வெள்ளி, 8 ஜூன், 2012

மன எழுச்சியை வளர்த்துக் கொண்டேன்!




பிளஸ் 2 தேர்வில் பள்ளியில் முதலிடம் பிடித்துள்ள, இரண்டே முக்கால் அடி உயரமுள்ள, மாற்றுத் திறனாளி பிரியா: என் சொந்த ஊர், பெரம்பலூர் மாவட்டம், மாவலிங்கை கிராமம். என் அப்பா விவசாயக் கூலி. எப்பொழுதாவது தான் வேலை கிடைக்கும். அதனால், வருமானம் குறைவு தான். நான் பிறக்கும் போதே, மிகக் குறைந்த உயரத்துடன் பிறந்தேன். நான்கு வயதான போதும், உடல் வளர்ச்சியில்லாததால், பதறிப்போன என் பெற்றோர், மருத்துவர்களிடம் சென்று காட்டியபோது, "இது பிறப்பின் இயல்பு என்பதால், இந்தக் குறைபாட்டை சரி செய்ய முடியாது' என்றனர்.ஆனால், என் குறையை எண்ணி, பெற்றோர் கவலைப்படாமல், என்னை படிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.எங்கள் கிராமத்தில் உள்ள பள்ளியிலேயே, என்னை சேர்த்து விட்டனர். நான் நன்றாகப் படித்து, ஆசிரியர்களின் பாராட்டுக்களைப் பெற்றதைப் பார்த்த என் பெற்றோருக்கு, என்னை மேலும் படிக்க வைக்க வேண்டும் என்ற ஆசை வந்தது.
பின், செட்டிகுளம் அரசு மேல் நிலைப் பள்ளியில் சேர்த்து விட்டனர். ஆறாம் வகுப்பிலிருந்து, பிளஸ் 2 வரை விடுதியில் தங்கிப் படித்தேன்.குடும்ப சூழ்நிலையை மனதில் வைத்து, இரவு பகல் பாராமல் படித்து, பிளஸ் 2வில், 1,040 மதிப்பெண்கள் பெற்று, பள்ளியில் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றேன்.அப்பா விவசாயக் கூலி என்பதால், எதையும் சேர்த்து வைக்க முடியாமல், குடும்பச் செலவிற்கும், நான், என் தம்பி, தங்கை மூன்று பேரின் படிப்புச் செலவிற்கும் சிரமப்பட்டு, தினம் வறுமையுடன் போராடிக் கொண்டிருக்கிறார்.நான் நன்றாகப் படித்து, சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக வேண்டும் என்பது தான் என் எதிர்கால லட்சியம். தமிழ் வழியில் படித்திருந்தாலும், ஆங்கிலம் சரளமாகப் பேசுவேன்; எழுதுவேன்.குள்ளமாக இருப்பதைப் பார்த்து, பலர் என்னை கிண்டல் செய்துள்ளனர். அதை பெரிதுபடுத்தி, வருத்தமடையாமல், எனக்குள் மன எழுச்சியை வளர்த்துக் கொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக