natpu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
natpu லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 நவம்பர், 2012

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு

பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு

பதிவு செய்த நாள் : 16/11/2012

நட்பு இணைய இதழ்
தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள் தமிழ் வளர்ச்சியையே சிந்தித்துத் தமிழ்க்காப்பையே செயல்படுத்தித் தமிழ்க்காக வாழ்ந்த தலைமகனாவார் என அறிஞர்கள் பலர் குறிப்பிட்டுள்ளனர். தமிழ்த்தாய் என்றே அவரைப் பலரும் விளக்கி உள்ள பொழுது மேனாள் துணைவேந்தர் முனைவர் கதிர் மகாதேவன், தமிழ்த்தாய் படத்தைக் காட்டச் சொன்னால் பேராசிரியர் இலக்குவனார் படத்தைக் காட்டுவேன் என்றார். இவ்வாறு அறிஞர்கள் போற்றுவதற்குக் காரணம், இயல்பாகப் பேசும் பொழுதும் பாடம் நடத்தும் பொழுதும்,  சொற்பொழிவு ஆற்றும்பொழுதும், இலக்கிய விளக்கங்கள், கட்டுரைகள்,  இதழுரைகள், நூல்கள் எழுதும் பொழுதும் தமிழ்க்காப்பு பற்றியும் தமிழ் மீட்பு பற்றியும் தமிழர் எழுச்சி பற்றியும் பேராசிரியர் உணர்த்திடத் தவறுவதில்லை. எடுத்துக்காட்டிற்காக  சில இலக்கியக் குறிப்புகளை மட்டும் நாம் பார்ப்போம்.
பேராசிரியர் இலக்குவனார் அவர்கள், தொல்காப்பிய விளக்கம், சங்க இலக்கியப் பாடல்கள் விளக்கம், திருக்குறள் விளக்கம் எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்து எளிமையாக விளக்கி உள்ளார். இவற்றுள் சங்க இலக்கியத்தில் அகநானூற்றுப்பாடல் பற்றிய அவரது விளக்கத்தில் சிலவற்றை மட்டும் காண்போம்.
பேராசிரியர் இலக்குவனாரின் அரும் பெரும் முயற்சிகளால் சங்க இலக்கியங்கள், வாழும் மக்கள் இலக்கியங்களாக நிலைத்துள்ளன. சங்கத்தமிழை வங்கக்கடலில் தூக்கி எறிவோம் எனத் தமிழ்உணர்வும் தமிழக வரலாறும் அறியாத் தமிழர்கள் சிலர் முனைந்த பொழுது  வீறு கொண்டு எழுந்து சங்க இலக்கியங்களைப் பரப்புவதன் மூலமே இக்கெடுநினைவை அழிக்க முடியும் என உணர்ந்து அவ்வாறு பரப்பிய இலக்கியச் செம்மல் அல்லவா பேராசிரியர் இலக்குவனார். அவ்வாறு அவர்  சங்க இலக்கியத்தின் கேடயமாகப் பயன்படுத்தியதுதான் அவர் நடத்திய சங்க இலக்கியம் (1945-1947)என்னும் வார  இதழ். இவ்விதழில் தொடர்ந்து சங்கப் பாடல்கள்பற்றி எழுதி உள்ளார். புலவர் மாமூலனார் பாடல்கள் மூலம் சங்கத்தமிழின் தெவிட்டாச் சுவையையும் பழந்தமிழ்ச் சிறப்பையும் உணர்த்தியதுடன் தமிழ் எழுச்சி உணர்வையும் பேராசிரியர் இலக்குவனார் கிளர்ந்தெழச் செய்துள்ளார். இப்பாடல்கள் மூலம் நாம் இழந்துள்ள தமிழக நிலப்பரப்புகளைப்பற்றி அவர் சுட்டிக்காட்டும் சிலவற்றைப் பார்ப்போம். அகநானூற்றுப் பாடல் 61 இல், விழுச்சீர்  வேங்கடம் பெறினும்  என்னும் அடியை விளக்குகையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
வேங்கடம்: தொல்காப்பியர் காலத்தில் தமிழ்நாட்டின் வடக்கு எல்லையாக இருந்த மலை. மாமூலனார் காலத்தும் இதுதான் வடக்கு எல்லையாக இருந்தது. இது இப்போது திருப்பதி என்ற பெயரால் அழைக்கப்படுகின்றது. தெலுங்கர் நாடாகக் கருதப்படுகின்றது. ஆயினும் தமிழர் தங்கட்குரியது என்பதை நிலைநாட்டித் தமது வடவெல்லை மலையாக மீண்டும் கொள்ளுதல் வேண்டும். அரசியல் அமைப்பு மன்றத்தினர் மொழி வகையாக நாடுகளை வகுக்கும்போது தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்வார்களாக.
மொழி வழியாக நாடுகள் வகுக்கப்படும் எனப் பேராசிரியர் தொலை நோக்கு உணர்வில் குறிப்பிட்டுள்ளார். அவர் விழைந்தவாறான மொழிவழித் தேசிய நாடுகளின் கூட்டமைப்பு இன்னும் அமையவில்லை. என்றாலும் இந்தியநாடு என்னும் அமைப்பில் மொழி வழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பிரிக்கும் பொழுது வேங்கடம் பறிபோகும் என்பதை உணர்ந்துதான் பேராசிரியர்  தமிழர் அயர்ந்துவிடாது ஆவன செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார். மொழி வழி மாநிலங்கள்அமைக்கும்பொழுது ஆண்ட தலைவர்கள் வரலாற்று உணர்வு இல்லாதர்களாகவும் தமிழ்த் தேசிய உணர்வு அற்றவர்களாகவும் இருந்தமையால் நாம் வேங்கடமாகிய திருப்பதியை இழந்தோம். என்றபோதும் தமிழக  அகஎல்லையாகத் திருப்பதி அமைய நாம் முயன்று வெற்றி காண வேண்டும்.
அகநானூற்றுப் பாடல் 91 இல், குடநாடு பெறினும் தவிரலர் என்னும் பாடலடியை விளக்கும் பொழுது மொழிக்கலப்பின் தீமையைப் பின்வருமாறு உணர்த்துகிறார்.
குடநாடு: இன்று ‘மலையாளம்’ என்று வழங்கப்படும் இடம் தான் அன்று தமிழ் வழங்கும் குடநாடாக இருந்தது. இன்று தமிழரின்றும் வேறுபட்டதாகவும், தமிழர்க்கும் தமக்கும் தொடர்பு இல்லையென்றும் நினைக்கும் மக்கள் மிகுந்த நாடாக விளங்குகின்றது. இதுவும் காலத்தின் கோலம்! இவ்வேறுபாடு எதனால் ஏற்பட்டது எனின், பாண்டியநாட்டுத் தமிழரினின்றும் சேரநாட்டுத் தமிழரை மலைகளும் காடுகளும் இடைநின்று பிரித்தன. சேரநாட்டை ஆண்ட பிற்கால அரசர்கள் தமிழையும் தமிழ்ப் புலவரையும் போற்றாது புறக்கணித்தனர். ஆரியம்  அங்குச் செல்வாக்குப் பெற்றது. ஆரியமொழியை ஒட்டி இலக்கணம் வகுத்தனர். ஆரிய மொழிச் சொற்களைத் தம்மொழியிற் கலந்து வழங்கினர். ஆகவே தமிழ்மொழி வேற்று மொழியாக உருவடைந்து ‘மலையாளம்’ என்ற புதுப்பெயரையும் பெற்றது. அதனால்தான் தமிழில் வேற்று மொழிச் சொற்களைக் கலந்து எழுதுதலும் பேசுதலும் கூடாது என்கின்றோம்.
இன்று ஊடகங்கள் வாயிலாக மொழிக்கலப்பு மூலம் தமிழ்க்கொலை விரைவாக நடைபெற்றுவருகிறது. மக்களும் மொழிக்கலப்பின் தீமையை உணராமல் பிற மொழிச் சொற்களை மிகுதியாகக் கலந்து பேசியும் எழுதியும் வருகின்றனர்.  தமிழ்  மலைநிலம் மலையாளநாடு என்னும் வேற்ற நிலமாக மாறிய வரலாற்றை உணர்ந்தாவது நல்ல தமிழே பேசுவார்களாக! நல்ல தமிழிலேயே எழுதுவார்களாக!
தமிழ்நாட்டின் நிலப்பகுதிகள் மலையாள நாடு, தெலுங்கு நாடு எனப் பிறவாகப் பறிபோனமைபோல் கன்னடநாடாகப்பறிபோனதையும்  அகநானூற்றுப் பாடல் 115 இல் வரும் எருமை குடநாடு என்பது குறித்த பின்வரும் விளக்கத்தின் மூலம் உணர்த்துகிறார்.

எருமை: ‘எருமை குடநாடு’ என்பதனால், குடநாட்டை ஆண்ட ஒருவன் எருமை என்ற பெயரைக் கொண்டுள்ளதாக அறிகின்றோம். இன்று யாரேனும் ஒருவரை இகழ்ச்சியாகக் கூற விரும்பின் ‘எருமை’ என்று கூறுகின்றோம். ஆதலால்  ஒருவர்க்கு ‘எருமை’ என்ற பெயர் இடப்பட்டிருந்தது என்றால் வியப்பாகத்தான் இருக்கும். ஆனால், வேற்றுமொழியில் இத்தகைய பெயர்களை இடுகின்றோம். ‘காமதேனு’ (பசு) ‘கற்பகம்’ (மரம்) ‘மாணிக்கம்’ (கல்) ‘கமலம்’ (தாமரை) என்ற பெயர்களை இன்றும் இடுகின்றாக்ள். தமிழில் கூறினால்தான் அதை இழிவாகக் கருதுகின்றார்கள். இன்னும் ஆங்கிலேயர்களிடையே  Stone,Thorn,Wood முதலிய பெயர்கள் வழங்கக் காண்கின்றோம். ஆகவே அன்று அப் பழங்காலத்தில் இட்ட ‘எருமை’ என்ற பெயரைக் கண்டுவியப்படைய ஒன்றுமில்லை, இவ் எருமை என்பவன், இன்று மைசூர் என வழங்கும் நாட்டையும் ஆண்டிருத்தல் வேண்டும். மைசூரும் குடநாட்டின் ஒரு பகுதியான தமிழ்நாடாகத்தான் அன்று இருந்தது. அதற்கு எருமையூர் (எருமை என்பவன் ஆண்ட ஊர்) என்ற பெயர் வழங்கிற்று. அப்பெயரே பின்னர் ஆரியத்தில் ‘மகிசாபுரி’ என மொழி பெயர்க்கப்பட்டது. அதன் பின்னர் மகிசாசுரன் ஆண்டதாகப் புராணமும் எழுதப்பட்டது. ‘மயிலாடு துறையை’ ‘மாயூரம்’ எனவும் ‘பழமலையை’ விருத்தாசலம் எனவும் மறைக்காட்டை ‘வேதராணியம்’ எனவும், மொழிபெயர்த்தது போலவே எருமையூரையும் மகிசாபுரியாக்கினார்கள்.
பெயரில் என்ன இருக்கிறது என்பவர்கள் பெயர்கள் பிறமொழி வயமாவதால் உரிமை நிலமும் உறவற்றுப் போவதை உணர வேண்டும் என்பதற்காகவே பாடல் விளக்கங்களிலும் தமிழ் மீட்பு உணர்வைப் பதிக்கிறார் பேராசிரியர் இலக்குவனார்.
முப்புற எல்லைகளையும் முற்றிலும் இழந்துள்ள நாம், இருக்கின்ற நிலத்தையவாது தமிழ்நிலமாக உரிமையுடன் ஆள மறைக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை மீண்டும் மலரச் செய்ய வேண்டும் என்பதற்குப்பேராசிரியரின் பின்வரும் விளக்கம் உந்துதலாக அமையும். அகநானூற்றுப் பாடல் 197இல் வரும்  முதுகுன்றம் என்பதற்கு அவர் தரும் விளக்கம் வருமாறு :-
முதுகுன்றம்: இது இப்பொழுது விருத்தாசலம் என்று வழங்கும் இடத்தின் பெயர்போலும். முந்தைய வெளியிட்டில் குறிப்பிட்டதுபோல் வடமொழியாளர் ஊர்களின் தமிழ்ப் பெயர்களை வடமொழிப் பெயர்களாக மொழிபெயர்த்து வழங்கினர். முதுகுன்றத்தை ‘விருத்தாசலம்’ என்று மாற்றி அப்பெயரை நிலைக்கச் செய்துவிட்டனர் தமிழர்கள். இனித் தமிழ்ப்பெயர்களையும் வழங்குமாறு செய்து, தமிழ்ப்பெயரால் அழைக்க வேண்டும். இவ்விதம் கூறுவது வடமொழி மீது கொண்ட வெறுப்பினால் அன்று. தமிழ்நாட்டில் ஊர்ப் பெயர்கள் தமிழில் இல்லாது வேற்றுமொழியில் இருப்பின், தமிழர் தம் ஊரைப்பற்றியோ, தம் மொழியைப் பற்றியோ கவலைப்படாதவர்கள் என்ற பழிதான் சாரும். ‘திருநெல்வேலி’ யை ஒரு ஆங்கிலேயன் Beautiful paddy fence, என்றும் Cumberland என்ற ஆங்கில ஊரை நாம் ‘கம்பர் நாடு’ என்றும் அழைத்தால் எப்படியோ அப்படித்தான் முதுகுன்றத்தை விருத்தாசலம் என்பதும். ஆகவே இம்மாதிரி மொழிபெயர்க்கப்பட்ட பெயர்களைத் தமிழிலேயே வழங்குவதற்கு ஆவனசெய்வார்களாக.
 கேரளா முதலான பிற நாட்டவர் அவரவர் மொழித்திருத்திற்கேற்பவே ஊர்ப்பெயர்களை ஆங்கிலம்  முலான பிற மொழிகளில் குறிப்பிடுகின்றனர். பேராசிரியரின் விழைவிற்கேற்ப தமிழ்ப்பெயர் மீளுரிமை பெறும் வகையில் சில ஊர்ப்பெயர்கள் மாற்றப்பட்டாலும் முழுமையான அளவில் நடைபெறவில்லை. இடையிலே வந்த சிரீ நீக்கப்பட்டு பல்பொருள் சிறப்பு கொண்ட திரு மீண்டும் அணி செய்ய வேண்டும் என ஊர்களில் அரசு மாற்றம் கொண்டு வந்தாலும் இன்றும் திருவரங்கம் இல்லை! சிரீரங்கம்தான் கோலோச்சுகிறது! திரு விழந்த ஊர்கள் அனைத்தும் பெயரில் திருவைப் பெறுவதன் மூலமே திருவளர் ஊர்களாக மலரும் என்பதை உணர்ந்து நாம் தமிழ்ப்  பெயர் மீட்பினை மேற்கொள்ள வேண்டும்.
 
தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும்  பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார்.
வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப் பற்றி விரிவாக அறிவரேயன்றி, நம் நாட்டுப் போரைப்பற்றி நன்கு அறியார். அது அவர்கள் குற்றமும் அன்று. தமிழ் நாட்டு வரலாறு நன்கு அறிந்து கொள்வதற்குரிய முறையில் கல்வித் திட்டம் அமைந்திலது. வருங்காலக் கல்வித்திட்டமாவது தமிழர்கள் தம் முன்னோர்களை நன்கு அறிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்படல் வேண்டும்.

இவ்வாறு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம்  தமிழக  நில வரலாற்று அறிவையும்  தமிழ்ப்பெயர் வரலாற்று அறிவையும் படிப்பவர்களுக்கு ஊட்டுவதையே பேராசிரியர் தம் கடமையாகக் கொண்டு வாழ்ந்துள்ளார்.
சொற்பொருள் விளக்கங்களின் பொழுது மட்டும் அல்லாமல் தொடர் விளக்கங்களிலும் தமிழ் உணர்வை ஊட்டப்பேராசிரியர் தவறியதில்லை. சங்க இலக்கியப் பாடல்களை நாடக வடிவில் விளக்கும் பேராசிரியர் தலைவியும் தோழியும்  உரையாடும் பொழுது பிறமொழி கலந்து பேசுவதால் ஏற்படும் தீமையை விளக்குகிறார்; இதன் மூலம் கலப்பின்றிப் பேசவும் எழுதவும் வேண்டும் என  வலியுறுத்துகிறார். அகநானூற்றறுப் பாடல் 211 இல் வரும் மொழிபெயர் தேஎத்தர் என்னும் தொடரைப் பின்வரும்வகையில் விளக்குகிறார். (தலைவி, தோழி ஆகியோரின் உரையாடலில் இடைப்பகுதி)
தலைவி : (தலைவர்) எங்குப் போவதாகக் கூறினார்.
தோழி : தமிழ்நாட்டிற்கு வடக்கேயுள்ள நாடுகட்குச் செல்வதாகக் கூறினார்.
தலைவி : இப்பொழுது தமிழ்நாட்டின் வட எல்லை எது?
தோழி : ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் வட எல்லை இமயமலையாக இருந்தது. இப்பொழுது திருவேங்கடமலைதான் வட எல்லை.
தலைவி : திருவேங்கட மலைக்கு வடக்கேயுள்ள நாடு?
தோழி : அம்மலைக்கு வடக்கேயுள்ள நாடு இப்பொழுது வேறு மொழி வழங்கும் நாடாகக் கருதப்படுகிறது.
தலைவி : அதன் காரணம் என்ன?
தோழி : என்ன? அதற்கு வடக்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் தெற்கேயுள்ள தமிழ் மக்களுக்கும் நெருங்கிய தொடர்பு இல்லாமல் போய்விட்டது. தெற்கேயாண்ட தமிழ் அரசர்கள் வடக்கேயுள்ள தமிழ் மக்கட்கு நல்ல செந்தமிழ்க்கல்வியை அளிக்கத் தவறிவிட்டனர். வடபகுதிகளில் தமிழ்ப்புலவர்கள் தோன்றித் தமிழை வளர்க்கப் பாடுபடவில்லை. இச்சமயத்தில் ஆரியமொழி பேசும் இனத்தார் அப்பகுதிகளில் குடியேறினர். அவர்கள் சென்ற இடமெல்லாம் தம் மொழியையும் வழக்க ஒழுக்கங்களையும் நிலை நிறுத்துவதில் கண்ணும் கருத்துமாயிருந்து தொண்டாற்றினர். அப் பகுதியிலிருந்த  தமிழர்கள், தம் பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டதோடு, தம் மொழியையும் சிதைத்து வழங்கினர். பின்னர் ஆரிய மொழியைப்படித்து அதன் இலக்கணத்தை ஏற்றுக் கொண்டனர். ஆகவே இன்று, அவர்கள் பேசும்தமிழ் நம் தமிழினின்றும் வேறுபடுகின்றது.
தலைவி : பிற மொழிச் சொற்களைக் கலந்து பிற மொழி இலக்கணத்தை ஏற்றுக் கொண்டதனால் அல்லவா இந்நிலைமை ஏற்பட்டுவிட்டது?
தோழி : ஆம் அம்ம! அப்பகுதியில் வழங்கும் மொழி நம் மொழியினின்றும் வேறுபட்டதாகக் காணப்படுகின்றது.
தலைவி : இப்பொழுதுஎன்ன பெயர் பெற்றுள்ளது?
தோழி : என்ன பெயரி? ஒரு பெயரும் கிடையாது. தமிழ் என்று சொல்வதற்கும் தகுதியுடையதில்லை. வேறு மொழியாயும் இல்லை.
தலைவன்-தலைவி காதல் செய்தியிலும் தமிழ்க்காதலை இணைக்கும் பேராசிரியரின் தமிழ்க்காதலும் வரலாற்றை உணர்த்தியாவது நம்மை விழிப்படையச் செய்ய எண்ணும் அவரின் நுண்மாண் திறனும் போற்றுதற்கு  உரியன அல்லவா?
அகநானூற்றுப் பாடல் 31 இல் வரும் தமிழ்கெழுமூவர் காக்கும் என்னும் அடியை விளக்கித் திராவிடம் என்பதிலிருந்து தமிழ் வந்ததாகத் திரித்துக் கூறுவோருக்குத் தமிழ் என்னும் சொல்லே நம் மொழியின் மூல முதன்மைச் சொல் என்பதைப் பின்வருமாறு  விளக்குகிறார்.
தமிழ் : இத் தமிழ் என்ற சொல் இப்பாடலில் காண்ப்படுகின்றதால், கி.பி.5ஆம் நூற்றாண்டில் தோன்றிய திராவிட என்ற சொல்லே தமிழ் என மருவிற்று என்ற கூற்றுப் பொருந்தாப் பொய் என்று அறியலாம்.

தமிழ் என்பதே தமிழர்கள் தம் மொழிக்கு இட்ட பெயர்  என இனியேனும் பகைமுக ஆராய்ச்சியாளர்கள் உணர்வார்களாக!
இலக்கியச் சுவையில் மயங்கி விடாமல் இலக்கியச் சுவை வாயிலாகவும் தமிழ்மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு தொடர்பான காப்பு உணர்வையும் மீட்பு உணர்வையும் படிப்பவர்களிடையே  விதைத்தமையால்தான்  பேராசிரியர் சி.இலக்குவனார் தமிழ்க்காப்புத் தலைவராகத் தமிழர் உள்ளங்களில் வாழ்கிறார்.
பேராசிரியர் இலக்குவனார் வழி நின்று நாம்
தமிழிலேயே பேசுவோம்! தமிழிலேயே எழுதுவோம்!
தமிழ்வழிக்கல்வியே பெறுவோம்!
தமிழால் உலகாளுவோம்!
- இலக்குவனார் திருவள்ளுவன்
(இந் நவம்பர் 17 ஆம் நாள் தமிழ்ப்போராளி பேராசிரியரின் 103 ஆவது பிறந்த நாள்)

ஞாயிறு, 26 ஆகஸ்ட், 2012

காந்தியடிகளுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியவர்கள் யார்?

காந்தியடிகளுக்கு விடுதலை வேட்கையை ஊட்டியவர்கள் யார்?

தெரியுமா உங்களுக்கு?!

Failed To Verify Referrer


இது ஒரு மீள் பதிவு. புதிதாகப் படிப்பவர்களுக்காக…
இன்றைக்கு விடுதலை எனும் சொல்லைக் கேட்டாலே அனைவருக்கும் நினைவில் வருபவர் மகாத்மா எனும் நாட்டுத் தந்தைதாம். அந்த மகாத்மாவை, மகாத்மாவாக ஆக்கியவர்கள் யார் எனும் உண்மையை வரலாற்றாசிரியர்கள் அனைவரும் திறமையாக மறைத்து விட்டார்கள். ஆனால் மகாத்மா காந்தியடிகள் தனது தன்வரலாற்றில் தனக்கு விடுதலை உணர்வை ஊட்டியவர்கள் யார் என்பதை மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அவர்களைப் பற்றிய ஒரு சிறு அறிமுகத்தை இப்பதிவில் பார்ப்போமா?
அப்துல்லா ஆதம் சவேரி, அப்துல் கரீம் ஆதம் சவேரி இருவரும் உடன்பிறந்தவர்கள். குசராத்தில், போர்ப்பந்தரில் பிறந்த இவர்கள் பல நாடுகளுக்குச் சென்று, பெயர் சொல்லும் அளவுக்குக் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கினார்கள். 1865ஆம் ஆண்டு ‘தாதா அப்துல்லாக் குழுமம்’ என்ற பெயரில் 50 சரக்குக் கப்பல்களையும், 4 பயணியர் கப்பல்களையும் கொண்ட மிகப் பெரிய நிறுவனத்தை இவர்கள் நிறுவினார்கள்.
இவர்களின் அலுவலக வேலைகளை முறையாகச் செய்யச் சட்டம் தெரிந்த ஒருவரை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் அப்துல் கரீம் ஆதம் சவேரி அவர்கள் போர்ப்பந்தரில் தனது வீட்டிற்கு அருகில் இருந்த, சட்டம் படித்து முடித்த இளைஞர் காந்தியடிகள் அவர்களை அலுவலகப் பணிக்காக அமர்த்த விரும்பித், தன் உடன்பிறந்தவர்களுடன் கலந்துரையாடி 105 பௌண்டு ஊதியத்துக்கு வேலைக்கு அமர்த்தினார்கள்.
மதுரை: விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகளுக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட இசுலாமிய உடன்பிறப்புக்களின் கப்பலை மீட்டுத் தமிழக அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்.
காந்தியடிகளின் விடுதலைப் போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்பிரிக்கப் பயணத்திற்கும் உதவியவர்கள் குசராத்து மாநிலப் போர்ப்பந்தரைச் சேர்ந்த வணிக உடன்பிறப்புக்கள் அப்துல்லா ஆதம் சவேரி, அப்துல் கரீம் ஆதம் சவேரி ஆகியோர். இவர்கள் பேரன் அப்துல்கரீம் அப்துல்லா சவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வாழ்ந்து வருகிறார். அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: காந்தியடிகளின் விடுதலைப் போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முதன்மையான பங்கு உண்டு. காந்தியடிகளுக்கு உதவியாக இருந்ததுடன், விடுதலைப் போராட்டத்திலும் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்குச் சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டன. அதில் ஒரு கப்பல் போர்ப்பந்தர்க் கடலில், மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்தக் கப்பலையும், போர்ப்பந்தரிலுள்ள எங்கள் குடும்பச் சொத்துக்களையும் திருட இருவர் முயற்சித்தனர். அவர்கள், காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்று ஆவணங்களைத் திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை நீதிமன்றத்தின் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கக் குசராத்து அரசிடமும், நீதிமன்றத்திலும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்றக் காங்கிரசுத் தலைவர் சோனியா, குசராத்து முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரைக் கோரினேன். அத்துடன் போர்ப்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலையும் மீட்டுத் தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க நடுவண், மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்! இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா சவேரி கூறினார்.
அணுஆற்றலால் இயங்கும் அமெரிக்கப் போர்க் கப்பல் நிமிட்சு சென்னைத் துறைமுகத்துக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதையொட்டி ஆயிரம் சலசலப்புகள். அமெரிக்காவின் கொடிய போர்முகத்தின் அடையாளம்தான் நிமிட்சு கப்பல் எனக் கூறிச் சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்ப்பந்தர்த் துறைமுகத்தில் 1906ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கப்பலை மீட்க ஓசையின்றிப் போராடி வருகிறது, போர்ப்பந்தரைப் பிறப்பிடமாகக் கொண்ட சவேரி என்கிற குடும்பம்.
வரலாற்றுக் கருவூலங்களோடு மூழ்கிக் கிடக்கும் அந்தக் கப்பலை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே எனும் வருத்தம் சவேரி குடும்பத்தாருக்கு உள்ளது.
போர்ப்பந்தர்! “பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே!” எனவெல்லாம் நாம் வசனம் பேச முடியாது. இந்தியாவின் நாட்டுத்தந்தையான காந்தியடிகள் பிறப்பெடுத்த அமைதியான இடம். குசராத்து மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான் சவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.
இந்தச் சவேரி குடும்பத்தாரின் வழிவந்த அப்துல்கரீம் என்பவர், மதுரையில் மொத்தத் துணி விற்பனை செய்து வருகிறார். போர்ப்பந்தரில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குடும்பச் சொத்தான கப்பல் பற்றிப் பல அரிய தகவல்களை அவர் நம்மிடம் கொட்டினார்.
“என் கொள்ளுத் தாத்தா அப்துல்கரீம் ஆசி ஆதம் சவேரி. அவர் அண்ணன் அப்துல்லா ஆசி ஆதம் சவேரி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்டு கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் இடர்பன் நகரில் கப்பல் நிறுவனம் நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்தக் கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு மட்டும் பயணியர் கப்பல்.
1893ஆம் ஆண்டு என் கொள்ளுத்தாத்தா அப்துல்கரீம், அவர் அம்மாவைப் பார்ப்பதற்காகப் போர்ப்பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியடிகளைச் சந்தித்தார். காந்தியடிகள் அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது இளைஞர். அவர் பண்பு என் கொள்ளுத்தாத்தாவைக் கவர்ந்ததால் இடர்பனில் இருந்த அவரது கப்பல் நிறுவனத்தின் சட்டக்குழுவில் காந்தியடிகளைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்தியடிகளுக்கு ஊதியம் அப்போது நூற்று ஐந்து பவுன்.
அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தியடிகள் கப்பலில் புறப்பட்டு இடர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஆசி, காந்தியடிகளைத் துறைமுகத்துக்கு வந்து வரவேற்றிருக்கிறார். காந்தியடிகளின் அரசியல் வாழ்க்கைக்குப் பிள்ளையார்ச் சுழி போடுகிறோம் என்பது என் கொள்ளுத் தாத்தாக்களுக்கு அப்போது தெரியாது.
எங்கள் நிறுவனத்தின் வழக்கு தொடர்பாக இடர்பனிலிருந்து பிரிட்டோரியா நகருக்குக் காந்தியடிகள் தொடர்வண்டியில் சென்றபோதுதான் மாரிட்சுபார்க் தொடர்வண்டி நிலையத்தில், முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரு வெள்ளையரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில் இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது இந்த நிகழ்ச்சி!
1894ஆம் ஆண்டு மே 22ஆம் நாள், எங்கள் மூத்த கொள்ளுத் தாத்தா அப்துல்லா ‘நேட்டால் இந்தியன் காங்கிரசு’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது இடர்பனில் இருந்த எங்கள் கொள்ளுத் தாத்தாக்களின் வீட்டில்தான் தொடங்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராகக் காந்தியடிகளும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1896ஆம் ஆண்டு அப்துல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தியடிகள் தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.
1897ஆம் ஆண்டு, காந்தியடிகள் இந்தியாவுக்குத் திரும்பி, அவர் குடும்பத்தை எசு.எசு.குர்லேண்டு என்ற எங்கள் கப்பலின் மூலம் இடர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியடிகளின் மனைவி கத்தூரிபாய் அம்மையார், இரண்டு மகன்கள், காந்தியடிகளின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.
காந்தியடிகள் இடர்பனுக்குள் நுழைவதை விரும்பாத பிரித்தானிய அரசு, அவரைக் கப்பலிலிருந்து இறங்க ஒப்புதல் அளிக்கவில்லை. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று சவேரி உடன்பிறப்புக்களைப் பிரித்தானிய அரசு வற்புறுத்தியது. அதற்காக இழப்பீடு தருவதாகவும் கூறியது. ஆனால் சவேரி உடன்பிறப்புக்கள் அதற்கு இணங்கவில்லை. “எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியடிகளையும், அவர் குடும்பத்தையும் நாட்டுக்குள் விட்டே ஆகவேண்டும்” என்று உறுதியாகக் கூறினார்கள்.
இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு இடர்பன் துறைமுகத்தில் கால்பதிக்கக் காந்தியடிகளுக்கு ஒப்புதல் கிடைத்தது. இந்தத் தாமதத்தால் கப்பல் நிறுவனம் பெரும் இழப்பை அடைந்தது.
நேட்டால் இந்தியன் காங்கிரசின் சார்பில் என் கொள்ளுத் தாத்தாக்கள் ‘இந்தியன் ஒபீனியன்’ என்ற இதழை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ‘இயங் இந்தியா’ என்ற செய்தித்தாளை எசு.எசு.கேதிவு என்ற கப்பலில் வைத்து என் முன்னோர் அச்சடித்து வெளியிட்டனர். அஃது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளையர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் காந்தியடிகளின் தன்வரலாறான ‘சத்திய சோதனை’யில் உள்ளது. (அதையும் நம்மிடம் காட்டுகிறார்).
அப்துல்லாக் கப்பல் நிறுவனத்துக்காக ஒருமுறை, தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தியடிகள் தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளைக்கார நீதிபதியின் கண்ணை உறுத்தியது. அதை அகற்றுமாறு நீதிபதி கூறினார். காந்தியும் கழற்ற முனைந்தார். ஆனால் அருகில் இருந்த அப்துல்லா, “தலைப்பாகையைக் கழற்றி வைப்பது நம் நாட்டு மானத்தைக் கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்!” என்று கூறிவிட்டார். “வழக்கில் நமக்குத் தோல்வி ஏற்பட்டாலும் கவலையில்லை” என்றார். இப்படிக் காந்தியடிகளின் விடுதலை உணர்வுக்கு உறுதுணையாக இருந்தவர்கள் சவேரி உடன்பிறப்புக்கள்.
1906ஆம் ஆண்டு, காந்தியடிகள் இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். அவருக்குப் பின்புலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லாக் கப்பல் நிறுவனம்தான் காந்தியடிகளின் அறவழிப் போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரிய வந்தது. எனவே அப்துல்லாக் கப்பல் நிறுவனத்தின் பயணியர் கப்பல்கள் நான்கையும் அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.
அதன்படி எசு.எசு.வர்க்காக் கப்பல் மகாராட்டிர மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எசு.எசு.நாதிரிக் கப்பல் இடர்பன் துறைமுகத்திலும், எசு.எசு.குர்லேண்டுக் கப்பல் கராச்சித் துறைமுகத்திலும், எசு.எசு.கேதிவுக் கப்பல் போர்ப்பந்தர்த் துறைமுகத்திலும் 1906ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர்ப்பந்தர்த் துறைமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எசு.எசு.கேதிவு மூழ்கியது. இன்றும் கூட அதன் புகைப்போக்கி வெளியில் தெரிகிறது.
முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலர் உதவியுடன் இந்தக் கப்பலில் இருந்த முத்துக்கள், வேலைப்பாடு மிக்க பீங்கான் கலங்கள், வெள்ளி மரவை (ஜாடி), உலக வரலாறு பற்றிய நூல் போன்ற சில அரிய பொருட்களை வெளியே எடுத்தோம். அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘இயங் இந்தியா’ இதழை அச்சடித்த அச்சுப்பொறி கூடக் கிடைக்கும்! இந்தக் கேதிவுக் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடமிருந்து என் பாட்டனார்கள் ஒரு இலட்சத்துப் பதினாறாயிரம் பௌன்டுக்கு வாங்கிய கப்பல்! இது தொடர்பாக நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் இலண்டன் இலாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளன.
விடுதலைப் போராட்டம் தொடங்குவதற்கு முன்பே அதற்காக ஏராளமான சொத்துக்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூடக் காந்தியடிகளை முன்னிறுத்தி எந்த உதவியையும் நாங்கள் கேட்பதில்லை; இனிக் கேட்கப் போவதுமில்லை. எங்கள் முன்னோர் தொடங்கிய ஓர் உயர்நிலைப் பள்ளி போர்ப்பந்தரில் இன்றும் செயல்படுகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள், மதுரையில் மொத்தத் துணி வணிகம் செய்து வந்ததால், என் தந்தையின் மறைவுக்குப் பின்னர் 1970இல் என் தாயாருடன் இங்கே வந்து சேர்ந்தோம். மதுரைக்காரனாக நான் மாறிவிட்டாலும் போர்ப்பந்தரை மறக்கவில்லை. 1985இல் என் சகோதரியைப் போர்பந்தரில் திருமணம் செய்து கொடுத்தபோது அங்கு நான் போயிருந்தபோதுதான் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கப்பலை வேறு சிலர் உரிமை கொண்டாடி அடையத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக வழக்குத் தொடுத்தேன்.
உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அதனை இலண்டன் இலாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, மூழ்கிய கப்பல் எங்களுக்குச் சொந்தமானது என அந்த நிறுவனம் சான்றிதழ் அளித்தது. (அதைக் காட்டுகிறார்). அதனடிப்படையில் வழக்கு வெற்றியடந்து கப்பல் எங்களுடையது என்று நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்!
இந்தக் கப்பல் ஏறத்தாழ ஐம்பதடி ஆழத்தில்தான் இருக்கிறது என்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் திருட வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதிலுள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும்! இது தொடர்பாகக் குசராத்து முதல்வர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். காங்கிரசுக்காரர்களுக்கு உதவியாக இருந்த காந்தியடிகள் குடும்பத்துக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று மோடி நினைத்தாரோ என்னவோ? எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.
காங்கிரசுத் தலைவர்கள் சிலரிடமும் பேசினேன். அவர்கள், நான் காங்கிரசில் சலுகை பெற முயல்வதாகத் தவறாகப் புரிந்து கொண்டார்கள். குடியரசுத்தலைவர், தலைமையமைச்சர், சோனியா காந்தி என்று பலருக்கும் மடல் எழுதினேன். (மடல்களின் நகல்களைக் காட்டுகிறார்). மூழ்கிய கப்பலை மீட்க வேண்டுமெனும் என் போராட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
சில ஆண்டுகளுக்கு முன், மதுரைக் காந்தி அருங்காட்சியகத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட என் கொள்ளுத் தாத்தாக்கள் படம் இடம்பெற்றிருந்தது. எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாகக் காந்தியடிகள் தன் கைப்பட எழுதிய உயிலும், சில மடல்களும் இன்றும் என்னிடம் உள்ளன.
இந்தத் தகவல்களையெல்லாம் பி.பி.சி-யில் செவ்வியாகக் கொடுத்தேன். இங்கிலாந்து அரசு அதைத் தெரிந்து கொண்டு, என்னை அந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால் என் சொந்த நாடான இந்தியாவை விட்டு நான் எங்கேயும் போவதாக இல்லை. ஆனால் காந்தியடிகள் தொடர்பான வரலாற்று ஆவணங்களைத் தேடும் விவகாரத்தில் இந்த அரசு ஏன் ஆர்வமின்றி இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.
இந்தக் கப்பலை மீட்டு அதிலுள்ள பொருட்களை அருங்காட்சியகத்தில் வைத்தால், என்னிடமுள்ள காந்தியடிகளின் மடல் முதலான அரிய ஆவணங்களைத் தர ஆயத்தமாக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம்! காந்தியின் விடுதலைப் போராட்டத்தில் என் முன்னோர்களின் பங்களிப்பும் இருக்கிறது எனும் பெயர் மட்டும் போதும்!” என்று வேதனையுடன் சொல்லி முடித்தார் அப்துல் கரீம்.
இதற்கான முயற்சிகளில் அப்துல் கரீமுக்கு உதவி வரும் இந்திய உயூனியன் முசுலிம் இலீக்கின் மதுரை மாவட்டப் பொதுச்செயலாளர் எம்.அலி அக்பரிடம் பேசினோம்.
“காந்தியடிகளின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட சவேரி உடன்பிறப்புக்கள் அதற்காகவே தம் சொத்துக்களை இழந்தவர்கள். அவர்களுக்கு அஞ்சல்தலை வெளியிட வேண்டும் என்று தொலைத்தொடர்புத்துறை முன்னாள் நடுவண் அமைச்சர்கள் தயாநிதி மாறன், ஆ.இராசா ஆகியோரிடம் கோரினோம்.
சவேரி உடன்பிறப்புக்களின் இன்றைய தலைமுறையினர் பற்றிக் காங்கிரசுப் பேரியக்கம் கூடக் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக வேலூர் மக்களவை உறுப்பினர் காசாமொய்தீன், வெளியுறவுத்துறை அமைச்சர் அகமதுவிடம் பேசியிருக்கிறார். நம் கண் எதிரே கிடக்கும் ஓர் அரிய கருவூலத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது” என்றார் அக்பர் அலி.
அரசியலாளர்களுக்கு ஆயிரம் வேலைகள் இருக்கும். அதற்கிடையே காந்தியடிகளை நினப்பதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்!
இன்றைய மதிப்பின்படி ஏறத்தாழ 150 கோடித் தொகையைச் சவேரி உடன்பிறப்புக்கள் இந்திய விடுதலைக்காக இழந்திருக்கின்றனர். மூழ்கடிக்கப்பட்ட நான்கு பயணியர் கப்பலில் ஒன்றான எசு.எசு.கேதிவுக் கப்பல் குசராத்து மாநிலம் போர்ப்பந்தர்த் துறைமுகத்தில் மூழ்கடிக்கப்பட்டு இன்று வரை கடலுக்கடியில் கிடக்கிறது.
நாட்டு விடுதலைக்காகத் தங்கள் நிறுவனத்தையும் பணம், பொருள் அனைத்தையும் இழந்த இந்தச் சவேரி உடன்பிறப்புக்களை நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே!!!

கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே!!!

கார்த்திக்
நட்பு பதிவு செய்த நாள் : 20/08/2012

‘கடலோடிகளின் முன்னோடிகள் தமிழர்களே’
இன்றைக்கும் ஓடாவி என்ற கப்பல் கட்டும் வயதான மூப்பன்கள் தமிழகத்தில் உள்ளனர். மிகச் சிறப்பான கப்பல்களை, படகுகளைக் கட்டிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். தூத்துக்குடியில் இன்றைக்கும் 35 பாய்மரக் கப்பல்கள் உள்ளன. நான் அவற்றிலும் பயணித்து இருக்கின்றேன். பண்டைக் காலத்திலேயே, 2500 டன் எடை கொண்ட கப்பல்கள் தமிழகத்தில் இருந்து உள்ளன. ஆங்கிலேயர்கள் வந்து ஒரு சட்டத்தைப் போட்டதால் தான், இந்தக் கப்பல் கட்டும் தொழில் ஒடுங்கிப் போயிற்று. இந்தச் செய்தியை, ‘ஓடாவி’ எனும், படகு கட்டும் குடும்பத்தாரிடம் இருந்து தெரிந்து கொண்டேன்.

ஆங்கிலேயர்களுடைய நீராவிக்கப்பல்களின் வளர்ச்சிக்கு, இந்த பாய்மரக் கப்பல்கள் தடையாக இருந்தன. அவர்களிடம் 400 டன் எடை கொண்ட கப்பல்கள் தாம் இருந்தன. எனவே, ‘இந்தியர்கள் கப்பல் கட்டக் கூடாது ; இந்தியர்கள் மாலுமிகளாக இருக்கக்கூடாது’ என, 1789 ஆம் ஆண்டு ஒரு சட்டத்தைக் கொண்டு வந்தார்கள். உண்மையில், 1802 ஆம் ஆண்டு வரையிலும், இந்தியாவில் கிழக்கு இந்தியக் கம்பெனியின் ஆட்சி தான் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. 1802 ஆம் ஆண்டில் தான் ஆங்கிலப் பேரரசின் நேரடி ஆட்சியின் கீழ் இந்தியா வந்தது. ஆனால், 1780 இலேயே, ‘மரைனர்ஸ் ஆக்ட்’ என்று ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து, இந்தியக் கப்பல் கட்டும் தொழிலை முடக்கினார்கள்.
தமிழர்கள் ஆமைகளைப் பின்தொடர்ந்து சென்றார்கள் என்கிறபோது, ‘முகவை, மிதப்பு, தெப்பம்’ என படகுகளில் பயணித்து, அதற்குப்பிறகு, பாய்மரக்கப்பல்களைக் கட்டினார்கள். இன்றைக்கும், நாகப்பட்டினத்திலும், கடலூரிலும், ‘மஞ்சு’ என்ற பெயரில் ஐந்து பாய்மரக் கப்பல்கள் உள்ளன. மஞ்சு,வத்தை, கோட்டியா என்பனவெல்லாம் பலவகையான கப்பல்கள். ‘கொட்டியா’ என்றால், கடலில் புலி போல வேகமாகச் செல்லுகின்ற கப்பல். கொட்டியா என்றால், இலங்கையில் புலி என்று பொருள். அது சோழர்களைக் குறிப்பது. ‘மஞ்சு’ என்றால், மேகம் போல விரைந்து செல்லுகின்ற கப்பல் என்று பொருள். இப்படி, ஒவ்வொரு வகையான கப்பலுக்கும் ஒவ்வொரு பெயர். அதாவது, அந்தக் கப்பல் எந்த வழியில் செல்கின்றதோ, அதை வைத்துப் பெயர் சூட்டுவார்கள்.
தூத்துக்குடியில் இருந்து பொருள்களை ஏற்றிக்கொண்டு கப்பல்கள், இலட்சத்தீவுகள், மாலத்தீவுகளுக்குப்போகின்றன. 20 கப்பல்கள் அந்தமான் போகின்றன. அங்கிருந்து பர்மாவுக்கும் போய் பொருள்களை இறக்கி விட்டு, அங்கிருந்து பொருள்களை ஏற்றிக் கொண்டு வருகின்றார்கள். ஆகவே, நம்முடைய கடலோடிகளின் கப்பல் ஓட்டும் திறமை இன்றைக்கும் மங்கி விட வில்லை. அதை நாம் தான் முயன்று, அடுத்த தலைமுறைக்கு, இந்தத் தொழில் நுட்பங்களைக் கொண்டு செல்ல வேண்டும். நம்முடைய தொன்மை என்ன? எத்தனையோ பேர் வந்தார்கள், வென்றார்கள், சென்றார்கள் என்றால், நாம் ஒரு வேலை செய்கின்ற சமூகமாகத்தான் இருக்கின்றோமே தவிர, ஆளுமைமிக்க சமுதாயமாக உருவெடுக்க வில்லை. இயற்கையின் பயன்பாடுகளை உலகுக்கு அறிமுகப்படுத்தியவர்கள் நமது முன்னோர்கள் தாம். தேங்காய், மாங்காய், பலா, தேக்கு, புளியமரம் ஆகியவற்றின் பயன்பாடுகள் மற்றும், இயற்கை, மரம், செடி, கொடிகள், கடல், வேளாண்மைஅனைத்திலும் உலகுக்குத் தமிழர்களின் பங்களிப்பு உள்ளது. சுறா வேட்டை ஆடினார்கள், சங்கு, முத்து, கடல் பாசி குளித்தல் இவையெல்லாம், உலகுக்குத் தெரிய வேண்டும்.
இராமநாதபுரம் மாவட்டத்துக்கு, ‘முகவை’ என்று ஒரு பெயர் உண்டு. அதற்கு, ‘மிதப்பு’ என்று தான் பொருள். அந்த மாவட்டத்தில் மட்டும், 5000 கப்பல்கள் இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. கீழக்கரையைச் சேர்ந்த வள்ளல் சீதக்காதிக்கும் நிறைய கப்பல்கள் இருந்தன. தமிழர்கள் தொடக்கத்தில்,முகவை, மிதப்பு, தெப்பம் என்ற சிறிய கப்பல்களைக் கட்டிப் பயன்படுத்திக் கொண்டு இருந்தார்கள். அதைத்தான் பின்னர் பாய்மரக் கப்பல்களாக மாற்றினார்கள். உலகத்திலேயே முதன் முறையாக பாய்மரத்துணிகளை நெய்தவர்கள் தமிழர்களே. ‘வாதிரியார்’ என்ற ஒரு சமூகத்தினர், தமிழகத்தின் கன்னியாகுமரியில் இருந்து வேப்பலோடை வரையிலு ம் , இன்றைக்கும் இருக்கின்றார்கள். அவர்கள் தாம், பாய்மரத் துணிகளை நெய்தவர்கள். புளியங்கொட்டையை மாவாக அரைத்து, அதில் பருத்தித் துணியைத் தோய்த்து, பாய்மரத் துணியாக மாற்றினார்கள். அந்தத் துணிகள் எளிதில் கிழிந்து போகாது; எத்தகைய சூறைக் காற்றையும் எதிர் கொண்டு நிற்கும். அப்படி, 20,000 கப்பல்களுக்கு அவர்கள் பாய்மரங்கள் செய்து இருக்கின்றார்கள். இன்றைக்கு அது வெறும், 35 கப்பல்களாகச் சுருங்கி விட்டது. அந்த சமூகமே நசிந்து, பனை ஏறுதல் உள்ளிட்ட வேறு தொழில்களுக்குப் போய் விட்டார்கள். நிறையப்பேர் வெளியேறிப் போய் விட்டார்கள். தமிழகத்தில் பட்டு சாலியர், செளராஷ்டிரர் போன்ற வெளி மாநில நெசவு சமூகங்கள் உள்ளன. ஆனால், வாதிரியார்கள், தமிழகத்துக்கே சொந்தமான, பருத்தி நெசவாளர்கள். அவர்கள் முன்பு, ‘மாதறியார்கள்’ என்று அழைக்கப்பட்டார்கள். அதாவது, பெரிய தறிகளை வைத்து இருந்தார்கள். அதில் இவர்கள் நெய்த பாய்மரத் துணியைத்தான், கிரேக்கர்கள் உடையாக அணிந்து கொண்டார்கள். காரணம், அது குளிருக்கு இதமாக இருந்தது. அந்த உடைக்குப் பெயர் ‘பல்லன்’.
அதேபோல, பலவகையான மரங்களைப் பயன்படுத்தி, பெரிய பெரிய கப்பல்களைக் கட்டினார்கள். 2500 டன் எடை கொண்ட கப்பல்கள் கூட இருந்தன. ஆங்கிலேயர்களுடைய 450 டன் எடை கொண்ட கப்பல்களை, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்து செய்ய வேண்டும். ஆனால், நம்முடைய கப்பல்களை, 60 ஆண்டுகளுக்கு ஒருமுறை மராமத்து செய்தாலே போதும். ஐரோப்பியர்கள் காற்றின் திசையைக் கணித்து, கப்பலைச் செலுத்தினார்கள். ஆனால், தமிழர்கள் கடல் நீரோட்டத்திலும், எதிர்காற்றிலும் கூடக் கப்பலைச் செலுத்தும் திறமையானவர்களாக இருந்தார்கள். பலத்த காற்று வீசும் போதும் கூட, அதற்கு அஞ்சாமல், விரைவாகப் போய்ச் சேருவதற்கு, அந்த நாள்களைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதாவது, 200 கிலோமீட்டர் வேகத்தில் அடித்த
காற்றிலும் கூட, பாய்மரங்களை அதற்கு ஏற்றவாறு கட்டி படகைச்செலுத்தினார்கள்.
ஒரு ஆஸ்திரேலியா ஆய்வாளர் இந்தியாவுக்கு ஆய்வுகள் செய்ய வருவதாக இருந்தால், இங்கே அவர்களுக்கான வழிகாட்டிகள் (Guide) இல்லை. நம்முடைய பங்கு அளிப்புகள், நமக்கு மட்டுமே தெரிந்து இருந்தால் போதாது. உலகத்துக்கும் தெரிய வேண்டும். தென்னை நாரில் இருந்து கயிறு திரித்தோம். அந்த நாள்களில் கப்பல்களில் கயிறுதான் முக்கியப் பங்கு வகித்தது. அதைக் கொண்டுதான், பெரிய பெரிய பாய் மரங்களைக் கட்டினார்கள். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், ‘ஆழ்கடல் பண்பாட்டு ஆய்வுகள்’ (Underwater Cultural Heritage Research ) என்று ஒரு துறையே உள்ளது. ‘கடல் தொல்லியல் ஆய்வு’ (Marine Archaeology) என்றும் சொல்வார்கள். அவர்கள், சங்கு பற்றி ஆய்வு செய்தார்கள், கல் நங்கூரத்தைப் பற்றி ஆய்வு செய்தார்கள். ஆனால், பாய்மரங்களைப் பற்றி ஆய்வு செய்ய வில்லை. பூம்புகாரைப் பற்றி ஆய்வு செய்தார்கள். அதுவும் வெளி வரவில்லை. குமரிக் கண்டத்தைப் பற்றி எந்த விதமான கடல் ஆய்வுகளையும் மேற்கொள்ளவில்லை.
கடல் ஆய்வாளர் திரு.பாலு அவர்கள் தாயகத்தில் திரு. அருணகிரி அவர்களுக்கு அளித்த பேட்டியிலிருந்து.

பிரான்சு நாட்டுத் தொடரிகளில் திருக்குறள்..!

பிரான்சு நாட்டு  இரயில்களில் திருக்குறள்..!

கார்த்திக்
நட்பு பதிவு செய்த நாள் : 25/08/2012


வெள்ளி, 24 ஆகஸ்ட், 2012

உலகத்தமிழ்க்கல்வி மாநாடு

உலகத்தமிழ்க்கல்வி மாநாடு அழைப்பிதழ்

http://www.natpu.in/?p=28013

நட்பு பதிவு செய்த நாள் : 24/08/2012


அன்புடையீர்,
வணக்கம்.உலகத்தமிழ்க்கல்வி மாநாட்டு அழைப்பிதழ் இணைக்கப்பெற்றுள்ளது.தங்கள் வரவும் வாழ்த்தும் மாநாட்டுக்குச் சிறப்பு நல்கும் என்பதில் ஐயமில்லை.
நலமே விழையும்,
மறைமலை இலக்குவனார்


 


செவ்வாய், 17 ஜூலை, 2012

புலிகள் மீது தடையை நீட்டித்து தமிழீழ விடுதலையை முடக்கிட முடியாது

புலிகள் மீது தடையை நீட்டித்து தமிழீழ விடுதலையை முடக்கிட முடியாது: நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சி
1 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 51 vote, average: 5.00 out of 5 (1 votes, average: 5.00 out of 5, rated)

இலங்கை சிங்கள பெளத்த இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போருக்கு எல்லா வகையிலும் உதவி, தமிழனைக் கொன்று குவித்த குருதிக் கரைபடிந்த இந்திய மத்திய காங்கிரஸ் அரசு, தமிழீழ மக்களின் விடுதலைக்காக தொடர்ந்து போராடிவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பதாக அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் தர்மேந்திர சர்மா கையெழுத்திட்டு விடுத்துள்ள அந்த அறிவிக்கையில், இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்துவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தால், இந்திய குடிமக்களுக்கு பெரும் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளதாகவும், எனவே புலிகள் இயக்கத்தை சடடத்திற்குப் புறம்பான இயக்கமாக அறிவிக்க வேண்டிய அவசியம் உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த வாதம் எந்த சான்றும் அற்ற, திட்டமிட்ட திசை திருப்பல் ஆகும். இலங்கையில் தமிழருக்கு எதிரான போரை நடத்த ராஜபக்சவுக்கு முழுமையாக உதவி, ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழிக்க இந்திய மத்திய காங்கிரஸ் அரசு உதவியது என்பதை உலகே அறியும். ஆனால் அந்த அளவிற்கு உதவியும், ராஜபக்ச அரசு இந்தியாவோடு நிற்காமல், முழுமையாக சீனாவின் நட்பு நாடாக மாறிவிட்டது. அம்மன்தோட்டா துறைமுகத்தில் இருந்து, இலங்கையில் பல திட்டங்களை செயல்படுத்துவது மூலம் அந்நாட்டிற்குள் சீனா வலிமையாக கால் பதித்து விட்டது. தமிழ்நாடு அரசின் ஒப்புதலின்றி தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவில் சீனா தனது கடைப்படை தளத்தை அமைக்க முயற்சித்து வருவதை தமிழ்நாட்டின் மீனவர்களுக்குக் கூட தெரிந்து இரகசியமாகும். இலங்கை பிரச்சனையில் தமிழினத்திற்கு எதிராக இந்திய மத்திய காங்கிரஸ் அரசு கடைபிடித்த அயலுறவுக் கொள்கை, அதன் எதிரி நாடான சீனா இலங்கையில் வலிமையாக கால் பதிக்க உதவிவிட்டது. இப்போது சீனத்தின் அச்சுறுத்தல் வளையத்திற்குள் இந்தியாவின் தென்பகுதி சிக்கியுள்ளது என்பதே இராணுவ ரீதியான உண்மையாகும். சீனாவிற்கு ஆதரவாக ராஜபக்ச அரசு செயல்பட்டுவருவதன் எதிரொலியே அமெரிக்காவும், இந்தியாவும் ஒன்றாக நின்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை தீர்மானத்திற்கு வாக்களித்தன. ஆயினும் சீன நட்பை உதரித்தள்ள ராஜபக்ச இணங்கவில்லை. இலங்கையின் வட பகுதியில் உள்ள பலாலி விமான தளத்தை விரிவுபடுத்தும் இந்தியாவின் திட்டத்தை ராஜபக்ச அரசு நிராகரித்துவிட்டது அதற்கு அத்தாட்சியாகும். எனவே விடுதலைப் புலிகளால் இந்தியாவின் குடிமக்களுக்கு அச்சுறுத்தல் என்று உள்துறை அமைச்சகம் கூறுவது சீனத்தால் ஏற்பட்டுள்ள அச்சறுத்தலை மறைக்கும் மோசடியாகும்.

விடுதலைப் புலிகளின் தோல்விக்கு இந்திய அரசின் தலைவர்களும், அதிகாரிகளும்தான் காரணம் என்று புலம் பெயர்ந்த தமிழர்கள் இணையத் தளங்களில் பரப்புரை செய்து வருகின்றனர் என்று குற்றம் சாற்றுகிறது உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கை. அதில் என்ன பிழை உள்ளது என்று தெரியவில்லை. தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்க, அவர்களோடு நின்ற ஒன்றே முக்கால் இலட்சம் தமிழர்களை அழித்தொழிக்க இந்திய மத்திய காங்கிரஸ் அரசு உதவியதா இல்லையா? எம் இனத்தை அழித்தொழித்த அரசுக்கு எதிராக பரப்புரை செய்வதில் என்ன தவறு?

போரில் தோற்கடிக்கப்பட்ட பிறகும் ஈழ விடுதலை எனும் கருத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் கைவிடவில்லை என்றும், ஈழ விடுதலைக்காக இன்றளவும் அது இரகசியமாக செயல்ப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ள உள்துறை அமைச்சக அறிக்கை, தமிழீழம் எனும் தமிழர்களுக்காண தனி நாடு என்ற கோரிக்கை இந்தியாவின் ஒற்றுமைக்கு இறையாண்மைக்கும் அச்சறுத்தல் என்றும் அது இந்தியாவை பிளவுபடுத்தும் நோக்கம் கொண்டது என்றும் கூறியுள்ளது.

தமிழீழ விடுதலை என்பது அரை நூற்றாண்டுக் காலமாக நடந்துவரும் அரசியல் விடுதலைப் போராட்டம். தங்களுடைய இனத்தை திட்டமிட்டு அழித்துவரும் சிங்கள பெளத்த இனவாத அரசின் பிடியில் இருந்து விடுபட்டு தனிநாடு காண்பது மட்டுமே, ஈழத் தமிழினத்தை அழிவின் பிடியில் இருந்து காத்துக்கொள்வதற்கான ஒரே வழி என்பதில் உறுதியுடன் இருந்து எம் சொந்தங்கள் நடத்திவரும் போராட்டமாகும். அதற்காகவே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பிறந்தது. எனவே, அந்த இலக்கை புலிகள் இயக்கம் மட்டுமல்ல, தமிழினம் ஒருபோதும் விட்டுத்தராது. அதனால்தான் தமிழர்களின் பெரும் தாயாகமான தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அதன் எதிரொலியே தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் –  திமுக கூட்டணிக்கு விழுந்த மரண அடி என்பதை இந்திய மத்திய அரசு புரிந்துகொள்ள வேண்டும்.

தங்களது இயக்கம் இந்தியாவின் ஒற்றுமைக்கோ, அதன் இறையாண்மைக்கோ அல்லது அதன் பூகோள நலன்களுக்கு ஒருபோது எதிரானதல்ல என்பதை தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன், சுதுமலை பொதுக்கூட்டத்தில் இருந்து தான் ஆற்றிய பல மாவீரர் தின உரைகளில் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே இலங்கையில் தமிழர்கென்று தனி நாடு என்பது அங்கு வாழும் இஸ்லாமிய தமிழர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஆனதே என்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் அழுத்தம் திருத்தமாக பல முறை கூறியுள்ளனர். அதனை நன்றாக அறிந்திருந்தும், அவர்களின் இலக்கு இந்தியாவின் ஒற்றுமைக்கும் இறையாண்மைக்கு எதிரானது என்று ஒவ்வொரு முறையும் இந்திய மத்திய அரசு கூறுவது, அப்படிக் கூறினால்தான் அந்த இயக்கத்தை தடை செய்ய முடியும் என்பதற்காகவும், தமிழீழ விடுதலைக்கு தமிழ்நாட்டு மக்கள் உதவிடாமல் தடுத்திட முடியும் என்பதற்காகவுமே என்பதை விவரமறிந்த அனைவரும் புரிந்தே உள்ளனர்.

இலங்கைத் தமிழர்கள் நலனில் அக்கறை உள்ளதாகக் கூறி தமிழினத்தை ஏமாற்றிவருகிறது மத்திய காங்கிரஸ் அரசு. போர் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட பிறகும், அவர்களுக்கு ஒரு நேர்மையாக அரசியல் தீர்வை பெற்றுத் தர யோக்கியதை அற்ற இந்திய அரசு, இலங்கை அரசுடன் இணைந்து தான் நடத்திய தமிழினப் படுகொலையை மறைக்க, ஈழத் தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய ஒரு தியாக இயக்கத்தை சட்டத்திற்கு எதிரான இயக்கம் என்று கூறி தடை செய்வவது, அது தனது குற்ற முகத்தை மூடிக்கொள்ளும் முயற்சியே தவிர, அதனால் தமிழீழ விடுதலையை தடுத்து நிறுத்திட முடியாது. இந்தியாவின் பூகோள நலனும், பாதுகாப்பும் உறுதியாக வேண்டுமெனில் இலங்கையில் தமிழர்கென்று ஒரு நாடு பிறந்தால் மட்டுமே சாத்தியமாகும் என்பதையும், தெற்காசியப் பகுதியில் மாபெரும் இராஜதந்திர தோல்வியை சந்தித்துள்ள இந்திய மத்திய அரசு, தமிழீழ விடுதலையை ஆதரிக்கும் காலக்கட்டாயம் ஏற்படும் என்பதையும் நாம் தமிழர் கட்சி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துக்கொள்கிறது.

நாம் தமிழர் கட்சிக்காக,


செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்

ஞாயிறு, 6 மே, 2012

அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை தொடக்கவிழா

அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை தொடக்கவிழா(ஒளிப்படங்கள் )

நா.மோகன்ராசு
நட்பு இணைய இதழ் : பதிவு செய்த நாள் : 05/05/2012


தமிழ்க்காப்பு கழகம் சார்பில் சிறுவர்சிறுமியருக்குத்  திருக்குறள் முதலான நீதி நெறிப்பாடல்களை பயிற்றுவிக்கும் அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை  (03  05  2012) அன்று தொடங்கப்பட்டது. தாய்த்தொழில்நுட்பகுழும  மேலாண் இயக்குநர் திரு . அண்ணாமலை அவர்கள் தலைமை தாங்கிப் பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் திரு நா.மோகன்ராசு வரவேற்புரை ஆற்றினார். திருமதி ஈரோடு தமிழ்ச்செல்வி, திரு அசய்கார்த்திக், திரு ச.முத்துகிருட்டிணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்   பட்டறையின நோக்கம், பயன் முதலியன பற்றிச் சிறப்புரை ஆற்றித் தொடக்கி வைத்தார். சாந்தோம் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு எலியட்சு வாழ்த்தி நிறைவுரை ஆற்றினார். திரு குமார் நன்றி நவின்றார்.

மே 3 முதல் 18  ஆம் நாள் வரை பதினைந்து நாட்கள்  நடக்கும் இப்பயிலரங்கம்  காலை 8 மணி முதல் 10 வரை  நடைபெறும்.  இறுதி நாளன்று மாணவர்களை மேடையேற்றி அவர்களுடைய திறமையை வெளிக்கொணர்ந்து சான்றிதழும் வழங்கப்படும் . மாணவர்கள் கோடை விடுமுறையை நன்கு பயன்படுத்திகொள்ளவும்  அவர்களுடைய தமிழார்வத்தை வளர்க்கும் விதமாகவும்  மனப்பயிற்சித் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் அறநெறியில் வாழச் செய்ய வழிகாட்டவும் இப்பயிலரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

புதன், 18 ஏப்ரல், 2012

INIYAVAN 70 :இனியவன் எழுபது

‘இலக்கிய வீதி’ எனும் அமைப்பின் மூலம் பல இலக்கியவாதிகளை உருவாக்கியும் பல படைப்புகளை வெளியிட்டிருக்கும் இலக்கிய வீதி இனியவனுக்கு எழுபது வயது நிறைவடைவதற்கும் வாணியம்பாடி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் இனியவனுக்கு வழங்கப்பட்ட  ‘செம்மொழிச் செம்மல்’ எனும் விருது பெற்றமைக்கும் அவருக்கு பாராட்டரங்கம் நடத்தப்பெற்றது. சென்னை  ஒய்.எம்.சி.எ (YMCA) கட்டிடத்தில் 17.04.2012  அன்று மாலை 6.00 மணிக்கு நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு இலக்கிய அமைப்புகளைச் சேர்ந்த அறிஞர்களும் இலக்கியவாதிகளும் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் இனிமையான சொற்களால் அனைவரையும் வரவேற்றார்,தொடர்ந்து தென்காசிக் கவிஞரான ராஜா மரக்காயர் அவர்கள் கவிதையின் மூலம் இனியவனுக்கு வாழ்த்துமடல் வாசித்து பாராட்டினார் ,


அவரைத் தொடர்ந்து  நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய  முனைவர் சிலம்பொலி சு.செல்லப்பன் அவர்கள்  மனமார்ந்த பாராட்டுகளை வழங்கினார்.

கார் நாற்பது, களவழி நாற்பது, ஏர் எழுபது என இலக்கிய நூலகளுக்கு வழங்கும் தலைப்பைப் போன்று இனியவன் விழாவுக்கு தலைப்பு பொருத்தமாக அமைந்திருப்பதை சுட்டிக்காடினார். மேலும் இனியவனுடைய பண்பு நலன்களைப் பற்றி கூறும்போது  சங்க இலக்கியப் பாடலகளில்  வரும் தலைவனின் குணத்தோடு ஒப்பிட்டு அவர்களுக்கிடையிலான ஆழ்ந்த நட்பை வெளிப்படுத்தி பாராட்டினார்.

அடுத்து, ‘பாராட்டுபவர் எக்காலத்திலும் பாராட்டப்பெறுவார்’ எனும் பாராட்டுரையோடு தொடங்கிய  முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்கள் இனியவனுடைய இலக்கியத் திறனை பாராட்டிப் பேசினார்.  தாராபரதி, மலர்மகன், பல்லவன், ஐசுவர்யன், சொற்கேளான் போன்றோரை இலக்கிய உலகத்திற்கு அறிமுகப்படுத்திய   ‘இனியவனுடைய வீடு  இலக்கியத் தொட்டி’ என்பதை விவரித்துப் பேசினார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பனும் இலக்கியவாதிகள்  பலரை உருவாகியதாயுள்ளம் கொண்ட  இனியவனை
பெருமிதத்தோடு பாராட்டினார். மலர்மகனின் கவித்துவமான வாழ்த்துமடல் அனைவரின் கைத்தட்டல்களையும் பெற்றது,மேலும் இந்த பாராட்டரங்கத்திற்கு பேராசிரியர் அவ்வை நடராசன், இலக்குவனார் திருவள்ளுவன், கவிஞர் முத்துலிங்கம், இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் உள்ளிட்ட பெருமக்களும் வந்திருந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பக்த்வச்சலத்தின் நன்றியுரையைத் தொடர்ந்து  அரங்க விழா நாயகன் இனியவனுடைய ஏற்புரையோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

http://www.natpu.in/?p=23700

சனி, 31 மார்ச், 2012

Elephant handling computer: கணிணியைக் கையாளும் யானை

கணிணியைக் கையாளும் யானை

தினேஷ் கார்த்திக்
-  நட்பு இணைய இதழ் : பதிவு செய்த நாள் : 30/03/2012

இன்றைய தொழில் நுட்பம் என்பது அனைவரையும் கவர்ந்தது என்பதை விட அனைத்து உயிரினங்களையும் கவர்ந்திருகிறது என்பது தான் உண்மை ஏனெனில் இங்கே பாருங்கள் ஒரு யானை என்ன மோகத்தில் என்ன பண்ணுகிறது என்று இலத்திரனியல் பொருளொன்றை மிகவும் எளிதாகக் கையாள்வதற்கு நீண்ட நாள் அனுபவம் வேண்டும். ஆனால் யானை ஒன்று இலத்திரனியற் பொருளான notebook மோகம் பிடித்தது போல் அதனைக் கையாள்கின்றது. அதாவது Samsung நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட Samsung Galaxy Noteஐ தனது தும்பிக்கை கொண்டு தனது உருவத்தை வரைவதுடன் அதில் காணப்படும் பியானோ, ட்ரம்ஸ் என்பவற்றையும் மிகவும் எளிதாக கையாள்கின்றது.
இக்காணொளிகள் Samsung Galaxy Note-ன் விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
0

சனி, 22 அக்டோபர், 2011

வியாழன், 13 அக்டோபர், 2011

அரசியல் ஆத்திசூடி

அரசியல் ஆத்திசூடி

இலக்குவனார் திருவள்ளுவன்
பதிவு செய்த நாள் : 13/10/2011


1. அறநெறி தவறுவோர்க்கு வாக்கு அளிக்காதீர்!
2. ஆருயிர்த் தமிழைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
3. இனப் பகைவருக்கு வாக்களிக்காதீர்.
4. ஈழத் தமிழர்களை அழித்தவர்க்கு வாக்களிக்காதீர்!
5. உண்மை பேசாதவர்க்கு வாக்களிக்காதீர்
6. ஊழலில் வாழ்பவர்க்கு வாக்களிக்காதீர்!
7. எளிமையை மறந்தவர்க்கு வாக்களிக்காதீர்
8. ஏய்த்துப் பிழைப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
9. ஐயததிற்கு இடம் ஆனவர்களுக்கு வாக்களிக்காதீர்!
10. ஒழுக்கக் கேடர்களுக்கு வாக்களிக்காதீர்!
11.ஓய்விலே சுவை காண்பவருக்கு வாக்களிக்காதீர்!
12. ஔவியம் (அழுக்காறு) உடையவர்க்கு வாக்களிக்காதீர்!
13. அஃகம் (முறைமை ) தவறுபவர்க்கு வாக்களிக்காதீர்!
14. கயவருக்கு வாக்களிக்காதீர்!
15. காலம் அறிந்து உதவாதவர்க்கு வாக்களிக்காதீர்!
16. கிடைத்ததை எல்லாம் சுருட்டுபவருக்கு வாக்களிக்காதீர்!
17. கீழான செயல் புரிவோருக்கு வாக்களிக்காதீர்!
18. குற்ற மனம் கொண்டவருக்கு வாக்களிக்காதீர்!
19. கூட்டுக் கொள்ளையருக்கு வாக்களிக்காதீர்!
20. கெடுமதி படைத்தோருக்கு வாக்களிக்காதீர்!
21. கேடு கெட்டன செய்வோருக்கு வாக்களிக்காதீர் !
22. கைச் சின்னத்திற்கு வாக்களிக்காதீர் !
23. கொடுங்கோலருக்கு வாக்களிக்காதீர் !
24. கோழைக்கு வாக்களிக்காதீர் !
25. கௌவை (துன்பம்) தருபவருக்கு வாக்களிக்காதீர் !
26. ‘ங’ போல் வளையாதவருக்கு வாக்களிக்காதீர் !
27. சட்டத்தை மதியாதவருக்கு வாக்களிக்காதீர் !
28. சாதி வெறியருக்கு வாக்களிக்காதீர் !
29. சிங்களக் கொடுமைக்குத் துணைபுரிபவருக்கு வாக்களிக்காதீர் !
30. சீறவேண்டிய பொழுது சீறாதவருக்கு வாக்களிக்காதீர் !
31. சுரண்டி வாழ்பவருக்கு வாக்களிக்காதீர்!
32. சூதருக்கு வாக்களிக்காதீர்!
33. செய்ய வேண்டுவன செய்யாதவருக்கு வாக்களிக்காதீர் !
34. சேர்ந்தாரைக் கொல்லுபவருக்கு வாக்களிக்காதீர்!
35. ‘சை’ என இகழ வேண்டியவருக்கு வாக்களிக்காதீர் !
36. சொல்தவறுவோர்க்கு வாக்களிக்காதீர்!
37. சோம்பேறிகளுக்கு வாக்களிக்காதீர் !
38. ஞமலி (நாய்) போல் தன்னினத்தையே எதிர்ப்பவருக்கு வாக்களிக்காதீர்!
39. ஞாட்பு (போர்க்களம் ) எனச் சொல்லிக் கொலைக் களம் ஆக்கியவருக்கு வாக்களிக்காதீர்!
40. ஞிமிறு (தேனீ) போல் சுறுசுறுப்பாக இயங்காதவருக்கு வாக்களிக்காதீர்!
41. ஞெகிழும் (மனம் இளகும்) இயல்புஅற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
42. ஞேயம் (அன்பு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
43. ஞொள்ளும் (அஞ்சும்) இயல்பினருக்கு வாக்களிக்காதீர்!
44. தமிழ்ப்பகைவருக்கு வாக்களிக்காதீர் !
45. தாய்த்தமிழைப் பழிப்பவருக்கு வாக்களிக்காதீர் !
46. திருக்குறள் நெறி போற்றாதவருக்கு வாக்களிக்காதீர் !
47. தீந்தமிழை உயர்த்தாதவருக்கு வாக்களிக்காதீர் !
48. துன்பம் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
49. தூய தமிழைப் பேணாதவருக்கு வாக்களிக்காதீர் !
50.தெளிவில்லாதவருக்கு வாக்களிக்காதீர் !
51. தேவையைப் பெருக்கிக் கொள்பவருக்கு வாக்களிக்காதீர் !
52. தையலுக்கு (பெண்களுக்கு) இணை உரிமை அளிக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
53. தொன்மைத்தமிழைச் சிதைப்பவருக்கு வாக்களிக்காதீர் !
54. தோள்கொடுத்து உதவாதவருக்கு வாக்களிக்காதீர் !
55. தௌவையைப் (வறுமையை)ப் போக்காதவருக்கு வாக்களிக்காதீர் !
56. நற்றமிழில் பேசாதவருக்கு வாக்களிக்காதீர் !
57. நாணயம் தவறுபவருக்கு வாக்களிக்காதீர் !
58. நிதியைச் சுருட்டுவோருக்கு வாக்களிக்காதீர் !
59. நீதி தவறுவோருக்கு வாக்களிக்காதீர் !
60. நுகர் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்த அறியாதவருக்கு வாக்களிக்காதீர் !
61. நூக்கம் (ஊசலாட்டம்) உள்ளவர்க்கு வாக்களிக்காதீர்!
62. நெஞ்சாரம் (மனத்துணிவு) இல்லாதவர்க்கு வாக்களிக்காதீர்!
63. நேர்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
64. நைச்சியம் பண்ணுவோர்க்கு வாக்களிக்காதீர்!
65. நொய்ம்மையாளருக்கு (மனத்திடம் இல்லாதவர்க்கு) வாக்களிக்காதீர்!
66. நோகச் செய்வோருக்கு வாக்களிக்காதீர்!
67. பகுத்தறிவு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
68. பாடுபடாதவருக்கு வாக்களிக்காதீர்!
69. பிறன்மனை நோக்குபவர்க்கு வாக்களிக்காதீர்!
70. பீடு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
71. புலனெறி அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
72. பூச்சாளருக்கு (வெளிப்பகட்டாளருக்கு) வாக்களிக்காதீர்!
73. பெரியாரைப் போற்றாதவர்க்கு வாக்களிக்காதீர்!
74. பேராசையாளர்க்கு வாக்களிக்காதீர்!
75. பையச் செயல்படுநர்க்கு வாக்களிக்காதீர்!
76. பொதுமையை மறுப்பவர்க்கு வாக்களிக்காதீர்!
77. போக்கிலிகளுக்கு வாக்களிக்காதீர்!
78. மக்கள்நேயம் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
79. மாண்பற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
80. மிண்டுநர்க்கு (மதத்தால் பிழைப்பவர்க்கு) வாக்களிக்காதீர்!
81. மீச்செலவு (அடங்காச் செலவு) செய்யுநர்க்கு வாக்களிக்காதீர்!
82. முரடர்க்கு வாக்களிக்காதீர்!
83. மூடர்க்கு வாக்களிக்காதீர்!
84. மென்சொல் அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
85. மேன்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
86. மையலில் திரிபவர்க்கு வாக்களிக்காதீர்!
87. மொழிக்கொலைஞர்க்கு வாக்களிக்காதீர்!
88. மோசடியாளர்க்கு வாக்களிக்காதீர்!
89. யாகம் செய்பவர்க்கு வாக்களிக்காதீர்!
90. வஞ்சகர்க்கு வாக்களிக்காதீர்!
91. வாய்மை அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
92. விலைக்குக் கேட்பவர்க்கு வாக்களிக்காதீர்!
93. வீறு அற்றவர்க்கு வாக்களிக்காதீர்!
94. வெய்யனுக்கு(க் கொடியவனுக்கு) வாக்களிக்காதீர்!
95. வேடதாரிகளுக்கு வாக்களிக்காதீர்!
96. வையகம் சுரண்டுநர்க்கு வாக்களிக்காதீர்!
97. அன்னைத் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
98 ஆரா அருந்தமிழை வளர்ப்பவர்க்கு வாக்களிப்பீர்!
99. இன்றமிழை இயம்புநர்க்கு வாக்களிப்பீர்!
100. ஈடில்லாத் தமிழை எழுதுநர்க்கு வாக்களிப்பீர்!
101. உயர்வளத்தமிழை உரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
102. ஊடகத்தில் தமிழைக் காப்பவர்க்கு வாக்களிப்பீர்!
103. என்றும் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!.
104. ஏழிசைத் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
105. ஐந்திரத் தமிழை அணிசெய்வோர்க்கு வாக்களிப்பீர்!
106. ஒண்டமிழை முன்னேற்றுவோர்க்கு வாக்களிப்பீர்!
107. ஓங்கல் தமிழை ஓதுவோர்க்கு வாக்களிப்பீர்!
108. ஔவைத் தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
109. கன்னித்தமிழைப் படிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
110. காவியத் தமிழைச் செழிப்பாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
111. கிளைமிகு தமிழைக் கிளப்பவர்க்கு வாக்களிப்பீர்! (கிளப்பவர் – எழுச்சியுடன் உரைப்பவர்)
112. கீழ்க்கணக்குத் தமிழை வழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
113. குன்றாத் தமிழைக் குயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்! (குயிற்றுநர் – மனத்தில் பதியும்படிச் சொல்லுபவர்)
114. கூத்துத் தமிழை அளிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
115. கெடுதி அறியாத் தமிழை விளம்புநர்க்கு வாக்களிப்பீர்!
116. கேடிலித் தமிழைப் பகறுவோர்க்கு வாக்களிப்பீர்!
117. கைவளத் தமிழைக் கட்டுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
118. கொற்றவர் தமிழைச் சொற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
119. கோலோச்சும் தமிழை ஓயாதுரைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
120. சங்கத் தமிழைச் செப்புநர்க்கு வாக்களிப்பீர்!
121. சான்றோர் தமிழைச் சாற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
122. சிறந்த தமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
123. சீர்மிகுந்த தமிழைப் பரவுநர்க்கு வாக்களிப்பீர்! (பரவுநர் – துதிப்பவர்)
124. சுடரொளித் தமிழை ஏத்துவோர்க்கு வாக்களிப்பீர்!
125. சூரியத் தமிழைச் சூழவைப்பவர்க்கு வாக்களிப்பீர்!
126. செந்தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
127. சேமத் தமிழைச் செவியறிவுறுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
128. சொல்லார் தமிழைச் சொல்லுநர்க்கு வாக்களிப்பீர்!
129. சோர்வறு தமிழை நலமாக்குநர்க்கு வாக்களிப்பீர்!
130. ஞாலத்தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்
131. தண்டமிழைத் தழைக்கச்செய்யுநருக்கு வாக்களிப்பீர்!
132. தாய்த்தமிழைத் தருநர்க்கு வாக்களிப்பீர்!
133. திருநெறிய தமிழைத் திரட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
134. தீந்தமிழைத் துதிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
135. துய்ய தமிழைத் துளங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
136. தூய தமிழைத் துலங்கச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
137. தெய்வத்தமிழைத் துதிப்போர்க்கு வாக்களிப்பீர்!
138. தேனேரார் தமிழை ஒளிரச் செய்வோர்க்கு வாக்களிப்பீர்!
139. தொல்காப்பியத் தமிழை ஒல்காப்புகழ்ஆக்குநர்க்கு வாக்களிப்பீர்!
140. தோலா (ஈடழியா)த் தமிழை நிலைக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
141. நற்றமிழைப் பேசுநர்க்கு வாக்களிப்பீர்!
142. நானிலத் தமிழை நாடுநர்க்கு வாக்களிப்பீர்!
143. நிகரில்லன தமிழை முன்னேற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
144. நீடுபுகழ்த் தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
145. நுட்பத் தமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
146. நூல் நிறை தமிழை நுவலுநர்க்கு வாக்களிப்பீர்!
147. நெறியாளர் தமிழைப் பாராட்டுநர்க்கு வாக்களிப்பீர்!
148. நேயத் தமிழைத் துய்ப்போர்க்கு வாக்களிப்பீர்!
149. பரவிய தமிழைப் பரப்புநர்க்கு வாக்களிப்பீர்!
150. பாரினார் தமிழைப் பாதுகாப்பவர்க்கு வாக்களிப்பீர்!
151. புகழ் நின்ற தமிழைப் புகழ்நர்க்கு வாக்களிப்பீர்!
152. பூந்தமிழைப் புகலுநர்க்கு வாக்களிப்பீர்!
153. பெருமிதத் தமிழை எய்வோருக்கு வாக்களிப்பீர்!
154. பேரின்பத் தமிழைச் சேர்ந்திசைப்போர்க்கு வாக்களிப்பீர்!
155. பைந்தமிழைப் பாடுநர்க்கு வாக்களிப்பீர்!
156. பொய்யாத்தமிழைப் படிக்குநர்க்கு வாக்களிப்பீர்!
157. போற்றித் தமிழைப் போற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
158. மருவிய தமிழை மறவாதவர்க்கு வாக்களிப்பீர்!
159. மாண்புறு தமிழை மலரச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
160. மிக்கிளமைத் தமிழை மிழற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
161. மீக்கூர் (மேம்படும்)தமிழை மேம்படுத்துநர்க்கு வாக்களிப்பீர்!
162. முத்தமிழை முழங்குநர்க்கு வாக்களிப்பீர்!
163. மூவாத் தமிழைப் பயிற்றுநர்க்கு வாக்களிப்பீர்!
164. மேற்கணக்குத் தமிழை ஆய்வோர்க்கு வாக்களிப்பீர்!
165. வண்டமிழை வளர்க்குநர்க்கு வாக்களிப்பீர்!
166. வாடாத் தமிழை வாசிப்பவர்க்கு வாக்களிப்பீர்!
167. வினைநலத் தமிழை வியப்பவர்க்கு வாக்களிப்பீர்!
168. வீறார் தமிழை விரும்புநர்க்கு வாக்களிப்பீர்!
169. வெற்றித்தமிழைப் பூரிக்கச் செய்நர்க்கு வாக்களிப்பீர்!
170. வேந்தர் தமிழை ஏந்துநர்க்கு வாக்களிப்பீர்!
171. வையத் தமிழை வணங்குநர்க்கு வாக்களிப்பீர்!
நன்றி மீனகம் (meenakam.com)


திங்கள், 12 செப்டம்பர், 2011

இலங்கைப் போர்க் குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கை

இலங்கை போர்க் குற்றங்கள் குறித்து மீண்டும் விசாரணை நடத்த கோரிக்கை

தினமலர் நாளிதழிலிருந்து
பதிவு செய்த நாள் : September 8, 2011



ஜெனீவா: “இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட போர்க்குற்ற விசாரணைக் குழுவின் அறிக்கையில் நம்பகத் தன்மை இருக்கும் என, எதிர்பார்க்க முடியாது. அதனால், இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள் குறித்து, மற்றொரு சர்வதேச விசாரணையை ஐ.நா., மேற்கொள்ள வேண்டும்’ என, சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
இலங்கையில், 2009 மே மாதத்தில் சிங்கள ராணுவத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த இறுதிக் கட்ட போரின் போது, பாதுகாப்பு வளையங்களில் இருந்த மக்கள் மீது, ராணுவம் கொத்துக் குண்டுகள் வீசி கொலை செய்தது. இதுகுறித்து இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட, “கற்றுக் கொண்ட படிப்பினைகள் மற்றும் மறுவாழ்வு’ குழு, போர்க் குற்றங்கள் பற்றி விசாரித்து, அறிக்கை தயார் செய்துள்ளது. வரும் நவம்பர் மாதம், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா., மனித உரிமைகள் அமைப்பில், அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்நிலையில், பிரிட்டன் தலைநகர் லண்டனில் இயங்கி வரும் சர்வதேச பொதுமன்னிப்பு அமைப்பு (ஏ.ஐ.,) நேற்று வெளியிட்ட 70 பக்க அறிக்கையில் கூறியிருப்பதாவது: இலங்கையில் இறுதிக் கட்ட போரில், இருதரப்பாலும் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் பற்றி, இலங்கை அரசால் நியமிக்கப்பட்ட குழு நடத்திய விசாரணையின் விளைவாக நீதி நிலைநாட்டப்படும்; உண்மை வெளிவரும் என, சர்வதேச சமூகம் ஏமாந்து விட வேண்டாம். இறுதிப் போரில் மக்கள் அதிகளவில் பலியானதற்கு, ராணுவத்தின் கொத்துக் குண்டு வீச்சுகள் தான் காரணம். இது வெளியில் தெரியக் கூடாது என்பதற்காக, அந்நாட்டில் உள்ள ஊடகங்களை அரசு மவுனப்படுத்தியுள்ளது. எதிர்ப்போரை வெள்ளை வேன்களில் கடத்தி காணாமல் போகச் செய்துள்ளது. அதனால், நம்பகத் தன்மையுள்ள மற்றொரு சர்வதேச விசாரணை ஒன்றை ஐ.நா., நடத்த வேண்டும். இவ்வாறு பொது மன்னிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

வியாழன், 25 ஆகஸ்ட், 2011

thamizh katamaikal and ilakkuvanar padaippu manikal


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதைத் தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்

ஈழத் தமிழ் அகதிகளை துன்புறுத்தப்படுவதை தமிழக அரசு தடுத்து நிறுத்திட வேண்டும்

சீமான்
பதிவு செய்த நாள் : August 1, 2011



தமிழகத்தின் பல்வேறு முகாம்களில் இருந்து கனடாவிற்குத் தப்பி செல்லும் முயற்சியில் ஈடுபட்ட 186 ஈழத் தமிழ் அகதிகள் ஆந்திராவில் கைது செய்யப்பட்டு, இன்று காலை சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரி அருகே அவர்களை ஆந்திர மாநில காவல் துறையினர் கைது செய்த பின்னர், தமிழக காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட, அவர்கள் துனி என்ற இடத்திற்குச் சென்று ஈழத் தமிழ் அகதிகளை தங்கள் பொறுப்பில் ஏற்றுக் கொண்டனர். அப்போது விசாரணை என்ற பெயரில் – அவர்கள் கனடாவிற்கு தப்பிச் செல்ல முற்பட்டற்காக அந்த அகதிகள் பலரை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவைச் சேர்ந்த இரண்டு காவல் அதிகாரிகள் கடுமையாக அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். அவர்களோடு இருந்தவர்கள் இந்த தகவல்களையெல்லாம் எனக்கு அழுதபடியே தெரிவித்தனர்.
இன்று காலை தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டவர்களை, அவர்கள் ஏற்கனவே இருந்த முகாமிற்கு மீண்டும் கொண்டு சென்று ஒப்படைக்கும் காவல் துறையினர், தங்களை மீண்டும் தாக்குவார்கள் என்ற அச்சம் அவர்களிடையே நிலவுகிறது. “எங்களை அடித்துத் துன்புறுத்தாமல் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும் அண்ணா” என்று கதறுகின்றனர். ‘முகாம்களுக்குத் திரும்பிய பிறகு உங்களுக்கு இருக்கிறது கச்சேரி’ என்று அவர்களிடம் க்யூ பிரிவு அதிகாரிகள் கூறியதே அவர்கள் இப்படி அச்சப்படக் காரணமாகும். எனவே இதில் தமிழக முதல்வர் தலையிட்டு, அவர்கள் துன்புறுத்தப்படாமல் பாதுகாக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாட்டிலுள்ள முகாம்களில் வாழ்ந்துவரும் ஈழத் தமிழ் அகதிகளை தமிழக காவல் துறையின் க்யூ பிரிவினர் பல ஆண்டுக் காலமாக தொடர்ந்து துன்புறுத்தி வருகின்றனர். இரவு நேரங்களில் முகாம்களுக்கு வந்து மிரட்டுவது, விசாரணை என்ற பெயரில் இழிவு படுத்துவது, பெண்களிடம் விசாரணை என்ற பெயரில் இவர்கள், “அங்க ராஜபக்ச செஞ்சது போதாதா? நாங்களும் செய்யணுமா?” என்றெல்லாம் கேட்டு அவர்கள் மனதைக் காயப்படுத்தியுள்ளனர். இப்படியெல்லாம் அவர்களை துன்புறுத்த, இழிவுபடுத்த என்ன காரணம் இருக்கிறது? அவர்கள் விடுதலைக்காக போராடுவது குற்றம் என்று தமிழக காவல் துறையின் க்யூ பிரிவு கருதுகிறதா? இல்லை, உயிர் பிழைக்க தமிழ்நாட்டிற்கு தப்பி வந்தது குற்றம் என்று கூறுகிறதா? புரியவில்லை.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, ஈழத் தமிழ் மக்கள் கெளரவமாக வாழ அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று தமிழக முதல்வரால் உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், க்யூ பிரிவினரின் அச்சுறுத்தல் மட்டும் மாறாமல் தொடர்கிறது. “இங்கே வந்து இவ்வளவு அவமானப்படுவதை விட நாங்கள் அங்கேயே இருந்து செத்துத் தொலைத்திருக்கலாம்” என்று அவர்கள் நொந்து கூறுகிற அளவிற்கு அவர்களை க்யூ பிரிவினர் துன்புறுத்துகின்றனர்.
இலங்கையில் சிங்கள பெளத்த இனவெறி அரசால் துன்புறுத்தலுக்கு ஆளாகி, தப்பிப் பிழைத்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்துள்ள நிலையில், இங்கும் அதே கொடுமை தொடர்கிறது என்றால், பிறகு ஏன் அவர்கள் இங்கிருந்து வேறு ஒரு நாட்டிற்குத் தப்பிச் செல்ல மாட்டார்கள்? ஈழத் தமிழினத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது தாய் தமிழகத்தின் கடமையல்லவா? எனவே இப்படிப்பட்ட துன்புறுத்தல்களுக்கு தமிழக முதல்வர் முற்றுப்புள்ளி வைத்திட உத்தரவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இதேபோன்று ஐயத்தின் பேரில் ஈழத் தமிழர்கள் பல ஆண்டுக் காலம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சிறப்பு முகாம்களிலும் இப்படிப்பட்ட கொடுமை நடக்கிறது. சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் சட்டத்திற்குப் புறம்பாக சிறை வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழ் அகதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியும், தமிழின கட்சிகளும், அமைப்புகளும் பல போராட்டங்களை நடத்திவிட்டன. ஆனால் இதற்கு முன்பு இருந்த அரசு சற்றும் கண்டுகொள்ளவில்லை. ஈழத் தமிழினத்தின் துயர் துடைக்க வரலாற்றுச் சிறப்புமிக்க இரண்டு தீர்மானங்களை நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்கள், இங்குள்ள முகாம்களில் வாழும் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதை நிரந்தரமாகத் தடுக்க வேண்டும், சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடி, அதில் சட்டத்திற்குப் புறம்பாக சிறைப்படுத்தப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்க வேண்டுமாய் நாம் தமிழர் கட்சி கேட்டுக் கொள்கிறது.


வியாழன், 16 ஜூன், 2011

Veera velu nachiyar - drama: ''வீரவேலுநாச்சியார்” நாடகம்

''வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் பத்தொன்பது ஒற்றுமைகள்” – ஈழத்தை நினைவுபடுத்தும் ''வீரவேலுநாச்சியார்” நாடகம்

யூகி
பதிவு செய்த நாள் : June 15, 2011

சென்னை மையத்தில் உள்ள நாரத கானசபா.   தமிழ் உணர்வாளர்களும், பழ.நெடுமாறன்,  தமிழருவி மணியன்,  வீர.சந்தானம்,  சத்யராஜ் போன்ற பலரும் திரண்ட நிலையில் நிறைந்திருந்தது அரங்கம்.
வாசலில் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்தார் வைகோ. அவருடைய தயாரிப்பிலும், ஊக்கத்திலும் உருவாகியிருந்தது ”வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகம்.
கி.பி.1730 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரை எதிர்த்துப் போட்டியிட்ட வேலுநாச்சியார் வரலாற்றின் ஒரு பகுதியைப் பின்னணியாகக் கொண்ட நாடகம். துவங்கியதில் இருந்து பல தகவல்களை விவரித்தபடி ஒரு ”வாய்ஸ் ஓவர்”
”ஆறுமொழிகளை அறிந்த நாச்சியார் தளராத ஊக்கத்துடன் ஆங்கிலேயரை எதிர்த்தவர். தமிழ் மண்ணை மீட்டவர். சிவகங்கை பூமிக்குச் செல்வோம்” என்று குரல் ஓய்ந்ததும் துவங்குகிறது நாடகம்.
பிரிட்டிஷாருடன் தொடர்ந்து மோதிக் கொண்டிருந்த சிவகங்கைச் சீமையில் மன்னரான முத்துவடுக நாதரை தந்திரமாக கோவிலில் வைத்துக் கொல்கிறார்கள் ஆங்கிலேயர். அவரது மறைவுக்குப் பிறகு ஆட்சிப் பொறுப்பிற்கு வருகிறார் மனைவியான வேலுநாச்சியார். அவருக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள் மருது சகோதரர்கள்.
ஆங்கிலேயப்படை விரட்டுகிறது. கண்காணித்துத் துரத்துகிறது. வேலுநாச்சியார் தப்பித்து மக்கள் ஒத்துழைப்புடன் திண்டுக்கல் சென்று திப்புசுல்தானின் உதவியுடன் சிவகங்கையை மறுபடியும் மீட்கிறார். மக்கள் அதைக் கொண்டாடுகிறார்கள். இதைத்தான் நாடகமாக்கியிருந்தார் இயக்குநரான ஸ்ரீராம் சர்மா. எண்பதுக்கும் மேற்பட்ட நடனக் குழுவினரின் நடனங்கள்,  ரகுநாதனின் இசை, மாறும் காட்சிகள் என்றிருந்தாலும் – காட்சி மாறும்போது இடையில் ஏற்படும் இடைவெளியைக் குறைத்திருக்கலாம்.
அத்துடன் வேலுநாச்சியாரை பிரிட்டிஷ்படை தேடும்போது அவருக்கு உதவியதற்காக பலியான உடையாள் என்கிற தாழ்த்தப்பட்ட பெண்ணைப் பற்றிய காட்சியில் – அவரை ஆங்கிலேயர் வந்து விசாரிப்பதும்,  அவள் சொல்ல மறுத்ததும் கொல்லப்படுகிற காட்சியை ஏன் இணைக்காமல் விட்டுவிட்டார்கள்?
வேலுநாச்சியாராக நடித்த மணிமேகலை சர்மாவின் நடிப்பும், விரைவான நடனமும் நாடகத்திற்கு வலுவான அம்சம். இன்னும் ராம்ஜி, பிரியதர்ஷிணி என்று பலருடைய பங்களிப்பு நாடகத்தைக் கவனிக்கத்தக்க ஒன்றாக மாற்றியிருக்கிறது. இஸ்லாமியப் பாடலையும் தகுந்த விதத்தில் பரத நாட்டிய மரபை அடிப்படையாகக் கொண்ட நாடகத்தில் இணைத்திருக்கிறார்கள்.
எதை இழந்தாலும் கால இடைவெளியில் தகுந்த துணை, மக்களின் ஒத்துழைப்புடன் நாட்டை மீட்டெடுக்க முடியும் என்பதைக் காட்சிமொழியில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்கள். எத்தனையோ புராணங்களை முன்வைத்து நாட்டிய நாடகங்கள் நிகழ்த்தப்பட்டிருந்தாலும் – தமிழகத்தின் வரலாற்றை மட்டுமல்ல ஈழம் சார்ந்த நம்பிக்கையையும் புத்துணர்வோடு சொல்கிறது நாடகம். நாடகத்தின் இறுதியில் வரும் ”ஈழ மின்னல் சூழ மின்னுதே” என்கிற வரிகள் அந்த நம்பிக்கையைத் தான் புலப்படுத்துகின்றன.
எந்த நாட்டிய மரபாக இருந்தாலும் அதை அரசியல் உள்ளடக்கத்திற்கும் பொருத்தமாகப் பயன்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்த இந்த நாடகத்திற்குத் தலைமை தாங்கியவர் நாட்டியக் கலைஞரான பத்மா சுப்ரமணியம்.
”வேலுநாச்சியார் ஜான்சிராணிக்கு முன்பே வாழ்ந்து போராடியிருந்தாலும் அவரை சரித்திரப் புத்தகங்களில் காண முடியாதிருப்பது வருத்தமான விஷயம்.
அப்படி இதுவரை காட்டப்படாத சரித்திரத்தை வைகோ மூலம் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்த நாடகம் ஒவ்வொரு பள்ளியிலும் நடக்க
வேண்டும். பெண்மைக்குப் பெருமை தரக்கூடிய இந்த நாடகத்தை தமிழகம் எங்கும் நடத்த வேண்டும். இந்தக் கதையைப் பார்க்கும் போது நாட்டுக்காக நாம் உயிரையும் தியாகம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது.
இந்த மண்ணில் பிறந்த நடன அசைவுகளை நாம் கண்டோம். நல்ல விஷயங்கள் மக்களிடம் போய்ச்சேர வேண்டும்”  என்றார் பத்மா சுப்ரமணியம்.
நிறைவாகப் பேசினார் நாடகத்தைத் தயாரித்த வைகோ. ”இது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்திய கலை. இனியொரு வீர சரித்திரத்திற்குத் தயாராக வேண்டும். இளைய தலைமுறைக்கு உணர்த்துவதற்காக இந்த நாடகம் படைக்கப்பட்டிருக்கிறது. ஜான்சிராணி வாழ்ந்த 77 ஆண்டுகளுக்கு முன்னால் வாளேந்திப் போராடியவர் வேலுநாச்சியார். இந்த வரலாற்றைச் சொல்லும் நாடகம் என்பதால் இதைத் தயாரிப்பதற்கான பொருட்செலவை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்றேன்.
“வேலுநாச்சியாருக்கும் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கும் 19 ஒற்றுமைகள் இருக்கின்றன. இத்தகைய வீரம் பொருந்திய நாடகத்தை உயிரோட்டத்துடன் நடத்தியிருக்கிறார்கள். வீரமும், மானமும் தமிழர் மரபோடு வந்தவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் இந்த நாடகம் நிகழ்த்தப்பட வேண்டும். ஈழம் அமைய வேண்டும், அமையும் என்பதை இதன் மூலம் உணர்த்தியிருக்கிறோம்.” என்று பேசிய வைகோ இந்த நாடக உருவாக்கத்திற்காகச் செலவழித்த காலம் – நான்கு மாதங்கள்.

சனி, 27 நவம்பர், 2010

சங்கப்பலகை : கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள்

சங்கப்பலகை : 

கிரந்தத்தால் தமிழுக்கு ஏற்படும் சீர்கேடுகள்

பேரன்புசால் நண்பர்களே!
வணக்கம்.
சங்கப்பலகை நிகழ்ச்சியில் ஒருங்குறி பற்றிய உரையாடல் தொடர்ச்சியாகப் பலரும் கிரந்தம் குறித்து விளக்க வேண்டியமையால் கிரந்தத்தால் வரும் சீர்கேடுகள் குறித்து
27.11.10 சனி இரவு 10.30 மணிக்கு
மக்கள் தொலைக்காட்சியில்
தோழர் தியாகுவுடன் உரையாடுகிறேன்.
அனைவரும் காண வேண்டுகிறோம்.
மக்கள் தொலைக்காட்சியின் சங்கப்பலகை நிகழ்ச்சியை பின்வரும் இணையத் தளத்தில் பார்க்கலாம்
http://goo.gl/ORRj
http://livetvchannelsfree.net/makkaltv.html
வழக்கம் போல் மீனகம் இணைய தளத்திலும் (meenagam.org) பார்க்கலாம்.