வியாழன், 3 அக்டோபர், 2013

தேர்தல் தோல்வியால் தமிழர்கள் மீது சிங்களப்படை தாக்குதல்

"தேர்தல் தோல்வியால் ஆத்திரம்: தமிழர்கள் மீது இராணுவம் தாக்குதல்': தப்பி வந்த இலங்கையர் தகவல்
இராமேசுவரம்: இலங்கையில், தமிழ் தேசிய கூட்டணி வெற்றியால், ஆத்திரமடைந்த சிங்கள ராணுவம், தமிழ் இளைஞர்களை கடத்தி தாக்குவதாக, தனுஷ்கோடி வந்த இலங்கை அகதி தெரிவித்தார்.

இந்திய கடற்படை, கடலோர காவல்படை ரோந்து கப்பலில் சிக்காமல், இலங்கையை சேர்ந்த மர்ம படகில் வந்த மூவர், நேற்று அதிகாலை, தனுஷ்கோடி, அரிச்சல்முனை கடற்கரையில், இலங்கை தமிழர் ஒருவரை இறக்கி திரும்பினர். தனுஷ்கோடி போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்த அவரிடம், போலீசார் நடத்திய விசாரணையில், இலங்கை, வல்வெட்டி துறையை சேர்ந்த, செல்வ கிருஷணன், 39, என்பதும், 1984ல், அகதியாக தமிழகம் வந்து, 2011ல், பாஸ்போர்ட் மூலம், இலங்கை சென்றதும், தற்போது அகதியாக தனுஷ்கோடி வந்ததும் தெரிந்தது.

செல்வகிருஷ்ணன் கூறியதாவது:

சமீபத்தில் நடந்த, வடக்கு மாகாண தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணி கட்சி வெற்றி பெற்றது. தேர்தலில், தமிழ் தேசிய கூட்டணிக்கு, பிரசாரம் செய்த இளைஞர்களை, ராணுவ சி.ஐ.டி., பிரிவு, இரவோடு இரவாக கடத்திச் சென்று, சில நாள் வைத்து தாக்குகின்றனர். நானும் பிரசாரத்தில் ஈடுபட்டதால், ராணுவ சி.ஐ.டி., பிரிவினர், என்னை தேடி வந்தனர். உயிருக்கு பயந்து, மனைவி, குழந்தைகளை விட்டு, பேசாளை கடற்கரையில் இருந்த மீனவர் படகிற்கு, 10 ஆயிரம் ரூபாய் வாடகை கொடுத்து, தனுஷ்கோடி வந்தேன். இவ்வாறு, அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக