? உலக மக்களின் சார்பாளர்கள் கூட்டம் ஒன்று நடந்தால் அதற்கு உச்சியில் குடுமியுடையோனும், கழுத்திலே மண்டையோட்டு மாலையுடையோனும், காட்டெருமை முகத்தோனுமாகப் பலர் சென்றால், மற்ற நாகரிக உருவங்கள் நகைக்காவா? நீயே கூறு! சுந்தரிகள் பலர் சொகுசாக ஆடிப்பாடும் வேளையிலே மந்தி முகவதி வந்தால், கைகொட்டிச் சிரிக்க மாட்டார்களா? உண்மையிலே கூறு. ஏசுவின் உருவம் எத்தகைய கருணை பொழியுங் கண்களைக் காட்டக் காண்கிறோம். புத்தர் உருவின் முகப்பொலிவையும், சாந்தியையும் நோக்கு: பக்கத்திலே பெருச்சாளி வாகனனின் உருவத்தை நிறுத்திப்பார்! கடவுள்களின் காட்சி எனும் கூத்திலே கணபதி, ஒரு கோமாளியாகவே – விதூசகரராகவே – பாவிக்கப்படுவார்” என்று வீரன் உரைத்தான்.
இவையும் இவை போன்றவையும் வெறும் ஆரிய மதச்சேறு! தமிழர்கள் இந்த ஊளைச் சேற்றிலே உழலு மட்டும், முன்னேற்றம் ஏது? வாழ்வு ஏது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக