வெள்ளி, 7 அக்டோபர், 2016

இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்





தலைப்பு - இந்தியாவில்தான் இருக்கிறோமா?02 : thalaippu_indiaavilthaan-irukkiroamaa_anwarbalasingam-02

இந்தியாவில்தான் இருக்கிறோமா…! – அன்வர் பாலசிங்கம்

  காவிரி நீர்ச் சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகள் கருநாடக மண்ணில் எங்கு பார்த்தாலும் தாக்கப்படுவதும்…எரிக்கப்படுவதும்…வண்டிஓட்டுநர்கள் அம்மணமாக்கப்படுவதும்...நாம் இந்தியாவில்தான் வாழ்கிறோமா என்ற பேரச்சத்தை எனக்குள் எழுப்பியுள்ளது.
  2011-இல் முல்லைப்பெரியாற்றுச்சிக்கல் தீவிரமெடுத்ததிலிருந்து  தொடர்புடைய இடுக்கிமாவட்டத்தில் மட்டுமல்ல, கேரளத்தின் எந்த மாவட்டத்திற்கும் நீங்கள் தமிழக பதிவெண்கொண்ட ஊர்தியில் போனாலும்,   அலட்சியப் பார்வையை மலையாளிகள் உங்கள் மீது வீசுவதை தவிர்க்க முடியாது. கேரளத்தில் உள் பகுதிகளான கண்ணூர், மலப்புரம், கோழிக்கோடு, பகுதிகளில் தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்திகளில்  பயணம் செய்தவர்கள் நன்றாகவே உணர்ந்திருப்பார்கள். அதைவிட ஒரு சிறந்த  எடுத்துக்காட்டு: கேரள எல்லைப்புற மாவட்டமான தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர் பகுதிகளில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெரும்பாலான  மலையுந்துகளில்(ஈப்புகள்) கேரளப் பதிவெண் கொண்டதாகவே இருக்கும். இந்தக்கணக்கில் போடி, சின்னமனூரையும்  சேர்த்துக்கொள்ளலாம்.
  எதற்காக இவர்கள் கேரளப் பதிவெண்ணை வைத்திருக்கிறார்கள்? காரணமிருக்கிறது. கேரள மாநிலத்தின் பதிவெண்ணைத் தனது வண்டிகளுக்கு வாங்கியிருப்பவர்களுக்குக் கண்டிப்பாக இடுக்கி மாவட்டத்தில் ஏலக்காய்த் தோட்டமிருக்கும். கம்பம் நகரிலிருந்து  ஏலக்காய் தோட்ட முதலாளி  ஒருவர் அன்றாடம், வண்டன் மேட்டிலோ, உடும்பஞ்சோலையிலோ, இராசகுமாரி, இராசாக்காட்டிலோ உள்ள ஏலக்காய்த் தோட்டத்திற்குச் சென்றுவர அவருக்குக் கேரளப் பதிவெண் கொண்ட வண்டிதேவைப்படுமென்றால், என்ன  சிக்கல் அவருக்கு? ஏன் தமிழகப் பதிவெண் கொண்டவண்டியில் போனால், குமுளி அல்லது கம்பம் மெட்டு, போடிமெட்டு ஆகிய கேரள சோதனைச்சாவடியில்  இசைவளிக்க மாட்டார்களா?
  இந்திய ஒருமைப்பாட்டையும் ஒற்றுமையையும் உரத்து முழங்கும் மானமனிதர்களே! இங்கே கொஞ்சம் வந்து விட்டுப்போங்கள்.
  தமிழகப் பதிவெண் கொண்ட ஊர்தியில் நீங்கள் குமுளியிலுள்ள கேரள ஆய்வுச்சாவடிக்குச் செல்லும்போது இந்த வண்டிகளுக்கென்று ஒரு தனிக்கவனிப்பு இருக்கும். மேலாக 2011 முல்லைப்பெரியாற்றுச் சிக்கலுக்குப் பிறகு கேரள எல்லையோர மாவட்டங்களில் முளைவிட்டிருக்கும் மார்க்சிய குண்டாயிசமுமே இதற்கான காரணங்கள்.
  தமிழகப் பதிவெண் கொண்டவண்டியில் போனால் தேவையில்லாத  சிக்கல் எதற்கு என்ற தமிழர்களின் இயலாமையே இதற்கான மூலதனம். இந்தக் கொடூரப்போக்கைத் தொடங்கி வைத்த  பெருமை, கம்பம் பள்ளத்தாக்கையே  அடக்கிவைத்திருக்கும் கன்னட ஒக்கலிக பெரு முதலாளிகளையே சாரும். அவர்கள்தான் தங்களுடைய வண்டிகளில் மலையாளப் பதிவெண்ணோடு பெருமையாகச் சுற்றிவரத் தொடங்கியவர்கள். பின்னர் இந்த நோய் நமது ஆட்களையும் தொற்றிக்கொண்டது. இப்போது கம்பம் பள்ளத்தாக்கில் ஓடும் வண்டிகளில் பாதி வண்டிகள் கேரளப் பதிவெண் கொண்டவையே! எந்த மலையாளியாவது தமிழகப் பதிவெண் கொண்ட வண்டியில் தன் குடும்பத்தோடு வருவதைப் பார்த்திருக்கிறீர்களா? குமுளி,  வண்டிப்பெரியாறு, பீர்மேடு, உடும்பஞ்சோலை, கட்டப்பனை, மூணாறு போன்ற ஊர்களில் வாழும் மலையாள முதலாளிகள்  நாள்தோறும் தேனி வரை வந்து செல்கிறார்கள். ஐயோ தமிழ்நாட்டுக்கு நாம்  நாளும் போகிறோம்.  எந்தத் தமிழனாவது  நம் வண்டியை அடித்துவிட்டால் என்னாவது என்று பயந்தானா? அவன் தமிழகப் பதிவெண் கொண்டவண்டியை ஏன் வாங்கவில்லை? அவனுக்கில்லாத அச்சம் தமிழனுக்கு வரக்காரணம் என்ன? 2011- திசம்பரில் முல்லைப்பெரியாற்றுச் சிக்கலையொட்டி இடுக்கி மாவட்டம் புளியமலையில்  எரிநெய் நிலையம் அடித்து நொறுக்கப்பட்டது. மலையாள இனப்பற்றாளர்கள் இந்த வேலையைச்செய்தார்கள். அந்த  எரிநெய் நிலைய உரிமையாளரிடம் சென்று அதாவது கம்பத்திலுள்ள அவருடைய வீட்டிற்குச் சென்று, “இப்படி யாரோட  நிலையம் என்று தெரிந்திருந்தும்  உடைத்திருக்கிறார்களே!   என்று சொல்லி வழக்கு போட வேண்டும்” என்று சொன்னதும்,  தமிழகச் சட்டமன்ற உறுப்பினரான அந்த  எரிநெய் நிலைய உரிமையாளர் சொல்கிறார்:
“நம்ம உடன்பிறப்புமாருதான உடைத்தாா்கள். போகட்டும். இதற்குப் போய்ப் புகார் கொடுத்தால் நாளைக்கு அங்கே நம்முடைய தோட்டம் இருக்க வேண்டுமா? வேண்டாமா” என்று சமாளித்து வன்முறை வெறியாட்டத்தை நடத்திய மலையாளிகளுக்குக் கொம்பு சீவி விட்டார்.
அவர்தான்  கம்பம்  இராமகிருட்டிணன்
திமுக ச.ம.உ, கம்பம் சட்டமன்றத் தொகுதி
இனம்-கன்னட ஒக்கலிகக் கவுடர்.
இந்தக் கன்னட மக்கள் தங்கள் சொத்துகளைப் பாதுகாக்கப் போடும் இந்த வேடத்தால், மலையாளிகளுக்குத் துணிவு வருவதோடு “தமிழ்நாட்டு வண்டியா? அடிடா!” என்கிற நிலை வந்துவிட்டது…
ஐயப்பன் கோவிலுக்குச் செல்லும் தமிழகப் பதிவெண் கொண்ட வண்டிகள் படும்பாட்டைச் சொல்லித்தீராது. இஃது இடுக்கி எல்லையில் நடக்கும் அநாகரீகம். இதுவேதான் இன்று ஒசுர் தாண்டித் தமிழக எல்லையான  சீசீவாடியிலும் நடக்கிறது.   தமிழகப் பதிவெண் கொண்டவண்டிக்குக் கருநாடகாவில் நுழைய  இசைவில்லை.
 அப்படி என்றால், கருநாடகப் பதிவெண் கொண்ட வண்டியில் தமிழர்கள் செல்லலாமா? செல்லலாம்.ஆபத்தில்லை.
ஒருமைப்பாட்டில் தீயை வைக்க!
 அன்வர் பாலசிங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக