உலகத்தாய்மொழி நாளில் தமிழைக் கொண்டாடுவோம்!
உலகெங்கும் அவரவர் தாய்மொழியே
ஆட்சியிலும் கல்வியிலும் கோலோச்சுகின்றன. ஐரோப்பாக் கண்டத்தில் உள்ள 49
நாடுகளிலும்கூட அந்நாடுகளின் தாய்மொழிகளே கோலோச்சுகின்றன; நம் மனத்தில்
உருவகப்படுத்தப்பட்டதுபோல ஆங்கிலம் அல்ல. ஆங்கிலம் உலகம் முழுவதுமே காணப்படுகின்றது என்பதில் உண்மை இல்லை! இங்கிலாந்திலும்கூட 7 மொழிகள் கோலோச்சுகின்றன.
அங்குள்ள மாநிலங்களின் தாய்மொழிகள் – காட்டிசு(இசுகாத்துமொழி), ஐரீசு,
வேலிசு, கார்னிசு, மாணக்சு, பிரெஞ்சு மொழிகளே ஆட்சி மொழியாக, கல்வி
மொழியாகக் கோலோச்சுகின்றன. ஆங்கிலம் மத்திய அரசின் ஆட்சிமொழி நம் நாட்டில்
இந்தி போல! (படிக்க : எமது பயண நூல் ஐக்கியப் பேரரசு – ஒரு பார்வை).
உயர்தனிச் செம்மொழியான
செந்தமிழுக்கு சிந்தனைகளையும் நுண்ணிய உணர்வுகளையும் அழுத்தம் திருத்தமாக
உணர்த்தும் ஆற்றலுள்ளதென மொழியியல் தந்தை முனைவர் எமினோ
கூறுகின்றார். கலிபோர்னியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் சியார்சு எல்.
ஆர்ட்டு (பன்மொழிப் புலவர்) செந்தமிழை உலகின் தலைசிறந்த செவ்வியல் மொழியென
அறைகூறுகின்றனர்.
தாய்மொழிவழிக் கல்வி
“தொடக்கத்திலிருந்தே எல்லாப் பாடங்களையும்
ஆங்கிலத்தில் கற்பிப்பதால் என் பிள்ளைகளைக் கிறித்துவப் பாதிரியார்கள்
நடத்தும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப் பிடிக்கவில்லை” யெனத்
தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்தபோது மகாத்மா காந்தி
கூறினார். அங்கே தால்சுதாய்ப் பண்ணையில் காந்தியுடன் வாழ்ந்த தமிழர்களின்
பிள்ளைகளுக்குத் தனக்குத் தெரிந்த சொற்ப தமிழைக் ற்றுத் தந்தார். குழந்தைகளின் மன வளர்ச்சிக்கும், சிந்தனைத் திறனைத் தூண்டவும் உகந்தது தாய்மொழிவழிக் கல்வியே எனக் கூறியதோடு நில்லாமல் அதனைச் செயல்படுத்தினார். (படிக்க : சத்திய சோதனை பக்கம் 238, 402, 403).
கல்வியும், ஆட்சியும் தடையின்றித் தாய்மொழியில் அமைய ஏதுவாக மொழிவழி மாநிலங்களைக் கண்ட நேரு பெருமகனார் “மாணவரின் தாய்மொழியே மிகச் சிறந்த பயனளிக்கக் கூடிய பயிற்று மொழி” என்றார்.
தமிழ்நாட்டில் தமிழன் நிலை
எனவே விடுதலைக்குப் பின்னும் தமிழ்நாட்டில்
பள்ளிக்கல்வி தமிழ் மூலமாகவே தொடர்ந்து கற்பிக்கப்பட்டு வந்தது. 6 ஆம்
வகுப்பு முதல் ஆங்கிலம் ஒரு மொழியாக மட்டுமே கற்பிக்கப்பட்டது. மாண்புமிகு
அன்றைய தமிழக முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா ஒரு வரலாற்று முதன்மை நிறைந்த
தீர்மானத்தை 23-1-1968 இல் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். “தமிழகத்தில்
இனிக் கல்லூரிகளிலும் தமிழ்மூலமே கல்வி கற்பிக்கப்படும். இத்திட்டம் 5
ஆண்டுகளுக்குள் முழுமையாக நிறைவேற்றப்படும். கல்லூரிகளில் தமிழ்,
பாடமொழியாக இருக்கும்; ஆங்கிலப் பிரிவு அகற்றப்படும்” எனவும் அறிவித்தார்.
(காண்க : தமிழகச் சட்டப்பேரவை குறிப்பு 23.01.1968).
இருப்பினும், ஏனோ தமிழகத்தில் தமிழைப்
பின்னுக்குத் தள்ளி ஆங்கிலம் முன்னேற்றம் கண்டு வருகிறது. எனவே, இன்றைய
தமிழகத்தில் தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத பட்டதாரி இளைஞர்கள் ஏராளம்.
ஆனால், அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரம், கன்னடத்தில் முறையே
மலையாளமும், தெலுங்கும், கன்னடமும் கோலோச்சுகின்றன.
தமிழகத்தில் தாய்மொழிக் கல்வி
தமிழ்ச் சான்றோரின் மனக்குறை தீர சரியான
வழி தமிழ்நாட்டில் தாய்மொழிவழிக் கல்வியே ஆகும் என 1999 ஆம் ஆண்டு தமிழ்
வளர்ச்சித்துறை வெளியிட்ட ‘தமிழ்மொழி வரலாறு – இ.ஆ.ப. தேர்வு – கருவி
நூலி’ல் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதே ஆண்டில்தான் உலக நாடுகள்அவை நம்
தாய்மொழியையும் விரைவில் அழியவுள்ள மொழிகளின் பட்டியலில் (Endangered
Languages List) வைத்து வெளியிட்டு தக்க நடவடிக்கை எடுத்துத் தமிழைக்
காக்க அறிவுறுத்தியுள்ளது. இதனை இதுவரை தமிழகம் கவனத்தில் கொண்டு தக்க
நடவடிக்கை எடுக்கவில்லை! அப்பட்டியலில் இருந்த வேலிசு மொழியை அந்நாட்டு
மக்கள் போராடி தக்க நடவடிக்கைகள் எடுத்துத் தம் மொழியைக் காத்துள்ளனர்.
நம்தம் தாய்மொழியாம் செந்தமிழைக் காக்க நாம் அனைவரும் ஒருங்கிணைந்து தக்க
நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகத் தாய்மொழி நாளான 2017 பிப்பிரவரி
21 அன்று “உலக வழக்கப்படி இனித் தமிழகத்திலும் தமிழ்மொழி மூலமாகத்தான்
கட்டாயமாகக் கல்வி கற்பிக்கப்படும்; ஆட்சியில் முழுமையாகத் தமிழ்மொழியைக்
கோலோச்சச் செய்வோம்” என அறிவித்து செயல்படுத்த வேண்டும்.
உலகத் தாய்மொழிநாள் விழா – 2017 பிப்பிரவரி 21
உலகக் கவிதைநாள் விழா – 2017 மார்ச்சு 21
உலகத் தமிழ் மருத்துவநாள் விழா – 2017 ஏப்பிரல் 14
இவ்விழாக்களை ஆக்கபூர்வமாகக் கொண்டாடுவோம்.
செந்தமிழ் மொழியையும் தமிழர் பண்பாட்டையும் காப்போம்! கற்பிப்போம்! போற்றிக் காப்போம்!
பெ. சிவசுப்பிரமணியன்
தலைவர், தாயுமானசுவாமி தமிழ்வளர்ச்சி மன்றம்.
044 – 25910102
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக