திங்கள், 28 ஏப்ரல், 2014

திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு


திருநங்கை சுவப்னாவின் போராட்ட அழைப்பு

swapna karthick01
என்னுடைய பள்ளிச்சான்றிதழ்களில் ஆண் பெயர் உள்ளது. இது போன்ற நேர்வுகளால் எங்களுடைய வேலைவாய்ப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது.
எடுத்துக்காட்டாக, எனக்கு, தனியார் நிறுவனத்தில் வேலைகிடைத்த போது சான்றிதழ் சரிபார்க்கும் நிகழ்வுக்குச் சென்றேன். ஆனால் அங்கிருந்த அலுவலர் எனது சான்றிதழில் ஆண் பெயரைப் பார்த்துவிட்டுப் பொய்யான சான்றிதழை தருகிறாயா என்றார். நான் ஒரு மாற்றுபாலினப் பெண் (திருநங்கை) என்றேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை அந்த வேலை எனக்கு கிடைக்கவில்லை.
இவ்வாறுதான்  தமிழ்நாடு தேர்வாணையம்(TNPSC) சரிபார்ப்பிலும் சான்றிதழ் குழப்பமிருந்தது.
எனவே நானும் எங்களது தோழிகளும் பள்ளிக்கல்வி இயக்குநரிடம் சான்றிதழை மாற்றித் தரவேண்டினோம். ஆனால் எவ்வகை மறுமொழியுமில்லை.
 ஆறுமாதக் காலமாகியும்  மறுமொழி அளிக்காத காரணத்தினால் எனது தோழிகளோடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களிடம் சென்று ஏன் எங்களுக்கு  மறுமொழி தரவில்லை என்று கேட்டேன்.
பள்ளிச்சான்றிதழான 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்புச் சான்றிதழை மாற்றிதர மாட்டோம் என்று மடலின் மூலம் தெரிவித்தனார்.
எங்களுடைய சான்றிதழ் மாற்றித்தராத காரணத்தினால் வேலை வாய்ப்பிலும், சான்றிதழ் சரிபார்ப்பதிலும் குழப்பம் நிகழ்கிறது.
மேலும் 10 ஆம் வகுப்புச் சான்றிதழை மாற்ற முடியாது என்றும் அதற்குச் சட்டமில்லை என்று கூறிய  மடல் இது.
 letter to thirunangai swapna
ஒவ்வொரு செயலுக்கும் போராட்டம் செய்ய வேண்டியதாக இருக்கிறது. தமிழ்நாட்டில் நாங்களும் மனிதர்கள் என்பதைப் புரியாமல் அடிப்படை உரிமைகூட  மறுக்கப்படுகிறது.
ஆதலால்தான் எங்களுடைய சான்றிதழ்களை மாற்றித்தர வேண்டும், கல்வியிலும் வேலைவாய்ப்பில் மாற்றுப்பாலின பெண்களுக்கு (திருநங்கைகள்) இட ஓதுக்கீடு தர வேண்டும்  என்கிறோம். இந்த  வேண்டுகோள்களை நிறைவேற்றக் கோரி வருகின்ற 28.04.2014 திங்கள் அன்று மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் செய்யப் போகிறோம். இதற்குத் தங்களின் ஆதரவை அளிக்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஊடகத் தோழர்கள், சமூக ஆர்வலர்கள், கல்லூரி மாணவர்கள், பல்வேறு அமைப்புகளின் தோழர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
இடம் : மதுரை மாவட்ட ஆட்சித் தலைவரின் அலுவலகம்.
தேதி :சித்திரை 15, 2045 / 28.04.2014 திங்கள்
நேரம் காலை 10.00 மணி
இப்படிக்கு,
சுவப்னா
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக