செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

9 அறிஞர்களுக்கு விருதுகள் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார்

9 அறிஞர்களுக்கு விருதுகள் திருவாவடுதுறை ஆதீனம் வழங்கினார்



விழாவில் அறிஞர்களுக்கு பட்டம் வழங்கி ஆசி கூறும் திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் 23-வது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சரிய சுவாமி
மயிலாடுதுறை, ஆக. 13: நாகை மாவட்டம், குத்தாலம் ஆதிசங்கரர் பேரவை சார்பில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் 9 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, நூல் வெளியீட்டு விழா ஆகியன குத்தாலத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  ஆண்டுதோறும் ஆதிசங்கரர் ஜயந்தியை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அறிஞர்களுக்கு குத்தாலம் ஆதிசங்கரர் பேரவை சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு  வருகின்றன.  12-ம் ஆண்டாக நிகழாண்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விழாவுக்கு பேரவையின் நிறுவனரும், தொழிலதிபருமான நல்லி குப்புசாமி தலைமை வகித்தார். பேரவையின் தலைவர் ஏஆர்சி என். விஸ்வநாதன் முன்னிலை வகித்தார்.  விழாவில், குத்தாலம் ராதாசம்பத் எழுதிய ""திருத்துருத்தி புராணம்'' என்னும் நூலினை திருவாவடுதுறை ஆதீன கர்த்தர் 23-வது குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் வெளியிட, முதல் பிரதியை நல்லி குப்புசாமி பெற்று கொண்டார்.  இதைத் தொடர்ந்து, காந்தியவாதி குமரி அனந்தனின் தமிழ்ப் பணியை பாராட்டி, அவருக்கு பொற்பதக்கம், மலர் கீரிடம் அணிவித்து ""முத்தமிழ் நாயகர்'' என்னும் சிறப்பு விருதை ஆதீன கர்த்தர் வழங்கினார்.  இதன் பிறகு, தினமணி செய்தி ஆசிரியர் எஸ். பாவை சந்திரன், சிவராமபுரம் பஞ்சமுக ஆஞ்சநேய சேவா டிரஸ்ட் நிறுவனர் வீரராகவ சுவாமிகள், சென்னை வீணை கலைஞர் ரேவதி கிருஷ்ணா, மயிலாடுதுறை வேத சிவாகம பாடசாலை நிறுவனர் ஏ.வி. சுவாமிநாத சிவாச்சாரியர், சென்னை புகைப்படக் கலைஞர் யோகா, அரித்துவாரமங்கலம் ராஜம் பட்டர், சீர்காழி நாகசுர கலைஞர் த. சிவசுப்பிரமணியன், கும்பகோணம் கே.எஸ். மருத்துவமனை நிர்வாக இயக்குநர் மருத்துவர் எஸ். செல்வராஜன் ஆகியோரின் பணிகளைப் பாராட்டி முறையே, பட்டாடை, பொற்கிழி, உருத்திராக்கம் அணிவித்து தெய்வத் தமிழ்மணி, ஆன்மிக சேவாரத்னா, தெய்வத் தமிழிசை மாமணி, சிவ ஆகம வித்யா சரஸ்வதி, புகைப்பட மாமணி, சத்புத்ர மாமணி, நாகசுர கலைமணி, மருத்துவமாமணி என்னும் விருதுகளை வழங்கி, ஆதீன கர்த்தர் ஆசி வழங்கினார்.  விழா நிகழ்ச்சிகளை முதுகலை தமிழாசிரியர் ஆர். செல்வக்குமார் தொகுத்து அளித்தார்.  விழாவில் பேரவையின் செயலர் டாக்டர் பாலாஜி, பொருளாளர் ஜே. ஞானசம்பந்தம், உறுப்பினர்கள் மு. ஜானகிராமன், ராமநாதன் மற்றும் தமிழறிஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, ஆதிசங்கரர் பேரவையின் அமைப்பாளர் எம். மணிகண்டன் வரவேற்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக