திங்கள், 30 செப்டம்பர், 2013

கருணை உள்ளமே, கரும்பழுப்பு வடிவமே...

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_815326.jpg

கருணை உள்ளமே,காக்கி வடிவமே...

கோவையில் உள்ள அந்த மயானத்தில் ஒரு பிணம் புதைக்கப்படுகிறது, அந்த பிணத்தை புதைக்கும் தொழில் செய்யும் வெட்டியானை தவிர அந்த பிணத்தின் அருகில் இருந்தது ஒரே ஓருவர்தான், அவரும் உறவினரோ, நண்பரோ அல்ல. ஆனால் உறவினக்கும், நண்பருக்கும் மேலான சிரத்தை எடுத்து எல்லா "காரியங்களையும்' செய்துவிட்டு கிளம்புகிறார்.
இப்படி ஒன்றல்ல இரண்டல்ல இதுவரை முந்நூறுக்கும் அதிகமான ஆதரவற்ற பிணங்களுக்கு , ஆதரவாளனாக இருந்து கடைசிகால காரியங்களை செய்து வருகிறார்.
அவரது பெயர் சபரிராசு
தற்போது கோவை போத்தானூரில் உள்ள ரயில் நிலையத்தில் உள்ள காவல் நிலையத்தின் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்து வருகிறார்.
இவரது வேலை காரணமாக பல்வேறு ஊர்களில் உள்ள ரயில் நிலையங்களில் கடந்த 28 வருடங்களாக காவலராகவும், தலைமைக் காவலராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்பவர்களையும், அடிபட்டு இறப்பவர்களையும் உரியவர்களிடம் சேர்ப்பிக்க வேண்டும், ஆனால் இறந்தவர்களில் தொன்னூறு சதவீதம் பேர் கேட்பாரற்று இருப்பார்கள். இதன் காரணமாக இவர்களை நல்லடக்கம் செய்யவேண்டிய பொறுப்பு போலீசார் தலையிலே விழும்.
இதற்கான செலவு மற்றும் சிரமத்தை பகிர்ந்து கொள்ள ஆள்கிடைக்காத சூழ்நிலையில், நிலையத்தில் உள்ள காவலர்கள் நொந்து கொண்டே இந்த காரியங்களை செய்வார்கள். அதுவும் மயானத்தில் எல்லாம் முடிந்து அடக்கம் செய்யும் போது அடையாளம் காண்பதற்காக எட்டிப் பார்த்துவிட்டு வந்துவிடுவார்கள். இதுதான் ரயிலில் அடிபட்டு இறந்த பிணங்களை அடக்கம் செய்வதற்கான பொதுவான நடைமுறை.
ஒரு முறை இந்த பொறுப்பு சபரிராஜுவிடம் வந்தபோது, பாவம் இந்த உடலும் ஒரு உயிரைச் சுமந்திருந்த ஆத்மாதானே, அதற்கான மரியாதை தரவேண்டாமா? என யோசித்தவர், தானே இறந்த பிணத்தின் உறவாக மாறி எல்லா சிரமங்களையும், செலவுகளையும் ஏற்றுக் கொண்டு அந்திம காரியங்களை செய்தார். அப்போது அவருக்குள் ஏதோ ஒரு இனம்புரியாத ஒரு நல்ல காரியம் செய்த திருப்தி ஏற்பட்டது.
அதன்பிறகு இதே போல அடுத்தடுத்து பிணங்களுக்கும் இவரது மரியாதை தொடர்ந்தது, வேறு ஏதாவது ரயில் நிலையத்திலோ அல்லது வேறு ஒருவர் பொறுப்பில் இருக்கும்போது இந்த நிலை ஏற்பட்டாலும், "சபரிராஜிடம் சொல்லிவிடு அவர் இதை சரியாக செய்வார்' என்ற பெயர் ஏற்பட்டுவிட்டது. அந்த எண்ணிக்கைதான் இப்போது முன்னூறை தாண்டிச் சென்று கொண்டு இருக்கிறது.
இது இவரது ஒரு பக்கம் என்றால் இன்னோரு பக்கம் தேர்வுக்கு பயந்து, சினிமா மோகம் ஏற்பட்டு ரயிலேறி வரும் சிறுவர்கள், இளம் பெண்கள் பலரை சரியான அறிவுரை சொல்லி திரும்ப பெற்றோரிடம் ஒப்படைக்கும் பொறுப்பையும் செய்துவருகிறார். மேலும் வழிதவறி ரயிலில் வந்துவிடும் வயதானவர்களை உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் இவரது இன்னொரு வேலையாகி விட்டது.
ஆனால் இதையெல்லாம் வேலையாகச் செய்வது இல்லை நமக்கு நல்லது செய்ய கிடைத்த வாய்ப்பு என்று விரும்பி செய்வார். கடந்த வாரம் எழுபத்தைந்து வயது மதிக்கத்தக்கவர் இவரிடம் வந்து சேர்ந்தார். பெயர் அருக்காணி என்று மட்டும் சொல்லத் தெரிந்தது. இவரை ஒரு ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு ஒரு வாரமாக பொறுமையாக அலைந்து திரிந்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தார். இந்த ஒரு வார காலத்திற்குள் தாய்-மகன் பாசம் ஏற்பட்டுவிட, அருக்காணி உறவினர்களிடம் போக மறுத்து, " உன்கூடவே இருந்துடேறேன்ம்பா'' என்று சபரிராஜின் கையை பிடித்து கெஞ்சியபோது இருவரின் கண்களிலும் கண்ணீர்.
காக்கி சட்டையை அணியும் போது கருணையை கழட்டி வைத்து விடும் காவலர்கள் மத்தியில் ,காக்கி சட்டையுடனும் கருணையையும் சேர்த்து அணிந்து கொண்டுள்ள சிறப்பு உதவி ஆய்வாளர் சபரிராஜ் உடன் பேசுவதற்கான எண்: 9843258339.

- எல்.முருகராசு,  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக