சனி, 5 அக்டோபர், 2013

பள்ளிகளில் அறிமுகமாவது - திரள்கணிமையா? மேகவழிக்கணிணியா?

மேகவழிக்கணிணிக்கல்வி என்பது தவறாகும். கல்விக்குச் செய்மதியைப் பயன்படுத்துவதுபோல், முகில் கூட்டம் மூலம் கணிணி கற்பிக்கப்படுவது எனத் தவறான பொருள் வரும். கிளெடு (cloud) என்றால் முகில் என்பது மட்டும் பொருள் அல்ல. திரள் என்றும் பொருள் வரும். அதுபோல் கம்ப்பியூட்டு (compute)  என்பதற்கு அடிப்படையில் தொகுப்பு என்பதுதான் பொருள். பின்னர்தான் கணித்தல் பொருளாயிற்று. நிலத்திற்குப் புறம்பாக (விண்ணிலிருந்து) முகில் மழை பொழிவது போல் கணிணிக்குப் புறம்பான வேறிடத்திலிருந்து கணிணிக்குத் திரண்டு வரும் தொகுப்புப் பயனே இதுவாகும்.  எளிமையான பயன்பாட்டிற்காகக்  கேட்பதாக எண்ணுகின்றேன். பயன்பணிகளைத் திரட்டிக் கணிணியில் இடும் தொகுப்புச் செயலைத் திரள் பயனீடு என்னும் பொருளில்  திரளீடு எனலாம். இவ்வாறு சொன்னால் கம்ப்பியூட்டிங்கு விடுபட்டதாக எண்ணுவர். எனவே, திரளீட்டுக் கணிமை > திரள்கணிமை எனலாம்.
ஆதலின், திரள்கணிமைக் கல்வி என்பதே இங்கு பயன்படுத்த வேண்டிய கலைச்சொல்லாகும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக்காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

மேகவழிக் கணினிக் கல்வி அரசு பள்ளியில் அறிமுகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2 அரசுப் பள்ளிகளில் மேகவழிக்கல்வி முறை (கிளவுட் கம்ப்யூட்டிங்) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேகவழிக்கல்வி முறை
மேகவழிக் கல்வி முறை என்பது கணினிகளின் இணைப்புகள் மூலம் மாணவர்களின் அறிவுத்திறனை பகிர்ந்துக்கொள்ளும் ஒரு புதுமையான கல்விமுறை ஆகும். இதன்மூலம் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலிருந்தபடியே எந்த ஒரு பள்ளியோடும் அதன் மாணவர்களுடனும் பாடங்களை பகிர்ந்துக் கொள்ள முடியும். தங்களின் பாடங்கள் சம்மந்தமான தகவல்களை அவர்கள் பள்ளியில் உள்ள கணினி, மடிக்கணினி,செல்பேசி ஆகியவற்றின் மூலம் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ஒரு குறிப்பிட்ட மென்பொருளை தங்களது கணினி மற்றும் செல்பேசிகளில் நிறுவிக்கொள்ள வேண்டும்.
தமிழ்நாட்டில் 2 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேகவழிக் கல்வி முறை திட்டத்தை செயல்படுத்த, பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டு அதற்காக லேர்னிங் லிங் பவுண்டேஷன் என்ற நிறுவனம் மற்றும் டெல் கணினி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.
2 அரசு பள்ளிகளில் அறிமுகம்
இதைத்தொடர்ந்து, சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீபெரும்புதூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய இரண்டு அரசு பள்ளிகளில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மேற்கண்ட இரு நிறுவனங்களும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள 11 மடிக்கணினிகள், 13 கையடக்க கணினிகள் ஆகியவற்றை இரு அரசு பள்ளிகளுக்கு வழங்க முன்வந்தன. அதுமட்டுமல்லாமல் இந்த புதிய தொழில்நுட்பம் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க ஒரு தொழில்நுட்ப உதவியாளரையும் பணியமர்த்தின.
இந்தியாவில் முதல்முறை
இந்த நிலையில், மேகவழிக்கல்வி முறையை சென்னை எம்.ஜி.ஆர். நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். மடிக்கணினிகளையும், கையடக்க கணினிகளையும், சமூகநலத்துறை அமைச்சர் பா.வளர்மதி வழங்கினார்.
பள்ளியில் மேகவழிக்கல்வி முறை அறிமுகப்படுத்தப்படுவது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் டி.சபீதா, பள்ளிக் கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக