செவ்வாய், 14 ஆகஸ்ட், 2012

ஞெகிழிக் கழிவுகளைக் கொடுத்தால் பரிசாகத்தங்கம்: மறைமலைநகர் நகராட்சி புதுமைத்திட்டம்





மறைமலைநகர்:பிளாஸ்டிக் கழிவால் ஏற்படும், ”ற்றுச்‹ழல் பாதிப்பை கட்டுப் படுத்துவதற்காக, "பிளாஸ்டிக் குப்பையை சேகரித்து கொடுத்தால் நான்கு கிராம் தங்க நாணயம் பரிசு,' என்ற புதுமையான திட்டத்தை மறைமலைநகர் நகராட்சி அறிவித்து உள்ளது.

இங்கு, தொழிற்சாலைகள் மற்றும் குடியிருப்புகளில் இருந்து, தினமும் 42 டன் குப்பை சேகரமாகிறது. இதில், பெரும் பங்கு பிளாஸ்டிக்õக உள்ளது.நகராட்சியில், மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. எட்டு வார்டுகளில் நகராட்சி நிர்வாகமும், 13 வார்டுகளில் தனியார் நிறுவனமும் குப்பையை அகற்றி வருகின்றன. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பை, சித்தமனூர் பகுதியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் ஒதுக்கப் பட்டு உள்ள 5.56 ஏக்கர் நிலப்பரப்பில் கொட்டப் பட்டு, தரம் பிரிக்கப் படுகிறது.

புதிய திட்டம்:பிளாஸ்டிக் கழிவால் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் வெகுவாக பாதிக்கப்படுவதால், நகராட்சியில் உள்ள வணிக வளாகங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆயினும், நகரின் பிரதான சாலைகள், தெருக்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் வணிக வளாகங்கள் அனைத்திலும் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகரித்து காணப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் பங்களிப்புடன் இப்பிரச்னைக்கு தீர்வு காண புதிய திட்டம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து நகராட்சி தலைவர் கோபிகண்ணன் கூறுகையில்,"நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. நகராட்சியில், திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக்குகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிற போதிலும், அவைகளை முமுமையாக ஒழிப்பது சிரமமாக உள்ளது,'' என்றார்,

தங்க நாணயம்:மேலும், ""தற்போது, பொதுமக்களின் பங்களிப்புடன் பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க, புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் படி, பொதுமக்கள் தினசரி பயன்படுத்தி, வெளியில் வீசும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, நகராட்சி சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைத்தால், 500 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் கழிவுகளுக்கு நான்கு கிராம் தங்க நாணயம் பரிசு வழங்கப்படும். சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ், பிளாஸ்டிக் சாலைகள் அமைக்க திட்டமிடப் பட்டு உள்ளது,' என்று கூறினார்.

வரவேற்பு:சுற்றுச்சூழல் ஆர்வலர் தேவராஜன் கூறுகையில்,"இத்திட்டம் வரவேற்க வேண்டிய ஒன்றாகும். பிளாஸ்டிக் கழிவுகளை பொது இடங்களில் கொட்டாமல் சேகரித்து, நகராட்சியிடம் வழங்கினால், அதை ஆக்கப்பூர்வமான பணிகளுக்கு பயன்படுத்துவதற்கு உதவியாக இருக்கும். சுற்றுச் சூழலும் மாசடையாமல் தவிர்க்க முடியும். பிளாஸ்டிக்கை ஒழிக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டாலும், பொதுமக்கள் பங்களிப்பு இருந்தால் மட்டுமே முழுமையாக செயல்படுத்த முடியும்,' என்றார்.

காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த மகளிர் குழுவினர் கூறுகையில்,"இத்திட்டம் வரவேற்க கூடிய ஒன்றுதான். ஆனால், வீடுகளில் 500கிலோ வரை பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிப்பது என்பது முடியாத ஒன்றாகும். எனவே, நூறு கிலோ, இருநூறு கிலோ என பரிசுகளை பிரித்து வழங்கினால், ஊக்கமாக சேகரிக்க வசதியாக அமையும்,' என்றனர்.

அங்கே அபராதம்! இங்கே பரிசு!குப்பையே இல்லா பகுதியாக மாற்ற வேண்டும் என்று ஒவ்வொரு உள்ளாட்சியும் முயற்சி செய்து வந்த போதிலும், அது நிறைவேறாத ஒன்றாகவே உள்ளது. குப்பையை கட்டுப்படுத்த சமீபத்தில் மதுராந்தகம் நகராட்சி ஒரு அதிரடி தீர்மானத்தை கொண்டு வந்தது. குறிப்பிட்ட சாலைகளில் குப்பையை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்தது. இந்நிலையில், பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்த, கழிவுகளை கொடுத்தால் தங்க நாணயம் பரிசு என்று மறைமலைநகர் நகராட்சி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக