சொல்கிறார்கள்
‘ஒலிம்பிக் எனப்படும் உலக விளையாட்டில்
தமிழன் சாதிக்க வாய்ப்புண்டு!' ஏழை மாணவர்களுக்கு இலவயமாகத் தடகளப் பயிற்சி அளிக்கும் நாகராசு: என்
சொந்த ஊர் தஞ்சை அருகில் அருந்தவபுரம் எனும்
சிற்றூர். என் அம்மா சத்துணவு ஆயா. வீட்டில் வறுமை இருந்தாலும் எனக்கு விளையாட்டின் மீது ஆர்வம் குறையவில்லை.
போட்டியில் கலந்துகொள்ள ஊரில் இருந்து தஞ்சைக்குச் சென்று வரக் கூடக் காசு இருக்காது. தடகளக் காலணி அப்போது 50 ரூபாய். விலையைக்
கேட்டாலே மலைப்பாக இருக்கும்! விளையாட்டிற்குத்
தேவையான எந்த அடிப்படை வசதியும் அப்போது என்னிடம்
இல்லை. இருப்பதை வைத்து, உயரம் தாண்டுதலில், இளையோர் பிரிவில்
தேசிய அளவில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். என்
வறுமையையும் ஆர்வத்தையும் பார்த்த உடற்கல்வி ஆசிரியர் சண்முகசுந்தரம் என்னை முழுமையாகத் தத்தெடுத்துக் கொண்டார். அவர்தான் என்னைச் சென்னைக்குப் படிக்க
அனுப்பி வைத்தார். “நீ படித்து முடித்து வா! என் வேலையை உனக்கு விட்டுத் தருகிறேன்; அதில் நீ சேர்ந்து கொள்ளலாம்” என்று அவர் சொன்ன சொல் இன்றும் நினைவில் உள்ளது. படித்து முடித்ததும் கலால் துறையில், விளையாட்டு ஒதுக்கீட்டில் வேலை கிடைத்தாலும் என் தடகள ஆர்வம்
தணியவில்லை. நாள்தோறும் வீட்டிலிருந்து திடலுக்குச் சென்று பயிற்சி கொடுத்து விட்டு, அலுவலகம் சென்று, மாலை மீண்டும் திடலுக்குச்
சென்று விடுவேன். இரவு 9 மணிக்குப் பயிற்சி முடித்து
வீட்டிற்குச் சென்றால் மறுநாள் மீண்டும் திடல். 24 ஆண்டுகளாக இதுதான் என் அன்றாட வாழ்க்கை. என்னிடம் பயிற்சிக்கு
வரும் ஏழை மாணவர்கள் யாரிடமும் கட்டணம் வாங்குவதில்லை என்பது என் கொள்கை. ஒரு தடகள வீரர் உருவாகக் குறைந்தது 10 ஆண்டுகள் தேவை.
இளமையான காலங்களை அடகு வைத்துத்தான் பதக்கம் வெல்ல
வேண்டும். ஆனால் தேசிய அளவில் தங்கப் பதக்கம்
வென்றவர்களுக்கு உடற்பயிற்சிக் கூடத்தில் பயிற்சியாளராக
இருப்பதைத் தவிர இங்கு வேறு வாய்ப்புகள்
இல்லை. சாதிக்கும் வேட்கையுடன் என்னிடம் பயிற்சி பெறுபவர்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். மக்கள் ஊக்கமளித்துத் தெம்பூட்டினால் 2016 பிரேசில் உலக
விளையாட்டுப் பதக்கப் பட்டியலில் தமிழனின் பெயரை பார்க்கலாம்.
--நன்றி: ஆனந்த விகடன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக