சமையல்காரரின் நட்புக் கிளிகள்!
தினமணி First Published : 12 Aug 2012 01:57:01 PM IST
தருமபுரி, ஆக.12: உறவுகள் கூட குறிப்பிட்ட எல்லை வரைதான்; ஆனால், நட்புக்கு
எல்லையே இல்லை என்கிறார் பச்சைக் கிளிகளை நண்பர்களாகக் கொண்டுள்ள சமையல்காரர்.
தருமபுரியை அடுத்த புளியம்பட்டி அருகேயுள்ள கொண்டம்பட்டியைச் சேர்ந்தவர்
முருகன் (52). இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.
சமையல்காரரான முருகன், திருமணம், கோயில் விழா மற்றும் இதர நிகழ்வுகள்
அனைத்துக்கும் சமையல் செய்து தரும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார். 8 ஆண்டுகளுக்கு
முன்பு தெருவோரம் கூண்டில் விற்கப்பட்ட 2 பச்சைக் கிளிகளை வாங்கி வீட்டில்
வளர்த்தார்.
அந்தக் கிளிகள் இவருடன் நன்றாகப் பழகவே அதன் மீது அதிக அக்கறை செலுத்தத்
தொடங்கினார். குட்டியாக இருந்த கிளிகள் வளர்ந்தவுடன் இவருடனே போகும் இடமெல்லாம்
சென்று வந்தன. இதில், ஒன்று இரு சக்கர வாகனத்தில் சென்ற போது கிழே விழுந்து இறந்து
போனது. மற்றொன்று நாய் வசம் சிக்கி விட்டது. இந்தக் கிளிகள் இறந்த துக்கத்தில்
சிறிது நாள்களை நகர்த்தினார்.
பின்னர், மீண்டும் இரு கிளிகளை குட்டியாக வாங்கி வளர்க்கத் தொடங்கினார்.
இந்தக் கிளிகளும் அவருடன் நடப்பாகப் பழகின. இப்படி, கிளிகளை குட்டியாக வாங்குவதும்,
அவற்றை நன்றாக வளர்ப்பதும் இவரது வாடிக்கையாகிவிட்டது. சில தருணங்களில் யாரேனும்
விரும்பிக் கேட்டால் அவற்றைக் கொடுத்துவிடுவார். இல்லையெனில், யாரேனும் திருடிச்
சென்றுவிடுவர்.
ஆனால், 2 கிளிகள் போனால் மற்றொரு 2 கிளிகள் எனப் புதிதாக வாங்கி வளர்ப்பதை
வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 6 மாதங்களுக்கு முன்புதான் 2 புதிய கிளிகளை வாங்கினார்.
இறகுகள் முளைக்காத பருவத்தில் வாங்கிய இந்தக் கிளிகளுக்கு இப்போது இறகுகள் முளைத்து
முருகன் செல்லும் இடமெல்லாம் சென்று வருகின்றன.
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், இரு சக்கர வாகனத்தில் முன்னால்
அமர்ந்துள்ள கிளிகள் வாகனம் 60 கி.மீ. வேகமாக இருந்தாலும், 80 கி.மீ. வேகமாக
இருந்தாலும் அசையாமல், கீழே விழாமல் அப்படியே நின்றபடி பயணம் செய்கின்றன.
கிளிகள் நிற்பதற்காக இரு சக்கர வாகனத்தின் கைப்பிடிகளை இணைக்கும் வகையில்
பிரம்புகளை கட்டி வைத்துள்ளார். சங்கிலியால் பிணைக்கப்பட்ட இந்தப் பிரம்புகளில்தான்
கிளிகள் எப்போதும் இருக்கின்றன.
வாழைப் பழம், கொய்யா உள்ளிட்ட பழங்கள், நெல், அரிசி, சோறு என அனைத்தையும்
சாப்பிடுகின்றன. அதிகாலையில் வேலைக்காக முருகன் வெளியே புறப்படுவதற்கு முன்பாகவே
காலை 7 மணிக்கு இரு சக்கர வாகனத்தில் இந்தக் கிளிகள் தானாக வந்து அமர்ந்து
விடுகின்றன.
பின்னர், தனது எஜமானார் செல்லும் இடங்களுக்கெல்லாம் இணை பிரியாது செல்கின்றன.
வாகனத்தை நிறுத்திவிட்டு முருகன் எங்காவது சென்றுவிட்டால் அவர் வரும் வரைக்கும்
வாகனத்தின் மீதே அமர்ந்திருக்கின்றன. இந்தக் கிளிகளைப் பார்க்கும் மக்களும்
வியப்புடன் பார்த்துச் செல்கின்றனர்.
இதுகுறித்து முருகன் கூறியது:
8 ஆண்டுகளுக்கு முன் ஆசைக்காக கிளிகளை வாங்கினேன். இப்போது, நான் விட்டாலும்
கிளிகள் என்னை விடாது என்ற நிலைக்கு வந்துவிட்டேன். இதுவரை 30 கிளிகளுக்கு மேல்
வளர்த்து விட்டேன். பெரும்பாலான கிளிகளை யாராவது திருடிச் சென்று விடுகின்றனர்.
இல்லையெனில், நாய் கடித்து விடுகிறது. இப்போதுள்ள கிளிகளுக்கு வயது 7 மாதம். எனக்கு
சிறந்த நண்பர்களாக இருக்கின்றன என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக