தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும்
கருகும் தென்னை மரங்கள்
தேவதானப்பட்டிப் பகுதியில் மீண்டும் தென்னை மரங்கள் கருகுவதால் உழவர்கள் வேதனை அடைகின்றனர்.
தேவதானப்பட்டி அருகே உள்ள புல்லக்காபட்டி,
செங்குளத்துப்பட்டி, மஞ்சளாறு அணை, சில்வார்பட்டி, குள்ளப்புரம்,
கெங்குவார்பட்டி முதலான பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாகப் போதிய
மழையின்மையால் அரசின் புள்ளிவிவரப்படி ஏறத்தாழ 2 இலட்சத்திற்கும் அதிகமான
தென்னை மரங்கள் கருகின. இதனால் உழவர்கள் தென்னை மரத்தை வெட்டி விட்டு அதனை
வீட்டடி மனைகளாக மாற்றிவிட்டனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பெய்த
மழையால் ஆறு, ஏரிகள், கிணறுகள் நிரம்பத்தொடங்கின. இதனால் தென்னை உழவர்கள்
மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது தென்னந்தோப்புகளில் ஆழ்துளைக் கிணறு
அமைத்து இருக்கின்ற தென்னை மரத்தை காப்பாற்ற நடவடிக்கை மேற்கொண்டனர்.
இப்பொழுது நிலத்தடி நீர் மீண்டும் மளமளவென சரியத் தொடங்கியதால் தென்னை
மரத்திற்குப் பாய்ச்சுவதற்குப் போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. இதனால் இருந்த
தென்னை மரங்களும் கருகத்துவங்கியுள்ளன.
எனவே மாவட்ட நிருவாகம் தென்னை மரங்களைக் காப்பாற்ற மாற்று ஏற்பாடு செய்து தரவேண்டும் என எதிர்பார்க்கிறார்கள் உழவர்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக