பாரதி கூறும் 'தணிந்த சாதி' சொல்லிருக்க, 'தலித்து' எதற்கு?
பாரதி கூறும் 'தணிந்த
சாதி' சொல்லிருக்க,
'தலித்து' எதற்கு?
-இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம்
தமிழ்
மக்களில் பெரும்பான்மையருக்கு அயல் மொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் மட்டற்ற
மகிழ்ச்சி. ஏதோ ஒரு வகை தாழ்வு மனப்பான்மையில் அரைகுறையான பிற மொழிப் பயன்பாட்டை
உயர்வாகக் கருதுகின்றனர். அரசியலில் பிற மொழிச் சொற்களைப் புகுத்துவதில்
பொதுவுடைமைக் கட்சியினர் எப்பொழுதும் ஆர்வம் காட்டுபவர்கள். அதுபோல் யார்
அறிமுகப்படுத்தி இருந்தாலும் தமிழ், தமிழ் என்றே
சொல்லிக்கொண்டு ‘தலித்து’
என்னும் மராத்தியச் சொல்லைப் பயன்படுத்துவோரே
மிகுதி. பஞ்சமர், தாழ்த்தப்பட்டவர், ஆதி திராவிடர், ஆதித்தமிழர், தொல் தமிழர், பட்டியல்
சாதியினர் முதலான பல சொற்களிலும் அவ முத்திரை இருப்பதாகக் கருதி, ஒடுக்கப்பட்டவர் என்னும் பொருளுடைய ‘தலித்து’ என்னும் சொல்லைப் புகுத்திக்
கொண்டு புரியாத அப்பிறமொழிச்சொல்லே பொருத்தமானது என வாதிடுவோர் அவ்வியக்கங்களின்
தலைவர்கள். எந்தப் பெயரில் அழைத்தாலும் அவர்கள் பிறருக்கு இணையான உரிமையும்
கல்வியில் சிறப்பும் பொருள்நிலை உயர்வும் பெற்றாலன்றி அப்புதிய சொல்லுக்குப் பழைய
முத்திரையே நிலைக்கும். எனவே, அவர்கள் நிலை உயரவேண்டும். அதே
நேரத்தில் இட ஒதுக்கீடு முதலான தேவை கருதி
இவ்வினத்தவரை எவ்வாறு அழைக்கலாம் என்பது குறித்துப் பார்க்கலாம்.
பாரதியார், சாதிகளுக்கு எதிராகச் ‘சாதிக்குழப்பம்’ எனக் கட்டுரை ஒன்று எழுதியுள்ளார்(பாரதியார்
கட்டுரைகள் http://bharathiyar-ariva.blogspot.in/p/blog-page_31.html).
இதில், "சாதராணமாக, மாவுத்தர் வேலை செய்ய மகமதியர்களும்
இந்துக்களில் தணிந்த சாதியாருமே ஏற்படுவது(இருப்பது) வழக்கம். இந்த யானைக்குப்
பிராமண மாவுத்தர் கிடைத்திருக்கிறார்.” எனக்
குறிப்பிட்டுள்ளார்.
இங்கே பாரதியார் ‘தாழ்த்தப்பட்ட’ என்பது போன்ற சொற்களைக்
குறிப்பிடாமல் ‘தணிந்த சாதியார்’
என்கிறார். புரட்சி முதலான சொற்களை
முதலில் அறிமுகப்படு்த்தியவர் பாரதியார்தான். தணிந்த சாதியார் என்பது
பாரதியாரே உருவாக்கிய சொல்லா அல்லது
அப்பொழுது நடைமுறையில் இருந்த சொல்லா என்று தெரியவில்லை. எனினும் வின்சுலோ
அகராதியில் ‘தணிந்த’ என்பதற்குக் ‘கீழான’ என்னும் பொருள் இடம் பெற்றுள்ளதால் அப்பொழுது
வழக்கத்தில் இருந்திருக்கலாம். எனினும் நமக்கு இச்சொல்லை அறிமுகப்படுத்துபவர் “சொல்லில் உயர்வு
தமிழ்ச்சொல்லே” என வலியுறுத்தும் பாரதியார்தான்.
‘தணி’
என்பதற்கு “மட்டுப்படுத்து, குளிர்வி,
வெப்பம் குறை, பணி(வு), கீழ்ப்படு,”
ஆகிய பொருள்களுண்டு. ‘தணி’ என்பது பின்னர்த் தண்டி(த்தல்)-ஐயும்
(தணிகை)மலையையும் குறித்தும் வழங்கப் பெற்றது. பணிவு, கீழ்ப்படு
முதலான பொருள்களில் வழங்கியதன்
தொடர்ச்சியாகப் தாழ்தலையும் குறித்தது. தணிந்தவர் என்னும் பொழுது இவற்றின்
அடிப்படையில், பணிவானவரையும், பிற்காலத்தில் தாழ்ந்து
போகின்றவரையும் குறித்தது.
“நின் சினம் தணிந்தீக” (கலித்தொகை 16.11) என்னும் அடியில் சினம் ஆறுதலையும்
“நெடுவசி விழுப்புண் தணிமார் காப்பென” (மலைபடுகடாம் 303)
என்னும் அடியில் புண் ஆற்றுதலையும்
“தணிபுனலாடுந் தகைமிகு போர்க்கண்” (பரிபாடல்6.29). என்னும் அடியில் புனலின் குளிர்ச்சியையும்
“நோய் முதனாடி அது தணிக்கும் வாய்நாடி” (திருக்குறள் 948)
என்னும் அடியில் நோய் தீர்த்தலையும்
“தணி யாத் துன்பந் தலைத்தலை மேல்வர” (மணிமேகலை 2.
5). என்னும் அடியில்
குறையாத்துன்பம் எனக் குறிப்பதால்,
குறைதலையும்
“தணியா வேட்கை தணித்தற் கரிதாய்” (மணிமேகலை 25.
121) என்னும் அடியில் நிறைவுறா வேட்கையைக் குறித்தலின்
நிறைவுறுதலையும்
“தணிவருங் கயத்துப் பூத்த தாமரை அனைய கண்ணும்” (சீவக
சிந்தாமணி 1582) என்னும் அடியில் நீர் வற்றுதலையும்
“தணிவில் வெம்பசி” (மணிமேகலை 17. 73) என்னுமிடத்தில் ‘குறைகை’
யையும்
“கடலிற்றணி வெய்தி” (கம்பரா. நகர்நீ. 141) என்னுமிடத்தில் கடலின் சீற்றத்தைத் தணித்து ஏற்படுத்தும் அமைதியையும்
“தணிவுஅளிக்கின் உயர்வுஅளிக்கும்” (காஞ்சிப்புராணம்
கழுவா. 307) என்னுமிடத்தில் பணிவையும்
“தணிபொன் சொரியும்” (தஞ்சைவாணன் கோவை 25) என்னும் அடியில் நிறைதலையும் குறிப்பிடும் வகையில் ‘தணி’ இடம் பெற்றுள்ளது.
நெம்புகோலின் மேல் பக்கத்தைத் தாழ்த்துவதன்
மூலம் அடிப்புறம் தாங்குவதை உயர்த்துவதால் ‘தணிமரம்’ என்பது தேர் நெம்பு தடியைக் குறிக்கிறது.
‘தணி’ என்பது தாழ்தலைக் குறித்ததுபோன்று
காலம்தாழ்தலையும் குறித்துள்ளது. தாழ்வும் பணிவும் குறிக்கப் பயன்படுத்திய ‘தணி’ என்னும் சொல்லே வாழ்வில் தாழ்ந்தவர்களைக் குறிக்கப் பயன்படுத்தி இருக்க
வேண்டும்.
‘தணிதல்’ என்பது பணிதலைக் குறிப்பினும் இழிவைக் குறிப்பிடு்ம்
சொல்லன்று. பணிதல், செல்வர்க்கே செல்வம் போன்றது எனத்
தெய்வப்புலவர் திருவள்ளுவர்,
”எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே
செல்வம் தகைத்து’’
என்கின்றார் அல்லவா?
துடியன், பாணன், பறையன், கடம்பன் என்று
இந் நான்கு
அல்லது குடியும் இல்லை (புறநானூறு 335.7-8)
என ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே புலவர்
மாங்குடி கிழார் இக்குடியினரின் சிறப்பைக்
குறித்துள்ளார். இக்குடியினர் காலப்போக்கில் தாழ்த்தப்பட்டாலும் உண்மையில்
யார்க்கும் தாழ்ந்தவர்கள் அல்லர்.
எனவே, பிற வகையில் அழைப்பதைவிடப்
பாரதியார் வழியில் ‘தணிந்தசாதியர்’ எனக் குறிப்பது பொருத்தமாக இருக்கும். எந்தச் சொல்லையும் வெவ்வேறு
இடங்களில் பயன்படுத்திப் பார்த்து அதன் பொருத்தத்தை முடிவெடுக்க வேண்டும். அந்த
வகையில், பின்வருமாறு சொல்லிப் பார்ப்போம் :
தணிந்த
சாதியருக்கு இடஒதுக்கீடு
தணிந்தவரைத்
தரணியில் உயர்த்த வேண்டும்.
தணிந்தவர்க்கு
இழைக்கப்படும் அநீதி களையப்பட வேண்டும்.
தணிந்த
பெண்ணிற்கு மறுக்கப்படும் நீதி
தணிந்தோர்க்குக்
கொடுமை இழைத்தால் கடுந்தண்டனை
தணிந்தோர்
இலக்கியம்
இவ் வகையில் பார்ககும்பொழுது குறைகூறும் வகையில்
இல்லாமல் குறியீடாகச் சரியாகவே பொருள் கொள்ள முடிகிறது. எனவே,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக