வியாழன், 3 அக்டோபர், 2013

விரும்பும் மனமிருந்தால்... வாழ்க்கை இனிக்கும்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_81800920131003015126.jpg

விரும்பும் மனமிருந்தால்... வாழ்க்கை இனிக்கும்!

பாலக்காடு: பறவைகளை கண்டு ரசிக்க பலரும், பல நூறு கி.மீ., பயணித்து, வேடந்தாங்கல் போன்ற சுற்றுலா தலங்களுக்கு செல்வது வழக்கம். ஆனால், கேரளாவில் ஒருவர், தனது வீட்டையே, கிளிக்கூட்டம், தினமும் கொஞ்சுமிடமாக மாற்றியிருக்கிறார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு அடுத்த கோவிந்தாபுரம் நாகேரிபரம்பைச் சேர்ந்தவர் ராஜன். ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. "போர்' அடிக்கும் நேரங்களில் வீட்டு வாசலில், இளைப்பாறும் போது, சில கிளிகள் அங்கு வந்துள்ளன. அந்த கிளிகளுக்கு பழங்கள் மற்றும் நெல் மணிகளை போட்டுள்ளார். அவற்றை சாப்பிட்டு விட்டு; பறந்து சென்ற கிளிகள், தினந்தோறும் ராஜன் வீட்டிற்கு உணவு தேடி வர ஆரம்பித்தன. ஒன்று... இரண்டு... என வந்த கிளிகள், நாட்கள் செல்ல, செல்ல எண்ணிக்கை அதிகரித்து, தற்போது, இவரது வீட்டிற்கு , 100க்கும் மேற்பட்ட கிளிகள் விருந்தாளியாக வர ஆரம்பித்தன. எல்லா கிளிக்கும் இரை போட்டு வந்தார். ஒரு நாளைக்கு, இரண்டு அல்லது மூன்று முறை , அவரோடு கொஞ்சி பேசி விளையாடி செல்கின்றன. அவற்றிற்கு, ராஜனும், அவரது மனைவியும், சளைக்காமல் உணவளிக்கின்றனர். கிளிகளின் பேச்சு ராஜனுக்கும், அவரது மனைவி ரஜனிக்கும் புரிகிறது. காலையில் நெல் மணிகளும், பழங்களும், அரிசி சோறும் உண்கின்றன. மாலை ஐந்து மணியளவில் அருகேயுள்ள தென்னந்தோப்புகளிலுள்ள தென்ன மரங்களில் வந்து நின்று சத்தம் போடும். அதற்குள் ராஜனும் மனைவியும் தத்தை கிளிகளுக்கு தேவையான உணவுகள் 'ரெடி'யாக வைத்து காத்திருப்பார்கள். இவர்களின் இந்த நட்பு கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்கிறது.

இது குறித்து ராஜன் கூறுகையில், ""ஒரு நாள், நான் சும்மா நெல் மணிகளை வாசப்படியில் தூவினேன். அப்போது, எங்கிருந்தோ, வந்த சில கிளிகள், அவற்றை சாப்பிட வந்தன. தினந்தோறும், வழக்கமாகி, 100 க்கும் மேற்பட்ட கிளிகள் வரத் துவங்கின. கிளிகளுக்கு ஒரு நாளுக்கு, ஒரு கிலோ நெல் வரை உணவு அளிக்கிறேன். மனைவி, மகன் ராஜேஷ், மகள் ரஜிஷ் ஆகியோருடன், கிளிகளும் எனது குடும்ப உறுப்பினராகி விட்டன. எனது ஓய்வு நாட்களை கிளிகளுடன் சந்தோசமாக கழித்து வருகிறேன்,'' என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக