தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாக்கிக் கொடுமைப்படுத்தும் இலங்கைப் படையினர்!
– உறுதிப்படுத்தும் பன்னாட்டு அமைப்பு!
இலங்கையின் சிங்களப் படையினர் தமிழ்ப் பெண்களைப் பாலியல் அடிமைகளாகப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்தி ‘உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு’ தெரிவித்துள்ளது.
இலங்கைப் போரின்பொழுதும் அதன் பின்பும் தமிழ்ப் பெண்களைக் கைது செய்து, தடுத்து வைத்துப் பாலியல்
வல்லுறவுக்கு ஆட்படுத்தியதாகவும் அவர்களிடம் மேலும் பாலியல் குற்றங்கள்
பலவற்றில் ஈடுபட்டதாகவும் குற்றம் சுமத்தப்படும் இலங்கைப் படை அலுவலர்கள்
ஆறு பேரின் விவரங்களைப் பன்னாட்டு மனித உரிமை அமைப்பொன்று ஐக்கிய நாடுகள்
அமைப்பிடம் அளித்துள்ளது.
இலங்கையில் தனித் தமிழீழம் கோரி நடைபெற்ற போரின்பொழுது அப்பொழுதைய இராசபச்சே
அரசால் பல நூறாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். அப்பொழுது
தமிழினப் பெண்களை இலங்கைப் படையினர் பாலியல் அடிமைகளாக வைத்துத்
துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் சோகன்சுபர்கைத் (Johannesburg) தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உண்மை
மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு ‘தமிழ்ப் பெண்கள் இலங்கைப்
படையினரால் பாலியல் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தது உண்மைதான்!’ என உறுதி
செய்துள்ளது!
வவுனியா, புத்தளம்
முதலான இடங்களில் பெண்களைக் கைது செய்து, அடைத்து வைத்து இலங்கைப் படையினர்
பாலியல் குற்றங்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தக் குற்றங்களில் ஈடுபட்டுள்ள
படையினர் பற்றிய விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. முகாம்கள்
இயங்கியதாகக் கூறப்படும் நான்கு இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
இலங்கையில் உண்மை மற்றும் நீதிக்கான பன்னாட்டு அமைப்பு கூறியுள்ளது.
குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள படை
அலுவலர்களில் படைத்துறைப் பணித் தலைவன் (Major) ஒருவனும் துணைநிலைப் படை
அலுவலன் (இலெப்டினட்) ஒருவனும் அடக்கம். தாங்கள் பட்ட சித்திரவதைகள்,
கொடுமையான பாலியல் தாக்குதல்கள் ஆகியவற்றைப் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ள
பெண்கள் 55 பேர் தொடர்பான முழுமையான விவரங்களை அமைப்பு தனது புதிய
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இலங்கையின் முன்னாள் ஆட்சியாளன் அதிபர் இராசபச்சேவின்
ஆட்சிக் காலத்தில் 48 பாலியல் வதை முகாம்களும், தற்போதைய சிறீசேனா
ஆட்சியில் 7 பாலியல் வதை முகாம்களும் உருவாக்கப்பட்டுப், பெண்கள் துன்புறுத்தப்பட்டு வருகின்றனர்.
இலங்கைப் படை திட்டமிட்டுப் பாலியல்
குற்றங்களில் ஈடுபட்டுள்ளது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால்
இதனை ஏற்க முடியாது என இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
– நன்றி: மாலை மலர், பிப்பிரவரி 21, 2017
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக