புதன், 2 அக்டோபர், 2013

சென்னையின் இயற்கை தூதர்

சென்னையின் இயற்கை தூதர்

தமிழ் இந்து, ஆதி வள்ளியப்பன் Comment   ·   print   ·   T+  
இந்தியாவின் முன்னணி காட்டுயிர் ஆராய்ச்சியாளர்கள், ஒளிப்படக் கலைஞர்களை பட்டியலிட்டால், முதன்மை இடங்களில் இருப்பவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தமிழகத்தை குறிப்பாகச் சென்னையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். சென்னை எப்போதுமே பரபரப்புக்கும் மாசுபாட்டுக்கும் அறியப்பட்ட நகராக இருந்தாலும், 70-80களில் இந்நகரில் உயிர்ப்புடன் இருந்த இயற்கைப் பாதுகாப்பு இயக்கம் பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளித்திருக்கிறது. அக்டோபர் 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதிவரை அனுசரிக்கப்படும் தேசிய காட்டுயிர் வாரத்தை முன்னிட்டு சென்னையின் இயற்கைச் சூழல், இயற்கை பாதுகாப்பு அமைப்புகளால் உத்வேகம் பெற்றவர் சேகர் தத்தாத்ரி.
சென்னை பாம்புப் பண்ணையை ஆரம்பித்த ரோமுலஸ் விட்டேரால் உத்வேகம் பெற்று, சர்வதேச அளவில் சிறந்த காட்டுயிர் ஆவணப்பட இயக்குநராக சேகர் தத்தாத்ரி உயர்ந்தார்.
டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரஃபிக், பிபிசி நேச்சுரல் ஹிஸ்டரி அலைவரிசைகளில் இவரது ஆவணப்படங்கள் ஒளிபரப்பாகி உள்ளன. காட்டுயிர் ஆவணப் படமெடுத்ததற்காக 2004இல் ரோலக்ஸ் விருதைப் பெற்றார். சர்வதேச அளவில் காட்டுயிர் ஆவணப் பட இயக்குநர் ஒருவர், அந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றது அதுவே முதன்முறை.
ஜெரால்டு டியூரல்லின் புத்தகம் என்னைச் சுற்றியுள்ள மற்ற உயிரினங்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது என்று உணர்த்தியது. நான் இயற்கைஆர்வலனாக மாறினேன்.
டிஸ்கவரி, நேஷனல் ஜியாகிரஃபிக், பிபிசி நேச்சுரல் ஹிஸ்டரி அலைவரிசைகளில் இவரது ஆவணப்படங்கள் ஒளிபரப்பாகி உள்ளன. காட்டுயிர் ஆவணப் படமெடுத்ததற்காக 2004இல் ரோலக்ஸ் விருதைப் பெற்றார். சர்வதேச அளவில் காட்டுயிர் ஆவணப் பட இயக்குநர் ஒருவர், அந்த மதிப்புமிக்க விருதைப் பெற்றது அதுவே முதன்முறை.
இவருடைய ‘எகோஆபரேட்டிவ் ஃபார் ஸ்நேக் கேட்சர்ஸ்’ என்ற படம் 1987இல் சிறந்த அறிவியல் படத்துக்கான தேசிய விருதை வென்றது. தொடர்ந்து இரண்டு தேசிய விருதுகளையும் இவர் பெற்றுள்ளார். 1991இல் இவர் எடுத்த
‘அமைதிப் பள்ளம் - ஒரு இந்திய மழைக்காடு’ என்ற காட்டுயிர் ஆவணப்படம் உலகம் முழுவதும் பல்வேறு விருதுகளை வென்றது.
சேகர், டிரீ (Trust for Environmental Education -TREE) என்ற இயற்கை பாதுகாப்பு விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனர். www.conservationindia.org என்ற இணையதளத்தை நடத்திவருகிறார். காட்டுயிர் எழுத்தாளரும்கூட.
தொடக்கம்
"எனக்குப் பத்து வயதானபோது, என் அக்கா புகழ்பெற்ற காட்டுயிர் எழுத்தாளர் ஜெரால்டு டியூரல்லின் புத்தகத்தை படிக்கக் கொடுத்தாள். அந்தப் புத்தகம் என் வாழ்க்கையைத் தலைகீழாகப் புரட்டிப் போட்டது. என்னைச் சுற்றியுள்ள மற்ற உயிரினங்களின் வாழ்க்கை மிகவும் சுவாரசியமானது என்று உணர்த்தியது. நான் இயற்கைஆர்வலனாக மாறினேன். எங்களுடைய சின்னத் தோட்டத்திலேயே எறும்பு, பாம்பரணை, ஓணான், அணில், தேன்சிட்டு, பச்சைக்கிளிகளை அதற்குப் பிறகு கவனிக்க ஆரம்பித்தேன்.
13 வயதில் சென்னை பாம்புப் பண்ணைக்குப் போனேன். அங்கே பாம்புகளைப் பார்த்தவுடனேயே எனக்குப் பிடித்துவிட்டது. அதன் நிறுவனர்-இயக்குநர் ராம் விட்டேகர் அளித்த ஊக்கத்தால், அங்கே தன்னார்வலராகச் சேர்ந்தேன். அங்கே ஃபோட்டோ போடும் டார்க் ரூம் எனது ஒளிப்பட ஆர்வத்தை வளர்த்தெடுத்தது.
அடுத்த கட்டம்
80களில் விட்டேகரின் நண்பர்கள் ஜானும் லூயி ரிபரும் பாம்புக்கடி பற்றிப் படமெடுக்க வந்தனர். அவர்களுக்கு உதவ நான் நியமிக்கப்பட்டேன். அங்கேதான் ஃபிலிம்மேக்கிங் கற்றுக்கொண்டேன். அதன் பிறகு ஸாய் விட்டேகர், ரேவதி முகர்ஜியுடன் நானும் இணைந்து ஈகோ மீடியா என்ற படமெடுக்கும் நிறுவனத்தைத் தொடங்கினோம். கேமரா, எடிட்டிங், ஒருங்கிணைப்பு எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொண்டேன்.
அதன் பிறகு, புலி செயல்திட்டம் தொடர்பாக பெரியார் சரணாலயத்தில் ஒரு டிவி தொடர் எடுக்க நானும் விட்டேகரும் சென்றோம். அந்த நாள்களில் இந்தியாவில் காட்டுயிர் ஒளிப்பதிவாளர்கள் ஒன்றிரண்டு பேரே இருந்தனர். இதனால் இந்த டிவி தொடருக்கு நானே ஒளிப்பதிவாளர் ஆனேன். தொடர்ந்து பிரிட்டன் ஆக்ஸ்போர்டு சயின்டிஃபிக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தில் நிதி நல்கையுடன் பயிற்சியும் கிடைத்தது.
மறக்க முடியாத ஆமை
ஒரிசாவில் காஹிர்மாதா கடற்கரையில் 1992இல் லட்சக்கணக்கான பங்குனிஆமைகள் (ஆலிவ் ரிட்லி) முட்டை பொரிந்து கடலை நோக்கி நகர்ந்து சென்றதைப் படம்பிடிக்க வாய்ப்பு கிடைத்தது. பௌர்ணமி ஒளியில் தாய் ஆமைகள் கடலில் முட்டையிடக் கடற்கரையை நோக்கி வந்துகொண்டிருக்க, ஆமைக் குஞ்சுகள் கடலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. தாய் ஆமைகள் கடற்கரைக்கு முட்டையிட வருவது அரிபடா எனப்படுகிறது. அதுவே ஒரு மாபெரும் அனுபவம். ஆனால், குஞ்சுகளையும் தாய் ஆமைகளையும் ஒரே நேரத்தில் படமெடுத்தது வாழ்நாளில் மறக்க முடியாது.
ஆவணப் படங்கள்
கர்நாடகத்தில் குதிரைமுக சரணாலயத்தில் நடைபெற்ற இரும்புத்தாது சுரங்கம் தோண்டுதலை விமர்சித்து நான் எடுத்த ஆவணப் படம் இந்திய உச்ச நீதிமன்றத்தில் ஆவணமாகச் சமர்ப்பிக்கப்பட்டு, அங்கு சுரங்கம் தோண்டுதல் நிறுத்தப்பட்டது. கடல் ஆமைகள் அழிப்பு, புலிகளை காக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி நான் எடுத்த ஆவணப் படங்கள் பரவலான கவனத்தைப் பெற்றுள்ளன.
படம் எடுக்க
காட்டுயிர் ஆவணப்படங்கள் எடுப்பதற்கு இயற்கை மீதான அக்கறை, உடல், மன ஆரோக்கியம், காடுகளில் நீண்ட நேரத்துக்குக் காத்திருக்கத் தயாராக இருப்பது, ஒரு குறிப்பிட்ட ஷாட்டை எடுக்க பல நாள்கள், பல வாரங்களுக்கு காத்திருப்பது போன்றவை அவசியம். மரம் ஏற, படமெடுக்க, சமைக்க, வண்டியோட்ட, நீச்சலடிக்க என பல்வேறு கூடுதல் திறமைகளும் தேவை. அத்துடன் எப்போதுமே உற்சாகமாகவும், ஜாக்கிரதை உணர்வுடனும் இருக்க வேண்டும்" என்கிறார் சேகர் தத்தாத்ரி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக