kaviri லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
kaviri லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 8 டிசம்பர், 2012

காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மாயம்?


காவிரியில் திறந்துவிடப்பட்ட நீர் மாயம்?: எல்லையைத் தொடாததால் தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி

காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டதாக கர்நாடகம் கூறியுள்ள நிலையில், தமிழக எல்லைக்கு இன்னும் காவிரி நீர் வந்தபாடில்லை. ஆனால், இன்று காலை அதிகாரிகள் சிலர், பத்திரிகைகளுக்கு தவறான தகவலைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தமிழக எல்லையை காவிரி நீர் தொட்டுவிட்டதாக இன்று காலை செய்திகள் பரவின.
இந்நிலையில், தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை இன்னும் காவிரி நீர் தொடவில்லை என்று பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறினர். இந்தக் குழப்பத்தால், தமிழக அரசு பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு வாய் மொழி உத்தரவு ஒன்றும் இட்டுள்ளதாம். அதிகாரிகள் யாரும் காவிரி நீர் தொடர்பாக பத்திரிகையாளர்களுடன் தொடர்பு கொள்ளக்கூடாது என்றும், ஒரு நாளைக்கு ஒரு முறை... அதாவது காலை 8 மணிக்கு மட்டும் நீர் மட்ட நிலவரத்தை அளித்தால் போதும் என்றும் உத்தரவு இடப்பட்டுள்ளதாம்.
காவிரி நீர் தொடர்பாக அவரவர் தமக்குத் தெரிந்த தகவலை பத்திரிகைகளுக்கு அளிப்பதால், அதிகாரிகள் மட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது என்றும், இன்னும் அதிகார பூர்வமாக காவிரி நீர் தமிழக எல்லையைத் தொட்டது குறித்து அறிவிக்கப்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர். எனவே, கர்நாடகம் காவிரியில் திறந்து விட்டதாகக் கூறிய நீர் எங்கே? அது எப்படி மாயமானது என்பது குறித்து அதிகாரிகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். நேற்று முந்தின நாள் வியாழன் இரவு 10 மணி அளவில் கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து நீர் திறந்துவிடப்பட்டதாக கர்நாடகம் கூறியுள்ள நிலையில், இந்நேரம் தண்ணீர் மேட்டூரில் சேர்ந்திருக்க வேண்டும். ஆனால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவையே இன்னும் தொடவில்லை என்பது அதிர்ச்சி அளிப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறினர்.

வெள்ளி, 12 அக்டோபர், 2012

காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி டி. இராசேந்தர் ஆர்ப்பாட்டம்

காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி டி. இராசேந்தர் ஆர்ப்பாட்டம்
காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி டி.ராஜேந்தர் ஆர்ப்பாட்டம்
சென்னை, அக் 12-

காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி லட்சிய தி.மு.க. தலைவர் டி.ராஜேந்தர் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். கலெக்டர் அலுவலகம் எதிரில் இந்த ஆர்ப்பாட்டம்  நடந்தது. லட்சிய தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

டி.ராஜேந்தர் கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டார். கியாஸ் சிலிண்டர் எண்ணிக்கையை குறைக்காதே, சில்லரை  வியாபாரத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்காதே, காவிரியில் தண்ணீர் விட மறுக்காதே என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் டி.ராஜேந்தர் பேசும் போது உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி காவிரியில் தண்ணீர் விட கர்நாடகம் மறுக்கிறது. தேசத்தில் இருக்கிறதா இல்லையா தேசிய ஒருமைப்பாடு. மத்திய அரசு எடுக்க வேண்டும் சரியான  நிலைப்பாடு.

சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டால் வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்றார். ஆர்ப்பாட்டத்துக்கு எம்.எம்.ஆர். மதன் தலைமை தாங்கினார். டி.வாசு, ஆர். ராஜி, எஸ்.தாமு, டி.சங்கர் உள்ளிட்ட பலர்  பங்கேற்றனர்.

காவிரி: மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக்கூடாது: இராமதாசு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக்கூடாது: இராமதாசு

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு கேலிப் பொருளாகி விடக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பாமக அனுப்பியுள்ள செய்திக் குறிப்பில், தமிழ்நாட்டில் சம்பா சாகுபடிக்காக, அக்டோபர் 15ஆம் தேதி வரை காவிரியில் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஆணையமும், உச்சநீதிமன்றமும் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்த கர்நாடக அரசு மறுத்து வருகிறது.
இந்த நிலையில் புது தில்லியில் நேற்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழு கூட்டத்தில் தமிழ்நாட்டிற்கு வரும் 16 முதல் 31ஆம் தேதி வரை வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் மொத்தம் 8.85 டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கண்காணிப்புக் குழுவின் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான துருவ் விஜய்சிங் ஆணையிட்டுள்ளார்.
ஆனால், வழக்கம் போலவே, இந்தத் தீர்ப்பை ஏற்க முடியாது என்று கூறி, கூட்டத்திலிருந்து கர்நாடக தலைமைச் செயலாளர் வெளிநடபு செய்திக்கிறார்.
தமிழகத்திற்கு தண்ணீர் தர வேண்டும் என்ற கண்காணிப்புக் குழுவின் உத்தரவு ஆராயாமல் பிறப்பிக்கப்பட்ட ஒன்றல்ல. தமிழகத்திலும், கர்நாடகத்திலும் மத்தியக் குழுக்கள் நேரில் ஆய்வு செய்து, தமிழகத்தில் தண்ணீர் பற்றாக்குறை காணப்படுவதாகவும், கர்நாடகத்தில் தேவைக்கும் அதிகமாக தண்ணீர் இருப்பதாகவும் ஆதாரங்களுடன் அறிக்கை அளித்ததன் அடிபடையில் தான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டிக்கிறது.
உண்மை நிலை இவ்வாறு இருக்கும் போது, தமிழகத்திற்கு தருவதற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகம் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். தமிழகத்திற்கு தண்ணீர் தரவில்லை என்பதையே தங்களின் சாதனையாக காட்டி, வரும் தேர்தலில் வாக்குகளை அறுவடை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கர்நாடக அரசு இவ்வாறு செயல்படுகிறது. தங்களின் சுயநலனுக்காக தமிழக விவசாயிகளின் நல னை பறிக்கத் துடிக்கும் கர்நாடக அரசின் கொடூர மனப்பான்மை கடுமையாக கண்டிக்கத் தக்கது.
காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தின் உத்தரவையும் மதிக்காத கர்நாடக அரசு, தற்போது கண்காணிப்புக் குழுவின்
ஆணையையும் ஏற்க மறுத்திப்பதன் மூலம் நாட்டின் இறையாண்மைக்கு மீண்டும் ஒரு சவால் விடுத்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தையும், உச்சநீதிமன்றத்தையும் மதிக்காத கர்நாடக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று நாட்டின் ஒருமைப்பாட்டிலும், கூட்டாட்சி தத்துவத்திலும் அக்கறை உள்ளவர்கள் எதிர்பார்க்கின்றனர். இத்தகைய சூழலில் அரசியல் சட்டத்தின் 53ஆவது பிரிவின்படி கர்நாடக அரசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய இடத்தில் உள்ள குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, கர்நாடக அரசு ஏற்பாடு செய்திருந்த விழாவில் பங்கேற்றிருப்பதும், கர்நாடக முதல்வர் அளித்த நினைவுப்பரிசை ஏற்றுக் கொண்டிருப்பதும், கர்நாடகத்தின் அரசியல் சட்ட மீறலை அங்கீகரிப்பதைபோல அமைந்துவிடும்.
அரசியல் சட்டத்தை மதிக்காத கர்நாடக அரசு மீது இதன்பிறகும் நடவடிக்கை எடுக்காமல் இருந்தால் மக்கள் மத்தியில், மத்திய அரசு கேலிப் பொருளாகிவிடும் ஆபத்து இருக்கிறது. எனவே, கர்நாடக அரசு மீது நடவடிக்கை எடுத்து, தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்க மத்திய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.
இதற்காக மத்திய அரசுக்கு அரசியல்ரீதியிலான நெருக்கடிகளை தமிழகம் தரவேண்டும். இது பற்றி விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டும்படி தமிழக அரசுக்கு பலமுறை வேண்டுகோள் விடுத்தும் பயனில்லை. 2003ஆம் ஆண்டில் இதேபோன்று காவிரி பிரச்சினை தீவிரமடைந்த நிலையில்,பா.ம.க. தான் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழகத்திற்கு நியாயம் வழங்கும்படி பிரதமரை கேட்டுக் கொண்டது. அதைவிடக் கடுமையான சூழல் இப்போது ஏற்பட்டுள்ள நிலையில், உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை அரசு கூட்ட வேண்டும். இல்லாவிட்டால், இந்த பிரச்னையில் ஒத்தக் கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து, அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்கான முயற்சிகளை பா.ம.க. மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

வியாழன், 11 அக்டோபர், 2012

அக்டோபர் மாதம் முழுவதும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு

அக்டோபர் மாதம் முழுவதும் தண்ணீர் திறக்க உத்தரவு: கர்நாடகம் வெளிநடப்பு

First Published : 11 October 2012 04:43 PM IST
கர்நாடக அணைகளில் இருந்து அக்டோபர் மாதம் முழுவதும் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி கண்காணிப்புக் குழு உத்தரவிட்டுள்ளது.
புது தில்லியில் மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையில் இன்று நடைபெற்ற காவிரி கண்காணிப்புக் குழு கூட்டத்தில், தமிழகத்துக்கு அக்டோபர் 15ம் தேதி முதல் மாதம் இறுதி வரை 8.75 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டும் என்று நீர்வளத்துறை செயலர் உத்தரவிட்டார்.
இதனை ஏற்க மறுத்து, கர்நாடக செயலர், கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
இன்று புது தில்லியில் நடைபெற்ற கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில், தமிழக, புதுச்சேரி, கர்நாடக மாநில தலைமைச் செயலர்கள் பங்கேற்றனர்.
தமிழக மற்றும் கர்நாடக அணைகளின் நீர் இருப்பை நேரில் ஆய்வு செய்த மத்திய நீர்வளத்துறை செயலர் தலைமையிலான குழுவினர் அளித்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவையும் கர்நாடக அரசு புறக்கணித்துள்ளது.
அக்டோபர் மாதம் பிரதமர் தலைமையில் நடைபெற்ற காவிரி நதிநீர் ஆணையத்தின் உத்தரவையும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவையும் நிராகரித்துள்ளது கர்நாடக அரசு.

காவிரி நீர் நிறுத்தம்: தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு

காவிரி நீர் நிறுத்தம்: தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பதிவு

First Published : 10 October 2012 02:38 PM IST
தமிழகத்துக்கு உரிய நீரை திறந்து விடுமாறு உச்ச நீதிமன்றம் அளித்த உத்தரவை மீறி, தண்ணீரை நிறுத்திய கர்நாடகா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கினை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.
அக்டோபர் 15ம் தேதி வரை தமிழகத்துக்கு உரிய 9 ஆயிரம் டிஎம்சி நீரை கர்நாடக அரசு தினமும் காவிரியில் திறந்து விட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், கடந்த 8ம் தேதி கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுவதை நிறுத்திவிட்டது.
இதையடுத்து நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்த தவறிய கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்வது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, தமிழக அரசு இன்று கர்நாடக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

நெய்வேலியில் முற்றுகைப் போர்: வைகோ அறிவிப்பு

நெய்வேலியில் முற்றுகைப் போர்: வைகோ அறிவிப்பு

First Published : 10 October 2012 09:46 PM IST
காவிரிப் பிரச்னை தொடர்பாக நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் வரும் அக்.12ம் தேதி நடத்தப்படும் என்று கூறியுள்ளார் வைகோ.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழ்நாடு ஆதிபத்ய உரிமையாகவும் சட்டபூர்வமாகவும் அனுபவித்து வரும் காவிரித் தண்ணீரைத் தமிழகத்திற்கு வரவிடாமல் கர்நாடக அரசு அக்கிரமமாகத் தடுக்கிறது. காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பையும் குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.
தமிழகத்திற்கு உரிமையான காவிரித் தண்ணீரை, கர்நாடகம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. தமிழக அரசு கோரிக்கை விடுத்த அளவுக்குத் தண்ணீரை வழங்கிட காவிரி நதிநீர் ஆணையம் உத்தரவு பிறப்பிக்காமல், ஆணையத்தின் தலைவரான இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், ஒப்புக்காக, விநாடிக்கு 9,000 கன  அடி தண்ணீர் கர்நாடகம், தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என்று அறிவித்தார்.
அதனை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தபோது,  ‘காவிரி நீர் ஆணையம் அறிவித்தவாறு தண்ணீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்; இல்லையேல் எதிர் விளைவுகளைச் சந்திக்க நேரும்’ என்று உச்ச நீதிமன்றம் எச்சரித்தது. உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் காலில் போட்டு மிதித்துவிட்டு, கர்நாடக அரசு காவிரித் தண்ணீரை தமிழகத்திற்கு வரவிடாமல், தடுத்துவிட்டது.
ஐக்கிய முற்போக்கு அரசில், காங்கிரஸ் கட்சியின் மத்திய அமைச்சராக உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா, அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்துகொண்டே, தமிழ்நாட்டுக்கு 9,000 கன அடி தண்ணீர் தரச்சொன்ன அறிவிப்பை பிரதமர் திரும்பப் பெற வேண்டும் என்று, பிரதமருக்கே கடிதம் எழுதியது மன்னிக்கமுடியாத செயல் ஆகும். அதன்பின்னர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், மத்திய காங்கிரஸ் அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கேயும், கர்நாடகத்தைச் சார்ந்த பா.ஜ.க., எம்.பி.களும் கூட்டாகச் சேர்ந்து பிரதமரைச் சந்தித்து, தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் தரக்கூடாது என்று நிர்ப்பந்தித்தனர்.
தமிழகத்தில் காவிரி தண்ணீர் பாசன குறுவைச் சாகுபடியை முற்றிலும் இழந்தோம். நடுவர் மன்றத் தீர்ப்புக்கு எதிராக புதிதாக இலட்சக்கணக்கான ஏக்கரில் கர்நாடகம் சாகுபடி செய்கிறது. இந்நிலையில் தமிழ்நாட்டுக்குக் காவிரித் தண்ணீர் வராவிடில், காவிரி படுகை நஞ்சை நிலங்கள் தரிசு நிலங்களாக ஆகும். இலட்சக்கணக்கான விவசாயிகள் வாழ்க்கை எல்லையற்ற துயரத்தில் முடியும்.
இதற்கு மத்தியில் கர்நாடகத்தில் உள்ள கன்னட வெறியர்கள், அராஜகமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே, கர்நாடகத்திற்கு தமிழ்நாட்டின் நெய்வேலி நிறுவனத்திலிருந்து ஒரு யூனிட் மின்சாரம்கூட அனுப்பக்கூடாது என்று வலியுறுத்தியும், காவிரி உள்ளிட்ட தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினைகளில் ஓரவஞ்சமாகச் செயல்பட்டுத் துரோகம் இழைக்கும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், அக்டோபர் 12 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று  காலை 11 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம், மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் எனது தலைமையில் நடைபெறும்.
- இவ்வாறு கூறியுள்ளார்.

புதன், 10 அக்டோபர், 2012

கருநாடக அரசின் மீது 356 ஆவது பிரிவு: கருணாநிதி

கருநாடக அரசின் மீது 356 ஆவது பிரிவு: இறுதி முடிவெடுக்க கண்ணீரும் கம்பலையுமாக கருணாநிதி வேண்டுகோள்!

First Published : 09 October 2012 07:33 PM IST
பிரதமரின் உத்தரவை மதிக்காதது, உச்ச நீதிமன்ற உத்தரவை மீறியது உள்ளிட்ட காரணங்களால் கர்நாடக அரசின் மீது 356வது பிரிவைப் பயன்படுத்த மத்திய அரசு ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று, திமுக தலைவர் கருணாநிதி கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகோள் விடுப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கை...
நெடுங்காலமாக காவேரி தண்ணீர் பங்கீட்டுப் பிரச்சினையில் தீர்வு காணமுடியாமல் தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் இடையே நிலவிட வேண்டியசகோதர உணர்வுக்கும் நெருக்கடி ஏற்பட்டு,இரு மாநிலமக்களும்ஒற்றுமையாகப் பேசி விவாதித்து நட்புணர்வோடு பழகத் தலைப்பட்டால் தான்இந்திய ஒருமைப்பாட்டுக்கு வலிவு என்ற நிலையில், என் தலைமையிலே இருந்த தி.மு. கழக ஆட்சியில், அன்றைக்குப் பிரதமராக இருந்த வாஜ்பாய்-ஐச் சந்தித்து, காவேரி ஆணையத்தை 1998ஆம் ஆண்டு உருவாக்கக்கூடிய ஒரு நிலைமை ஏற்படுத்தப்பட்டது. அதற்குப் பிறகும் கூட, அந்த ஆணையத்திற்கு மரியாதை காட்டாமல்அதை ஏற்றுக் கொள்ளாமல் “பல் இல்லாத ஆணையம்”, அதனால் ஒரு பயனும்விளையாது என்று, அப்போது இங்கேயிருந்த முதல் அமைச்சர் ஜெயலலிதாஅவர்கள் அறிக்கைகள் விட்டும், அந்த ஆணையத்தின் கூட்டங்களுக்குச்செல்லாமல் புறக்கணித்து, இரு மாநில மக்களுக்கிடையே ஏற்பட வேண்டியஉறவும் நேசமும் பாதிக்கப்படக் கூடிய சூழ்நிலை உருவானது.அந்த நேரத்தில் நல்ல வேளையாக திரு. எடியூரப்பா அவர்கள் முதல்அமைச்சராக இருந்த போது நான் அவரிடம் பல முறை விவாதித்து, கர்நாடகமாநிலத்தார்,தமிழக மாநிலத்தார் என்ற இரு மாநிலத்தாரும்விரோதஉணர்வைக் கை விட்டு நட்புணர்வோடு பழகிட வேண்டும் என்பதற்காக பலஆண்டுகளாக பெங்களூரில் மூடிக் கிடந்த திருவள்ளுவர் சிலையை நான் சென்று திறந்து வைத்தும், அதற்கு ஈடாக கர்நாடக முதல்வர் எடியூரப்பா சென்னையில் உள்ள சர்வக்ஞர் சிலையை திறப்பது என்றும் முடிவு செய்து அவ் வண்ணமே இரு மாநிலங்களிலும் இரு விழாக்கள் சகோதர உணர்வோடு நடத்தப்பட்டது.இப்போது திடீரென்று தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி தண்ணீரைத்தராமல் கர்நாடக அரசு பிடிவாதம் செய்ததை ஒட்டி, தமிழக அரசு உச்ச நீதிமன்றம் வரை முறையிட்டு அதிலும் உரிய பயன் கிடைக்க முடியாமல் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் தர மறுத்த நிலையில்காவேரி ஆணையத்தின் அதிகாரப் பூர்வமான தலைவரான பிரதமர் அவர்களேதமிழகத்திற்குத் தண்ணீரை கர்நாடகம் திறந்து விட வேண்டுமென்று ஆணைபிறப்பித்த நிலையிலே கூட - அந்த ஆணையை, காவேரி ஆணையத்தின்தலைவர் பிரதமர் அவர்கள் விடுத்த வேண்டுகோளாகவோ அல்லது அதிகாரப்பூர்வ ஆணையாகவோ கர்நாடக அரசு கருதாமல் - மேலும் மேலும் வறண்டுகிடக்கும் தமிழக விவசாய நிலங்களுக்கு உரிய தண்ணீரை தர மறுத்து -தாமதம் காட்டி வருவதுமட்டுமல்ல,தண்ணீரைக் கேட்கின்றஉரிமைதமிழ்நாட்டிற்கு இல்லை என்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு - அதன்காரணமாக இரு மாநில ஒற்றுமைக்கும் ஊறு தேடி வருகிறது.தமிழ் நாட்டு மக்களை பகை நாட்டு மக்களைப் போலவும், பன்னெடுங்காலமாகவிவசாயத்தையேநம்பி வாழும்தமிழக உழவர் பெருமக்களைபரம்பரை விரோதிகள் போலவும் எண்ணிக் கொண்டு, ஏட்டிக்குப் போட்டியாககர்நாடக அரசின் நிர்வாகத்தில் இருப்போர்கன்னட மக்களுக்கும்,தமிழ்மக்களுக்கும்நிரந்தரமானஒரு பகையை உருவாக்கும்முயற்சியிலேஈடுபட்டிருப்பது இந்திய நாட்டின் ஒருமைப்பாட்டையே கேள்விக் குறியாக ஆக்கியிருக்கிறது.இந்த நிலைமை வருந்தத் தக்கது மாத்திரமல்ல, கண்டிக்கத்தக்கதுமாகும்.
தமிழகத்தின் சார்பில் அமைதியான முறையிலும், நீதி மன்றங்களின்வாயிலாகவும்எடுத்து வந்தநிலைப்பாட்டுக்குஎதிராககர்நாடக அரசுஒத்துழையாமை கிளர்ச்சியை நடத்துவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருவது, இந்திய நாட்டு ஒற்றுமையை வலியுறுத்துகிற அனைவருக்கும் எதிரானசெயலாகும்.காவேரி ஆணையத்திற்கு தொடக்க காலத்தில் இந்த ஆணையத்தின்குழுவின் சார்பாக அளிக்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு வலிவு உண்டு என்பதைநிரூபிக்கும் வகையில்ஆணையத்தின்தலைவரானஒரு பிரதமருடையகருத்தையே அலட்சியப்படுத்தி, அதற்குப் பணிய மறுத்து செயல் படும் அந்தஅரசுக்கு தக்க பாடத்தைக் கற்பிக்க வேண்டியது, இனி எதிர் காலத்தில் இப்படிப்பட்ட ஒரு மாநிலம் இன்னொரு மாநிலத்திற்கு துரோகம் இழைக்கிற செயலுக்குமுற்றுப் புள்ளி வைக்கும் என்ற நம்பிக்கையோடு,நான் பிரதமரைக் கேட்டுக் கொள்வது - இரு மாநிலத்தாரும் அன்பால்பிணைந்து, சகோதரப் பாசத்தோடு இந்திய ஒற்றுமையை, ஒருமைப்பாட்டைக்கட்டிக் காக்க வேண்டும்என்பதற்காக, கர்நாடக அரசின் மீதுஅரசியல்சட்டத்தில் 356வது பிரிவைப் பயன்படுத்துவது பற்றி இறுதி முடிவுக்கு வரவேண்டும். இந்த வேண்டுகோள் கர்நாடகத்தார் மீது எந்த காழ்ப்புணர்வோடும்கூறப்படுவதல்ல. எதிர் காலத்திலாவது மத்திய அரசு கர்நாடகம் போன்று கடியநெஞ்சத்தோடு செயல்படுகிற மாநில அரசுகளுக்கு ஒரு பாடமாக அமையவேண்டும் என்பதற்காகவும்,தமிழ்நாட்டு வயல்வெளிகள் மயான பூமிகளாகஆகி விடக் கூடாது என்பதற்காகவும் கண்ணீரும் கம்பலையுமாக இந்த வேண்டுகோளை விடுக்கிறேன்

திங்கள், 8 அக்டோபர், 2012

காவேரி நீர்ச் சிக்கல் -போராட்டம் -முத்துலட்சுமி பேட்டி

காவேரி நீர்ச் சிக்கல் -  தமிழ் அமைப்புகளை த் திரட்டி குடிநாயக முறையில் போராட்டம்-முத்துலட்சுமி பேட்டி
 மாலை மலர்
காவேரி நீர் பிரச்சினை: தமிழ் அமைப்புகளை திரட்டி ஜனநாயக முறையில் போராட்டம்-முத்துலட்சுமி பேட்டி
உளுந்தூர்பேட்டை, அக்.7-

காவேரியில் இருந்து தமிழகத்திற்கு உரிய தண்ணீரை வழங்க வலியுறுத்தி தமிழ் அமைப்புகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று வீரப்பன் மனைவி முத்துலட்சுமி கூறினார். திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், திருவாரூர், கடலூர் உள்ளிட்ட காவேரி டெல்டா மாவட்டங்களில் சுற்றுபயணம் செய்த வீரப்பன் மனைவியும், மலைவாழ் மக்கள் உரிமை இயக்கத்தின் தலைவருமான முத்துலட்சுமி உளுந்தூர்பேட்டை வந்தார் அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கன்னட அமைப்புகள் தமிழர்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் இருந்து கன்னடத்திற்கு பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் ஓசூர் வரை வந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இவற்றை கன்னட அமைப்புகள் கைவிட வேண்டும். இங்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

இந்த நிலை நீடித்தால் விவசாயம் பெருமளவில் பாதிக்கும். கன்னட திரைப்பட இயக்குனர் ரமேஷ் கன்னடத்தில் அட்டகாசம், தமிழகத்தில் வனயுத்தம் என்ற பெயரில் ஒரு சினிமா படம் தயாரித்துள்ளார். அதில் எனது கணவர் வீரப்பன் போல் வேடமணிந்தவர், மம்மட்டியான் 4 கொலை செய்தான். நான் 500 கொலை செய்தேன் விளம்பரத்திற்காக என கூறும் ஒரு வசனமும் அந்த படத்தில் உள்ளது. அதனால் அந்த படத்தை தடை செய்ய வேண்டுமென கோர்ட்டில் வழக்குதொடர்ந்தேன். அதற்கு அந்த படத்தை போட்டு பார்க்க எனக்கு கோர்ட் அனுமதி அளித்தது.

அதில் உள்ள பாதிப்புகளை நான் கோர்ட்டில் தெரிவித்தேன். அந்த காட்சியை நீக்க வேண்டும். இது வன்முறையை தூண்டுவதுபோல் உள்ளது. என் கணவர் எந்த நீதிமன்றத்திலும் குற்றவாளியாக நிறுத்தப்படவில்லை. அவர் செய்த தவறுகளை ஒரு திரைப்படமாக வந்து அது இளைஞர்களின் மனநிலையை தவறான நிலைக்கு கொண்டு செல்லும். இந்த திரைப்படம் வெளியே வந்தால் தமிழக இளைஞர்கள் தவறான பாதையில் நடக்க நேரிடும். எனது கனவர் செய்த தவறின் காரணத்தினால் எனது குடும்பமும், மலைவாழ் மக்கள் எவ்வளவோபேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இனிவரும் காலங்களில் மக்கள் மத்தியில் வண்முறையை தூண்டும் வகையில் எதுவும் அமையக்கூடாது என்பதால் தான் நீதிமன்றம் வரை சென்றுள்ளேன்.

இதற்கு மக்கள் ஆதரவு எனக்கு கிடைக்க வேண்டும். எனது கணவரின் 8-ம் ஆண்டு நினைவுநாள் வரும் 18-ந் தேதி அனுசரிக்கிறோம். எனது கணவர் தமிழகத்திற்காக குரல் கொடுத்தார். அன்று கன்னட வெறியர்கள் தமிழகத்தில் வந்து கொடி பிடித்து கோஷங்களை எழுப்பவில்லை. அவர் இருக்கும் வரை கன்னட வெறியர்கள் அடங்கி கிடந்தனர். ஆனால் இன்று ஓசூர்வரை வந்து தமிழர்களை தாக்குகிறார்கள். அதனால் கன்னடத்தில் உள்ள தமிழர்களுக்கு எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சத்துடனே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அக்டோபர் 18-ந் தேதிக்கு பிறகு தமிழ் அமைப்புகளை திரட்டி காவேரி நதிநீர் பிரச்வினைக்காக போராட்டம் நடத்த தயாராகி வருகிறோம். தமிழர்கள் வன்முறையின்றி ஜனநாயக ரீரியில் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டியின் போது தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை செயலாளர் சுரேஷ்குமார், மாவட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட தொண்டர்படை சந்தோஷ், ஒன்றிய செயலாளர் கோபி, நகர செயலாளர் பாலா, நகர தலைவர் பிரேம், துணைச் செயலாளர் லட்சுமணன், ஆறுமுகம் உட்பட பலர் உடனிருந்தனர்.