செவ்வாய், 8 டிசம்பர், 2015

கணித்தமிழ் நேயர் சிரீநிவாசு வெள்ளத்தில் சிக்கி மனைவியுடன் பலி!


கணித்தமிழ் நேயர் சிரீநிவாசு அடையாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி மனைவியுடன் பலி!
  தமிழில்  கணியத்தை(மென்பொருளை) அறிமுகம் செய்தவர் சிரீநிவாசு. தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் கோவில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். மேலும் தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாகத் திருமண மண்டபம் ஏற்பாடு செய்தவர்.

 மேலும் தமிழ் எழுத்தில் எண்களைக் கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள் காட்டி, தமிழ் கடிகாரத்துக்கு அலைபேசிச் செயலி  முதலானவற்றை உருவாக்கியவர் சிரீநிவாசு.

 'தெய்வமுரசு' என்ற ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர் தி.இரா.நி.(எசு.ஆர்.எம்.) பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராயத்துடன் இணைந்து சைவத்தமிழ்ப் பட்டயப்படிப்பை நடத்தி வந்தார்.

  அடையாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி  சிரீநிவாசு தன் மனைவி சங்கராந்தியுடன் பலியான  துயரத்தகவல் காலத்தாழ்ச்சியாகத் தெரியவந்து உள்ளது.

  சிரீநிவாசு வீடு ஈக்காட்டுதாங்கல் மாஞ்சோலைத் தெருவில் உள்ளது. பக்கத்துத் தெருவில் இவர் தம்பி கந்தசாமி வீடு உள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது தம்பி கந்தசாமி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ என்று இரவு முழுவதும் தூங்காமல் புலம்பிக் கொண்டு இருந்தார். மறுநாள் பொழுது விடிந்தது. அலைபேசியில் தம்பியைத் தொடர்பு கொண்டு தனது தெருமுனைக்கு வரும்படிக் கூறினார். அதோடு தானும் வீட்டை விட்டு இறங்கித் தெருவில் நடக்கத் தொடங்கினார்.

  அப்போது சுழன்று அடித்து வந்த வெள்ளம் அவரை அடித்துத் தள்ளி தனது போக்கிலேயே இழுத்துச் சென்றது. இதனைப் பார்த்துக் கதறித் துடித்து ஓடிவந்த மனைவி சங்கராத்தியையும் அடையாற்று வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

  2 நாள் கழித்து அடையாளம் தெரியாத பிணங்களாக 2 பேர் உடல்களும் இராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.

 அங்குதான் அவர்களது உடல் அடையாளம் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அவர்களது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில்  எரியூட்டப்பட்டது.

  வரலாற்றில் தடம் பதித்த  புகழ்வாணர்களின் மட்டுமல்லாமல் பலரின் மரணம் கூடப் பக்கத்து வீட்டுக்குத் தெரியாமல் மழை வெள்ளம் அமுக்கி விட்டது சோகத்தில் பெரும் சோகமாகி விட்டது.


தங்கர் பச்சான் புகழாரம்

  தன் நண்பர் சிரீநிவாசுடனான நினைவுகளை `தி இந்துவிடம் பகிர்ந்து கொண்டார் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சான். "2004- இல் `தென்றல்படம் எடுத்தபோது சிரீநிவாசோடு எனக்கு அறிமுகம். தமிழில் குடமுழுக்கு விழாக்களை நடத்த வேண்டும் என்ற முழக்கத்தை முன்னெடுத்த அவர், உலகத்தில் 16 இடங்களில் கோயில்களைக் கட்டி அங்கெல்லாம் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ததுடன், அங்கே தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாகவே (திருமண) மண்டபமும் ஏற்பாடு செய்து தந்தார்.

  அவரிடம் உதவி கேட்டு வரும் இளைஞர்களுக்குத் தன்னுடைய பன்னாட்டுத் தொடர்புகளை வைத்து, இருந்த இடத்தில் இருந்தபடியே வேலை வாய்ப்புகளை அவர் ஏற்படுத்தித் தந்ததைப் பார்த்திருக்கிறேன்.

  `தமிழ் வணிகர்களின் முன்னேற்றத்துக்காகத்' 'தமிழ் தொழில்முனைவோர் மையம்' என்ற அமைப்பையும் தொழிலில் நலிந்துபோன தமிழர்களுக்குத் தோள் கொடுப்பதற்காக ஒரு தனி அமைப்பையும் ஏற்படுத்தியவர் சிரீநிவாசு.

  தமிழர்களை அரசியல் அடிமைத் தனத்தில் இருந்து மீட்பதற்காக 'இந்திய முன்னேற்றக் கழகம்' என்ற அரசியல் சார்பற்ற அமைப்பை அவரது ஏற்பாட்டில் திசம்பர் 7-இல் நானும் தமிழருவி மணியன் அண்ணனும் முறைப்படி தொடங்கி வைப்பதாக இருந்த நிலையில் அதற்கு ஒரு நாள் முன்னதாகச் சிரீநிவாசை எரியூட்டும் கொடுமைக்கு இயற்கை எங்களை ஆட்படுத்திவிட்டதையும், தமிழுக்காகத் தன்னையே ஒப்படைத்துக் கொண்ட அந்த மாமனிதருக்கு ஏற்பட்ட இறுதி முடிவு யாருக்குமே தெரியாமல் போய்விட்டதையும் என்னவென்று சொல்வது?’’ வலியுடன்  சொல்லிமுடித்தார் தங்கர் பச்சான்.
 “பன்னிரு திருமுறைகளையும் அலைபேசியில் படிக்கும் வசதியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். அதற்குள்ளாக அவருக்கு இப்படியொரு முடிவு ஏற்பட்டுவிட்டது’’ என்று வருத்தப்பட்டுச் சொன்னார் சிரீநிவாசின் தம்பி கந்தசாமி

- தமிழ் இந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக