ஞாயிறு, 13 ஜூலை, 2014

காரைக்குடியில் வினைதீர்த்தானின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்

காரைக்குடியில் வினைதீர்த்தானின் தன் முன்னேற்றப் பயிலரங்கம்


ஆனி 25 , 2045 / சூலை 9, 2014 அன்று காரைக்குடி இராம.சு.இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் 80 மாணவ மாணவியருக்குத் தன்முன்னேற்றப் பயிலரங்கம் நடைபெற்றது. தன்னார்வத் தொண்டு ஆர்வலர் திரு சொ.வினைதீர்த்தான் இதனைச் சிறப்பாக நடத்தினார்.

பரம்பரைச்சிறப்புடைய இந்நகராட்சிப்பள்ளி 1938 இல் தொடங்கப்பட்டு நடுநிலைப்பள்ளியாகச் செயல்பட்டு வந்தது. சென்ற ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டு ஆற்றல்மிகு தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர் இராசா வழிநடத்தலில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திரு பீட்டர் இராசா பயிலரங்கு நடத்த ஆர்வத்துடன் தக்க ஏற்பாடுகள் செய்திருந்தார்.
பத்தாம் வகுப்பு மாணாக்கர் இருபத்து நான்மரும், ஒன்பதாம் வகுப்பு மாணாக்கர் அறுபதின்மரும் பயிலரங்கத்தில் கலந்துகொண்டனர்.
பயிலரங்கத்தின் பயனுறு செயல்கள்:
நேர நிருவாகம், நினைவாற்றல் பெருக்கல், உறவுகளை மேம்படுத்தல் பற்றிச் சில சிந்தனைகள் இளம் மாணாக்கர் நெஞ்சங்களில் விதைக்கப்பட்டபன.
கற்றல் பற்றி (Registration, Retention, Recall) வாசிப்பு, சிந்திப்பு, படைப்பு என்ற நிலைகள் ஆராயப்பட்டன.
ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி நெஞ்சில் நிறுத்தல் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கப்பட்டது.
“நான்கேட்கிறேன்; மறந்துவிடுகிறேன்; நான் பார்க்கிறேன்; நினைவுகூர்கிறேன்; நான் செய்கிறேன் புரிந்துகொள்கிறேன்!”என்பது ஒரு செயல் முறை மூலம் விளக்கப்பட்டது. நான் சொல்வதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு “உங்கள் ஆட்காட்டி விரலைக் கன்னத்தில் வையுங்கள்’ என்று கூறி அவர்கள் பார்க்கும்படி, பயிற்சியாளர் தன் பெருவிரலைத் தாடையில் வைத்தார். பார்த்த மாணவர்கள் அனைவரும் அவ்வாறே அவரவர் பெருவிரலைத் தாடையில் வைத்தனர். பயிற்சியாளர் கூறியதான ஆள்காட்டி விரலை கன்னத்தில் வைக்கவில்லை. மாணாக்கர்கள் பார்த்ததைச் செய்ததை ஆரவாரத்துடன் ஒத்துக்கொண்டார்கள். செயல்முறையால் I HEAR I FORGET; I SEE I REMEMBER; I DO I UNDERSTAND என்பதை உணர்ந்துகொண்டார்கள்.
நினைவாற்றல் பெருக்கலில் ஒவ்வொரு கேள்விக்கான விடையிலும் நான்கு அல்லது ஐந்து சொற்களே முதன்மையாக உள்ளன என்பது எடுத்துக்காட்டுகளுடன் சுட்டப்பட்டது. படிக்கும்போது ஒரு பாடத்திலிலுள்ள ஒவ்வொரு கேள்விக்கான விடையின் முதன்மையான ஐந்து அல்லது ஆறு சொற்களைக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். அந்தக் குறிப்புப் புத்தகம் பாடத்தினை உணர்ந்து படிக்கவும் நினைவுபடுத்திக்கொள்ளவும் உதவும்.
கற்க! கசடறக் கற்க!!
கற்பவை கற்க! கற்றபின் கற்க!!
அதற்குத் தக நிற்க!
நிற்கக் கற்க!
என்று குறளைப் பிரித்துச் சொல்லி ஒருமுகக் கல்வி, பன்முறை படித்தலும் உரைத்தலும், பயனுறு கல்வி (FOCUSED LEARNING, POWER OF REPETITION, PURPOSE OF LEARNING) ஆகியவை வலியுறுத்தப்பட்டன.
நேர மேலாண்மையில் நேரத்தைக் கட்டுப்படுத்த முடியாது. ஆனால் குறிப்பிட்ட நேரத்தில் ஆற்றும் செயல்களைத் திட்டமிட்டு ஒழுங்குபடித்திக் கொள்ளுதலே நேர மேலாண்மை என்பது விளக்கப்பட்டது.
ஒருவர் செய்யும் செயல்கள் 1.அவசியம்/அவசரம்; 2.அவசியம்/அவசரமில்லை; 3.அவசியமில்லை/அவசரம்; 4.அவசிமும் இல்லை/அவசரமும் இல்லை என்று நான்கு தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அலசப்பட்டன.
அவசியமான செயல்களான 1.உடலினை உறுதி செய்தல், 2.அறிவையும் திறனையும் பெருக்கல், 3.உறவுகளை மேம்படுத்தல் வலியுறுத்தப்பட்டன. அவசியமான செயலைக் காலந்தாழ்த்தும்போது அது அவசரமான செயலாகிவிடுகிறது. படிப்பினை நாளை பார்க்கலாம் எனத் தள்ளிப்போடும்போது தேர்வு நெருங்கிப் படிக்க முடியாது மதிப்பெண் குறைந்துவிடுகிறது.
‘என்றும் ஒருவுதல் வேண்டும் புகழொடு
நன்றி பயவா வினை.’ (திருக்குறள் 652)
குறிப்பிட்ட செயலைச் செய்யும்போது புகழோ நன்றியோ கிடைக்காவிட்டால் அச்செயலை என்றும் செய்யக்கூடாது என்கிறார் திருவள்ளுவர். அது அவசியமும் அவசரமும் இல்லாத செயல். அச்செயல் நேரத்தை வீணடிக்கும். ஒரு செயல் செய்யும்போது அது செய்பவரின் திறனை வளர்த்து அவர் புகழ் பெற உதவ வேண்டும். அல்லது அச்செயல் பிறருக்குப் பயன்பட்டு நன்றியுடைவர்களாக ஆக்கவேண்டும். தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்துகொண்டு மட்டையாட்டமோ திரைப்படமோ பார்ப்பதாலும் அலைபேசியில் வேண்டாதவற்றைப் பேசுவதாலும் புகழும் வராது, நன்றியும் கிடைக்காது என்பதை மாணாக்கர்கள் ஒத்துக்கொண்டார்கள்.
வினை தீர்த்தான் பயிலரங்கம் மாணாக்கர்களுக்கு நன்கு படிப்பதற்கு உரிய உந்துதலாக அமைந்தது. படிக்கச் செலவிடும் நேரத்தை விடப் படிப்பதற்குரிய திட்டமிடலும் அதற்கிணங்கச் செயல்படலுமே முதன்மை என உணர்ந்தனர். பயிலரங்கத்தால் தாங்கள் பெற்ற பயன்களை மாணாக்கர்கள் பின்னூட்டக் கருத்துரையாக எழுதித் தந்தனர்.

 (படங்களைச் சொடுக்கிப் பாருங்கள்)

[முதல் படம் பள்ளி; இரண்டாம் படம் தன் முன்னேற்ற ஊக்குநர் சொ.வினைதீர்த்தான் அவர்களுடன் தலைமை ஆசிரியர் திரு ஆ.பீட்டர்ராசா அவர்களும் பட்டதாரி ஆசிரியை திருமிகு சாக்குலின் அவர்களும்; ]



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக