ஞாயிறு, 29 செப்டம்பர், 2013

தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்கமுடியாது: இலங்கை அறிவிப்பு
தமிழர் பகுதிகளுக்கு அதிகாரம் வழங்கமுடியாது: இலங்கை அறிவிப்பு
கொழும்பு, செப். 29-

இலங்கையில் தமிழர் பகுதி மாகாணங்களான வடக்கு மற்றும் கிழக்கு உள்பட 9 மாகாணங்களுக்கு அதிகாரம் வழங்குவது குறித்து 1987-ம் ஆண்டு இந்திய-இலங்கை பிரதமர்கள் ராஜீவ் காந்தி மற்றும் ஜெயவர்த்தனே சந்தித்து ஒப்பந்தம் செய்துகொண்டனர்.

இதில் மாகாணங்களுக்கு நிலம் மற்றும் போலீசாருக்கு அதிக அதிகாரம் வழங்குவது குறித்து 13-வது சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் எதிர்கட்சிகள் இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதனால், அது கிடப்பில் போடப்பட்டுள்ளது. மாகாணங்களுக்கான அதிகாரத்தை வழங்க கோரி இந்தியாவும் வேண்டுகோள் விடுத்து வருகிறது.

சமீபத்தில் தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்திற்கு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழ் தேசிய கூட்டணி பெரும்பான்மையாக வெற்றிப்பெற்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த கே.சி. விக்னேஸ்வரன் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் வருங்கால செயல்பாடுகள் குறித்து விவாதிக்க தமிழ் தேசிய கூட்டணி கட்சியின் தலைவர்கள் சந்தித்து பேசினர். பின்னர் அவர்கள், வடக்கு மாகாணத்தில் நிலங்களை கட்டுப்படுத்துவதற்கான அதிகார உரிமையை வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் இதுகுறித்து இலங்கை தகவல் தொடர்பு துறை மந்திரியும் அரசின் செய்தித்தொடர்பாளருமான கெஹெலியா ராம்புக்வெல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மாகாண சபைகள் தங்களுக்கென உரிய அதிகாரங்களுக்கு உட்பட்டே செயல்படவேண்டும். நிலம் மற்றும் போலீஸ் துறைகளில் மாகாணங்கள் அதிக அதிகாரங்களை பெறப்போவதில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மஹிந்தா ராஜபக்‌ஷே தலைமையிலான கூட்டணி அரசு, நிலம் மற்றும் போலீஸ் துறைகளுக்கு அதிகாரம் வழங்குவது தமிழர்களின் தனி நாடு கோரிக்கைக்கு வழிவகுக்கும் என்று கூறி அந்த அதிகாரத்தை தர மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக