சொல்கிறார்கள்
தங்க மங்கை!கால்நடை மருத்துவ அறிவியல்
பல்கலைப் பட்டமளிப்பு விழாவில், 27 பதக்கங்கள் வென்றுள்ள ஜெபரோஸ்: என்
சொந்த ஊர் நெல்லை. அப்பா, விவசாயத் துறையில் மண்டலக் கணக்கு அதிகாரி;
அம்மா, வங்கியில் மேலாளர். நான் ஒரே பெண் என்றாலும், படிப்பு விஷயத்தில்
பெற்றோர் கண்டிப்புடன் இருந்தனர்.பள்ளிப் பருவத்திலேயே கால்நடை மருத்துவப்
படிப்பின் மீது, எனக்கு அளவு கடந்த ஈடுபாடு உண்டு. அதற்குக் காரணம், ஜேம்ஸ்
ஹரியட் எனும் எழுத்தாளரின் புத்தகங்கள் தான். கால்நடைகளைப் பற்றி, அவர்
எழுதிய ஏழு நாவல்களையும், பிளஸ் 2 படிக்கும் போதே முடித்து விட்டேன்.
அப்போதே முடிவெடுத்து விட்டேன், படித்தால் கால்நடை மருத்துவம் தான்
என்று.சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில்
ஈடுபாட்டுடனும், ஆர்வத்துடனும் படித்ததால், தங்கப் பதக்கங்களைப்
பெற்றிருக்கிறேன். பதக்கம் பெறுவேன் என்பது தெரியும்; ஆனால், 27 தங்கப்
பதக்கங்கள் பெறுவேன் என எதிர்பார்க்கவில்லை. நான் இந்தளவிற்கு பதக்கங்கள்
வாங்கியதற்கு, கடின உழைப்பும், இறைவன் மீது கொண்ட பக்தியும் தான் காரணம்.
கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில், நான்கரை ஆண்டுகள் கல்லூரிப்
படிப்புடன், ஆறு மாதம் பயிற்சிக்காக, அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்
கழகத்திற்கு சென்று வந்திருக்கிறேன். கால்நடைகளைத் தாக்கும் நோய்கள்
குறித்து, எளிதில் கண்டறிய அங்கு பெற்ற பயிற்சி, உதவியாக
இருந்தது.உ.பி.,யில் உள்ள, இந்திய கால்நடை ஆராய்ச்சிக் கழகத்தில்,
எம்.வி.எஸ்.சி., படிக்கிறேன். அங்கும் பல பதக்கங்கள் பெற வேண்டும் என
விரும்புகிறேன். அதற்காக இப்போதே கடினமாக, உழைக்கத் தயாராகி விட்டேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக