வியாழன், 3 அக்டோபர், 2013

உடல் தானத்துக்கு ஒரே நாளில் 51 பேர் பதிவு

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_818093.jpg

மண்ணும் தின்னாது, நெருப்பிலும் எரியாது: உடல் தானத்துக்கு ஒரே நாளில் 51 பேர் பதிவு

கோவை:கோவையில் "பரஸ்பரம்' அமைப்பின் சார்பில் நடந்த உடல் தானம் பதிவு முகாமில், ஒரே நாளில் 7 ஜோடிகள், 2 மாற்றுத் திறனாளிகள் உட்பட 51 பேர், தங்களது பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

கோவை, "பரஸ்பரம்' மக்கள் அறக்கட்டளையில், அரசு அலுவலர்கள், வங்கி ஊழியர்கள், தொழிலாளிகள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் என பல தரப்பினரும் உறுப்பினர்களாக உள்ளனர். சிறு தொகையை மாதந்தோறும் இவர்கள், அமைப்பிற்குத் தருகின்றனர். கணிசமான தொகை சேர்ந்ததும், அதற்குரிய பயனாளியை தேர்வு செய்ய, குழு அமைக்கின்றனர். ஆதரவற்றோர், முதியோர் காப்பகங்களில் விசாரித்து, தேவை என்ன என்பதை அறிகின்றனர்.
அவிநாசி அருகிலுள்ள ஆதரவற்றோர் இல்ல சிறுவர், சிறுமியர் கழிப்பிட வசதியின்றி, அதிகாலையில் வெளிச்சம் வருவதற்கு முன்பே, வெட்டவெளியில் இயற்கை உபாதைகளை கழித்து வந்தனர்; இதனால், அவர்கள் அனுபவித்த துன்பங்கள் ஏராளம். அந்த இல்லத்துக்குக் கழிப்பிடம் அமைத்துத் தந்து, மும்முனை மின் இணைப்பும் பெற்றுத் தந்தது "பரஸ்பரம்' மக்கள் அறக்கட்டளை. இதேபோன்று, பல்வேறு ஆதரவற்றோர், முதியோர் இல்லங்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும், கண் தானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, 150 ஜோடி விழிகளை தானமாகப் பெற்று, 300 பேருக்கு பார்வை கிடைக்கச் செய்துள்ளனர்; உடல் தானம் குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை செய்து வரும் இவர்கள், பிறருக்கு முன் மாதிரியாக, தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, 29 பேர், பெயர்ப்பதிவு செய்துள்ள நிலையில், உடல் தானம் பெயர்ப்பதிவுக்கான சிறப்பு முகாமை இந்த அமைப்பினர் நேற்று நடத்தினர்.

அதில், 7 தம்பதியர் உட்பட 51 பேர், தங்களது உடலை தானம் செய்ய பெயர்களைப் பதிவு செய்தனர். இவர்களில், ஜெகதீஷ் என்ற மாற்றுத்திறனாளியும், வேலுச்சாமி என்ற பார்வையற்றவரும் அடங்குவர். இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ள கிறிஸ்தவர், இஸ்லாமியர் சிலரும் உடல் தானம் செய்திருப்பது, குறிப்பிடத்தக்கதாகும். கலெக்டர் இல்ல வளாகத்தில் நடந்த இந்த முகாமை, கலெக்டர் கருணாகரன் துவக்கி வைத்து, உடல் தானம் செய்ய பெயர்களைப் பதிவு செய்த அனைவரையும் பாராட்டினார்.

நிஜமான சேவை!


கோவையை தலைமையிடமாகக் கொண்ட "பரஸ்பரம்' அமைப்பு, இப்போது திருப்பூரிலும் துவக்கப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளையின் சிறப்பு அம்சமே, தலைமைப் பொறுப்பு என்று யாரும் இல்லை என்பதுதான். அது மட்டுமின்றி, எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், யாரும் தங்களை முன்னிலைப் படுத்திக் கொள்வதில்லை; தங்களது பெயரையும், முகத்தையும் ஊடகங்களில் காண்பிக்கவும் விரும்புவதில்லை. கண் தானம், உடல் தானத்துக்காக பெயர்களைப் பதிவு செய்ய விரும்புவோர், 90426 64683, 98432 70300 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக