சொல்கிறார்கள்
"மன நிறைவுடன்செய்கிறோம்!'
குறைந்த விலைக்கு உணவு விற்பனை செய்யும், "மெஸ்' நடத்தி வரும் சித்ரா: ஆரம்பத்தில் எங்கள் வாழ்க்கை, சாப்பாட்டிற்கே கஷ்டமான நிலையில் இருந்தது. வறுமையை விரட்ட வழி தேடினேன். கொஞ்சம் பணம் புரட்டி, வீட்டிலேயே இட்லி, தக்காளி சாதம் தயாரித்து, விற்பனை செய்தோம். அதில் பெரிய அளவில் வருமானம் இல்லை. ஆனால், நாங்கள் நம்பிக்கையை இழக்கவில்லை. நாளடைவில் நிறைய வாடிக்கையாளர் வரத் துவங்கினர்.தரமாகவும், நடுத்தர வர்க்கத்தினரும் வாங்கும் நிலையிலும் இருக்க வேண்டும் என்பது தான், எங்கள் இலக்கு. அதனால், "மெஸ்' தொடர்பான அனைத்து வேலைகளையும், நானும், என் கணவரும் மட்டும் செய்கிறோம். வேலையாள் கிடையாது என்பதால், செலவு, பொருட்கள் வீணாவதை கணிசமாகக் குறைக்க முடிகிறது.மாதம், 20 நாட்கள், சிறிய நிகழ்ச்சிகளிலிருந்து, பெரிய நிகழ்ச்சி வரை, "ஆர்டர்' கிடைக்கும். அப்படி வரும் போது, ஒரு படி சாதம் செய்து கொடுக்க, 500 ரூபாய் கட்டணம் வசூலிக்கிறோம். பிரியாணி ஐட்டம் என்றால், படி, 600 ரூபாய். ஒரு படி சாதம், 35 பேர் வரை சாப்பிட முடியும். அது போல், இடியாப்பம், கிச்சடி என்று கேட்பவற்றை செய்து கொடுக்கிறோம்.எங்களின் ஆரம்ப காலத்தில் நாங்கள் பட்ட துயரை, இன்னும் மறக்கவில்லை. அதனால் சமூக சேவையாக, மதுரையிலுள்ள ஒரு பள்ளிக் குழந்தைகளுக்கு தினமும், 100 பொட்டலம் சாதம் விற்கிறோம். கடையில், 15 ரூபாய்க்கு விற்கப்படும் உணவை, அதே தரத்துடன், பள்ளிக் குழந்தைகளுக்கு, எட்டு ரூபாய்க்கு விற்கிறோம். இது எங்கள் ஆத்ம திருப்திக்கான பணி. இதற்காகவே தினமும் மதியம், 12 மணி முதல், 1.30 மணி வரை, கடையைக் மூடி விட்டு செல்கிறோம்.நேர்மையாக உழைக்கிறோம். நம்மை நம்பி சாப்பிட வருபவர்களுக்கு, உணவு ருசியாக, நன்றாக இருக்க வேண்டும் என்ற மன நிறைவுடன், உணவு வழங்குகிறோம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக