வியாழன், 13 ஜூலை, 2017

செம்மொழித்தமிழாய்வு நிறுவனம் தொடர்பில் முதல்வருக்கு நன்றி!




செம்மொழித்தமிழாய்வு  நிறுவனம் தொடர்பில் முதல்வருக்கு நன்றி!


செம்மொழி நிறுவனத் தலைவராகச் செயல்பட முதல்வருக்கு வேண்டுகோள்!  என்னும் தலைப்பில் சூலை இரண்டாம் நாளிட்ட அகரமுதல இதழில்,
"அமைதியாகத் திட்டமிட்டு, எண்ணியவாறு செயல்படும் முதல்வர் செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவர்  என்ற முறையில் அந்நிறுவனத்திற்குச் சென்று செந்தமிழ்வளர்ச்சிக்கு ஊன்றுகோலாக இருக்க வேண்டும். அவர் இந்தப்பொறுப்பிற்குரிய அதிகாரத்தைச் செயல்படுத்தினால் சிறப்பாகவே செயல்படுவார் என்ற நம்பிக்கை உள்ளது"
எனக் குறிப்பிட்டிருந்தோம்.

செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தனித்தன்மையைக் காத்திடுவோம்!   எனச் சூலை 9 ஆம் நாளி்ட அகரமுதல இதழில்
 "நிறுவனத்தினரும் தமிழக அ்ரசினரும் முடிவு தெரிவிக்கும் வரை  அமைதி காப்பதும் நன்றன்று." எனக் குறிப்பிட்டு நடவடிக்கைக்கு வேண்டியிருந்தோம்.
மாண்புமிகு முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி மத்திய அரசிற்கு இத்தகைய தவறான முயற்சியைக் கைவிட்டுச் செம்மொழித்தமிழாய்வு  மத்திய நிறுவனம் இப்போதுள்ளதுபோல் தனித்தியங்கப்படவேண்டும் என வலியுறுத்தியுள்ளார் என அறிய வந்துள்ளோம்.  முந்தைய ஆட்சியால் வந்தவற்றைப் பிந்தைய ஆட்சி புறக்கணிக்கும்  தவறான நடை முறையை மாற்றி  வினை யாற்றியுள்ளார். முதல்வருக்கும் செம்மொழி நிறுவனத் துணைத்தலைவர்  முனைவர் பு..பிரகாசம், இயக்குநர்  திரு. அ.பழனிவேல்,  பதிவாளர் முனைவர் முகிலை இராசபாண்டியன் ஆகியோருக்கும் பாராட்டு.
இதுபோல் முதல்வர், ஆட்சிக்குழுக்கூட்டத்தைக் கூட்டியும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  தமிழறிஞர்கள் பங்கேற்கும் கருத்தறியும் கூட்டம் ஒன்றையும் கூட்டிச் செம்மொழி நிறுவனம்  சிறப்பாகச் செயல்பட ஆவன செய்ய வேண்டும் என்றும் வேண்டுகின்றோம்.
 மனித வள மேம்பாட்டுத்துறை முதல்வரின் மடலுக்கிணங்க உரிய நடவடிக்கை எடுக்கும் வரை தமிழர்களிடையே ஏற்பட்டுள்ள  கொந்தளிப்பு  அடங்காது. தமிழ்நாடு- புதுச்சேரி தமிழ் அமைப்புகள் சார்பில்   ஆடி 07, 2048 / 23.07.207  அன்று நடைபெற உள்ள கூட்டமும்  ஆடி 15, 2048 / 31.07.2017 அன்று தலைநகரத்தமிழ்ச்சங்கம் சார்பில் செம்மொழி நிறுவனம் முன்னர் நடைபெற உள்ள மறியல் போராட்டமும் தொடரும்.
இவற்றைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்கட்டும்!
அன்புடன் இலக்குவனார்திருவள்ளுவன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக