இறப்புக்குப் பிறகும் மக்கள் மன த் தில் இடம் பிடித்த அரசு ஊழியர்
'மனிதாபிமானம் செத்துவிட்டது' என்று நம்மில் பலர் அடிக்கடி கூறுவதை
கேட்டிருக்கிறோம். உண்மையிலேயே மனிதாபிமானம் செத்துவிட்டதா? இல்லை,
நெஞ்சில் ஈரம் உள்ளவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் என்பது அவ்வப்போது
நிரூபிக்கப்பட்டு வருகிறது.
கட்சி கூட்டம், திருமண நிகழ்ச்சி, காது குத்து, பிறந்த நாள் விழா
போன்றவற்றுக்கு பேனர் வைக்கப்படுவது தெரியும். ஆனால் சமீபத்தில்
பெரம்பூரில் மறைந்த அரசு ஊழியர் ஒருவரை வாழ்த்தி பேனர்
வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பகுதியின் (68 -வது வட்டம்), சென்னை பெருநகர் குடிநீர் மற்றும்
கழிவுநீர் அகற்றல் வாரிய இளநிலை பொறியாளராக பதவி வகித்து, பணியின்போது உயிர்நீத்த பி. வேங்கடராமனை வாழ்த்தியே அந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது.
மற்ற அரசு ஊழியர்களுக்கு விதிவிலக்காக திகழ்ந்திருக்கிறார் வெங்கட்ராமன்.
புகார் செய்தால் தொலைபேசி ரிசீவரையே எடுக்காத பல அலுவலர்கள் இருக்கையில்,
வெங்கட்ராமனின் செல்போன் எண் தெரியாதவர்களே அந்த பகுதியில் இல்லை என்ற
அளவுக்கு அனைவரிடமும் அவர் நெருங்கி பழகி வந்தார். கூப்பிட்டவுடன் ஓடோடிச்
சென்று மக்களுக்கான பணிகளை செய்து வந்தார். அரசு ஊழியர்கள் மத்தியில் இவர்
ஒரு விதிவிலக்காக திகழ்ந்தார் என்பதை பெரிய உருவப்படத்துடன் கூடிய பேனர்
விளக்கியது.
கடந்த ஆண்டு, செப்டம்பர் 26-ந் தேதி நள்ளிரவு, பெரம்பூர் மதுரைசாமி மடம்
தெருவில் உள்ள சாக்கடைக்குழியில் ஏற்பட்டிருந்த அடைப்பை நீக்கும் பணியை
மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தபோது விஷவாயு தாக்கிய தொழிலாளியை
காப்பாற்ற முயன்று வெங்கட்ராமனும் உயிரிழந்துள்ளார்.
வெங்கட்ராமனுக்கு வேறு பகுதிக்கு மாற்றல் கிடைத்தது. ஆனால் அங்கு பணியில்
சேருவதற்கு முன்பாக 68வது வட்டத்தில் பெரும் பிரச்சினையாக இருந்த பாதாள
சாக்கடையை சீர்செய்யும் முயற்சியில் கடந்த செப்டம்பர் 26ம் தேதி 3
ஊழியர்களுடன் பணியில் இறங்கினார்.
வாசுதேவன் தெரு, மரியநாயகம் தெரு என்று இரு தெருக்களில் 4 சாக்கடைக்
குழிகளை சுத்தம் செய்துவிட்டு கடைசியாக மூன்று தெருக்கள் சந்திக்கும்
சாக்கடைக்குழியை சுத்தம் செய்ய தொழிலாளர்கள் வந்தனர். சாக்கடைக் குழிக்குள்
இறங்கிய ஊழியர் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார் அவரைக் காப்பாற்ற மேலே
இருந்த மற்ற ஊழியர்கள் தயக்கம் காட்டினர்.
ஆனால் பொறியாளராக இருந்த போதிலும் இளகிய மனம் படைத்த வெங்கட்ராமன்
தயங்காமல் குழிக்குள் இறங்கி அந்த தொழிலாளியைக் காப்பாற்ற முயன்றார். ஆனால்
அவரும் விஷவாயு தாக்கி உயிரிழந்தார். வெங்கட்ராமன் இறந்த தகவல் தெரிந்து
அப்பகுதியினர் வேதனையில் ஆழ்ந்தனர்.
அவரை மறக்கமுடியாமல், அவரது நினைவாக பொதுமக்கள் அப்பகுதியின் நினைவஞ்சலி
பேனர் வைத்துள்ளனர். இது குறித்து பேனரை வைத்த நலச்சங்கத்தின் தலைவர்
ஜி.தரணிசிங், 'தி இந்து' நிருபரிடம் கூறுகையில், 'சார், அவர் நல்லா
செஞ்சாரு. அதுக்காக பேனர் வச்சிருக்கோம்' என்றார்.
அவர் மேலும் கூறுகையில், 'நான் 50 ஆண்டுகளாக இப்பகுதியில் வாழ்ந்து
வருகிறேன். அவரைப் போன்ற பொதுமக்கள் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும்
அதிகாரியைப் பார்த்ததே இல்லை.
தி.நகரில் உள்ள வீட்டில் இருந்து காலை 8 மணிக்கெல்லாம் பெரம்பூர் பகுதிக்கு
வந்துவிடுவார். ஒரு தெரு விடாமல் பம்பரம் போல் சுற்றி சுற்றி வந்து
குறைகளைத் தீர்ப்பார். வருவதற்கு நேரம் பிடிக்கும் என்றாலும் அதை பற்றி
முன்கூட்டியே தெரிவித்து, எங்களது அலைச்சலைத் தவிர்ப்பார் என்றார்.
தனது கடமையைச் செய்ய மறுக்கும் பல அதிகாரிகள் மத்தியில், நள்ளிரவில் பகுதி
மக்களின் குறையை தீர்க்க வந்து, தன்னுடன் வந்த தொழிலாளியின் வேதனையைப்
பார்க்க முடியாமல் உதவப் போய் போனால் வராத தனது உயிரை விட்ட
வெங்கட்ராமனுக்கு வீர வணக்கம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக