C.M. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
C.M. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 5 நவம்பர், 2012

ஆளுநர், முதல்வர்,அலுவலகங்கள் சூரிய ஒளி மின்சாரத்திற்கு மாற்றம்


தமிழக அரசின் சூரிய ஒளி மின் சக்தி திட்டத்தில், முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியவற்றில், சோலார் மின் சக்தி திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

தமிழக அரசு, கடந்த வாரம், மாநில சூரிய மின்சக்தி கொள்கையை அறிவித்தது. அதில், கடும் மின் பற்றாக்குறையில் தவிக்கும் தமிழகத்துக்கு, மாற்று மின்சக்தியாக, சூரிய மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு அலுவலகங்கள், படிப்படியாக சூரிய மின்சக்திக்கு மாற்றப்படும்.

வீடுகளில் சூரிய மின்சக்தி அமைக்க, அரசு ஊக்கத் தொகை வழங்கும் என, கூறப்பட்டுள்ளது.சூரிய மின் கொள்கையின் முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியவற்றில், இந்த மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. இதற்காக, சர்வதேச டெண்டரை, தமிழக எரிசக்தி மேம்பாட்டு
முகமை கோரியுள்ளது. 35 கிலோவாட் மின்சாரத்தை பெரும் வகையில், இந்த டெண்டர்
விடப்பட்டுள்ளது.முதல்வர் அலுவலகத்தில், 10 கிலோ வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையத்தையும், கவர்னர் மாளிகையில், 10 கிலோ வாட் சூரிய மின்சக்தியை உற்பத்தி செய்யும் நிலையம் இரண்டும், 5 கிலோ வாட் சூரிய மின் சக்தியை உற்பத்தி செய்யும் நிலையம் ஒன்றும் அமைக்கப்படுகின்றன.

சூரிய மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் நிறுவனம், ஐந்து ஆண்டுகள் தொடர் பராமரிப்பில் ஈடுபட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.பராமரிப்புப் பணிக்கு, திட்டத்தின் மொத்த மதிப்பில் ஆண்டுக்கு, 3 சதவீதம் என, 15 சதவீதத் தொகை அளிக்கப்படுகிறது. 25 ஆண்டுகள் உத்தரவாதத்துடன் உபகரணங்கள் பொருத்தப்படுகின்றன.
இதுகுறித்து, தமிழக எரிசக்தி மேம்பாட்டு முகமை
Advertisement
அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகையில், சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையம் அமைக்க கோரப்பட்டுள்ள டெண்டருக்கு, இம்மாதம், 15ம் தேதி கடைசி நாள். இதன்பின், ஓரிரு மாதங்களில், சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.

அரசின்சூரிய மின்சக்தி கொள்கையில், அரசு அலுவலகங்களில், சூரிய மின்சக்தி உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதல் கட்டமாக, முதல்வர் அலுவலகம் மற்றும் கவர்னர் மாளிகை ஆகியன இவ்வகை மின்சக்திக்கு மாற்றப்படுகிறது.

படிப்படியாக, அரசு அலுவலகங்கள் இதுபோன்ற மின்சக்திக்கு மாற்றப்படும்.முதல் கட்டமாக, அரசு கட்டியுள்ள, 60 ஆயிரம் பசுமை வீடுகளில், சூரிய மின்சக்தி அமைக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.
-
தினமலர் சிறப்பு ச் செய்தியாளர் -

A

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

இலங்கை க் கால்பந்து வீரர்களுக்கு ச் சென்னையில் பயிற்சி: திருப்பியனுப்ப முதல்வர் உத்தரவு

இலங்கை க் கால்பந்து வீரர்களுக்கு ச் சென்னையில் பயிற்சி: திருப்பியனுப்ப முதல்வர் உத்தரவு

First Published : 02 Sep 2012 06:06:48 PM IST
தினமணி
Last Updated : 02 Sep 2012 06:44:24 PM IST

சென்னை, செப். 2: இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்களுக்கு சென்னையில் பயிற்சி அளித்துள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ள முதல்வர் ஜெயலலிதா, அவர்களை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும், நேரு விளையாட்டு அரங்கில் பயிற்சி அளி்க்க அனுமதி அளித்த பொறுப்பு அதிகாரியை தாற்காலிக பணிநீக்கம் செய்யவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,இலங்கைத் தமிழர்கள் சிங்களர்களுக்கு சமமான உரிமைகளைப் பெறும் வரை அந்நாடு மீது பொருளாதாரத் தடை விதிக்கப்பட வேண்டும் என்று தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்காமல், தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில், இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ்நாட்டில் தொழில்நுட்பப் பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது.  மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து கடும் கண்டனத்தை நான் வெளியிட்டவுடன், இலங்கை ராணுவ வீரர்களை இந்தியாவில் உள்ள வேறு மாநிலத்திற்கு அனுப்பி வைத்து மத்திய அரசு தொடர்ந்து பயிற்சி அளித்து வருகிறது. அண்மையில், இரண்டு இலங்கை ராணுவ வீரர்களுக்கு வெலிங்டன் ராணுவ பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதை அறிந்தவுடன், அவர்களை உடனடியாக இலங்கைக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஒட்டுமொத்த தமிழகமும் இதே கோரிக்கையை விடுத்தது. ஆனால், மத்திய அரசு அதற்கு சிறிதும் மதிப்பளிக்கவில்லை. மாறாக, இது போன்ற பயிற்சிகள் அளிப்பது நிறுத்தப்பட மாட்டாது என மத்திய அமைச்சர் தெரிவித்து, தமிழக மக்களின் உணர்வுகளை புண்படுத்தியுள்ளார்.  இந்தச் சூழ்நிலையில், இலங்கையைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள்,  தங்களுடைய திறமையை வளர்த்துக் கொள்ளும் வகையில், நட்பு ரீதியிலான போட்டிகளில் கலந்து கொள்ள தமிழகம் வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. மத்திய அரசின் இந்தச் செயல் தமிழக மக்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். மத்திய அரசின் இந்தச் செயலுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  இலங்கை நாட்டைச் சேர்ந்த கால்பந்து விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெறும் வகையில், சென்னையில் உள்ள பாரத ரிசர்வ் வங்கியில் பணிபுரியும் அலுவலர் ஒருவரை ராயல் காலேஜ் ஆப் கொழும்பு நிர்வாகம் தொடர்பு கொண்டு, இங்குள்ள கால்பந்து அணிகளுடன் நட்பு ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யும்படி கேட்டுக் கொண்டதாகவும், அதன்பேரில், அந்த அலுவலர் அதற்கான ஏற்பாட்டை செய்ததாகவும், கடந்த ஆகஸ்ட் 30-ல் தமிழகம் வந்த இலங்கை கால்பந்து விளையாட்டு வீரர்கள் மறுநாள் சென்னை சுங்க இலாகா அணியுடன் நேரு விளையாட்டரங்கில் விளையாடியுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது. இது குறித்து  நடத்தப்பட்ட விசாரணையில், பாரத ரிசர்வ் வங்கி அலுவலர் நட்பு ரீதியிலான கால்பந்து போட்டியை நடத்துவதற்கு வாய்மொழியாக நேரு விளையாட்டரங்கத்தின் பொறுப்பு அதிகாரியை அணுகியதாகவும், அந்த பொறுப்பு அதிகாரி விளையாட்டுப் போட்டிகளுக்கு நேரு விளையாட்டரங்கத்தை பயன்படுத்த வாய்மொழியாக அனுமதி வழங்கியதாகவும் தெரிய வந்தது.  நேரு விளையாட்டரங்கில் விளையாட்டுப் போட்டிகளை அனுமதிக்க நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரிக்கு எந்தவித அதிகாரமும் இல்லை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திற்கு தான் அந்த அதிகாரம் உள்ளது. தனக்கு இல்லாத அதிகாரத்தை பயன்படுத்தி இலங்கை விளையாட்டு வீரர்களை நேரு விளையாட்டரங்கில் கால்பந்து விளையாட அனுமதி அளித்ததன் மூலம் தமிழக மக்களின் உணர்வுகளை நேரு விளையாட்டரங்க பொறுப்பு அதிகாரி கொச்சைப் படுத்தியுள்ளார்.  எனவே, அந்த அதிகாரியை தற்காலிக பணிநீக்கம் செய்து துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், இலங்கை கால்பந்து வீரர்களுக்காக எந்த போட்டிகளும் தமிழகத்தில் நடத்தக் கூடாது என்றும், அவர்களை இலங்கைக்கு உடனடியாக திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதே போன்று வேலம்மாள் மேல்நிலைப் பள்ளியுடன் கால்பந்து போட்டி விளையாட சென்னை வந்துள்ள இலங்கை, ரத்தினபுராவைச் சேர்ந்த ஹில்பர்ன் இன்டர்நேஷனல் பள்ளியின் 8 மாணவர்கள் மற்றும் ஒரு பயிற்சியாளரையும் திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
கருத்துகள்

சரியான நடவடிக்கை. தம் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள வெறுப்புக்கு என்ன காரணம் என்பதை திரும்பியவர்கள் சிந்திக்கட்டும். முதல்வரின் நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது என்றே நான் கருதுகிறேன்.
By sivasubramanian
9/2/2012 8:19:00 PM
சபாஷ்.... எல்லாம் இந்த எட்டப்பன் கருணாநிதியின் கையாகாததனம். ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் மனிதனை கடித்த கதையாக, மத்திய அரசு இப்படி நடந்துகொள்வதை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேச முடியாத எட்டப்பன் கருணாநிதி ஐ. நா சபையில் தனது தீர்மானத்தை கொடுக்கிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம். வெட்க கேடு.
By இராசாராமன் வெ இராமன்
9/2/2012 7:31:00 PM

வியாழன், 30 ஆகஸ்ட், 2012

விசுவநாதன்- இராமமூர்த்திக்கு ப் பத்ம விருதுக்குப் பரிந்துரைத்தேன்-முதல்வர்

விசுவநாதன்- இராமமூர்த்திக்குத் தாமரை விருதுக்குப் பரிந்துரைத்தேன் - முதல்வர்
விசுவநாதன் - இராமமூர்த்திக்குத் தாமரை விருதுக்குப் பரிந்துரைத்தேன்; நடுவண் அரசு மறுத்துவிட்டது: முதல்வர்.
சென்னை, ஆக., 29: “இசை அறிஞர்களான இரட்டையர் விசுவநாதன் - இராமமூர்த்திக்குத் தாமரை விருதுகள் வழங்குமாறு பரிந்துரைத்து நடுவண் அரசுக்கு அனுப்பினேன். ஆனால் அது மறுத்துவிட்டது என்று நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் செயலலிதா கூறினார். செயா தொலைக்காட்சியின் 14ஆம் ஆண்டுத் தொடக்கத்தையும், மெல்லிசை வேந்தர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி ஆகியோரைப் பாராட்டவும் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு தமிழக முதல்வர் செயலலிதா பேசினார். அப்போது அவர் இதனைத் தெரிவித்தார். அவர் பேசும்போது, எம்.எசு.விசுவநாதனும் இடி.கே.இராமமூர்த்தியும் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும் அவர்களுக்கு நாட்டு (தேசிய) விருது, தாமரை விருதுகள் ஆகியவை வழங்கப்படாதது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கிறது! சென்ற ஆண்டிற்கான தாமரை விருதுக்கு இவர்களின் பெயர்களை நடுவண் அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய நடுவண் அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. “குடியரசுத்தலைவர் விருது வேண்டாம், குடிமக்கள் விருது போதும்என்று இங்கிதம் தெரிந்த இசைக் கலைஞர் எம்.எசு.வி கூறினாலும், நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும்! அப்போது இவர்களுக்குத் தாமரை விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்! என்றார் முதல்வர் செயலலிதா.

முதல்வரின் உரையில் இருந்து
இருபதாம்  நூற்றாண்டு ஈன்றெடுத்த ஈடு இணையற்ற இசைப்பேரறிஞர்களான மெல்லிசை வேந்தர்கள் எம்.எசு.விசுவநாதன் - இடி.கே.இராமமூர்த்தியை இந்த இனிய மாலைப் பொழுதினிலே பெருமைப்படுத்துவதில் நான் அளவற்ற மகிழ்ச்சி அடைகிறேன்! இந்த வாய்ப்பினை நல்கிய செயா தொலைக்காட்சி நிறுவனத்திற்கு எனது நன்றி! இசை என்பது ஒழுங்குபடுத்தப்பட்ட, கட்டுப்படுத்தப்பட்ட அழகு ஒலி! இசை என்றால் இசைய வைப்பது. மாந்தர்களையும், உயிரினங்களையும் இசைய வைக்கின்ற, பணிய வைக்கின்ற ஓர் அழகுச் சாதனம் இசை! இசை, மக்களின் இதயங்களை இணைக்கும் பாலம். சோகம், இன்பம், துன்பம், அச்சம் ஆகிய அடிப்படை உணர்ச்சிகளை வழங்குவது இசை. அதனால்தான் “இசைக்கு மயங்காதார் எவருமில்லை”, “இசை கேட்டால் புவி அசைந்தாடும்என்றெல்லாம் இசையின் அருமையைப் புகழ்ந்துரைப்பர் சான்றோர். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த இசையின் மூலம் நம் உள்ளங்களையெல்லாம் கொள்ளை கொண்டவர்கள் எம்.எசு.விசுவநாதன் -  இடி.கே.இராமமூர்த்தி. இசைப் பின்னணி ஏதுமில்லாத ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்த  எம்.எசு.விசுவநாதன், நான்கு வயதில் தன் தந்தையை இழந்த சூழ்நிலையில் நீலகண்ட பாகவதரிடம் இசையினைப் பயின்று 13ஆவது வயதிலேயே மேடை நிகழ்ச்சி நிகழ்த்திய பெருமைக்குரியவர்!  புரட்சித் தலைவர் எம்.சி.ஆர். நடித்த செனோவா திரைப்படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகிய எம்.எசு.விசுவநாதன், ‘பணம்திரைப்படம் முதல்ஆயிரத்தில் ஒருவன்திரைப்படம் வரை  இடி.கே.இராமமூர்த்தியுடன் இணைந்து 700க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனப் பல்வேறு மொழிகளில், 1,200க்கும் மேலான திரைப்படங்களுக்கு இசையமைத்து, ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு மெட்டமைத்த பெருமை  எம்.எசு.வி-யைச் சாரும். 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்த் திரைப்பட உலகில் கோலோச்சிக் கொண்டிருக்கும் ஒரே இசையமைப்பாளர் எம்.எசு.வி-தான். முன்னூற்றுக்கும் மேற்பட்ட இசைக் கருவிகளைக் கொண்டும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்மூன்றே இசைக் கருவிகளை வைத்தும் பாடலுக்கு இசையமைத்து இருக்கிறார்  எம்.எசு.வி. ஆர்மோனியம், பியானோ, கீ போர்டு என மூன்றையும் அருமையாக இசைக்கும் திறன் பெற்றவர்  எம்.எசு.வி. தனித்தன்மை வாய்ந்த தனது குரலின் மூலம் 500க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய ஒரே இசையமைப்பாளர் எம்.எசு.வி. மற்ற இசையமைப்பாளர்கள் இசையமைத்த திரைப்படங்களில் பாடிய பெருமையும், பக்குவமும் இவரைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. பிற இசையமைப்பாளர்களுடன் இணைந்தும் இசையமைத்து இருக்கிறார். அந்தக் காலத்தில் பல இசைக் கலைஞர்களுக்குச் சாப்பாட்டிற்கே வழி இல்லை. இவருடைய குழுவில் சேர்ந்தவுடன் அவர்களுக்குச் சாப்பிட நேரமில்லை. வறுமையில் வாடிய கலைஞர்கள் பலர் இவர் மூலம் வளம் பெற்றனர்.  இவை எல்லாவற்றிற்கும் மேலாகத் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலான நீராருங் கடலுடுத்தபாடலுக்கு இசையமைத்துத் தமிழர்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் நீக்கமற நிறைந்து இருப்பவர்  எம்.எசு.விசுவநாதன்.

இடி.கே.இராமமூர்த்தி மெல்லிசை வேந்தர் மட்டுமல்லர், வில்லிசை வேந்தரும் கூட! இசையறிவு மிக்க தலைமுறையில் பிறந்தவர். மிகப் பெரிய வயலின் கலைஞர்! ‘பணம் படைத்தவன் என்னும் திரைப்படத்தில் வரும் கண் போன போக்கிலே கால் போகலாமா, கால் போன போக்கிலே மனம் போகலாமாஎனும் பாடலில் வரும் சோக இசை  இடி.கே.இராமமூர்த்தியின் வயலின் இசையாகும்.   சி.ஆர்.சுப்பராமன் என்ற மிகப் பெரிய இசையமைப்பாளரின் குழுவில் வயலின் இசைத்துக் கொண்டிருந்தவர்  இடி.கே.இராமமூர்த்தி. அப்போது அதே குழுவில் ஆர்மோனியம் வாசித்துக் கொண்டிருந்தவர்  எம்.எசு.விசுவநாதன். எதிர்பாராத சூழ்நிலையில்  சுப்பராமன்  இயற்கை எய்திய போது, அவர் விட்டுச் சென்ற திரைப்படங்களுக்கு  விசுவநாதன் - இராமமூர்த்தி இருவரும் இணைந்து இசையமைத்து, அதன் தொடர்ச்சியாகப் பல திரைப்படங்களுக்கு இசையமைத்து நம்மையெல்லாம் இசை என்னும் இன்பக் கடலில் மூழ்கடித்தவர்கள். இப்படிப்பட்ட இசைப்பேரறிஞர்களை நமக்களித்த சுப்பராமனுக்கும் நாம் இந்தத் தறுவாயில் நன்றி செலுத்த வேண்டும்! இன்னிசையாய்ச், செந்தமிழாய் இருப்பவன் இறைவன். அந்தச் செந்தமிழ்ப் பாடல்கள் பல நம் உள்ளத்திற்கும், நினைவிற்கும் என்றும் இனிமை தரக் கூடியவை. அன்று முதல் இன்று வரை  இராமநாதன், மகாதேவன்ஆதி நாராயண இராவுசலபதி இராவுதட்சிணாமூர்த்திசுப்பைய்யா நாயுடுஇளையராசா போன்ற எத்தனையோ இசையமைப்பாளர்கள் எவ்வளவோ இனிமையான பல பாடல்களை நமக்குத் தந்துள்ளார்கள்.  பல்வேறு புதுமைகளைப் புகுத்தியுள்ளார்கள்.  நம் நெஞ்சை விட்டு என்றும் நீங்காத அளவுக்கு இசையமைப்பில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்  விசுவநாதன் - இராமமூர்த்தி இணை.  இவர்கள் இசையமைத்த பல பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து மக்களைக் களிப்புக்கு உள்ளாக்கின. அம்மிங், கோரசு, பறவை இனங்களின் ஒலிகள், ஊதல் போன்றவற்றை மிக நுட்பமாக, இசைக் கருவிகளைப் போலப் பயன்படுத்தி மக்களின் உள்ளத்தை உருக வைத்து, நினைவில் நிலைத்து இறுகி நிற்கும் பாடல்களைத் தந்தவர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி இணை. நினைவில் இருந்து நீங்காத அளவுக்கு மெல்லிசை வேந்தர்களின் பாடல்கள் அனைத்தும் புகழ் அடைந்ததற்குக் கதையின் தன்மை, நடிகனார் - நடிகையர்களின் திறமையான நடிப்பு, இயக்குநர், ஒளிப்பதிவாளரின் திறமை, முதன்மையாகக் கண்ணதாசன், வாலி போன்ற மிகப் பெரிய பாடலாசிரியர்கள் பாடல்களை எழுதிய விதம், மிகத் திறமை வாய்ந்த, ஈடு இணையற்ற பின்னணிப் பாடகர்களான பி.சுசீலா, இடி.எம்.சௌந்தரராசன், பி.பி.சீனிவாசு, எசு.சானகி, எல்.ஆர்.ஈசுவரி, எம்.எசு.இராசேசுவரி, பி.இலீலா, சிக்கி, சீர்காழி கோவிந்தராசன், சமுனா இராணி, ஏ.எம்.இராசா, பாலசரசுவதி, இராகவன், சரோசினி, வாணி செயராம் ஆகியோர் பாடல்களைப் பாடிய விதம் போன்றவை காரணங்களாக இருந்தாலும், இந்தப் பாடல்களெல்லாம் இன்றும் என்றும் தமிழக மக்களின் உள்ளத்தில் நீக்கமற நிறைந்து இருக்கும் பாடல்களாகத் திகழ்வதற்குப், புகழ் பெற்றிருப்பதற்குக் காரணம் விசுவநாதன் - இராமமூர்த்தி ஆகியோரின் இன்னிசையில் அமைந்ததுதான் என்பதுதான் உண்மை. எனக்கு  நினைவு தெரிந்த நாளிலிருந்து, நான் வளரும்போது எவ்வளவோ விசயங்களைப் பார்த்து, சுவைத்து, நுகர்ந்து (அனுபவித்து) இருக்கிறேன்.  காற்று, நிலவு, நிலம், கதிரவன், மரம், செடி, கொடி, மலர்கள் இவையெல்லாம் வாழ்க்கையுடன் எப்படி இரண்டறக் கலந்து இருக்கின்றனவோ, ஒரு குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் எல்லோரும் எப்படி இரண்டறக் கலந்து இருக்கிறார்களோ, அதே போல் விசுவநாதன் - இராமமூர்த்தி இசையும் என்னுடன் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று! அந்த இசையுடனேயே நான் வளர்ந்திருக்கிறேன்.  விசுவநாதன் - இராமமூர்த்தி இணையின் இசைக்கு எல்லையே கிடையாது. அனைத்து வயதினரையும் ஈர்க்க வல்லது! 1950களிலும், 1960களிலும் இவர்கள் மெட்டமைத்த பாடல்கள் இன்றும் பசுமையாக அனைவரின் நெஞ்சங்களிலும் இடம் பெற்றுள்ளன. தொலைக்காட்சிகளில் இன்றைக்கும் இசைப் போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றில் 10 வயது, 12 வயது சிறுவர், சிறுமியர் கலந்து கொள்கின்றனர். அந்தப் போட்டிகளில் இந்தக் குழந்தைகள் பாடுவதற்குத் தேர்ந்தெடுக்கும் பாடல்களெல்லாம் இந்த மெல்லிசை வேந்தர்கள் இசையமைத்த பாடல்கள்தாம். எனது தலைமுறை, அதற்கு முந்தைய தலைமுறையில் உள்ளவர்களெல்லாம் இவர்கள் இசையமைத்த படங்களை பார்த்திருப்பார்கள். அவற்றில் உள்ள பாடல்களைக் கேட்டிருப்பார்கள்.  அவ்வாறு படங்களைப் பார்க்காமலேயே இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கும் விசுவநாதன் - இராமமூர்த்தியின் இசைதான் பிடித்திருக்கிறது! அந்த மெட்டுதான் பிடித்திருக்கிறது!  அதனால்தான் இவர்கள் இசையமைத்த பாடல்களைத் தெர்ந்தெடுத்துப் போட்டிகளிலே பாடுகிறார்கள். நான் குழந்தையாக இருந்தபோதே புகழ் பெற்று விளங்கியவர்கள் இந்த மெல்லிசை வேந்தர்கள். அப்போது தொலைக்காட்சி இல்லை; காணொலி இல்லை; குறுந்தகடு (சி.டி), குறுவட்டு (டி.வி.டி), கணினி, ஒலிநாடா ஆகிய எதுவும் கிடையாது.  வானொலியும், கிராமபோனும்தான் இருந்தன. இந்தக் காலத்துக் குழந்தைகளுக்குக் கிராமபோன் என்றால் என்ன என்றே தெரியாது. இசைத்தட்டு என்றால் என்ன என்றே தெரியாது.  இப்படிப்பட்ட புதுமையான தகவல்தொடர்புச் சாதனங்கள் எதுவும் இல்லாதபோதே புகழின் உச்சியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள் என்றால் அது மிகவும் வியக்கத்தக்கது! இவர்களுடைய பாடல்கள் வெகுமக்கள் விருப்பத்துக்கு ஏற்ற வகையிலும், கருநாடக இசையை அடிப்படையாகக் கொண்டும் இருக்கும். அதனால்தான் இவர்களுடைய பாடல்களெல்லாம் சாகா வரம் பெற்றிருக்கின்றன! திரையரங்கில் ஒருமுறை படத்தைப் பார்த்தாலே அந்தப் பாடல்கள் எல்லாம் நினைவில் பதிந்துவிடும். என் நினைவில், குழந்தையாக இருந்தபோது, அப்படித்தான் பதிந்துவிட்டன. என் உயிர் மூச்சு உள்ளவரை அந்தப் பாடல்கள் என் நினைவை விட்டு அகல மாட்டா. ‘சொன்னது நீதானா சொல்! சொல்! சொல் என் உயிரே! எனும் பாடலைக் கேட்கும்போதெல்லாம் புகழ்பெற்ற கருநாடக இசையறிஞை இடி.கே.பட்டம்மாள்  கண்ணீர் விட்டு அழுததாக நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நானே பார்த்த இரசித்த ஒரு தொலைக்காட்சிச் செவ்வியில், வீணை காயத்திரியிடம், “உங்களுக்குத் திரைப்பாடல் பிடிக்குமா? என்ற கேள்வி கேட்கப்பட்டபோதுஉடனே வீணையை எடுத்து “நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா எனும் பாடலை இசைத்துக் காட்டினார்கள். அதாவது, திரைப்படப் பாடல்களில் நாட்டம் இல்லாத கருநாடக இசை அறிஞர்களையும் தன் வயப்படுத்தியவர்கள் மெல்லிசை வேந்தர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி. இசையால் நம்மைப் புது உலகுக்குக் கொண்டு செல்வது போன்ற உணர்வைத் தந்தவர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி இணை. மெல்லிசைக் காலக்கட்டத்தை உருவாக்கி இனிமையையும், நவீனத்தையும் காலத்திற்கு ஏற்பப் புதுமையையும் படைத்தவர்கள். சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், இசையை இனிய திசைக்குத் திருப்பி விட்டவர்கள்!  உலகெங்கும் உள்ள நல்ல இசையைத் தமிழ்த் திரையுலகில் புகுத்திய பெருமை இவர்களுக்கு உண்டு. இசைக் கருவிகளுக்குக் கூடுதல் முன்னுரிமை அளித்து, முதன் முதலில் நிறைய அளவில் இசைக் கருவிகளை இசையமைப்பில் பயன்படுத்திய பெருமை இந்த மெல்லிசை வேந்தர்களையே சாரும். கேட்போரை ஈர்த்து இழுக்கும் வகையில் இனிமையான சுருதியினைக் கொண்ட பல பாடல்களைத் தந்தவர்கள். உலக இசையைத் தமிழ் இசையில் புகுத்திய பெருமையும் இவர்களுக்கு உண்டு. தமிழ்த் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிப் படங்களுக்கும் இசையமைத்துப் புகழ் பெற்று விளங்கினார்கள்! இசையைப் பற்றி நுணுக்கமாகத் தெரியாதவர்களையும் இசைய வைத்த பெருமை மெல்லிசை வேந்தர்களுக்கு உண்டு. “இசையைப்  பற்றி நுணுக்கமாக எதுவும் தெரியாமல் இசையை ஒருவர் இரசிக்க முடியுமா? இந்தக் கேள்விக்குத் திருவாவடுதுறை இராசரத்தினம் பிள்ளை, பல ஆண்டுகளுக்கு முன் வானொலிச் செவ்வி மூலம் விடை சொல்லியிருக்கிறார். “இசை இரசிகர்களை இரு வகையினராகப் பிரிக்கலாம். இசைக் கூறுகளையும், நுணுக்கங்களையும் தெரிந்து கொண்டு, குற்றம் குறைகள் எங்கே வரும் என எதிர்பார்த்து அதை விமரிசிக்கும் இரசிகர்கள் ஒரு விதம். இவர்களெல்லாம் இலட்சண ஞானத்தர்கள். இன்னொரு விதம், இசையைப் பற்றி எதுவும் தெரியாமல் இசையை இரசிக்கும் இரசிகர்கள். இவர்களெல்லாம் இலட்சிய ஞானத்தர்கள். இப்படிப்பட்ட இரசிகர்கள்தான் நிறைய. இவர்கள் எளிதில் புரிந்து கொண்டு மகிழும் வகையில் இசையமைக்க வேண்டும் என்கிறார் இராசரத்தினம் பிள்ளை. திருச்சி மலைக்கோட்டைக் கோயில் குடமுழுக்கு. மதுரை நாதசுவரக் கலைஞர் பொன்னுசாமிப் பிள்ளை இசைத்துக் கொண்டிருந்தார். நாட்டை, மல்லாரி எல்லாம் இசைத்து முடித்தவுடன், இராக ஆலாபனையைத் தொடங்கினார். ஒரு முதன்மையான கட்டத்தில், “பலே!என்று ஒரு குரல் கேட்டது.  அந்தப் பாராட்டு எங்கிருந்து வந்தது தெரியுமா? எரிவளி விளக்கு (கியாசு விளக்கு) தூக்கிக் கொண்டிருந்த ஒருவர்தான் அப்படி சபாசு போட்டார்! பல இடங்களில் இது போன்ற நாதசுவர இசையைக் கேட்டுக் கேட்டு இசையறிவு பெற்ற இலட்சிய ஞானத்தர் அந்த இரசிகர். இதைக் கேட்ட அந்த நாதசுவரக் கலைஞருக்குப் பெருமகிழ்ச்சி! இதை நினைக்க, நினைக்க நமக்கு மகிழ்ச்சி பொங்குகிறது என்கிறார் இராசரத்தினம் பிள்ளை.  இலட்சண ஞானத்தராக இருந்தாலும் சரி, இலட்சிய ஞானத்தராக இருந்தாலும் சரிஇசையிலிருந்து இரசிகர்கள் எதிர்பார்ப்பது இனிமையையும், இன்பத்தையும்தாம். தங்களது வெகுமக்கள் விருப்பத்துக்குரிய இசையின் மூலம் இலட்சிய ஞானத்தர்களை, அதாவது படிக்காதவர்களை இரசிக்க வைத்ததோடு மட்டுமல்லாமல், இலட்சண ஞானத்தர்களான இசை அறிஞர்களும் பாராட்டும்படிச் சாதனை படைத்தவர்கள் விசுவநாதன் - இராமமூர்த்தி இணை. இந்தியாவை எத்தனையோ அரசத் தலைமுறைகள் ஆண்டிருந்தாலும், இந்திய வரலாற்றில் குப்தர்கள் காலத்தைத்தான் ‘பொற்காலம் எனச் சொல்வார்கள். அது போல, விசுவநாதன் - இராமமூர்த்தி இசையின் உச்சியிலே கொடிகட்டிப் பறந்த காலம்தான் இசைக்கு, திரைப்பட இசைக்கு ஒரு பொற்காலம் எனச் சொல்லலாம். விசுவநாதன் – இராமமூர்த்தி, கே.வி.மகாதேவன் ஆகியோர் இசையமைத்த காலக்கட்டத்தில் வெளிவந்த படங்கள், பாடல்கள் ஆகியவற்றின் காரணமாகவே அந்தக் காலம் தென்னிந்தியத் திரைப்பட இசையின் பொற்காலமாகத் திகழ்ந்தது!  இப்படிப்பட்ட புகழுக்கும், பெருமைக்கும் உரிய  எம்.எசு.விசுவநாதன் - இடி.கே.இராமமூர்த்தி ஆகியோர் பல விருதுகளைப் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு நாட்டு விருது, தாமரை விருதுகள் வழங்கப்படாதது உண்மையிலேயே வருத்தத்தை அளிக்கிறது. சென்ற ஆண்டிற்கான தாமரை விருதிற்கு இவர்களின் பெயர்களை நடுவண் அரசுக்கு நான் பரிந்துரை செய்தேன். இருப்பினும், மாநில அரசுக்கு எதிரான கருத்தினை உடைய நடுவண் அரசு அதற்குச் செவி சாய்க்கவில்லை. “குடியரசுத்தலைவர் விருது வேண்டாம், குடிமக்கள் விருது போதும் என்று இங்கிதம் தெரிந்த இசைக் கலைஞர் எம்.எசு.வி  கூறினாலும், நான் சொன்னால் இந்த விருதினை அளிக்கும் காலம் கனியும். அப்போது இவர்களுக்குத் தாமரை விருதுகள் கிடைக்கச் செய்வேன் என்பதை மட்டும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

1963ஆம்  ஆண்டு விசுவநாதன் - இராமமூர்த்திக்காக இராசா அண்ணாமலை மன்றத்தில் ஒரு விழா எடுத்தார்கள். அந்த விழாவில்தான், இவர்களுக்கு ‘மெல்லிசை மன்னர்கள் எனும் பட்டம் வழங்கப்பட்டது. அந்த விழாவிற்கு என் தாயார் என்னை அழைத்துச் சென்றார்கள். இவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவை நாமும் நடத்த வேண்டும் என எனக்கு நீண்ட காலமாக விருப்பம். அந்த விருப்பம் இன்றைக்குச் செயா தொலைகாட்சி மூலம் நிறைவேறி இருக்கிறது. இசையின் மூலம் இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்ட  விசுவநாதன்  - இராமமூர்த்தியின் இனிய இசைப் பயணம் வெற்றிப் பாதையில் இனிதே தொடர வேண்டும் என வாழ்த்தி, இசையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து நல்ல இசையமைப்பாளர்களை, பாடகர்களை உருவாக்கும் பணியில் நீங்கள் ஈடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு, நடுவண் அரசின் விருதுகள் கண்டிப்பாக உங்களை நாடி வரும் என்பதைத் தெரிவித்துக் கொண்டு, நீங்கள் இருவரும் நீண்ட காலம் நலத்துடன் எல்லா வளமும், நலமும் பெற்றுப் பல்லாண்டு வாழ வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்! - என்று தன் வாழ்த்துரையை முடித்தார் முதல்வர் செயலலிதா.