sumangali workers women labour

பேராசைப் பசிக்கு இரையாகும் இளம்பெண்கள்

  தமிழக அரசு தொழிலாளர் நலத்துறையின் அறிக்கைப்படி 38,000 இளம் பெண்கள், தொழிற்சங்கச் சார்பாளர்கள், தொண்டு நிறுவனங்களின் கணக்குப்படி 4 நூறாயிரம் இளம் பெண்கள், ‘சுமங்கலித் திட்டம்’ என்கின்ற பெயரில் அதிக வேலைக்குக் குறைவான சம்பளம், கூடுதல் நேர வேலைக்குக் கூடுதல் சம்பளமின்மை, கட்டயாப்படுத்தி வேலை, தொழிற்சங்க உரிமை மறுப்பு, குறைவான தூக்கம், உடல் சோர்வு, பாலியல் தொந்தரவு போன்ற வன்கொடுமைகளில் வதைக்கப்படுகின்றனர்.
 இன்றைய சூழலில் வேளாண் கூலிகளை விடவும் பஞ்சாலைக் கூலிகள்தான் அதிகளவில் உள்ளனர் என்பது நாம் அறிந்ததே. இந்தியப் பொருளாதாரத்தில் பஞ்சாலைத் தொழில் முதன்மை இடத்தைப் பிடித்துள்ளது. தொழிற்சாலை உற்பத்தியில் 14% பங்கையும், தேசிய மொத்த உற்பத்தியில் 5% பங்கையும், அயலகச் செலவாணி வகையில் தேசிய உற்பத்தி வருமானத்தில் 20% பங்கையும், ஆடை உரூவாக்கத் தொழில்கள் கொடுக்கின்றனவாம். 2009- ஆம் ஆண்டுக் கணக்குப்படி தமிழ்நாட்டில் மட்டும் 839 பஞ்சாலைகள் உள்ளனவாம். இப்படியாகப் பட்டி தொட்டியெங்கும் கொட்டி முழங்குகிறது இந்தப் பஞ்சாலைத் தொழில். திருப்பூரில்   தொடங்கிய உள்ளொட்டி(பனியன்) நிறுவன மோகம் தமிழகத்தின் பல பகுதிகளிலும் பரவிக் கிடக்கின்றது. வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கோபிச்செட்டிபாளையத்திலும்கூட இன்று உள்ளொட்டி நிறுவனங்கள் ஆதிக்கம் தொடங்கி விட்டது. ஊர் ஊருக்குப் பேருந்துகளை அனுப்பிக் கொத்து கொத்தாய் ஆட்களை வேட்டையாடுகின்றனர். வேளாண் கூலிகள் உள்ளொட்டி நிறுவனம் மேல் மோகம் கொண்டு சென்று விட்டதால் வேளாண்மைக்கு ஆள் பற்றாக்குறை; ஆனால்,   பஞ்சாலைகள், தொழிலாளர்களை வாட்டி வதைத்து இவர்கள் உழைப்பை ஒட்டுமொத்தமாய் உறிஞ்சி விட்டுச் சக்கையாக்கித் தூக்கி எறிகின்றன.
 1990-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட தாராளமயமாக்கல் கொள்கையால் பஞ்சாலைத் தொழில்களில் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை பெருகியது. குறைந்த சம்பளத்தில் அதிக வேலை வாங்க வேண்டும் என்பதுதான் பஞ்சாலை உரிமையாளர்களின் முதன்மைக் குறிக்கோளாய் இருந்தது. தொழிற்சங்கச் சட்டப்படி அது சாத்தியப்படாததால் அரசால் நியமிக்கப்பட்ட ஒரு குழுவின் பரிந்துரைதான் தொழிற்சங்கச் சட்டம். உரிமை மறுக்கப்பட்ட கொத்தடிமை முறையான இந்த சுமங்கலித்திட்டம் குறிப்பாகத் திருமணம் ஆகாத இளம் பெண்களைக் குறிவைத்துச் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் முதன்மைக் குறிக்கோள் குறைந்த சம்பளத்தில் அதிக வேலை வாங்குவது. இதற்காக இளம் பெண்களைத் தரகர்கள் மூலம் வலைவீசி தேடிப் பிடிக்கின்றன இந்த பஞ்சாலைகள். இதன் வலையில் சிக்கும் இளம் பெண்கள் சிலந்தியின் வலையில் சிக்கிய ஈயைப் போலத்தான் உழைப்பு உறிஞ்சப்பட்டு சக்கையாக்கி அனுப்படுகின்றனர்.
  1996- ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் தொடங்கப்பட்டு ஈரோடு, திருப்பூர், கோயம்முத்தூர், திண்டுக்கல் மாவட்டங்களில் விரிவுபடுத்தப்பட்டது. இத்திட்டத்தின்படி 14 அகவை முதல் 20 அகவை நிரம்பிய இளம்பெண்கள் மூன்று ஆண்டுக்கால ஒப்பந்த அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு மூன்றாண்டு முடிவில் 30,000 தருவதாக நம்பகமொழி கூறப்படுகிறது.
  பெண் குழந்தைகளை மணமுடித்து வைத்து, ஆனந்தக் கண்ணீரோடு புகுந்த வீட்டிற்கு அனுப்புவது, பெற்றோருக்கு தேனினும் இனிப்பான செயல். ஆனால், ஏழ்மையின் பிடியில் சிக்கித் தவிக்கும் நாள்கூலித் தொழிலாளாளர்களுக்கு மலையினும், சுமையானது இந்தத் திருமணம். அன்றாடப் பிழைப்பிற்கே அல்லாடும் அன்றாடங்காய்ச்சிகள் பெண்குழந்தைகளுக்கு மணமுடித்து வைப்பது என்பது கடமை என்றாலும், ஒரு புறம் சுமையும் கூட அதற்காகவே படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பெண் குழந்தைகளை வேலைக்கு அனுப்பும் ஏழை பெற்றோர்கள் மிகுதியானவர்கள். குறிப்பாகத் திருப்பூர் உள்ளொட்டி நிறுவனங்களிலும் சிவகாசி தீப்பட்டித் தொழிற்சாலைகளிலும், கல்வியைத் தொலைத்து வாழ்க்கையைத் தேடும் பெண் குழந்தைத் தொழிலாளர்கள் ஏராளாமானோர்.
  “இதைப்பார்! பெண்பிள்ளையைப் பெற்றுவிட்டோமே என்று கவலையே படாதே! இதற்காகத்தான் ‘சுமங்கலித் திட்டம்’ என்று ஒன்று புதிதாக வந்திருக்கிறது. மூன்று வருடம் உம் பிள்ளையை வேலைக்கு அனுப்பு. தங்குவதற்கு விடுதி, உணவிற்கு உணவகம் எல்லாம் உள்ளன. வேலை செய்து முடித்து வெளியே வரும்போது, கல்யாணச் செலவுக்கு 30,000 பணமும் கொடுப்போம்.” இப்படித்தான் ஆசைச் சொற்கள் கூறி ஆட்களைத் தேற்றுகிறது இந்தத் தரகுக் கும்பல். இந்த ஆசைச் சொற்களில் சொக்கிப் போனவர்கள் சுமங்கலித் திட்டத்தில் பணிக்குச் சேர்ந்து சோர்ந்து போய் விட்டனர். இந்தச் சுமங்கலித் திட்டத்தைத் தொழிற்சங்கச் சார்பாளர்களும், சமூக ஆர்வலர்களும் நவீன முறை கொத்தடிமைத்தனம் என்றே பறைசாற்றுகின்றனர். சிறை வாழ்க்கை முறைக்கு இணையான கொத்தடிமை முறைதான் சுமங்கலித்திட்டம் என்பதில் ஐயமே இல்லை. பஞ்சாலைகளிலேயே தங்கி வேலை புரியும் இவர்கள் 6 மாதத்திற்கு ஒரு முறைதான் பெற்றோரைச் சந்திக்க முடியும் என்ற கட்டாயச் சூழல். கூண்டுக் கிளியாக அடைபட்டு கிடக்கும் இவர்களது நிலை பரிதாபத்திற்குரியது.
  கோவை சமூக ஆய்வு மையம், அருந்ததியர்கள் அதிகமாக வாழும் ஈரோடு, கோவை, திருப்பூர், திண்டுக்கல், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் பஞ்சாலைகளில் சுமங்கலித் திட்டத்தில் பணிபுரியும் அருந்ததிய சமூக இளம்பெண், குழந்தைகளின் வேலை, சூழ்நிலை, அவர்கள் எதிர் நோக்கும் வன்முறைகள், உடல்நலச் சிக்கல்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வில் இத்திட்டத்தில் பெரும்பான்மையானோர், கடன்சுமை, வறுமை, வேலையின்மை எனப் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஏழ்மையானவர்களே பலி கடாய் ஆகின்றனர். குறிப்பாக சொல்லப் போனால் இந்த சுமங்கலித் திட்டத்தில் பணிபுரியும் 70% பேர் தாழ்த்தப்பட்டவர்களாகவும், அவற்றில் 40% பேர் அருந்ததியர்களாகவும், மீதமுள்ள 30% பேர் வறுமையில் வாடும் பிற வகுப்பினர்களாக உள்ளனர். இத்திட்டத்தில் அருந்ததியர்கள் பெருமளவில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர்.
  பொருளாதாரச் சூழலில் மிகவும் பின்தங்கியவர்களாய் உள்ள இந்த அருந்ததிய மக்களை தேடிச் செல்கின்றனர் தரகர்கள். இவ்வாறாக ஆட்களைச் சேர்த்து விடும் தரகர்களுக்கு ஒரு பெண்ணுக்கு மூன்றாயிரம் ரூபாய் வீதம் கொடுக்கப்படுகிறது. இந்த சுமங்கலித் திட்டம் உழைப்பை சுரண்டும் ஒரு கொத்தடிமைத்தனம். இந்த ஆய்வுக்காக மாவட்டத்திற்கு 50 பெண் குழந்தைகள் வீதம் 250 அருந்ததியப் பெண் குழந்தைகள் மாதிரி தேர்வு செய்யப்பட்டது. இவர்களில் குடும்ப சூழல் காரணமாகவே பலர் பணியாற்ற வந்திருக்கின்றனர். தங்களது பெண் குழந்தைகளின் திருமணச் சூழலை சமாளிக்க முடியாமல் பெற்றோர்களே சுமங்கலித் திட்டத்தில் இணைத்துள்ளனர்.
  சுமங்கலித் திட்டத்தில் பணிபுரியும் அருந்ததியர் சமூகத் தொழிலாளர்களில் 10% மாணவர்கள் 14 அகவைக்குட்பட்ட குழந்தைத் தொழிலாளர்களாக உள்ளனர். 9% பேர் எழுத, படிக்கத் தெரியாதவர்களும், 30% பேர் மட்டும் 8-ஆம் வகுப்பு படித்தவர்களாகவும் உள்ளனர். இவர்களில் 48%பேர் தரகர்கள் மூலம் பணியில் இணைந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. மேலும், இத்திட்டத்தில் பணிபுரியும் 86% பேர் 8 மணி நேரத்திற்கும் அதிகமாக வேலை செய்கின்றனர். 8 % பேர் 12 மணி முதல் 16 மணி நேரம் வரை வேலை செய்கின்றனர். 83 % பேர் வார விடுமுறையின்றி வேலை செய்கின்றனர் என்பது தெளிவாகிறது. 82 %   தொழிலாளர்கள் பணிபுரியும் இடத்தில் தங்களது மேற்பார்வையாளர்களால் கடுஞ்சொற்களால் திட்டப்படுவதாகக் கண்ணீர் வடிக்கின்றனர். 5 % தொழிலாளர்கள் தங்களுடன் பணியாற்றும் மற்ற பெண்களுக்குப் பாலியல் தொந்தரவு நடந்ததாகத் தெரிவித்துள்ளனர். கொடுமையிலும் கொடுமையாக 11 % பேருக்குப் பணிநிறைவுக்குப் பின் தருவதாகத் தெரிவித்த 30,000 உரூபாய் தொகையைத் தரவில்லை என்று கண்ணீர் மல்கத் தெரிவிக்கின்றனர். வன்கொடுமையில் வாட்டி வதைக்கும் இந்த சுமங்கலித் திட்டம் இளம் பெண்களின் திருமண உதவிக்காகத்தான் என்று சொல்லப்படுகிறது. ஆனால் சுமங்கலித் திட்டத்தால் தங்களது வாழ்க்கையையே தொலைத்துவிட்ட பெண்களும் இருக்கின்றனர். எத்தனையோ பேர் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தாலும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் தங்களது அவலங்களை மறைத்து விடுகின்றனர். இப்பெண்களின் நிலை உண்மையிலும் கண்ணீர் மயமானது எனபதற்கு எடுத்துக்காட்டுகளாக இத்திட்டத்தால் தன் வாழ்க்கையைத் தொலைத்துத் துயரத்தில் குடியிருக்கும் துளசிமணி, தேவி ஆகியோரைச் சொல்லலாம்.
  துளசிமணி, தேவி இருவரும் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த இளம்பெண்கள். தரகர்களின் ஆசைச் சொல் வலைகளில் சிக்கிச் சின்னபின்னமானவர்கள். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வட்டம், புதுவடவள்ளியைச் சார்ந்தவர் துளசிமணி. குடும்பச் சூழல் காரணமாய் 4-ஆம் வகுப்போடு படிப்பை நிறுத்தி விட்ட துளசிமணி 18 அகவையில் இளமைக் கனவோடு சிறகடித்துப் பறந்த பறவையாய் இத்திட்டத்தில் சேர்ந்திருக்கிறார். அங்கு இவருக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகளால் இன்று சிறகொடிந்து நிற்கிறார் என்பது வேதனைக்குரியது. துளசிமணிக்கு வெறும் 22 அகவைதான் ஆகிறது. சுமங்கலித் திட்டம் இவருக்குத் தந்த பரிசினால், 60 அகவையயுடையவரைப் போன்ற தோற்றத்தோடு இருக்கும் இவரை பார்க்கவே பரிதாபம்தான்.
இந்தச் சுமங்கலித் திட்டத்தின் இன்னல்களைத் துளசிமணியிடம் நான் கேட்டபோது, “பெற்றவர்களுக்கு நான் ஒரு சுமையாக இருக்கக்கூடாது என்று நினைத்து என் கல்யாணத்துக்கு நானே சம்பாதிக்கலாம் என்று ஆசையுடன் இந்தத் திட்டத்தில சேர்ந்தேன். ஆனால் எனக்குக் கடைசிவரைக்கும் கல்யாணமே ஆகாது என்பது வேதனையாகத்தான் இருக்கிறது. பெற்றவர்களுக்குச் சுமையாக இருக்க கூடாது என்று நினைத்தேன். ஆனால் நடக்கக்கூட முடியாமல் நான் அவர்களுக்குச் சுமையாவே இருக்கிறேன். ஒரு நாளைக்கு பன்னிரண்டு மணி நேரம் நின்றுகொண்டே வேலை செய்ததால் என்னுடைய கால் தசையெல்லாம் இறுகி நடக்கக் கூட முடியாமல் ஆகிவிட்டேன். என்னால் தரையில் உட்கார முடியாது. உட்கார்ந்தால் எழுந்திருக்க முடியாது, வேகமாக நடக்க முடியாது. மொத்தத்தில் நான் உயிர் வாழ்வதே இந்தப் பூமிக்கும் என்னைப் பெற்றவர்களுக்கும் சுமைதான்” என்று பரிதாபமாய்ச் சொன்ன துளசிமணி, சுமங்கலித் திட்டத்தின் அவலங்களை கொட்டித் தீர்த்தார்.
  இவர்களுக்கு விடுமுறை என்பதே கிடையாது. வார விடுமுறை என்று அறிவிக்கப்படும் ஒரு நாளில் இவர்களுக்கு மற்ற வேலை கொடுக்கப்படுகிறது. தூங்குபவர்களை எழுப்பியும் வேலை வாங்கப்படுகிறது. உடல்நிலை சரியில்லாதவர்களிடமும் கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுகிறது. இவ்வாறான அவலங்களை நம்மிடம் சற்றே கண்ணீரோடு கூறினார் துளசிமணி.
  தேவி சத்தியமங்கலம் அருகே பெரியூரைச் சார்ந்தவர். சுமங்கலித் திட்டத்தில் பணிபுரிந்துவிட்டு வந்த பின்னர் இவருக்குத்திருமணம் உறுதியானது. திருமணம் நடக்கவிருந்த ஒரு வாரத்திற்கு முன்பு தீராத வயிற்றுவலியால் துடித்திருக்கிறார். பஞ்சாலைகளில் சுவாசம் வழியே உட்புகுந்த பஞ்சுகள் வயிற்றில் தேங்கிவிட்டதாக மருத்துவர் சொல்லியிருக்கிறார். இதனால் நடக்கவிருந்த திருமணமே நின்றுவிட்டது.
   ஏதோ அரசின் திட்டத்தைப்போலப் பெயரைக் கொண்டுள்ள இந்தச் சுமங்கலித் திட்டத்தின் நோக்கமே பஞ்சாலை முதலாளிகளின் பேராசைப் பசிக்கு இளம்பெண்களை இரையாக்குவதுதான். தொழிற்சங்கச் சட்ட விதிகளின்படி பஞ்சாலைத் தொழிலாளர்கள் சம்பள உயர்வு, விடுமுறைகளுக்காகத் தொழிற்சங்கங்களாய் ஒன்றுபட்டுப் போராடி உரிமையைப் பெற்றனர். இதனால் பாதிப்படைந்த ஆலை உரிமையாளார்கள் பெரு ஆதாயத்தை ஈட்ட வேண்டிக் கூலி குறையவேண்டும் என்கிற நோக்கில் பெருமளவில் பெண்களைப் பணிக்கு அமர்த்தினர். தொழிற்சங்கச் சட்டப்படி மாலை 6 மணிக்கு மேல், எந்தவொரு பெண்ணும், எந்தவொரு தொழிற்சாலையிலும் பணிபுரியக்கூடாது. பணபலத்தின் முன் இந்தச் சட்டம் கூடத் தோற்றுப்போனது. இந்தச் சட்டத்தையே மாற்றி அமைக்க முதலாளி கும்பல்கள் முன்வந்தன. பெண்களுக்குச் சமஉரிமை வேண்டும் என்கிற கோரிக்கையின் அடிப்படையில் ஆணுக்குச் சரி சமமான நேரம் பெண்களும் வேலை செய்யலாம் என்று வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றன. முதலாளிகளின் தன்னல ஆதாயத்திற்காகச் சட்டமே திருத்தி அமைக்கப்பட்டது என்பது முதலாளிகளுக்கானது அரசு என்பதற்கான சான்று. இப்படியாகப் பெண்களும், ஆண்களுக்குச் சரிசமமான வேலையில் ஈடுபட்டு வந்தனர்.
  தொழிற்சங்கச் சட்டப்படி பெண் தொழிலாளி கருப்பம் அடைந்து விட்டால் அப்பெண்ணுக்கு விடுப்புடன் கூடிய ஊதியம் தரவேண்டும், இதுவும் முதலாளிகளின் பேராதாயத்தை அடையும் போக்குக்கு எதிராக இருந்தது. இதனால் திருமணம் ஆகாதவர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும் என்ற நோக்கில் பஞ்சாலை முதலாளிகள் செயல்பட்டனர். அரசால் நியமிக்கப்பட்ட குழுவே மக்களுக்கு பாதகமாகவும், முதலாளிகளுக்குச் சாதகமாகவும் ஓர் அறிவுரையைப் பரிந்துரைத்தது. அதுதான் இந்த  ‘சுமங்கலித் திட்டம்’.
 ‘சுமங்கலித் திட்டம்’ என்பது நவீன முறை கொத்தடிமைத்தனம் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை. இத்திட்டம் பல இளம் பெண்களின் கனவுகளையும், எதிர்காலத்தையும் பாழாக்கியுள்ளது. இளம்பெண்களை வதைக்கும் இந்தச் சுமங்கலித் திட்டத்தைத் தடை செய்ய வேண்டும். தொழிற்சங்கச் சட்டப் பாதுகாப்பிற்கு எதிராகத் தொழில் செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் உரிமையை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்தஅளவுக் கூலியைத் தொழிலாளர்களுக்குப் பெற்றுத்தர அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். சுமங்கலித் திட்டத்தில் உள்ள பெண் தொழிலாளர்கள் நிலையான தொழிலாளர்களாக மாற்றப்பட வேண்டும் அல்லது அவர்களது மறுவாழ்விற்கு அரசு உறுதி வழங்க வேண்டும். இதுவே இச்சிக்கலுக்கான முதன்மைத் தீர்வு என்பது சமூக அமைப்புகளின் கருத்து.
  நவீன முறை கொத்தடிமைத்தனமான இந்தச் சுமங்கலித் திட்டத்தில் அருந்ததியர் வகுப்பைச் சார்ந்த இளம் பெண்கள் பெரிதளவில் வாட்டி வதைக்கப்படுகின்றனர் என்பது மறுக்கமுடியாத உண்மை. அருந்ததியர் சமூகத்தினர் பொருளாதாரச் சூழ்நிலையில் பின்தங்கியவர்களாக உள்ளதால் தரகர்கள் இம்மக்களைக் குறிவைக்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்ட தேவி, துளசிமணி இருவருக்கும் வைப்புநிதி இன்னமும் வழங்கப்படவில்லை. இவர்களின் மருத்துவச் செலவிற்குப் பணம் தரமுடியாது எனப் பஞ்சாலை உரிமையாளர்கள் மறுத்து விட்டனர். இன்று மருத்துவச் செலவிற்கு கூட அல்லாடி வருகின்ற தேவி, துளசிமணியைப்போலத் தமிழகத்தில் இன்னும் எத்தனையோ தேவிகளும், துளசிமணிகளும் எதிர்கால வெளிச்சமின்றி இறந்தகால இருட்டினூடே புதைந்து தேம்பிக் கொண்டிருக்கின்றனர். இந்த கண்ணீர்த் துளிகளுக்கு யார்தான் பதில் சொல்வது?
-பா.வீரத்திலீபன்