தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா?
தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக்கூத்துக்கலை நலிவடைந்து வருவது ஒரு வரலாற்றுச் சோகம்.
கால் நூற்றாண்டுக்கிடையில் தெருக்கூத்துக் கலை மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர்
கொண்டிருக்கிறது. சிற்றூர்களில் அறுவடை முடிந்து உழவர்கள் ஓய்வாக
இருக்கும் காலங்களில் கூத்து நிகழ்த்தப்படும்.
கூத்து நிகழ்த்துவதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் திடல் உண்டு. ஊரே திரண்டு
வந்து கூத்தைக் கண்டுகளிப்பது வழக்கம். தமிழிசைக் கருவிகள் முழங்க
முன்னிரவில் தொடங்கி, விடிய விடிய ஆடலும் பாடலுமாகக் களை கட்டும்.
கூத்து தொடங்கியதும் அரங்கத்தில் முதலில் வருகின்ற கதாப்பாத்திரம் -
கட்டியக்காரன். குழந்தைகளையும் பெரியவர்களையும் ஒருங்கே கவர்ந்திழுக்கும்
கதாப்பாத்திரமான அவர், இரண்டுக்கும் மேற்பட்ட வண்ணங்களை முகத்தில் பூசி
ஒப்பனை செய்திருப்பார். விளக்கொளியில் மின்னும்படியான பளபளப்பான
உடையணிந்திருப்பார்.
' பல பல பல பல பல பப்பூன் வந்தேனே.. பன மரத்துல ஏறி தொப்புன்னு உழுந்தேனே '
என்று பாடியபடி அரங்கத்தை வலம் வரும்போது பார்வையாளர்களிடையே சிரிப்பொலி
பரவும்.
பார்வையாளர்களை வரவேற்றுப் பாடி, நகைச்சுவையான பாடல்களைப் பாடி,
நிகழவிருக்கும் கூத்தின் பெயரையும் கதைச் சுருக்கத்தையும் கூறுவார். அதன்
பின்னர் வரக்கூடிய முதன்மைக் கதாப்பாத்திரங்களுக்குத் தோழனாக, தோழியாக,
பணியாளராக, அமைச்சராக சூழலுக்கேற்ப அவர் மாறுவார்.
ஒவ்வொரு கதாப்பாத்திரமும் மேடைக்கு வருவதற்கு முன்பாக திரைக்குப் பின்னால்
நின்று பாடல் மூலம் தம்மை அறிமுகப்படுத்திய பிறகு மேடையில் தோன்றுவர்.
அவர்களின் வண்ணமயமான ஒப்பனையைக் காண்பதற்காகப் பார்வையாளர்கள் ஆவலோடு
காத்திருப்பர். கதாப்பாத்திரத்தின் தன்மைக்கேற்ற வண்ணத்தைக் கலைஞர்கள்
தங்கள் முகத்தில் பூசியிருப்பர்.
ஒவ்வொரு கலைஞரும் போட்டி போட்டுக்கொண்டு தன் திறமையை வெளிப்படுத்துவர்.
சிறப்பாக நடிப்பவர்களுக்கு அன்பளிப்பு வழங்கி பார்வையாளர்கள்
ஊக்கப்படுத்துவர். கூத்து முடிகின்றவரை கலைஞர்களுக்கு ஊரில் விருந்தோம்பல்
நடைபெறும். மக்களுக்கும் கலைஞர்களுக்குமான உறவு நெருக்கமுடையதாய்
இருக்கும்.
இன்றைக்கும் ஒரு சில ஊர்களில் கூத்து நிகழ்த்தப்படுகிறது. ஆனால்
பார்வையாளர்கள் அதிகமின்மையால் கலைஞர்கள் மனதளவில் பாதிப்பு ஏற்பட்டு கலை
வெளிப்பாடு குறைகிறது. அது மட்டுமின்றி வணிகமயமாகி வரும் வேளாண் முறை,
நகரமயமாகி வரும் வாழ்க்கை முறை, தொலைக்காட்சிகளின் வருகை எனப் பல்வேறு
காரணங்களால் தெருக்கூத்துக் கலை மெல்ல நலிவடைந்து வருகிறது.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களே
கூத்துக்கலைஞர்களாக உள்ளனர். கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம்,
திருவண்ணாமலை போன்ற வட மாவட்டங்களில்தான் கூத்து பெரும்பாலும்
நிகழ்த்தப்படுகிறது. கூத்துக்கலைஞர்கள் சங்கம் அமைத்து செயல்பட்டு
வருகின்றனர். தமிழக அரசும் கூத்துக் கலைஞர்களுக்கு கலைமாமணி போன்ற
விருதுகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும்
கூத்துக் கலையில் ஏற்பட்டு வரும் வீழ்ச்சி கவனத்தில் கொள்ளத் தக்கதாகும்.
கூத்து வாத்தியார் என்றழைக்கப்படும் நாடக ஆசிரியர்தான் கூத்துக் கலைஞர்களை
ஒருங்கிணைத்து கூத்து நிகழ்த்துவார். நடிகர்களுக்கு முன் பணம்
கொடுப்பதற்காகவும் ஒப்பனைப் பொருள்களைப் புதுப்பிப்பதற்காகவும் அவர் ஓர்
ஆண்டிற்கு ஐம்பதாயிரம் ரூபாய் வரை முதலீடு செய்ய வேண்டியுள்ளது. எனவே
அத்தொகையை வட்டிக்குக் கடனாகப் பெற வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்.
அரசு கூத்துக்கலைஞர்கள் சங்கத்திற்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கி உதவினால்
பொருளாதாரச் சிக்கல்களிலிருந்து அவர்கள் விடுபட முடியும்.
நலிவடைந்த இலக்கியவாதிகளுக்கு உதவி செய்வதைப்போல் கூத்துக் கலைஞர்களுக்கும்
அரசு உதவிட வேண்டும். வயது முதிர்ந்த அர்ச்சகர்களுக்கு ஓய்வூதியம்
வழங்குவதைப்போல் வயது முதிர்ந்த தெருக்கூத்துக் கலைஞர்களுக்கும் ஓய்வூதியம்
வழங்கலாம். கூத்துக் கலைஞர்களுக்கு வழங்கப்படும் கலைமாமணி போன்ற
விருதுகளுக்கான கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, கிராமப் பகுதிகளில் வாழும்
கூத்துக்கலைஞர்களும் விருது பெறும்படிச் செய்திட வேண்டும்.
கடலூர் மாவட்டத்தில் தேவனாம்பட்டினம் இராசகோபால் படையாட்சி என்ற நாடகப்
பேராசிரியர் இருபதுக்கும் மேற்பட்ட கூத்து நூல்களை எழுதி வெளியிட்டுள்ளார்,
அவற்றை நாட்டுடைமையாக்கி அவரது வாரிசுகளுக்கு பரிவுத்தொகை வழங்கலாம்.
குறவன்குப்பம் சடகோபன், கொய்யாத்தோப்பு முத்துலிங்கம், தாழம்பட்டு
தணிகாசலம், வேகாக்கொல்லை சின்னதுரை, பயித்தம்பாடி சீனுவாசன், பெருமாள்
நாயக்கன் பாளையம் ராமு, செட்டிச்சாவடி செல்வராசு போன்ற கலைஞர்கள் கடலூர்
மாவட்டத்தில் முக்கியமானவர்கள்.
இது போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் முக்கியக் கூத்துக்கலைஞர்களைத்
தேர்ந்தெடுத்து அரசு பொருட்காட்சிகளிலும், கோயில் திருவிழாக்களிலும் கூத்து
நிகழ்த்தப் பயன்படுத்திக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு நிரந்தர வருவாய்
கிடைக்க வழி செய்யலாம்.
அரசு மனது வைத்தால் இது எளிதாக நடக்கும். மனம் வைக்குமா?
கட்டுரையாளர் - தொடர்புக்கு pugazhvdm@gmail.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக