தமிழக வரலாறு  5/5

 மனிதனது நேர்மையான வாழ்க்கைக்கு உரிய கொள்கைகளின் தொகுப்பே சமயம் எனப்படும். அச்சமயம் – இறையுணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டது. ஆனால், காலப்போக்கில் சமயக் கதைகள் பலவற்றையும் மூடநம்பிக்கைகள் பலவற்றையும் புகுத்திச் சிலர் சமயத்தின் பேரால் வணிகம் நடத்தலாயினர். இக்கதைகளையும் நம்பிக்கைகளையும்பற்றி விரிவான முறையில் எழுதப்பட்டவையே புராணங்கள் என்பவை. ஆங்கில அறிவும் எதனையும் எண்ணிப்பார்த்துச் செய்யும் ஆற்றலும் மிகுந்த நம் நாட்டு அறிஞர் பலர், இப்போது இவற்றின் பயனின்மையை உணர்ந்து வருகின்றனர்; இவற்றிற்கும் சமயத்திற்கும் கடுகளவும் தொடர்பில்லை என்பதை நன்கு விளக்கியுள்ளனர். பதி, பசு, பாசம் என்னும் சைவ சித்தாந்த முப்பொருள்கள் அறிஞரால் ஒப்புக் கொள்ளக் கூடியவை. ஒவ்வொரு சமயத்திலும் உள்ள சமயக் கட்டுக்கதைகள் நீக்கப்பட்டு, உண்மைக் கொள்கைகள் மட்டும் மக்களால் பின்பற்றப்படுதல் வேண்டும் என்பது நாட்டில் பிறந்த நல்லறிஞர் கருத்து. மக்களுக்குக் கல்வியறிவும் எண்ணிப் பார்க்கும் ஆற்றலும் வளர வளர, இக்கருத்து வலுப்பெற்று வருகின்றது.
மொழிவரலாறு
இன்றுள்ள தமிழ் நூல்களுள் காலத்தால் முற்பட்டது தொல்காப்பியம். அஃது ஏறத்தாழக் கி. மு. 300-க்கு முன்பு (கி.மு.700)இயற்றப்பட்டது என்று கூறலாம். அந்நூலில் சில வட சொற்கள் கலந்துள்ளன. அவை வட வர் நுழைவால் தமிழிற் கலந்துள்ளன. இதனால் வடவர் நுழைவிற்கு முன் இருந்த தமிழ் நூல்களெல்லாம் தனித் தமிழிலேயே இயன்றவை என்னும் உண்மையை எளிதில் உணரலாம்.
பின்னர் நாளடைவில் வேதியர் சமயத்தலைவர் ஆயினர். அவர் தம் வழிபாட்டு முறைகள் தமிழ் நாட்டில் பரவின. இன்ன பிற காரணங்களால் சங்ககாலத்திலேயே வடசொற்கள் தமிழிற் கலந்தன. புத்த சமயத்தவராலும் சமண சமயத்தவராலும் பிராகிருதச் சொற்களும் தமிழிற் கலந்தன. வடவர் செல்வாக்கு மிக மிகத், தமிழிலும் வடசொற்கள் மிகுந்துகொண்டே வந்தன. தமிழ் :யாப்பிலக்கணத்திலும் வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றிப் புதிய பாக்கள் தோன்றின. அணியிலக்கண நூல்களும் தோன்றின. இன்னின்ன சாதியினரைப் பாடும்பொழுது இன்னின்ன எழுத்துகள் பாவின் முதலில் இருக்க வேண்டும் என்னும் கேடான வரையறையும் ஏற்பட்டது. தமிழாசிரியருள் சிலர் வடமொழியையும் கற்று, வடநூல் வழித் தமிழாசிரியர் என்று பெயர் பெற்றனர்.
  வடமொழி இலக்கணத்தால் உண்டான புதுமைகளை யாப்பருங்கல விருத்தியுரையில் நன்கு காணலாம். சோழப் பேரரசர் காலத்தில் பாதி தமிழும் பாதி வடமொழியும் கலந்த புதிய நடையில் ஆழ்வார் அருட்பாடல்கட்கு விளக்கவுரை எழுதப்பட்டது. சைவமும் வைணவமும் வடமொழி வாணரால் பரப்பப்பட்டன. ஆதலால், அச்சமய நூல்களின் நடை கலப்பு நடை யாகவே காணப்பட்டது. சைவசித்தாந்தக் கருத்துகளும் கலப்பு நடையிலேயே எழுதப்பட்டன. ஏறத்தாழ 500 ஆண்டுகட்கு முன் இருந்த வில்லிபுத்துர் ஆழ்வார் இயற்றிய பாரதத்தில் வடசொற்கள் மிகுந் திருத்தலைக் காணலாம். இவ்வாறே அருணகிரி நாதர் பாடல்களிலும், தாயுமானவர் பாடல்களிலும் எண்ணற்ற புராணங்களிலும் வடசொற்கள் மிக்குள்ளன. விசய நகர ஆட்சியில் தமிழிசை ஒழிந்து, கருநாடக இசை தமிழகத்தில் வேரூன்றியதுஒரு மொழியின் சேர்க்கையால் தமிழின் தனித் தன்மை எவ்வாறு கெட்டது என்பதை இதுகாறும் கூறியவற்றால் நன்கறியலாம்.
 இன்று தமிழுணர்ச்சி வீறு கொண்டிருக்கிறது. தூய தமிழில் பேச வேண்டும் என்று மாணவர் உலகம் துடிக்கின்றது. தமிழறிஞர்களும் தூய எளிய நடையில் நூல்களை வெளியிடுகின்றனர்; தூய தமிழில் பேசுகின்றனர். பழந் தமிழ்ப் பெயர்கள் வழக்கில் வந்து கொண்டிருக்கின்றன. மறைமலையடிகள், திரு.வி.க. போன்ற தமிழ்ச் சான்றோர்களால் தனித்தமிழ் நடை உருவானது. இன்று அதனை வளர்க்க நற்றமிழர் விழைகின்றனர்.
முடிவுரை
 தமிழ் மக்களுக்குத் தமிழ், தமிழர் தமிழ் நாடு என்னும் கவலை ஏற்படுதல் வேண்டும்; மொழியைப் பாதுகாக்கவும் தமிழர் இன ஒற்றுமையை வளர்க்கவும் அறிவு வேண்டும்; சுய நலமே பெரிதெனக் கருதி மொழியையும், இனத்தையும், நாட்டையும் காட்டிக் கொடுக்கும் கயமை ஒழிதல் வேண்டும். மொழிப்பற்று, இனப்பற்று, நாட்டுப்பற்று ஆகிய மூன்றும் தமிழ் நாட்டுத் தலைவர்களிடம் உண்மையில் தோன்றுமாயின், இத்தமிழகம் சங்க காலத் தமிழகமாக மாறுவது எளிது.
முனைவர்  மா .இராசமாணிக்கனார்
 இலக்கிய அமுதம்