படிக்கட்டுகளில் பயணம் செய்ய முடியாது!
பேருந்தின் படிக்கட்டுகளில் பயணம் செய்வதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கும், தொழில்நுட்பத்தை க் கண்டுபிடித்த, சேகர்: நான், கோவையில் உள்ள, இண்டெல் கல்லுாரியில் படிக்கிறேன். சமீப காலமாக, படிக்கட்டில் பயணம் செய்வது அதிகரித்துள்ளதால், பல விபத்துகள் நடக்கின்றன. கல்லுாரி மற்றும் பள்ளி மாணவர்கள் தான், அதிகம் விபத்தில் சிக்கி இறக்கின்றனர். அரசு பேருந்துகளில், படிக்கட்டு பயணத்தை தவிர்க்க, திறந்து, மூடும் வசதியுள்ள கதவுகள் உள்ளன. கூட்ட நெரிசல் மற்றும் சரியான பராமரிப்பு இல்லாததால், கதவுகளை மூட முடிவதில்லை. மேலும், இது ஓட்டுனர்களுக்கு கூடுதல் சுமையாக உள்ளதால், இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தேன். பேருந்தின் இரு படிக்கட்டிலும், தனித்தனியே இரண்டு, 'சென்சார்'களை பொருத்தி அதை, 'மைக்ரோ கன்ட்ரோலர்' உடன் இணைத்தேன். இதன் மூலம், படிக்கட்டில் மனிதர்கள் நின்றால், சென்சார் மூலம் மைக்ரோ கன்ட்ரோலருக்கு தகவல் வரும். உடனே, படிக்கட்டின் அருகில் உள்ள, 'ஸ்பீக்க'ரில், 'நீங்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்கிறீர்கள்; தயவு செய்து படிக்கட்டு பயணத்தை தவிர்த்து, பேருந்தினுள் வாருங்கள்' என, 30 நொடிகளுக்கு எச்சரிக்கை ஒலி எழுப்பப்படும். அதையும் மீறி, பயணிகள் படிக்கட்டுகளில் நின்று பயணித்தால், ஓட்டுனருக்கும், 30 நிமிடம் வரை எச்சரிக்கை ஒலி எழுப்பும்.
ஓட்டுனர், அதையும் மீறி பேருந்தை இயக்கினால், ஒரு நிமிடத்தில் பேருந்தின், 'இன்ஜின்' இயக்கம், தானாக நிறுத்தப்படும். ஆனால், 30 அடிதுாரம் சென்ற பின்னரே பேருந்து நிற்கும். இந்த இடைப்பட்ட நேரத்தில், ஓட்டுனர் பேருந்தை சாலையின் ஓரத்தில் நிற்க வைக்க ஏதுவாக இருக்கும். இது, 12 வோல்ட் மின்சாரத்தில் செயல்படும், இப்புதிய தொழில்நுட்பத்திற்கு, 'ஸ்மார்ட் ஸ்டார்ட்' என, பெயரிட்டுள்ளேன். இதை பேருந்தினுள் பொருத்த, 8,000 ரூபாய் செலவாகும். தற்போது, இதற்கான காப்புரிமை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். கோவை நகர போக்குவரத்து கமிஷனருக்கு, 'டெமோ' செய்தும் காட்டியுள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக