நோன்பு என்பது கட்டடமா? படமா? கண்காட்சியா?
திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா?
தலைப்பைப் பார்த்ததும் இசுலாமியருக்கு எதிராக அலலது நோன்பைப் பழிக்கும் வகையில் சொல்வதாகக் கருதக் கூடாது. தூய நோன்பு குறித்த சொல்லாட்சி தவறு என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
முதலில் இரமலான் நோன்பு குறித்துத் தெரிந்து கொள்வோம்.
(அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை என்னும்) உறுதி யேற்பு(கலிமா), தொழுகை, நோன்பு, தானம், மெக்கா நகரில் உள்ள கஅபாவிற்குப்) புனிதப் பயணம்(Hajj) ஆகியன இசுலாத்தின் ஐந்து தூண்களாகும். கஅபா(Ka aba) என்றால் அரபி மொழியில் கனச்சதுரம் எனப் பொருள். கனச்சதுர வடிவிலான கோயில் அவவாறே அழைக்கப் படுகின்றது. ஐந்து தூண்களுள் ஒன்றாகிய நோன்பை மேற்கொள்வது இசுலாமிர்யகளின் கடமையாகிறது. இதனைக் குழுவாகவும் கூட்டமாகவும கொண்டாடும் குமுகச் செயல் போற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியது.
இசுலாமிய நம்பிக்கையின்படி முகம்மது நபிக்கு முதன் முதலில் குரானை வெளிப்படுத்திய மாதத்தை நினைவுகூரும் வகையில் நோன்பை மேற்கொள்கிறார்கள்.
உலகெங்கும் இரலான் நோன்பும் நோன்புத் துறப்பு நிகழ்வும் நடக்கத்தான் செய்கின்றன. நோன்புத் துறப்பு உண்கை என்பது அவரவர் குடும்பத்தில் பெரும்பாலும் நிகழும். எனினும் இல்லாதவர்களுக்கு உதவும் வகையில் பள்ளி வாசல்களில் இந்நோன்புத் துறப்பு பொதுவாக நிகழ்த்தப்படுகின்றது. தனிப்பட்ட செல்வர்களும் பெரும் நிறுவனங்களும் பொது நோன்புத் துறப்பை நடத்தி அனைவரையும் பங்கேற்கச் செய்கின்றனர். நோன்புத் துறப்பு விருந்தில் நோன்பு மேற்கொள்ளாதவர்களும் பிற சமயத்தவர்களும் பங்கேற்கின்றனர்.
நம் நாட்டிலும் நோன்புத் துறப்புப் பொது விருந்தில் பிற சமயத்தவரும் கலந்து கொள்கின்றனர். ஆனால், நோன்பு மேற்கொள்ளாதவர்கள் இவ்விருந்தில் கலந்து கொள்ள வேண்டிய தேவை என்ன? இதனைச் சமய நல்லிணக்கம் என்கின்றனர். இசுலாமியர் அழைப்பை ஏற்றுப் பிற சமயத்தவர், குறிப்பாக இந்துக்கள் பங்கேற்பது சமய நல்லிணக்கமா? இந்துக்கள் தரும் ஆடிக் கூழையும் இசுலாமியர்கள் ஏற்பது சமய நல்லிணக்கமா? ஒவ்வோர் ஆடி ஞாயிறன்றும் அம்மனுக்குக் கூழ் படைத்து மக்கள் அனைவருக்கும் வழங்குகின்றனர். இப்பொழு தெல்லாம் வணிக நோக்கில் ஆவணி முதல் ஞாயிறன்றும் ஆடி 5ஆவது ஞாயிறு என்று கூழ் ஊற்றுவது வழக்கமாகி விட்டது. மதுரை முதலான சில நகரங்களில் பங்குனித் திங்களில் கூழ் ஊற்றுகின்றனர். இக்கூழை இந்துக்கள் விரும்பி வாங்கிச் சுவைக்கின்றனர். ஆனால் இசுலாமியர்களும் கிறித்துவர்களும் தீண்டத் தகாததாக ஒதுக்கி விடுகின்றனர். இந்துக்கள் இசுலாமியர்களின் நோன்புக் கஞ்சியை வாங்கி உண்பதுபோல் இசுலாமியர்களும் ஆடிக் கூழை வாங்கி உண்பதுதான் உண்மையான நல்லிணக்கமாகும். இனிமேல், இரமலான் நோன்புத் துறப்புப் பொது விருந்து நடத்தும் கட்சியினர் ஆடிக்கூழ் வழங்கும் நிகழ்வினை நடத்தி இசுலாமியர்களையும் பிற சமயத்தவரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும். அப்போதுதான் உண்மையான சமய நல்லிணக்கம் பரவும்.
அவ்வாறில்லாமல் வாக்கு அரசியலைக் கருத்தில் கொண்டு நோன்பு மேற்கொள்ளாமல் நோன்புத் துறப்பு விருந்தில் பங்கேற்பதும் நோன்புத் துறப்பு விருந்தை வழங்குவதும் முற்றிலும் தவறாகும். மக்களை ஏமாற்றும் இச்செயலில் ஈடுபட வேண்டா என அனைத்துக் கட்சியினரையும் வேண்டுகிறோம்.
இனி நாம் நோன்புத் துறப்பு விருந்து குறித்துப் பார்ப்போம்.
இசுலாமியர்கள் ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை தொழுகை புரிவர். அவை, சூரிய உதயத்திற்கு முந்தைய வைகறை நேரம்(பசர்/Fajr), சூரியன் உச்சியில் இருக்கும் உச்சி வேளை எனப்படும் நண்பகல் நேரம்(ழுகர்/zuhr), பிற்பகல் நேரம்(அசர்/asr), சூரியன் மறையும் படுஞாயிறு நேரம். அஃதாவது அந்தி நேரம்(மகுரிபு/maghrib). இரவு தொடங்கும் நேரம்(இசா/isha) ஆகிய வேளைகளில் தொழுகை புரிவர்.
இசுலாமியர்களின் கடமையான ஐவேளை தொழுகையை சலா(Salah) அல்லது நமாசு(namaz) என்று குறிப்பிடுவர். இதில் சலா என்பது தொழுகையைக் குறிப்பிடும் அரபுச் சொல். நமாசு என்பது தொழுகையைக் குறிக்கும் பெருசியன் சொல்.
இசுலாமியர் பின்பற்றும் நாட்காட்டியில் ஆண்டின் ஒன்பதாவது மாதம் இரமலான். இத்திங்கள் முழுமையும் பகல் நேரத்தில் உண்ணாநோன்பு இருப்பர். அஃதாவது, இரமலான் மாதத்தில் அதிகாலை முதல் அந்திமாலை வரை உணவு, தண்ணீர், சாறுகள் முதலிய நீருணவு, உடலுறவு ஆகியவற்றைத் தவிர்க்கின்றனர். நோயாளிகள், வெளியூர்ப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு நோன்பை விடுவதற்கு அனுமதியுண்டு. ஆயினும், இவ்வாறு விடப்பட்ட நோன்புகளைப் பின்னர் நோற்றுக் கொள்ள கட்டளையிடடப்பட்டுள்ளனர். இரமலான் மாதத்தில் மேற்கொள்ளப்படும் பகல் நேர நோன்பே இரமலான் நோன்பு எனப்படுகிறது.
ஒவ்வொரு நாளும் கதிரவன் மறைவிற்குப் பின் – நீண்ட நேரப் பகல் உண்ணா நோன்பிற்குப் பிறகு – அந்தி (மகுரிபு)த் தொழுகை முடித்து உட்கொள்ளும் உணவே இஃப்தார்(Iftar) என்று அழைக்கப்படுகிறது. இது சூரிய மறைவிற்குகுப் பிறகு உண்ணா நோன்பை முடிக்க உண்ணும் உணவாகும். நோன்பு முடிப்பதற்கு உட்கொள்ளும் உணவை நோன்பு திறப்பு என்று சொல்லலாமா? இஃது என்ன கட்டடமா? படமா? கண்காட்சியா? திறப்பு விழாவிற்குரிய வேறு எதுவுமா?
நோன்பு வேளையைத் துறந்து உண்ணும் வேளையைத் தொடங்கும் இதனை நோன்புத் துறப்பு என்று சொல்ல வேண்டும். நோன்பைத் துறப்பது நோன்புத் துறப்பு ஆகுமேயன்றி நோன்புத் திறப்பாக எப்படி ஆகும்? யாரோ தொடக்கத்தில் தவறுதலாக நோன்புத் திறப்பு என்று சொல்லிவிட அல்லது தவறாக எழுதி அதையே பரப்பி விட எங்கும் நோன்புத் திறப்பு என்றே சொல்லப்படுகிறது.
இது குறித்துப் பல ஆண்டுகளுக்கு முன்னர் நான் எழுதியது தினமணியில் அன்புள்ள ஆசிரியர் பகுதியில் பெட்டிச்செய்தியாக வந்திருந்தது– இதன் பின்னர் இதனைப் படித்தவர்களுள் சிலர் நோன்புத் துறப்பு என்பதைப் பின்பற்றி வருகின்றனர். எனினும் பெரும்பான்மையர் நோன்புத் திறப்பு என்றே சொல்லி வருகின்றனர்.
இனியேனும் நோன்புத் திறப்பு என்பதற்கு முடிவுகட்டுவோம்.நோன்புத் துறப்பு என அழகு தமிழில் சொல்வோம்.
நாளும் நோன்பை நோற்று நோன்புத் துறப்பு மேற்கொள்ளும் இசுலமியர்களுக்கு வாழ்த்துகள்.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
இதழுரை – அகரமுதல
பங்குனி 17, 2056 / 31.03.2025