விடாமுயற்சியுடன் உழைத்தால் வெற்றி பெறலாம்!
பெண்ணாக இருந்தும், பயத்தை விட்டுவிட்டு, விடாமுயற்சியுடன் உழைத்ததால், அடுபணி(பேக்கரி) தொழிலில் வெற்றி பெற்ற, தனலட்சுமி:
நான், திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவள். திருமணம் ஆகி, இரண்டு பெண்
குழந்தைகள் இருக்கின்றனர். கணவர் பாஸ்கர், நகை கடை வைத்திருக்கிறார்.
பொழுதுபோக்கிற்காக, அவ்வப்போது பிஸ்கட், கேக் போன்ற பேக்கரி உணவுகளை,
வீட்டிலேயே செய்து சாப்பிடுவதுடன், பக்கத்து வீடுகளுக்கும் தருவேன்.கடைகளில் கிடைப்பதை விட சுவையாக இருப்பதாக, என் தயாரிப்பை பாராட்டுவர். காலம் செல்ல செல்ல, திண்டுக்கல்லின் மற்ற பெரிய நகை கடைகளுடன் போட்டியிட்டு, முன்பு போல் கணவரால் சம்பாதிக்க இயலவில்லை. அச்சமயத்தில், நமக்கு தான் பிஸ்கட், கேக் போன்றவை சுவையாக செய்ய தெரியுமே, நாம் ஏன் பேக்கரி கடை ஆரம்பிக்க கூடாது என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால், அக்கம் பக்கத்தில் உள்ள பேக்கரி கடைகளுக்கு சென்று, சாதக, பாதகங்களை விசாரித்ததுடன், பயிற்சியும் பெற்றேன். என்னால் முடியும் என்ற நம்பிக்கையில், கணவர் உதவியுடன், 15 லட்சம் ரூபாய் வங்கியில் கடன் பெ ற்று, ‘சூர்யா கேக்ஸ் அண்ட் பேக்கரி’யை, ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஆரம்பித்தேன். போட்டியாளர்களை சமாளிக்க, நவீன இயந்திரங்கள், போட்டோ பிரின்டுடன், ‘பர்த் டே கேக்’ போன்ற வசதிகளை அமைத்தேன். சென்னை போன்ற மெட்ரோ நகரங்களில், இம்முறை பழையது என்றாலும், கிராமங்கள் சுற்றியுள்ள பகுதியில் இதெல்லாம் தேவைதானா என, அப்போது திட்டியவர்கள், இன்று என் வெற்றியை பாராட்டுகின்றனர். ஏனெனில், என் கடின உழைப்பால், பேக்கரி இரண்டு கிளைகளாக வளர்ந்துள்ளது. கிரீம் கேக்குகளில், சிறிது நேரம் காற்று பட்டாலும் சுவை மாறிவிடும். அதனால், தயாரிப்புடன், பராமரிப்பும் இத்தொழிலில் அவசியம். ஒரு பெண்ணாக தொழில் ஆரம்பிப்பது, மிகவும், ‘ரிஸ்க்’கான காரியம் தான். ஆனால், பயத்தை விட்டுவிட்டு, விடா முயற்சியுடன் உழைத்தால், நாம் நினைத்த தொழிலில் சாதித்து காட்டலாம்.
தொடர்புக்கு: 97919 00521
சுயதொழிலிலும் அதிகம் சம்பாதிக்கலாம்!
பெண்கள் விரும்பும் பேஷன் நகைகளை, சுட்ட களிமண்ணில் அழகாக செய்து, மாதம், 50 ஆயிரம் லாபமீட்டும், தேன்மொழி:
நான், வேலுாரை சேர்ந்தவள். திருமணமாகி சென்னையில் வசிக்கிறேன்.
எங்கள் வீட்டில் உள்ள அனைவருமே, சுயதொழில் தான் செய்கின்றனர். அதனால்,
எனக்கும் சுயதொழில் மீதே ஆர்வம். படிப்பு முடிந்ததும், ‘கம்ப்யூட்டர்
எஜுகேஷன் சென்டரில்’ வேலை செய்தேன். அந்த அனுபவத்தால், நானே, 2003ல்
ஒரு கம்ப்யூட்டர் சென்டர் ஆரம்பித்தேன். அங்கு, ‘கம்ப்யூட்டர் கிளாஸ்’
மட்டுமின்றி, ‘டியூஷன், ஸ்போக்கன் இங்கிலீஷ்’ போன்றவற்றையும் சொல்லி
தந்தேன். கலை நயத்தோடு, வேறு ஏதேனும் கற்க, ‘பேஷன் ஜுவல்லரி’ செய்யும்
பயிற்சிக்கு சென்றேன். பயிற்சியில் கற்றதை, நண்பர்கள் மற்றும் படிக்க
வரும் மாணவர்களுக்கும் இலவசமாக சொல்லி தந்தேன். இதனால், மற்றவற்றை
விட, ‘பேஷன் ஜுவல்லரி’யில் ஆர்வம் அதிகமானது. பெங்களூரில்,
சுடுமண்ணில் பேஷன் நகைகள் செய்யும் பயிற்சி தருவதாக அறிந்து, அங்கும்
பயிற்சி பெற்றேன். பின், சென்னை, அரும்பாக்கத்தில், ‘நியூ டிரெண்ட்ஸ்
அகடமி‘ எனும், ஜுவல்லரி மேக்கிங் பயிற்சி மையத்தை ஆரம்பித்தேன்.
இப்பயிற்சி வகுப்பிற்கு, பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு
கிடைத்ததால், ‘ஓவிஸ் கிரியேஷன்’ என்ற வெப்சைட் ஆரம்பித்தேன். இதன்
மூலம், பல வெளியூர், ‘ஆர்டர்’களை எளிதாக பிடிக்க முடிந்தது. கிடைக்கும்
ஆர்டரில் கேட்கப்பட்ட நகைகளை, என்னிடம் பயிற்சி பெற்று வருபவர்கள்
மூலமே செய்கிறேன். இதனால், குறைந்த நாட்களில் அதிக ஆர்டர்கள்
எடுத்தாலும், சரியான நேரத்தில், ‘டெலிவரி’ செய்ய முடிவதுடன், பயிற்சி
பெறுபவர்களும் செய்முறையோடு எளிதில் கற்கின்றனர். ஏதேனும் ஒரு
தனியார் நிறுவனத்தில் வேலைக்கு போயிருந்தால், மாதம், 10 ஆயிரமோ, 15
ஆயிரமோ சம்பாதித்துஇருப்பேன். ஆனால், சுடுமண்ணால் ஆன, ‘பேஷன்
ஜுவல்லரி மேக்கிங்’கில், மாதம், 50 ஆயிரம் சம்பாதிக்கிறேன். எனவே,
சுயதொழிலிலும் அதிகம் சம்பாதிக்கலாம். தொடர்புக்கு: 98413 61192
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக