அகரமுதல 181, பங்குனி27 , 2048 / ஏப்பிரல் 09, 2017
(புதுவைப்பல்கலக்கழகத்தின் தமிழ்த்துறை புல முதன்மையர் முதலான பல
பொறுப்புகளில் பணியாற்றி மறைந்த அறிஞர் முனைவர் அறிவுநம்பி மறைவிற்கு அகரமுதல இரங்கலைத் தெரிவிக்கும் வகையில் அவரது கட்டுரை ஒன்றினை வெளியிடுகிறது. மரபார்ந்த புலவர் வழியினர்
அவர், என்பதை இக்கட்டுரையின் நடை காட்டுகின்றது. இன்றைய கட்டுரையாளர்கள்
நல்ல தமிழில் பிழையின்றி எழுத வேண்டும் என்பதற்கு இது போன்ற கட்டுரைகளை
முன்னெடுத்துக்காட்டுகளாகக் கொள்ள வேண்டும். கருத்தரங்கம் ஒன்றில்
வாசிக்கப்பெற்ற இக்கட்டுரை ஏமலதா வலைப்பூ விலிருந்து எடுக்கப்பட்டது –
ஆசிரியர் )
[நினைவுக்குறிப்பு:
‘சித்தர் இலக்கியம்’ குறித்தப்
பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் பங்கேற்பதற்காகக் கடந்த ஆண்டு(பங்குனி 11,12
&13 மார்ச்சு 24, 25 & 26. 2016 ) புதுவைப் பல்கலைக்கழகத்திற்குச்
சென்றிருந்தேன். அங்கிருந்த இருநாள், நண்பர் முனவைர் அ.அறிவுநம்பி அவர்களை
அவ்வப்பொழுது சந்தித்தேன். என்றாலும் தொடக்கநாளில் அவரது அறையில் அவருடன்
சற்று நீண்ட நேரம் பேசும் நல் வாய்ப்பு கிடைத்தது.
புதுவையில் நடைபெறும்/நடக்க வேண்டிய
தமிழ்ப்பணிகள் குறித்தும் பேசினார்; சொல்லாக்கம் குறித்தும் பேசினோம்.
என்னுடைய அறிவியல் படைப்புகள், சொல்லாக்கங்கள், இணையப் பணிகள் குறித்துப்
பாராட்டி ஊக்கப்படுத்தினார். நண்பர் பேரா. ம.சா.அறிவுடை நம்பியின்
மறைவு குறித்து வருத்தத்துடன் அவர் பணிகளை நினைவுகூர்ந்தார்; அவர் மறைந்த
பொழுது, தான் மறைந்ததாக எண்ணித் தன் குடும்பத்தாரிடம் சிலர் இரங்கல்
தெரிவித்ததை வேடிக்கையாகக் குறிப்பிட்டார்.
நான், அவர் தந்தை முனைவர் ச.சாம்பசிவனார்க்கு இதழியல் தமிழ் ஆர்வலர் விருது
அளித்ததைத் தெரிவித்தேன். அவர் ‘தமிழ்த் தென்றல்’ என இதழ்ப்பெயருக்குப்
பதிவு செய்த பொழுது மத்திய அரசு சமற்கிருதப் பெயர்களைப்
பரிந்துரைத்ததையும் இறுதியில் மாருதம் என்பது எல்லாரும் அறிந்த
இருமொழிச்சொல், எனவே, ‘தமிழ் மாருதம்’ என்று பெயர்
வைக்கச் சொல்லிப் பதிவுஎண் தந்ததையும் இதுபோல், மதுரைத்தமிழ்ச்சங்கம்
நடத்தும் ‘செந்தமிழ்’ இதழின் பெயரை மாற்றுமாறு மத்திய அரசு
வலியுறுத்தியதையும் தந்தை பேராசிரியர் இலக்குவனார்,
தமிழ்நெறி, தமிழ் உலகு, தமிழ் ஒற்றுமை, என்பன போன்று தமிழ் எனத் தொடங்கும்
பெயர்களை ஏற்க மத்திய அரசு மறுத்ததையும் மாநிலத்தன்னாட்சி கேட்போர்,
தமிழ்நாட்டில் அல்லது ஒரு மாநிலத்தில் தொடங்கும் இதழுக்கு எதற்கு மத்திய
அரதசின் ஏற்பாணை எனக் கேட்பதில்லையே என்றும் தெரிவித்தேன்.
அவர், துணைவேந்தராக வந்தால்
பல்கலைக்கழகம் சிறக்குமே என்றதற்கு, அப்பதவியைப் பெறுவதற்கான
முயற்சிகளையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு சிலர் திரிவதால், தான் அது
குறித்து எண்ணுவதில்லை என்றார்.
இப்படியான கலந்துரையாடல் நீங்கா நினைவாகப் பதிந்துள்ளது. நண்பர் அறிவுடை நம்பியின் மறைவிற்கு வருந்திய நண்பர் அறிவுநம்பியின் மறைவிற்கும் வருத்தம் தெரிவிக்கும் சூழல் ஏற்பட்டுவிட்டதே! வருத்தத்துடன் இலக்குவனார் திருவள்ளுவன்]
புறநானூற்றில் நிதி மேலாண்மை
தமிழ் இலக்கியப் பரப்பு அகன்றது. அப்பனுவல்களின் உள்ளடக்கங்களும் அளப்பரியன. நயமான இலக்கியப் பகுதிகட்கு அப்பால்
மொழி வரலாறு, கலை, பண்பாடு, இடவரலாறு, அரசு, பொருளியல், பழக்கவழக்கம்,
நம்பிக்கைகள் போன்ற பல்வேறு கூறுகளையும் பழந்தமிழ் இலக்கியங்களில் காணலாம்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான புறநானூறு. அரசியல் வாழ்க்கை, சமூக வாழ்க்கை,
மக்களின் வாழ்வியல்போன்ற செய்திகளை எடுத்துரைக்கும். புறநானூறு பேசும்
நிதிபற்றிய செய்திகளை இந்த எழுத்துரை முன் வைக்கின்றது. அவ்வளவே.
அரசும் நிதியாதாரமும்
சங்கக் கால அரசர்களின் பொருளியல்
செய்திகள் பற்பல. மன்னனை உயிரென மக்கள் எண்ணியதும், அதனை மன்னர்கள்
உணர்ந்து செங்கோல் கொண்டதும் வரலாறு. அரசாட்சி வளமுற நிகழப் பொருள் வளம்
தேவை. இதற்காக நாடாண்ட மன்னர்கள் நிலவரி, சுங்கவரி போன்ற வரிகளின் மூலம்
கருவூலத்தைச் செழிப்புள்ளதாக ஆக்கினர். சங்கப்பாக்கள், அவற்றின் உரைகள்
புலப்படுத்தும் செய்தி வருமாறு : மன்னர்கள் மக்களிடம் பெற்ற பொருளுக்கு வரி, இறை, புரவு என்ற பெயர்கள் இருந்தன. சான்றாக ஏற்றுமதிப் பண்டங்களுக்கும் இறக்குமதிப் பொருட்களுக்கும் விதிக்கப் பெற்ற வரியான ‘உல்கு’
என்ற பெயருடைய வரி சுட்டத்தக்கது. இன்றைய சுங்கம் (Customs) என்பதன்
பண்டைப் பெயரிது எனல் பிழையில்லை. சோழநாட்டில் சுங்கச் சாவடிகள் பல
இருந்ததையும், மதிப்பீட்டிற்குப் பின் சுங்கவரி தீட்டப்பெற்றதையும்
பட்டினப்பாலை போன்ற ஏனைய நூல்களும் நுவலும். புறநானூறு ‘படுவது’ என்ற
கலைச்சொல்லால் வரிச்சேகரிப்பை வரையும். மக்களின் பொருளில் நிலையறிந்து
அதற்கேற்ப ‘வரிவசூல்’ நடந்தது. வரம்பு மீறிய வரியீட்டால் அம்மன்னன், “குடி புரவு இரக்கும் கூதிலாண்மைச் சிறியோன்” (புறம் 75) என இகழப் பெற்றான். இப்படி ஏளனவரிகளை உதிர்த்தவனாகச் சோழன் நலங்கிள்ளி காணப்பெறுவது குறிக்கத்தக்கது.
வரிவிதிப்பும் இடிக்குநர் கடமையும்
தேவை கருதியோ, உடனுறைவோர்
அறவுரைக்கிணங்கவோ மன்னன் எல்லைகடந்து மிகுவரி தீட்டியதும் உண்டு. நிதி
பெருக்கப் பலவழிகள் உள. மக்களைக் கசக்கிப்பிழியும் வரிமுறைமை கொடியதென்று
உணரவைக்க இடிக்குநர் பலர் இருந்தனர். அவருள் புலவர்களும் இருந்தனர். பாண்டியன் அறிவுடைநம்பி
இயல்புக்கப்பால் கூடுதலாக வரிவிதிக்க நேர்ந்தது; வாட்டமுற்றனர் மக்கள்.
184ஆம் புறநானூறு கூடுதற்செய்திளைச் செதுக்கும். அறிவுறுத்த அரசனை
அணுகியவர் புலவர் பிசிராந்தையார்.
காய்நெல்லறுத்துக் கவளங் கொளினே
மாநிரை வில்லதும் பன்னாட்காகும்
நூறுசெறுவாயினும் தமித்துப் புக்குணினே
வாய் புகுவதனினும் கால்பெரிது கெடுக்கும்
என்ற வரிகளின் வழி யானைக்குக் கவளந்தந்து
உண்பிப்பதால் பல நாளுக்கு உணவு அளிக்கமுடியும். யானையையே கழனியில்
இறங்கவிட்டால் அதன் கால்பட்டழியும் உணவுப் பொருட்களே மிகுதி. இப்பொருளை
எடுத்துக்காட்டி, அரசன் நெறிப்படி வரிதீட்டின் பொருளியலும், மக்கள் வாழ்வியலும் செப்பமுறும். மாறாக, அன்புக்கு எதிராக வலுக்கட்டாயமாக மிகுபொருளை வரியென்ற பெயரால் பெற்றால்
யானைபுக்க புலம்போலத்
தானும் உண்ணான்; உலகமும் கெடுமே (புறம் 184)
என விவரிப்பார் பிசிராந்தையார். தெளிவான வரிக்கொள்கையும் பொருளாதாரமும் இப்பாடலில் உறைந்துள்ளன. வருவாய் மிகத்தேவைதான் ஓர் அரசுக்கு. ஆனால் மக்களை உறிஞ்சும் பணி மிகவும் கொடிதானது.
மற்றொரு புறநானூற்றுப்பாடல் சரியான
மதிப்பீடின்றி, நெறிகடந்து விதிக்கப்பெற்ற வரிகளைப் போலவே, இயலாதார் மீது
கடுமைகாட்டுவதும் தவறெனச் சாற்றுகிறது. குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் வெள்ளைக்குடி நாகனார்
என்பார் வைக்கும் வேண்டுகோளே 35 ஆம் புறப்பாட்டு. விளைநிலங்களுக்கு
விதிக்கப்பெற்ற செய்கடனைத் தள்ளுபடி செய்து, குடிமக்களுக்குப் பொருளாதார
விடுதலை வழங்கவேண்டும் என்பதே இப்பாட்டின் மையக்கரு. அவ்வாறு செய்த அரசனை
குடிபுரந்தருளிய கோ எனப் புகழுவர். பொருளீட்டும் திட்டம் பற்றி ஒரு குறளும்
குறிப்பிடும்.
அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம்
புல்லார் புரள விடல் (குறள் 755)
என்பது அக்குறட்பா.
அரசின் கடமையும் அறவழியும்
அரசு இயங்க நிதியம் தேவை. வரிவிதிப்பு
உட்படப் பல்வகை வழிகளில் நிதிபெருக்குதல் இன்றியமையாதது. அவ்வாறு ஈட்டிய
பொருள்பற்றியும் குறள் பேசும்,
இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு (குறள் 385)
என்ற பா புகழ்பெற்ற பா. பொருள்
மிகுவிக்கும் வழிகளைக் கண்டறிவது இயற்றல். அவ்வழிகள் வழி செல்வத்தை அடைதல்
ஈட்டல். அப்பொருளை அறத்திற்கு, பொருளாதாரத்துக்கு, இன்பப் பகுதிக்கு என
வகுத்துச் செலவிடுதல் வகுத்தலாம். இங்ஙனம் நாட்டை வழிநடத்தும் அரசு
எங்ஙனம் இருத்தல் வேண்டுமெனவும் புறநானூறு புகலும். யானைப்படை,
குதிரைப்படை, தேர்ப்படை, காலாட்படை ஆகிய நாற்படைகளையும் வலுவாகப் பெற்ற
மன்னனை விடவும் அறநெறிதழுவியவனே முதன்மையானவன் என்பது 55 ஆம் புறப்பாட்டு.
நான்குடன் மாண்டதாயினும் மாண்ட
அறநெறி முதற்றே அரசின் கொற்றம்
எனவே பொருளீட்டலிலும் அறம் இழைந்து வருவதையே பண்டைய ஆட்சி கொண்டிருந்தது.
‘மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி’
என்பது முத்திரைத் தொடர். பொருளீட்டலையே நோக்கமாகக் கொண்டவர்கள்
வணிகர்கள். அவர்களின் நிதிநிலைமையையும் அறத்தின் அளவுகோல் கொண்டே
மதித்துள்ளனர். அப்பாதையில் உலாவரும் வணிகர்களைப் பழந்தமிழ்ப் பனுவல்கள் ‘தாழ்விலாச் செல்வர்’ எனப் போற்றும். புலவர்களின் ஈட்டுதல் முறைமையும் கருதத்தக்கது.
வசதி நிறைந்த வளமான வாழ்விற்காகத் தம்
நிதியமைப்பைப் பெருக்கிக் கொள்ளாத புலவர்களின் பெருமையைப் புறநானூறு
பரிமாறுகின்றது. வறுமையில் வாடியவர் பெருஞ்சித்திரனார். அவரால் நாடப்பெற்ற மன்னன் குமணன்.
பாடியபிறது கிடைத்தது பெரும்பொருள். வைப்பு நிதியாக அதனைப் பதிவதும்
அதன்வழி மிகுபொருள் பெறவும் வாய்ப்பிருந்தது புலவருக்கு. ஆனால் நிறைந்த
பொருளுடன் வந்த அவர் தன் மனைவியிடம் “கேட்டார்க்கும் கேளாதார்க்கும் தரம்படுத்திக் காணாமல் கொடையாகக்கொடு”
என்றதாகப் புறநானூறு புனையும். பாடல்எண் 163. வளமான பொருளை ஈட்டிப்
பதுக்காமல் பகிர்ந்தளிக்கும் இம்முறைமை பாராட்டுக்குரியது. “இன்னோர்க்
கென்னாது என்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்துமென்னாது நீயும் எல்லோருக்கும்
கொடுமதி மனைகிழவோயே” என்ற வரிகள் போற்றுவதற்குரியவை. இப்படி, மன்னரும்
மக்களும் பொருளீட்டும் பணியில் நின்றனர். அறவழியில் நிறைத்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக