செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

தமிழும் சமயமும் இணைபிரிக்க முடியாதவை: தினமணி' ஆசிரியர்

தமிழும் சமயமும் இணைபிரிக்க முடியாதவை: தினமணி' ஆசிரியர்



காஞ்சிபுரம், ஆக. 12: "தமிழும் சமயமும் தண்டவாளங்களைப் போன்றவை. இணை பிரிக்க முடியாதவை' என்றார் "தினமணி' ஆசிரியர் கே. வைத்தியநாதன்.  ÷திருமுறை அருட்பணி அறக்கட்டளை சார்பில், மூவர் முதலிகளின் பெரும்பணி என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் காஞ்சிபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ÷இதில் "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் தலைமையேற்று, பேசியது:  ÷தனிநாயகம் அடிகள் தமிழ் மேல் தணியாத காதல் கொண்ட கிறிஸ்தவப் பாதிரியார். இலங்கையில் பிறந்தவர், இன்று உலகத் தமிழ் மாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனவே, அந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டவர் தனிநாயகம் அடிகளார்.  ÷தனிநாயகம் அடிகளார் செய்திருக்கிற ஒரு பதிவை நான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஆங்கிலம் வணிக மொழி, லத்தீன் சட்டத்தின் மொழி, கிரேக்கம் இசையின் மொழி, ஜெர்மன் தத்துவத்தின் மொழி, பிரெஞ்சு தூது மொழி என்று கூறிச் சென்ற தனிநாயகம் அடிகளார் தமிழைப் பற்றி என்ன கூறினார்? என்று பார்த்தால் ஆச்சரியப்பட்டு போவோம்.  ÷இத்தனைக்கும் அவர் கிறிஸ்தவ பாதிரியார். இலங்கையில் பிறந்தவர், இன்று உலகத்தமிழ் மாநாடுகள் நடந்து கொண்டிருக்கின்றனவே, அந்த மாநாட்டை நடத்த வேண்டும் என்பதற்காக முனைப்புடன் செயல்பட்டவர் தனிநாயகம் அடிகளார்.  ÷இந்த பாதிரியார் குறிப்பிடுகிறார், தமிழ் என்பது பக்தியின் மொழி என்று. தமிழ்தான் பக்தியின் மொழி என்றால், அதற்கு காரணகர்த்தாக்கள் யார்? நதி மூலம் ரிஷி மூலத்தைப் போலவே தமிழ் மொழி பக்தி மொழியானது எங்கிருந்து என்று பார்த்தால், அது எங்கே போய் நிற்கும் என்றால் மூவர் முதலிகளிடம் போய் நிற்கும்.  ÷தமிழும் மதமும் இணைபிரியாத தண்டவாளங்களைப் போல. சமயம் என்று பேசுகிறோமே எது சமயம்? மதம் என்று சொல்கிறோமே எது மதம்? மதம் என்பது கொள்கை, நான் இந்த மதத்தைச் சேர்ந்தவன் என்பது கொள்கை.  ÷ஆனால், சமயம் கொள்கை அல்ல, சமயம் என்பது நெறி. தொல்காப்பியம் தொடங்கிய பழந்தமிழ் இலக்கிய நூல்கள் எதிலும் மதம் என்கிற சொல்லாட்சி இல்லை. "சமயம்' என்கிற வழக்குதான் காணப்படுகிறது. மதம் என்ற சொல், கொள்கையை மட்டும் குறிக்கும் பொதுச் சொல். சமயம் என்பது கொள்கையை மட்டுமின்றி, அதற்கும் மேலான ஒரு நெறிப்பாட்டைக் காட்டும் சிறப்புடையது.  ÷சைவத்தை கூட சமயம் என்று ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் அது நம்மை நெறிப்படுத்தும் வழி என்பதால்.  ÷÷உயிர் காப்பது சமயம், மனதை நெறிப்படுத்துவது சமயம். சமயத்தை முன்னெடுத்துச் சென்றவர்கள்தான் சமயக்குரவர்கள் ஆனார்கள், அந்த சமயக்குரவர்கள் பற்றிய கருத்தரங்கம்தான் இங்கே நடைபெற இருக்கிறது.  ÷இதிலே நான் இன்னொரு சிறப்பையும் சொல்ல வேண்டியுள்ளது. சைவநெறியை நிலைநிறுத்திய திருத்தொண்டர்களை, நாயன்மார்களை மூன்று வகையாக அடையாளம் காண்கிறார் சேக்கிழார் பெருமான்.  ÷மனிதன் பொருட்டு தர்மம் நிலைபெறக் கடவுள் மானுடக்கட்டை தாங்கி அவதரிப்பார் என்பது பொதுவான கருத்து. அதனால்தான் சேக்கிழார் பெருமான், திருஞானசம்பந்தரைக் குறிப்பிடும்போது, "சிவம் பெருக்கும் பிள்ளையார் அவதாரம் செய்தார்' என்றும், நாவுக்கரசரைப் பற்றிக் குறிப்பிடும்போது, "இருள் நீக்கி ஒளிவிளக்கு கதிர் --------- கருணீக்கியார் வந்தவதாரம் செய்தார்' என்றும் சுந்தரமூர்த்தி நாயனாரை, "தீதகன்று உலகம் உய்யத் திருஅவதாரம் செய்தார்' என்றும் குறிப்பிடுகிறார்.  ÷ஏனைய திருத்தொண்டர்களை சேக்கிழார் பெருமான் அடையாளம் காட்டும் பாங்கும் சிறப்பானது. வினைவழிப் பிறப்பவர்களைப் பிடித்தார் என்றும், சிறப்புக் கருதி உதயம் செய்தார்' என்றும் பாடியிருப்பார்.  ÷பலருக்கும் களப்பிரர் காலத்தைப்பற்றி இங்கு கருத்து வேறுபாடு உண்டு. களப்பிரர் காலம் சைவ சமயத்துக்கு இருண்ட காலமாக இருந்தாலும், தமிழுக்கும் இருண்ட காலம் அல்ல என்று சிலர் வாதிடுவார்கள். சிலம்பும், மோனையும் பிறத்த காலம் என்று அதைப் போற்றுவார்கள். அவர்களோடு விவாதிக்க நான் தயாராக இல்லை.  ÷நிஜமான களப்பிரர் காலம் எது என்று என்னைக் கேட்டால், சமயத்துக்கும், அதனால் தமிழுக்கும் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திய 20-ம் நூற்றாண்டுதான் களப்பிரர் காலம். சமயம் இல்லாமல் தமிழ் என்று பேசியவர்களின் காலம் கலப்பிரர் காலம்  இல்லாமல் வேறென்ன?  ------- திருமுறைகளும் இல்லாமல் தமிழ் காப்பாற்றப்பட்டிருக்காது. இன்று தமிழில் நாம் கையாளும் பல அற்புதமான சொல்லாட்சிகள் சமய இலக்கியங்கள் நமக்குத் தந்த கொடை. சமயத்தையும் தமிழையும் பிரிக்கப் பார்த்தார்கள். சைவத்தையும், சமயத்தையும் அழிக்கப் பார்த்தார்கள்.  ÷சமயம் இல்லை என்றும் நெறிகள் இல்லை என்றும் இறைவனே இல்லை என்றும் ஒரு பொய்ப் பிரசாரத்தை அரங்கேற்ற முற்பட்ட 20-ம் நூற்றாண்டுதான் நிஜமான களப்பிரர் காலம்.  ÷அந்தக் காலத்தில் இருந்து நாம் மீண்டுவிட்டோம் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் காஞ்சி மாநகரத்தில் திருமுறை அருட்பணி அறக்கட்டளை நடத்தும் விழாவில் இத்தனை பேர் சைவத்தின்பால் கூடி நிற்கிறோம் என்பது சைவம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால், நான்மறைகளைப் பற்றியும் சைவ சித்தாந்தத்தைப் பற்றியும் திருமுறைகளைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் திருச்சிற்றம்பலம் என்று உச்சரித்து நாம் கடவுள் வாழ்த்து பாடி நிகழ்ச்சியைத் தொடங்குகிறோம் என்று சொன்னால் நவீன களப்பிரர் காலம் முடிவடைந்துவிட்டது என்பது பொருள்.  ÷சமயம் இல்லாமல் தமிழ் இல்லை, தமிழைக் காப்பாற்றுவது சமயம். சமயத்தைக் காப்பாற்றுவது தமிழ். இவற்றை யாராவது பிரிக்க நினைத்தால் சமயம் இல்லாத தமிழைப்பற்றி யாராவது கூறுவார்களே ஆனால், அல்லது தமிழ் இல்லாமல் சமயத்தைப் பற்றி யாராவது கூறுவார்களே ஆனாலும், ரயில் தடம் புரள்வது போல சமுதாய நெறி தடம் புரண்டுவிடும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார் அவர்.  ÷இக்கருத்தரங்கில் முத்தமிழ் விரகர் என்ற தலைப்பில் முனைவர் அ. அறிவொளியும், தாண்டகவேந்தர் என்ற தலைப்பில் மு. கணபதியும், வன்தொண்டர் என்ற தலைப்பில் முனைவர் திரிபுரசுந்தரியும் பேசினர்.  ÷முன்னதாக ஓதுவாமூர்த்தி தி. ஆடலரசு இறைவணக்கம் பாடினார். திருமுறை அருட்பணி அறக்கட்டளையின் நிறுவனர் சு. சதாசிவம் வரவேற்றார். அறக்கட்டளைப் புரவலர் வி.கே. தாமோதரன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக