meenakam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
meenakam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 28 மே, 2012

ஆட்சியை மாற்றலாம்! அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்க நினைப்பை..? – ச.ச.முத்து

ஆட்சியை மாற்றலாம்! அவர்களுக்குள் இருக்கும் ஆதிக்க நினைப்பை..? – ச.ச.முத்து

Sri Lanka's President Mahinda Rajapaksa looks up during a War Victory parade in Colombo
இன அழிப்பு, போர்க்குற்றமாக சுருங்கி அதன்பின் மனித உரிமைமீறலாக மாறி இப்போது சிறீலங்காவின் ஆட்சியை மாற்றிவிட்டால் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று முடிவு உருவாகி உள்ளது. பொதுவாக மேற்கில் அப்படி ஒரு கருத்துருவாக்கம் உருவாகி இருப்பதை காணக்கூடியதாக இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவின் நிலையில் அப்படியான ஒரு எண்ணம் இருக்கக்கூடிதாக தெரிகிறது. கடந்த சில நாட்களாக மாறிவரும் நிலைமை அதனைத்தான் எண்ணவைக்கிறது.
பலம் ஏதுமற்ற ஒரு இனமாக நாம் மாறிய 2009 மே மாதத்துக்கு பின்னர் எங்களுடைய நோக்கம், எங்களுடைய பாதை என்று எதை வரித்து இறங்கினாலும் அதனை மாற்றி எம்மை அதனிலும் வலுக்குறைந்த ஒரு போராட்ட முறைக்குள் தள்ளுவதாகவே குறிப்பாக மேற்குலகின் நகர்வாகவும் இந்தியாவின் பார்வையாகவும் இருந்துவருகிறது.
2009 முள்ளிவாய்க்கால் முடிந்தவுடன், ‘இன அழிப்பு என்றும் இன அழிப்பை செய்த சிங்கள ஆட்சியாளர்களை கூண்டில் ஏற்ற வேண்டும்’ என்றும் ‘இன அழிப்புக்கு உள்ளான எமது மக்களுக்கு நிரந்தர தீர்வாக சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான ஒரு சுய ஆட்சியை’ கோரினோம். ஆனால் மேற்குலகோ போர்க்குற்றம் என்பதையே திரும்பதிரும்ப சொல்லி எம்மையும் இன அழிப்பு என்ற கோசத்தில் இருந்து திசைமாற்றி போர்க்குற்ற விசாரணை என்ற கோரிக்கைக்குள் வலிந்து தள்ளியது.
அதிலிருந்து இன்னும் கொஞ்சம் கீழிறங்கி மனித உரிமை மீறல்கள் நடந்திருப்பதாகவும் அதற்கு தீர்வு வடக்கில் தேர்தல் நடத்தினால் போதுமானது என்றும் தீர்மானங்களும் தீர்மானங்களை வரவேற்கும் தீர்மானங்களும் சற்று முந்திய மாதங்களில் நடந்து முடிந்திருந்தை கண்டிருப்பீர்கள். அதனைக்கூட சிங்கள தேசத்தின் இனவாத முகத்தை சர்வதேசம் இனம்கண்டு கொண்டிருப்பதன் ஆரம்ப அடையாளம் என்று எமக்கு நாமே ஆறுதல் சொல்லியபடி சந்தோசத்துடனே பார்த்தோம்.
ஆனால் உலக ராஜதந்திரம் வேறுவிதமாக ஓட ஆரம்பித்துள்ளது. தூக்கிய எதிர்ப்புப் பதாகைகளை எல்லாம் எந்தவொரு எதிர்ப்பும் இன்றி தூக்கி வீசி விட்டு மேற்குலகு சொல்லும் கோசங்களை மட்டுமேதூக்கி ஏந்தி நிற்பதுதான் ராஜதந்திரம் என்று நாம் நினைத்தோம். அதனையே செய்யவும் செய்தோம்.
எமது ராஜதந்திரமாக பத்து கேட்போம் அவர்கள் கொடுக்கும் இரண்டை தன்னும் வாங்கி கொள்ளுவோம் என்பதே இருக்கிறது. உண்மையான ராஜதந்திரம் எப்படி என்பதற்கு சொல்லப்படுவதான The principle of give and take is the principle of Diplomacy- give one and take ten (கொடுத்து வாங்குவது என்பது இராஜதந்திரத்தில் தலையாயவிடயம் – ஒன்றைக் கொடுத்து பத்தை வாங்குவது) என்பதற்கமைய கொடுப்பதற்கு ஏதுமற்ற இனமான நாம் எமது தேசியத்துக்கான சில அடிப்படைகளை விட்டுகொடுப்பதே சிறந்த இராஜதந்திரம் என்று நினைத்து கொண்டதன் பலன் இப்போது மகிந்தவை ஆட்சிக்கட்டிலை விட்டு இறக்கி விட்டால் தமிழர்களின் பிரச்சினை அனைத்தும் தீர்க்கப்பட்டுவிடும் என்று சொல்லி அதனை நோக்கியதாக நகர்வுகளை ஆரம்பித்தும் உள்ளது.
சம்பந்தர் யாழ்ப்பாணத்தில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து நடாத்திய மே தினம் என்பதும் இந்த நாடகத்தின் ஒரு காட்சிதான். சிங்கள தேசத்தின் இறைமையை மீறாத கீழ்படிவு எமக்கு உண்டு என்பதை காட்டுவதற்காகவே சிங்கக் கொடியையும் உயர்த்தி தென்னிலங்கை வரை தெரியக் காட்டினார். அதற்கு பிறகு காட்சிகள் மிக வேகமாகவே மாற்றங்கொள்ள தொடங்கின. நாடாளுமன்ற தெரிவுக்குழுவை இவ்வளவு நாளும் நிராகரித்துவந்த சம்பந்தர் கும்பல் இப்போது அதிலும் இணையும் சாத்தியங்கள் தெளிவாகவே தெரிகிறது.
இதை எழுதிக்கொண்டிருக்கும்போதோ அல்லது இன்னும் சில நாட்களுக்குள்ளாகவோ நாடாளுமன்ற தெரிவு குழுவில் இணையும் அறிவிப்பு வெளியானாலும் வெளியாகலாம். கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளை கலந்து ஆலோசிக்காமல் சம்பந்தரும் அவரின் சகாக்களும் இந்த முடிவை அறிவிக்கும் வாய்ப்புகளும் தெரிகின்றன.
இதற்கு முன்னர் காத்திரமான அடிப்படை அம்சங்களில் மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட்டமைப்பை நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு அழைத்துவருவோம் என ஐக்கியதேசிய கட்சி கடிதம் மூலம் தெரிவித்திருந்தது. அதனை அடுத்து மே 14ம் திகதி ஐக்கிய தேசியக் கட்சிக்குழு ஒன்று சிறீலங்கா ஜனாதிபதியை சந்தித்திருந்தது.
கூட்டமைப்பு சம்பந்தமாக இத்தகைய நகர்வுகள் நடந்துகொண்டிருக்க… இன்னொரு புறத்தில்… இன்று (21.05.2012) இலங்கை நேரம் மாலை 5 மணிக்கு சரத் பொன்சேகா நவலோக மருத்துவமனையில் இருந்து விடுதலையாகி உள்ளார். இவரின் விடுதலைக்கு எந்தவொரு வெளிநாட்டு அழுத்தமும் காரணம் இல்லை என்று அரசு தரப்பில் கூறப்பட்டாலும் சிங்கள ஊடகங்களும் சிங்கள அரசியல்வாதிகளும் கட்சிகளும் வெளி சக்தியின் அழுத்தம் காரணமாகவே இவரின் விடுதலை நிகழ்ந்துள்ளதாக கொதித்து போய் இருக்கிறார்கள்.
ஜேனீவாவில் கொண்டுவரப்பட்ட தீர்மானம், சிங்கள தேசத்தின் இன்றைய பொருளாதார நிலை என்பன சிங்கள தேசத்தின் ஆட்சியாளர்கள் மீது மேற்குலகு நிபந்தனைகளை விதிக்கும் சந்தர்ப்பங்களை சாத்தியப்படுத்தி உள்ளது. ஆனால் துரதிஸ்டவசமாக மேற்குலகு ஒரு ஆட்சி
மாற்றம் ஒன்றையே தமது ஆக இறுதியான செயற்பாடாக முன்வைத்து நகர்கின்றன என்பதுதான் உண்மை.
அதற்கு ஆதரவான நிலையை புலம்பெயர் தமிழர்களிடம் ஏற்படுத்துவதற்காக இங்கிருக்கும் சில அமைப்புகளை கூட்டறிக்கைகளை வெளியிடவைத்தும் இப்போதைக்கு மகிந்தவை நீக்குவோம் அதன் பிறகு புதிதாக ஆட்சியேறும் சரத்பொன்சேகாவோ, ரணில் விக்ரமசிங்காவோ தமிழர்களுக்கு உரிமைகளை படிப்படியாக வழங்குவார்கள் என்ற கருத்தை இவர்கள் மூலம் பரப்பவும் முயற்சிகள் தொடங்க உள்ளன. (தொடங்கியும்விட்டது) இங்குதான் மேற்குலகு தோற்கப் போகின்றது. அதிலும் அது சிங்களபேரினவாத எண்ணத்தின் முன் தோற்றுக் குனியப் போகின்றது.
மியன்மாரில் ஆட்சிமாற்றம் ஒன்றினுடாக மக்களுக்கு பயமற்று வாழும் உரிமைகளையும் விடுதலையையும் ஒருவேளை மேற்குலகம் வாங்கிக் கொடுக்கலாம். அதுவே சில
வேளை லிபியாவிலும், துனிசியாவிலும் சாத்தியமாகியும் இருக்கலாம். ஆனால் சிங்களதேசத்தில் இது சாத்தியமே இல்லை. ஏனெனில் சிங்கள சோவனிசம் அல்லது சிங்கள பேரினவாத எண்ணம் என்பது வெறும் ஆட்சிகட்டிலிலும் அதன் ஆட்சிதலைமையிலும் மட்டும் இல்லை. அது சிங்கள இனத்தின் தமிழர் சம்பந்தமான நிலைப்பாடு என்பது தொன்மநினைவுகளிலும் (அலவா) பண்டைய மகாவம்ச கோட்பாடுகளிலும் ஆழ புதைந்து போய் இருக்கிறது.
ஒரு மகிந்தவை தூக்கி எறிந்தால் அடுத்து வருகின்ற ஒரு புஞ்சி பண்டாவோ யாரோ இன்னும் மோசமான பேரினவாத நினைப்புடன் வருவார். இந்த நினைப்பை மாற்றுவதற்கு ஏதுவான சர்வதேச சட்டங்கள் எதுவும் மேற்கிடமும் இல்லை சிங்களதேசத்திடமும் இல்லை. ஏனெனில் சிங்களதேசம் கட்டியெழுப்ப பட்டிருப்பது இத்தகைய தமிழர் எதிர்ப்பு என்ற கோட்பாடுகளினதும் சிங்களபேரினவாத சிந்தனைகளினதும் மீதுதான்.
இத்தகைய சிந்தனைகளில் மாற்றம் ஏற்படும்வரை யார் சிங்களதேசத்தின் தலைவராக வந்தாலும் பண்டாரநாயகா செய்ததையே, சிறிமா செய்ததையே, மகிந்த செய்ததையே… மீண்டும் மீண்டும் செய்வார்கள். இந்தப் புரிதல் ஒரு கட்டத்தில் மேற்குலகுக்கு வந்தே தீரும். அதுவரை நாம் காத்திருக்காமல், எமது கோரிக்கைகளை அதே வீரியத்துடன் தொடர்ந்தும் வெளிப்படுத்தியே வரவேண்டும்.
இப்போது இருக்கின்ற ஒரே ஒரு ஆயுதம். போர்க்குற்றமும், இனப்படுகொலை சம்பந்தமான சர்வதேச விசாரணையுமே ஆகும். அதற்காக சர்வதேச அமைப்புகளையும் பிரித்தானிய நாடாளுமன்றத்தையும் கோரும் முயற்சிகளைத் தொடரவேண்டும்.
நன்றி : ஈழமுரசு

சனி, 26 மே, 2012

அரசு தொடந்தும் மக்களைச் சித்திரவதை செய்கிறது

அரசு தொடந்தும் மக்களைச் சித்திரவதை செய்கிறது – அம்னஸ்டி கண்டனம்

amnesty
இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் தன்னிச்சையாக மக்களை தடுத்து வைப்பதாகவும் சித்ரவதை செய்வதாகவும் முறையற்ற விதத்தில் நடத்துவதாகவும், பொதுமக்கள் காணாமல் போதல்கள் நடப்பதாகவும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான அம்னஸ்டி இன்டர்நேஷனல் தனது ஆண்டறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளது.
பல்வேறு நாடுகளில் உள்ள மனித உரிமைகள் நிலவரம் குறித்து தனது ஆண்டறிக்கையில் அந்த அமைப்பு விபரமாக குறிப்பிட்டுள்ளது. அதில் இலங்கை குறித்து குறிப்பிடும் போதே இந்தக் கருத்துக்களை அது கூறியுள்ளது.
மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த செயல்கள் தொடர்பில் எவரும் தண்டிக்கப்படாமல் இருக்கும் பல நிகழ்வுகள் குறித்து இலங்கை அரசாங்கம் கவனத்தில் எடுக்காமல் இருப்பதாகவும் அம்னெஸ்டி குற்றஞ்சாட்டியுள்ளது.
2009 ஆம் ஆண்டில் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரில் இரு தரப்பும் செய்த போர்க்குற்றச் சாட்டுக்களை அரசாங்கம் நிராகரித்து வந்ததால், அது குறித்து ஒரு சர்வதேச சுயாதீன விசாரணை நடத்துமாறு அம்னெஸ்டியும் கோரும் நிலைமை உருவானது என்றும் அது கூறியுள்ளது.
இந்தியா குறித்து கருத்து வெளியிட்டுள்ள அம்னெஸ்டி அமைப்பு, பொருளாதார வளர்ச்சியில் தனது கவனத்தை குவித்துள்ள இந்திய அரசாங்கம், பல சந்தர்ப்பங்களில் அதற்கு பதிலாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மனித உரிமைகளை பாதுகாத்து, வளர்ப்பதை பலியிட்டிருக்கிறது என்று கூறியுள்ளது.
மாவோயிஸ்டுகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் இந்தியாவில் 250 பேர் வரை இறந்திருப்பதாகவும், டில்லி மற்றும் மும்பாயில் தாக்குதல்களில் 50 பேர் வரை கொல்லப்பட்டிருப்பதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
அன்னா ஹசாரேயின் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் ஆரம்பத்தில் வெற்றிபெற்றதாக கூறியுள்ள அம்னெஸ்டி, ஆனால் அதற்கான சட்டங்களை கொண்டுவருவதில் நாடாளுமன்றம் தோல்வியடைந்துவிட்டது என்றும் கூறியுள்ளது.

திங்கள், 14 மே, 2012

விடுதலையான தமிழ்ப் பெண் அரசியல் கைதி: பொறுப்பேற்க யாருமின்றி மீண்டும் சிறையில்..

விடுதலையான தமிழ்ப் பெண் அரசியல் கைதி:  பொறுப்பேற்க யாருமின்றி மீண்டும் சிறையில்..!

womain in sri lanka jail
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகி வெலிக்கடைச் சிறையில் கடந்த நான்கு வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ்ப் பெண் ஒருவர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ள போதிலும், அவரைப் பொறுப்பேற்க யாரும் இல்லாமையால் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பிவைக்கப்பட்ட பரிதாப நிகழ்வு கொழும்பில் இடம்பெற்றிருக்கின்றது.
மட்டக்களப்பு, செங்கலடி உமா மில் ரோட்டைச் சேர்ந்த சிவராணி சந்திரகுமார் என்ற 30 வயதான பெண்ணுக்கே இந்த பரிதாபம் நிகழ்ந்திருக்கின்றது.
2008 ஆகஸ்ட் 29ம் திகதி, குடும்ப கஷ்ட நிலை காரணமாக கொழும்பில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பிலிருந்து பஸ்ஸில் வந்துகொண்டிருந்த போதே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இவர், பாதுகாப்புப் படையினருடைய கடுமையான சித்திரவதைகளின் பின்னர் வெலிக்கடை சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் தடுத்துவைக்கப்பட்டிருந்தார்.
கடந்த நான்கு வருடங்களாக சிறையில் கடுமையான சித்திரவதைக்கும் மன அழுத்தங்களுக்கும் உள்ளாக்கப்பட்ட இவர், அதனால் தற்போது ஒரு மனநோயாளியாகியிருப்பதாக இவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தெரிவித்தார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி இவர் கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது அவரை விடுவிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும், அவரைப் பொறுப்பேற்பதற்கு யாரும் முன்வராததால் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டார்.
இந்த நிலையில் மீண்டும் கடந்த 8ம் திகதி குறித்த பெண்ணை மீண்டும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரது மனோநிலையைக் கருத்திற்கொண்டு அவரை அங்கொடை மனநோயாளர் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இருந்தபோதிலும் அவர் மோசமாக மனநிலை பாதிக்கப்பட்டிருப்தனால், அவரது நலன்களைக் கவனிப்பதற்காக யாரும் முன்வராமையால் அவரை அனுமதிக்க மருத்துவமனை வட்டாரம் மறுத்துவிட்டதாகத் தெரிகின்றது.
இந்த நிலையில் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கே அனுப்பப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு, செங்கலடியிலுள்ள அவரது உறவினர்களைக் கண்டுபிடிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் பலனளிக்கவில்லை.
எனவே குறித்த இந்தப் பெண் இயல்பு நிலைக்குத் திரும்பி தேகாரோக்கியத்துடனும் மன நலத்துடனும் வாழ்வதற்கு சமூக பொதுநல அமைப்புகள், மனிதாபிமான தொண்டு நிறுவனங்கள் மற்றும் மனித நேய அமைப்புகளை முன்வர வேண்டுமென அரசியல் கைதிகளின் வெலிக்கடை பெண்கள் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வெள்ளி, 11 மே, 2012

"நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வந்தார்”! – பழ. கருப்பையா

"நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வந்தார்”! – பழ. கருப்பையா

nithyanantha-aadheenam
ஒரே வீட்டில் மூன்று நாட்களுக்கு மேல் பிச்சை கொள்ள வேண்டாம் என்றான் புத்தன்! அது அவ் வீட்டாரோடு தொடர்பும், அதன் வழியாகப் பற்றும் வளரக் காரணமாகுமாம்!
ஒரே மரத்தடியில் மூன்று நாட்களுக்கு மேல் படுத்துறங்க வேண்டாம் என்றும் சொல்கிறான். வேறொருவன் அங்கு படுத்துறங்க நேரிட்டால், அவனிடம், “”எழுந்திரு; இந்த இடம் என்னுடையது” என்று மல்லுக்கு நிற்க நேரிடும். எல்லாவற்றையும் துறந்து விட்டு வந்து, கேவலம் இந்த மரத்தடி இடத்தை உரிமை பாராட்டுகின்ற அசிங்கங்கள் நேரிடும்! மனத்தின் நீர்மை இப்படிப்பட்டதுதான் என்பதால், “கருத்தோடிருங்கள், கருத்தோடிருங்கள்’ என்று பன்னிப் பன்னிச் சொல்லுவான் புத்தன்!
புத்தன் மன்னனாக இருந்தவன்; எல்லையற்ற செல்வத்தின் மீது மட்டுமன்று; மக்களின் மீதும் அதிகாரம் உடையவனாக இருந்தான்!
பல்லாயிரம் பேருக்கு வகைப்பாடுடைய விருந்தளிக்க முடிந்தவன், ஒரு மஞ்சளாடை அணிந்து தன்னுடைய உணவுக்காக ஓர் எளிய குடிசையின் முன்னால் கையேந்தி நிற்பதற்கு முன் வந்ததையும், அதிகார மணிமுடியைத் துறந்துவிட்டுத் தலையை முண்டிதம் செய்து கொண்டதையும் சிந்தித்துப் பார்க்கும்போது, துறவு நிலை அரச நிலைக்கும் மேலானதாய் இருக்க வேண்டும் என்று புத்தனின் துறவால் உய்த்தறிய முடிகிறது!
அரசனாக இருந்து துறவியாக மாறிய இன்னொருவன் பத்ரகிரி. ஒரு கோயிலின் மேற்கு வாயிலில் பிச்சையைப் பெறுவதற்கு ஓர் ஓட்டினை வைத்திருந்ததற்காகவும், தன்னை ஒட்டிக் கொண்ட நாயை விரட்ட மனம் ஒப்பாது அதை வளர்த்து வந்ததற்காகவும், “பத்ரகிரி ஒரு சம்சாரி’ என்று அந்தக் கோயிலின் மேற்கு வாயிலில் இருந்த பட்டினத்தார் கேலி செய்தாராம்!
காரணம் ஓர் ஓடு கூட ஓர் உடைமைப் பொருளாகும் என்றெண்ணிப் பட்டினத்தார் கைகளைச் சேர்த்தே பிச்சை ஏற்று உண்டவராம்!
“”உடை கோவணம் உண்டு; உறங்கப் புறந்திண்ணை உண்டு; பசி வந்தால் உணவிட வீதிக்கு நல்ல மாதர்கள் உண்டு இந்த மேதினியில்! ஏதுக்கு நீ சலித்தாய் மனமே” என்று மனத்தினைச் சவுக்கால் அடித்து ஒழுங்கு செய்யும் இயல்பினர் பட்டினத்தார்!
காவி என்பது துறவின் அடையாளம்; அதை அதற்குத் தகுதியில்லாதவன் அணியக் கூடாது! பசு மேயப் போவது புல்லைத்தான்; அதற்கு எதற்குப் புலியின் தோலாலான போர்வை? என்று கேட்பான் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான வள்ளுவன்! “பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்தற்று’ (273).
ஆதீனங்களாக இருப்பவர்கள் பேசும்போது, “நான் சொன்னேன்’ என்று சொல்ல மாட்டார்கள். “நாங்கள் சொன்னோம்’ என்றுதான் சொல்லுவார்கள்! “நான்’ என்பது அகந்தைச் சொல்லாம்; “நான்’ “எனது’ என்னும் சொற்களைக் கூடத் துறந்து விட்டிருக்க வேண்டியவர்கள் அவர்கள். ஆனால், இவர்களின் மடங்களுக்குள் பதுக்கி வைத்திருக்கிற சொத்தையும் பணத்தையும் சோதனையிட வருமானவரித் துறை வருகிறது!
“என்னிடம் கோவணத்தையும் உத்திராட்சத்தையும் தவிர வேறென்ன இருக்க முடியும்’ என்று சொல்ல வேண்டியதுதானே! “இன்ன மந்திரியின் ஏவல் இது’ என்று ஏன் புலம்ப வேண்டும்?
ஒரு காலத்தில் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிகள் ஏலம் விடப்பட்டது போல், ஆதீனகர்த்தர் பதவிகளும் இப்போது ஏலம் விடப்படுகின்றன.
பழைய ஆதீனகர்த்தருக்கு ஐந்து கோடி ரொக்கம்; தங்கச் சிம்மாசனம்; தங்கச் செங்கோல் – அடுத்தடுத்த தவணைகளில் இன்னும் என்னென்ன வழங்கப்படுமோ? இந்திய ரூபாய் மதிப்புச் சரிந்து வருவதால் அமெரிக்க டாலராகவே வழங்கப்படலாம்!
சர்வதேச மதிப்புக்குச் சம்பந்தர் மடத்தை உயர்த்த வருகிறவருக்கு சர்வதேச மதிப்புள்ள டாலருக்கா பஞ்சம்?
இன்றைய ஆதீனத்திற்கு உதவியாளர்களெல்லாம் பெண்கள்தாம்! இன்ன புடவைக் கடையை இன்ன நடிகை திறந்து வைத்தார் என்று பெருமை பேசப்படுவதுபோல, இன்ன ஆதீனம் பதவி ஏற்றுக் கொண்டபோது இன்ன நடிகை முன்னிலை வகித்தார் என்பதும் பெருமையாகப் பேசப்படுகிறதே இது காலக் கொடுமை!
அரசியல்வாதிகள் மீது குற்ற வழக்குகள் பெருகப் பெருக “இவ்வளவுதானே’ என்று அவர்கள் வெட்கத்தை உதிர்த்து விடுவது போல, ஆதீனகர்த்தர்களும் சொரணை இல்லாமல் போய் விடுவார்கள் போலிருக்கிறது!
ஆதீனகர்த்தர்களின் எண்ணிக்கை இருநூற்றுத் தொண்ணூறைத் தாண்டிவிட்டது. ஞானசம்பந்தரைத் தவிர வேறு யாரையாவது யாருக்காவது நினைவிருக்கிறதா? ஞானசம்பந்தர் தங்கச் செங்கோல் வைத்துக் கொண்டா சைவத்தை வளர்த்தார்?
ஞானசம்பந்தர் சைவத்தை வளர்த்தார் என்பதன் பொருள் பெளத்தத்திலிருந்தும் சமணத்திலிருந்தும் எண்ணில் அடங்காதவர்களை மதம் மாற்றினார் என்பதல்லவா!
இப்போது சைவம் யாரையும் தன்னுடைய மடிப்புக்குள் புதிதாக அனுமதிப்பதில்லை. ஒருவன் சைவன் என்றால் அவன் சைவனாகவே பிறக்கிறான் என்பதுதான்!
ஏனெனில் சைவனாகப் பிறப்பவனுக்குச் சமய அடையாளம் மட்டும் போதாது. அவனுக்குச் சாதி அடையாளமும் வேண்டும்!
ஒரு வெள்ளைக்காரனைச் சைவ சமயத்தில் சேர்ப்பதாக இருந்தால், அவனை எந்தச் சாதியில் சேர்ப்பது என்பதற்கு விடை கண்டாக வேண்டும்!
அவனைச் சேர்த்துக் கொள்ள எந்தச் சாதியும் இசையாது! சாதி உறுப்பினர்கள் சேர்க்கப்படுபவர்கள் அல்லர்; பிறப்பவர்களே!
இதே நிலைதான் சைவத்திற்கும். மக்கள்தொகைப் பெருக்கத்தால் சைவர்களின் எண்ணிக்கை கூட முடியுமே தவிர, வேறு எந்த விதத்தாலும் கூட்ட முடியாது. சைவ மடங்களை எல்லாம் மூடி விட்டாலும் இந்த எண்ணிக்கை மாறப் போவதில்லை.
தமிழனுக்குத் தனியான நிலம் உண்டு; தனியான மொழி உண்டு; தனியான பண்பாடு உண்டு. தனியான சமயங்கள் உண்டு; தனியான மெய்யியல் கொள்கைகளும் உண்டு.
ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரசாவர்க்கார் காலம் தொட்டுத் தமிழர்களெல்லாம் இந்துக்களாக ஆக்கப்பட்டு விட்டார்கள். அப்படி ஒரு பொதுமை வழக்கு உருவாக்கப்பட்டு விட்டது. இந்துக்களின் மெய்யியல் நூலாகப் பகவத் கீதை ஆக்கப்பட்டது!
தமிழனின் சமய அடையாள இழப்புக் குறித்து எந்தச் சைவ, வைணவ மடங்களாவது போராடியதுண்டா? எதற்கு ஆயிரம் வேலி நிலம்? எதற்குத் தங்கச் செங்கோல்?
தமிழனின் சமயங்கள் சைவம், வைணவம், முருக வழிபாடு, இயற்கை வழிபாடு, மூதாதையர் வழிபாடு என்றிவைதாம். மூதாதையரைத் “தென்புலத்தார்’ (43) என்பான் அறிவுப் பேராசான் வள்ளுவன்!
தமிழனின் சமய நூல்கள் நாயன்மார்களின் திருமுறைகளும், ஆழ்வார்களின் பிரபந்தங்களும், திருமுருகாற்றுப் படையும், உலகிலேயே மிகச் சிறிய நூலான பன்னிரண்டே சூத்திரங்கள் அடங்கிய சிவஞான போதமுமேதாம்; தமிழர்கள் எல்லாரும் ஒப்ப முடிந்த வேத நூல் சமயங் கடந்த திருக்குறளாகும்! ஒரு காலத்திலும் கீதை தமிழனின் மெய்யியல் நூலாக முடியாது என்று எந்த ஆதீனமாவது தமிழர்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியதுண்டா?
ஞானசம்பந்தர் வாதுக்குப் போனார்; அவரிடம் தோல்வியடைந்ததாகச் சொல்லப்பட்ட ஏழாயிரம் சமணர்களைக் கழுவிலேற்றினார்! சமணம் ஒழிந்தது; சைவம் தழைத்தது; மெத்தச் சரி!
திருமறைகளும், பிரபந்தங்களும், சிவலிங்கமும் பெரியாரால் கேலிக்குள்ளாக்கப்பட்டபோது, எந்த ஆதீனமாவது பெரியாரை வாதுக்கழைத்ததுண்டா? அப்படி நினைத்துப் பார்க்கவே உங்களால் முடியவில்லையே!
தமிழரின் சமயங் குறித்தும் தமிழின் பெருமை குறித்தும் விழிப்பை உண்டாக்கியவர்களும் அதை இயக்கமாக்கியவர்களும் முதற் கட்டத்தில் மறைமலை அடிகளும், பிற்கட்டத்தில் தேவநேயப் பாவாணரும்தானே!
கொழுத்த பணத்தில் புரள்கிற ஆதீனங்கள் இவர்களையாவது ஆதரித்துப் புரந்ததுண்டா?
தமிழ்நாட்டை மராத்தியர்களும் நாயக்கர்களும் ஆண்டபோது, தமிழ்க் கடவுள் முருகனை முன்னிறுத்தித் திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரின் நோக்கம் தெலுங்கரினின்றும், மராத்தியரினின்றும் தமிழ்ச் சமயத்தை வேறுபடுத்திக் காட்டுவதுதான்! அதனால்தான் தமிழர்க்கே உரிய முருகன் பாடுபொருளாக்கப்பட்டான்!
பெளத்தமும், சமணமும் துறவுதான் பரிநிருவாணத்திற்குரிய வழி என்று வற்புறுத்தியபோது, தமிழ் இளைஞர்கள் இளந்துறவிகளானார்கள்! அப்போது ஞானசம்பந்தர் “எதற்கு இந்த வறண்ட வாழ்க்கை? நீங்கள் இங்கே வாருங்கள்; சிரமமில்லாமல் மண்ணில் பெண்ணோடு நல்ல வண்ணம் வாழலாம்; மேலும் எங்கள் சிவனே பெண்ணோடுதான் இருக்கிறார்’ என்று கவர்ச்சியூட்டி ஞானசம்பந்தர் மாற்று மதத்தினரை இழுத்தார்!
“”பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” என்று அவர் மக்களுக்குச் சொன்னதைத் தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது!
சமயத் தலைவர்கள் ஆதீனங்களில்லை; அவர்கள் மடங்களின் மேலாளர்கள்!
வள்ளலார் போன்றவர்களே சமுதாயத்தையே மாற்றி அமைக்க வந்தவர்கள்!
வள்ளலார் ஒரு கட்டத்தில் சைவத்திற்கு மாற்று நிலை எடுத்தார். அது முக்கியமில்லை. “”பசிநீக்கம்; உயிரிரக்கம்” இரண்டையுமே தலையாய கொள்கையாகக் கொண்டார்!
பதவியால், பணத்தால், சாதியால் உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்னும் நிலை போய், “”ஒத்தாரும் தாழ்ந்தாரும் உயர்ந்தாரும் ஒருமையுளராகி உலகியல் நடத்த வேண்டும்” என்றார் பசியை நீக்குவதற்கு அணையாத தீயை அடுப்பில் மூட்டிய வள்ளற்பெருமான்!
இவ்வளவு சிறந்த வள்ளலாருக்கு சிவபெருமான் கனவில் வந்து எதுவும் சொல்லவில்லை. “”நின் கருத்தை அறியேன் நிர்க்குணனே நடராச நிபுண மணி விளக்கே” என்றுதான் பாடுகிறார்!
மகாத்மா காந்தி “வாய்மைதான் கடவுள்’ என்று உய்த்துணர்ந்து சொன்னதற்குக் காரணம் இறைவன் அவருக்கு நேரில் வராததுதான்!
நல்லவேளை ஆதீனங்களின் கனவில் நயன்தாரா வராமல் சிவபெருமான் வருவது நல்லதுதான் என்றாலும், அவர் வந்ததை உயர் நீதிமன்றம் விசாரித்து அறியுமாறு நீதிமன்றத்தின் கவனத்திற்கு வழக்கறிஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்!
மீனாட்சி அம்மன் கோயில் மதுரை ஆதீனத்திற்குச் சொந்தம் என்று கிளம்பி விட்டார்கள். ரியல் எஸ்டேட் விலை ஏறி விட்டதுதான் காரணம்!
பாண்டியர்கள் தாய் மீனாட்சிக்கு அளித்த சீதனம் அது! எல்லாம் அறிந்தவன் நீ; எல்லாம் வல்லவன் நீ சொக்கா! கடைசியில் உன் மடியிலேயே கை வைத்து விட்டார்கள்!
ஆட்டத்தை நிறுத்து சொக்கா!
உன் ஆட்டத்தை அல்ல;
ஆடக் கூடாதவர்களின் ஆட்டத்தை!
“”பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே” என்று அவர் மக்களுக்குச் சொன்னதைத் தங்களுக்குத்தான் பாடியதாக ஆதீனங்கள் சில கருதியதன் விளைவு மடத்தின் போக்கே மாறிவிட்டது!
(பழ. கருப்பையா சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், கட்டுரையாளர். அதிமுக சட்டமன்ற உறுப்பினராக தற்போது இருக்கிறார்)
நன்றி: தினமணி

வியாழன், 10 மே, 2012

பிரித்தானிய ஊடக விழாவில் சிறிலங்காவின் கொலைக்களங்களுக்கு இரு விருதுகள்

பிரித்தானிய ஊடக விழாவில் சிறிலங்காவின் கொலைக்களங்களுக்கு இரு விருதுகள்

Jon_Snow_with_Jamal_Osman__Journalist_of_the_Year_at_the_One_World_Media_Awards_2012
நேற்றிரவு நடைபெற்ற இந்த விழாவில், இந்த ஆண்டின் சிறந்த தொலைக்காட்சிக்கான விருதையும், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் வென்றுள்ளது.
இந்த விருதுகளைத் தெரிவு செய்த இரு நடுவர்களும் சனல் 4 தொலைக்காட்சி துணிச்சல் மிக்கதும் அசாதாரணமானதுமான முயற்சியை பாராட்டியுள்ளனர்.
கண்டிப்பாக பதிலளிக்கப்பட வேண்டிய கொடூரங்களை சனல்4 தொலைக்காட்சி வெளிக்கொண்டு வந்துள்ளதாகவும், இந்த ஆவணப்படம் மூலம் இந்தக் கொடூரங்கள் அனைத்துலக கவனத்தை பெற்றதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

செவ்வாய், 8 மே, 2012

மத்திய அரசுக்கு எதிராக புதிய உத்தி வகுக்கிறது சிறிலங்கா


இந்திய மாநில முதல்வர்களுக்கு பீரிஸ் கடிதம் – மத்திய அரசுக்கு எதிராக புதிய வியூகம் வகுக்கிறது சிறிலங்கா

prof_-g_l_peiris
 http://meenakam.com/wp-content/uploads/2012/05/peris-news1.jpg

வியாழன், 26 ஏப்ரல், 2012

சென்றார்கள், திரும்பினார்கள் – தலையங்கம் (புரட்சிப்பெரியார் முழக்கம்)

சென்றார்கள், திரும்பினார்கள் – தலையங்கம் (புரட்சிப்பெரியார் முழக்கம்)

congress_mps
இந்திய நாடாளுமன்ற குழு எதிர்க்கட்சித் தலைவர் பாரதிய ஜனதாவைச் சார்ந்த சுஷ்மா சுவராஜ் தலைமையில் இலங்கைச் சென்று, தமிழர் வாழும் பகுதிகளையும் சில அகதிகள் முகாம்களையும் பார்வையிட்டு, ராஜபக்சேவை சந்தித்துவிட்டு திரும்பியுள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., ம.தி.மு.க. உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய கட்சிகள் இதில் இடம் பெறவில்லை. இலங்கை அரசின் போர்க் குற்றங்களைக் கடுமையாக விமர்சித்து வரும் இந்திய கம்யூனி°ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பிரதிநிதிகள், இக்குழுவில் இராசபக்சேவைத் திருப்திப்படுத்தும் நோக்கத்தோடு சேர்க்கப்படவில்லை என்று தெரிகிறது.
ஈழத்தில் இறுதி கட்ட இனப் படுகொலையின்போது போரை நிறுத்தி, தமிழினத்தைக் காப்பாற்றுங்கள் என்று தமிழகமே திரண்டு நின்று குரல் கொடுத்தபோது, அதை காதில் போட்டுக் கொள்ள காங்கிர° ஆட்சி தயாராக இல்லை. இனப் படுகொலை வெற்றிகரமாக நடந்து முடியட்டும் என்றே அதற்கான உதவிகளை செய்து கொண்டு காத்திருந்தார்கள்.
இப்போது போரின் பாதிப்புகளைக் கண்டறிய குழுவை அனுப்புகிறார்கள். ஏதோ, ராஜபக்சே ஜனநாயக ஆட்சியை நடத்தி வருவது போலவும், குற்றங்குறைகளை சுட்டிக் காட்டினால் அவரது கருணை உள்ளம் அதைக் களைவதற்கு துடித்து எழும் என்பது போலவும் ஒரு பம்மாத்து காட்டப்படுகிறது. இந்தக் குழு இப்போது அவசரமாக இலங்கைக்கு அனுப்பப்பட்டிருப்பது ஏன்? எதிர்வரும் நவம்பரில் இலங்கையின் மனித உரிமை தொடர்பான விவாதம் அய்.நா. மனித உரிமைக் குழுவில் விவாதத்துக்கு வரவிருக்கிறது. அப்போது இந்திய நாடாளுமன்றக் குழு நேரில் பார்வையிட்டு, நிவாரணப் பணிகள் நடந்து கொண்டிருப்பதாக கூறிவிட்டதாக இலங்கை அரசு கூறிக் கொள்ளலாம். அதற்கு வேண்டுமானால் இக்குழுவின் பயணம் பயன்படலாம். இனப்படுகொலை நடந்து முடிந்து மூன்று ஆண்டுகளான பிறகும் ராணுவத்தின் ஆட்சியே தமிழ்ப் பகுதிகளில் தொடருவது மிகப் பெரும் கொடுமை.
இலங்கை அரசு நியமித்த விசாரணை ஆணையமே (எல்.எல்.ஆர்.சி.) இதை ஒப்புக் கொண்டுள்ளது. இலங்கை அரசு ஒப்புக் கொண்ட உண்மையைத்தான் இந்தக் குழுவினரும், திரும்பி வந்து கூறிக் கொண்டிருக் கிறார்கள். காங்கிர° உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன், மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி உறுப்பினர் டி.கே. ரங்க ராஜன் போன்றோர், செய்தியாளர்களிடம் கூறிய கருத்துகள் எல்லாம், ராஜபக்சே தமிழர் பிரச்சினையில் கவலையுடன் இருப்பது போன்ற தோற்றத்தையே உருவாக்கிக் காட்டுகின்றன. இதை எவரும் நம்பத் தயாரில்லை. அதிலும் டி.கே. ரங்கராஜன், தமிழ் ஈழத்தை, ஈழத்தில் தமிழர்கள் எவருமே ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறியிருப்பது தலைசிறந்த நகைச்சுவையாகும். “எங்கள் மார்க்சிய கம்யூனி°ட் கட்சி கோழிக்கோடு மாநாட்டில் ஈழப்பிரச்சினை தொடர்பாக நிறைவேற்றிய தீர்மானத்தைத்தான், அகதி முகாம்களில் வாழும் தமிழர்களிலிருந்து நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்கள் வரை அப்படியே ஆதரித்தார்கள்” என்று சொல்லாமல் விட்டாரே! அதற்காக நன்றி கூறலாம்.
இப்போதும் சிங்களவர் பகுதிகளிலே சுதந்திரமான சிவில் நிர்வாகமும், தமிழன் பகுதிகளிலே சிங்களர்களை மட்டுமே கொண்ட ராணுவ நிர்வாகத்தையும் சித்திரவதை முகாம்களையும் கொலை பீடங்களையும் நடத்தி வரும் ஆட்சியில் தமிழர்கள் ஒன்றுபட்ட இலங்கைக்குள் “வாழவேண்டும்” என்று பேசுவதில் ஏதேனும் நியாயம் இருக்க முடியுமா?
தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி, தமிழ் ஈழத்தை ஆதரித்து கருத்துக் கூறியதால், ஈழத் தமிழர்களுக்கு மீண்டும் நெருக்கடிதான் உருவாகும் என்று ‘இந்து’ பார்ப்பன ஏடு தலையங்கம் தீட்டுகிறது. ராஜபக்சே என்ற சர்வாதிகாரிக்கு கோபம் வந்துவிடாமல், ‘தாஜா’ செய்து கை கட்டி வாய்ப் பொத்தி தமிழர்கள் வாழும் உரிமைகளை மன்றாடிப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று இவர்கள் கருதுகிறார்கள் போலும்! இனப் படுகொலையும் போர்க் குற்றங்களும் நடக்கும் எந்த ஒரு நாடும் இறையாண்மை பெற்றது அல்ல என்று சர்வதேச சட்டங்கள் தெளிவாகக் கூறுகின்றன.
ராஜபக்சே என்ற போர்க் குற்றவாளிக்கு சர்வதேச அழுத்தங்களும் நெருக்கடிகளும் உருவாக்கப்படும் முயற்சிகளே ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுமே தவிர, கருணை மனுக்களைப் போடுவதால் எதுவும் நடக்காது என்பதைப் புரிந்து கொண்டாக வேண்டும்.
மற்றபடி இந்திய குழுவினர் சென்றார்கள்; திரும்பினார்கள் என்பதைத் தவிர எந்தப் பயனும் இல்லை என்று உரத்துக் கூற முடியும்.
- தலையங்கம் (புரட்சிப்பெரியார் முழக்கம் 26.04.2012)

செவ்வாய், 24 ஏப்ரல், 2012

பன்றியோடு சேர்ந்த கன்றுக்கு இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும்.

பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் வித்தியாசம் தெரியாத பீரிஸ் இழைத்த இராஜதந்திரத் தவறு – கொழும்பு ஊடகம்

prof_-g_l_peiris
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனத்துக்கும் இடையில் வித்தியாசம் தெரியாமல்- செய்தியாளர் சந்திப்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தடுமாறியது இராஜதந்திர வட்டாரங்களில் மிகவும் கேலிக்குரிய விவகாரமாகப் பார்க்கப்படுகிறது.
அண்மையில் பலஸ்தீன அதிபர் அப்பாசுடன் கொழும்பு வந்திருந்த பலஸ்தீன வெளிவிவகார அமைச்சருடன் இணைந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ், தன் பக்கத்தில் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சரை வைத்துக் கொண்டே, “மதிப்புக்குரிய இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர் றியாட் அல் மலிகி, மதிப்புக்குரிய இஸ்ரேல் தூதுவர் …..“என்று வரவேற்கத் தொடங்கினார்.
அப்போது அவருக்கருகில் இஸ்ரேலிய வெளிவிகார அமைச்சரோ, தூதுவரோ இருக்கவில்லை.
பலஸ்தீன விவகார அமைச்சரும் தூதுவரும் தான் உடனிருந்தனர்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிசின் இவ்வாறு கூறியதும் பலஸ்தீன வெளிவிவகார அமைச்சர் மற்றும் தூதுவரின் முகம்கள் சிவந்தன.
ஒன்றுக்கு இரண்டு முறை இஸ்ரேல் என்று அடுத்தடுத்து பீரிஸ் கூறியது அவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால், பீரிஸ் மிகச் சாதாரணமாக “மன்னிக்கவும்“ என்று கூறிவிட்டுத் தொடர்ந்து பேசினார்.
பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் குறைந்தபட்ச வித்தியாசத்தைக் கூட உணராமல், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் மிகப்பெரிய இராஜதந்திரத் தவறை இழைத்துள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று விமர்சித்துள்ளது.

"வேணும் கட்டைக்கு வேணும்; வெங்கலக்கட்டைக்கு வேணும். "

பொய் அறிக்கை வெளியிட்டு சிறிலங்கா பிரதமர் ஆடிய நாடகம் அம்பலம் – முஸ்லிம் தலைமைகள் போர்க்கொடி

thampulla
தம்புள்ள மஸ்ஜித்துல் ஹாய்ரா பள்ளிவாசலை அகற்றிவிட்டு வேறு இடத்தில் அதை அமைக்குமாறு உத்தரவிட்டுள்ள சிறிலங்கா பிரதமர் டி.எம். ஜெயரட்ண, அதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இணக்கம் தெரிவித்ததாக பொய்யான அறிக்கை ஒன்றை வெளியிட்டு, நாடகமாடியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
சிறிலங்கா பிரதமர் செயலக ஊடகப்பிரிவு நேற்று வெளியிட்ட சிறிலங்கா அரச முத்திரையுடன் கூடிய அறிக்கை ஒன்றில், தம்புள்ள பள்ளிவாசலை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கு முஸ்லிம் தலைமைகள் இணங்கியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.
கம்பளையில் நேற்றுக்காலை நடந்த கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் சிறிலங்கா பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது போன்று எந்த இணக்கப்பாடும் எட்டப்படவில்லை என்றும், தாம் அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேயில்லை என்றும் சிறிலங்கா அரசில் இடம்பெற்றுள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.
நேற்று முழுநாளும் தான் மட்டக்களப்பில் இருந்ததாகவும், அந்தக் கூட்டத்தில் பங்கேற்கவேயில்லை என்றும் பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளவாறு கூட்டம் எதுவும் நடக்கவில்லை என்றும் அப்படியான கூட்டத்தில் தானோ மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவோ கலந்து கொள்ளவில்லை என்றும் சிறிலங்கா அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் தெரிவித்துள்ளார்.
பல பரம்பரைகளாக தம்புள்ளை நகரில் முஸ்லிம் மக்கள் வழிபட்டு வரும் பள்ளிவாசலை அகற்றுமாறு கோருவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே 65 ஆண்டுகளாக இருந்து வரும் பள்ளிவாசலை அகற்ற பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் இந்த முயற்சி சிறிலங்காவின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மத்தியில் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா பிரதமரும், அரசும், பௌத்த பேரினவாத சக்திகளுடன் இணைந்து முஸ்லிம்களின் உரிமைகளைப் பறிப்பதாக அவர்கள் பலரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
அத்துடன், ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு ஆதரவாக நின்ற முஸ்லிம் நாடுகள் மத்தியிலும் இந்த விவகாரம் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கொழும்பு அரசியல் வட்டாரங்கள் கூறியுள்ளன.
ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசு முஸ்லிம் நாடுகளின் தயவில் தான் தமக்குச் சார்பாக 15 வாக்குகளைப் பெறமுடிந்தது.
இதற்கு சிறிலங்காவின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் கடுமையாக உழைத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

திங்கள், 23 ஏப்ரல், 2012

இன்பச் சுற்றுலா சென்றவர்களிடம் பொருததமில்லாத கேள்வி கேட்ட செய்தியாளர்கள்.

போர்க்குற்றங்கள் பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நழுவிய காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர்கள்

congress_mps
போரின்போது சிறிலங்காப் படையினரால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா அதிபரிடம் இந்தியக் குழு வலியுறுத்தியதா என்ற கேள்விக்கு பதிலளிக்காமல், இந்தியக்குழுவில் இடம்பெற்ற தமிழ்நாடு காங்கிரஸ் உறுப்பினர்கள் நழுவிக் கொண்டுள்ளனர்.
சிறிலங்கா சென்று திரும்பிய இந்திய நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்றுமாலை சென்னையில் சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
அப்போது, “போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு புனர்வாழ்வு எவ்வளவு முக்கியமோ அதேபோல போரின்போது நடந்த மனிதஉரிமை மீறல்களும் முக்கிய பிரச்சினை. இதுகுறித்து சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் இந்தியக் குழு வலியுறுத்தியதா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் மற்றும் குழுவில் இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக்தாகூர்,கிருஸ்ணசாமி ஆகியோரிடம் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர்கள் எவரும் நேரடியாகப் பதில் அளிக்காமல் நழுவிக் கொண்டனர்.
தொடர்ந்து, செய்தியாளர்கள் அதே கேள்வியைக் கேட்டபோது, அவர்கள் பாதியிலேயே செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டு எழுந்து சென்று விட்டனர்.

வாக்குறுதிக்கு ஒன்றும் பஞ்சம் இல்லை! மனித நேயம்தான் வறண்டு கிடக்கிறது.

சுசுமாவிடம் மகிந்த கொடுத்த வாக்குறுதி – கருத்துக்கூற மறுக்கிறார் அவரது பேச்சாளர்

mahinda_sushma
13வது அரசியலமைப்புத் திருத்தம் குறித்து இந்திய நாடாளுமன்றக் குழுவுக்கு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கொடுத்த வாக்குறுதி தொடர்பாக சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.
ஆறுநாள் சிறிலங்கா பயணத்தின் முடிவில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு, கொழும்பில் தாஜ் சமுத்ரா விடுதியில் நேற்றுக்காலை செய்தியாளர்களை சந்தித்துப் பேசியது.
இதன் போது, குழுவின் தலைவரான சுஸ்மா சுவராஜ், சிறிலங்கா அதிபரைச் சந்தித்தபோது, 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட அரசியல் தீர்வு ஒன்றை காண்பதாக வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும், அதற்கு அவர் இணக்கம் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.
அப்போது, ஊடகவியலாளர் ஒருவர், முன்னதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவிடம் சிறிலங்கா அதிபர் வாக்குறுதி கொடுத்த போதும், சிறிலங்கா அமைச்சர்கள் அவ்வாறான வாக்குறுதி ஏதும் கொடுக்கப்படவில்லை என்று மறுத்து விட்டதை சுட்டிக்காட்டினார்.
அதற்கு சுஸ்மா சுவராஜ், “அமைச்சர்கள் என்ன கூறினர், எதை மறுத்தனர் என்ற கேள்வியே இல்லை.
சிறிலங்காஅதிபர் 13வது திருத்தம் மற்றும் அதற்கு அப்பாற்பட்ட இரண்டையும் நடைமுறைப்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார்“ என்று குறிப்பிட்டார்.
இந்தச்செய்தியாளர்கள் சந்திப்பில் சிறிலங்கா அதிபரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகரவும் கலந்து கொண்டிருந்தார்.
அவரிடம் இதுபற்றிக் கேட்டபோது, கருத்து எதையும் கூற மறுத்து விட்டார்.
கடந்த ஜனவரி மாதம் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணா, சிறிலங்கா அதிபரைச் சந்தித்த பின்னர், 13வது திருத்தத்துக்கு அப்பாற்பட்ட தீர்வை நடைமுறைப்படுத்துவதாக வாக்குறுதி அளித்ததாக செய்தியாளர்களிடம் கூறியிருந்தார்.

ஞாயிறு, 22 ஏப்ரல், 2012

இந்திய அரசை விட்டுப் பிரிந்து போக வேண்டிய அவசியம் எப்போது வரும்?

கோத்தாபயவுக்கு கருணாநிதி பதிலடி

karunanidhi
கருணாநிதிக்கு ஈழம் அமைக்கும் ஆசையிருந்தால் அதை தமிழ்நாட்டின் அமைத்துக் கொள்ளட்டும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச கூறிய கருத்துக்கு, திமுக தலைவர் மு.கருணாநிதி பதில் கொடுத்துள்ளார்.
நேற்று செய்தியாளர்கள் இந்த விவகாரம் குறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது,
“தனித் தமிழ் ஈழம் கேட்கின்ற போராட்டத்தில், பயங்கரவாதமோ, தீவிரவாதமோ தலையிடக் கூடாது என்ற கருத்தை உடையவன் நான்.
என்னைத் தலைவராகக் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகமும், அதே கருத்தைக் கொண்டது.
நாங்கள் பயங்கரவாதத்திற்கு தயாராக இல்லை.
தமிழ் மக்களின் உயிருக்கும், உடமைக்கும் எதிராக, சிறிலங்காவில் சிங்களவர்களால், கடந்த காலத்தில் நடத்தப்பட்ட கொடுமைகளும், எதிர்காலத்தில் நடத்தப்படுமென்று எதிர்பார்க்கின்ற கொடுமைகளும், நடைபெறக் கூடாது என்பதற்காகத் தான், நாங்கள் தனித் தமிழ் ஈழம் வேண்டும் என்று கேட்கிறோம்.
இந்தியாவில் இருக்கின்ற மத்திய அரசு, சிறிலங்கா அரசைப் போல தமிழர்களைக் கொடுமைப்படுத்தவில்லை.
தமிழர்கள், இங்கே நிம்மதியாகத் தான் இருக்கிறார்கள்.
அதனால், இந்திய அரசை விட்டுப் பிரிந்து போகவேண்டிய அவசியம் இப்போது இல்லை.“ என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் வியாழனன்று தந்தை செல்வா நினைவுப் பேருரை

கொழும்பில் வியாழனன்று தந்தை செல்வா நினைவுப் பேருரை

chelvanayagam
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளையின் ஏற்பாட்டில், பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில், தந்தை செல்வா நினைவுப் பேருரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தந்தை செல்வாவில் 35வது நினைவு நாளை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நினைவுப் பேருரை வரும் வியாழக்கிழமை (26ம் நாள்) பிற்பகல் 5.30 மணியளவில் இடம்பெறும்.
இந்த நிகழ்வில், ‘இலங்கையில் அதிகாரப் பகிர்வுக்கான ஏற்பாடுகள் – வரலாறும் வருங்காலமும்‘ என்ற தலைப்பில் பேராதனைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் நினைவுப்பேருரை நிகழ்த்தவுள்ளார்.
தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இந்த நினைவுப்பேருரைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதன், 14 மார்ச், 2012

தேசியத் தலைவர் பற்றிய செய்தியால் சர்ச்சைக்கு உள்ளாகும் சனல் 4

தேசியத் தலைவர் பற்றிய செய்தியால் சர்ச்சைக்கு உள்ளாகும் சனல் 4

channel4_logo
இலங்கை இராணுவம் புரிந்த பல போர்குற்ற ஆதாரங்களைத் தாங்கிவரும் இந்த ஆவணப்படத்தின் இறுதியில் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் கொல்லப்பட்டதாக அது தெரிவிக்கிறது. இறுதி யுத்தத்தில் என்ன நடந்தது என்பதும், அதில் அவர் கொல்லப்பட்டாரா ? இல்லை அப்படி இலங்கை அரசு நம்புகிறதா என்பது போன்ற சந்தேகத்துக்குரிய விடையங்களை சனல் 4 இதில் அலசியுள்ளது.
இது தமிழ் மக்கள் மத்தியில் எவ்வகையான தாக்கத்தை உண்டுபண்ணும் எனத் தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காரணம் தேசிய தலைவரின் இருப்பு அல்லது இறப்புக் குறித்து தமிழ் மக்கள் எக் கருத்தையும் தற்போது வெளிப்படுத்த விரும்பவில்லை என்பதாகும். இந் நிலையில் சனல் 4 தொலைக்காட்ச்சி இதனை தனது ஆவணப்படத்தில் புகுத்த காரணம் என்ன ? போர்குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆவணப்படத்தில் தேசிய தலைவர் இருப்புக் குறித்து ஆராயவேண்டிய கடைப்பாடு எதற்கு என்ற கேள்விகளும் பரவலாக எழுந்துள்ளது. உலகத் தமிழர்கள் இதனை எவ்வாறு எடுத்துக்கொள்வார்கள் என்பதுபோக, இது ஒரு சர்ச்சையைத் தோற்றுவிக்கக்கூடிய விடையம் எனவும் சொல்லப்படுகிறது.
கொலைக்களங்கள் பாகம்- 2இன் தயாரிப்பாளர்களை அணுகிய சில தமிழர்கள், தேசிய தலைவர் இறந்துவிட்டதாகவும் அதுதொடர்பான செய்தியையும் இதில் இணைக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்
தமிழ் மக்கள் மனதில் நீங்காத இடம்பிடித்துள்ள தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் இருப்புக் குறித்து காலம் தான் பதில்சொல்லவேண்டும் ! அவரின் நிலைகுறித்து ஊகங்களையும் அனுமானங்களையும் தெரிவிக்க முடியாது. இலங்கை அரசானது அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்து, தொலைக்காட்சியில் காட்டிய அவரது புகைப்படத்தை தமிழ்மக்கள் எவரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம்.
தன்னை ஒரு நடுநிலையாளர் எனக் காட்டிக்கொள்ள சனல் 4 தொலைக்காட்சியானது இதுபோன்ற சில கட்சிகளை தமது ஆவணப்படத்தில் இணைத்திருக்கலாம். ஆனால் தேசிய தலைவர் தொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ள அனைத்துக் கருத்தும் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுமா ? என்பது பெரும் சந்தேகமாக உள்ளது. எனவே சனல் 4 தொலைக்காட்சி காட்டவிருக்கும் இந்த ஆவணப்படத்தில் வரும் தேசிய தலைவர் தொடர்பான சர்ச்சைக்குரிய விடையங்கள் குறித்து மக்கள் தெளிவாக இருத்தல் நல்லது. இவ்வாறானதொரு காட்சி இந்த ஆவணப்படத்தில் வருகின்றது என்பதனை நாம் முன்கூட்டியே அறியத்தர விரும்புகிறோம். இதனைத் தமிழ் மக்கள் தெரிந்துவைத்துக்கொண்டு தான் இந்த ஆவணப்படத்தை பார்ப்பது நல்லது !

- மீனகம்

சனி, 3 டிசம்பர், 2011

மின்னேரியா கமுக்கத் ( இரகசியத்) தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை:


மின்னேரியா இரகசியத் தடுப்பு முகாமில் கேணல் நகுலன் படுகொலை: லங்கா நியூஸ் வெப்

| November 29, 2011 | 0 Comments
விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் நகுலன் மின்னேரியாவில் உள்ள சிறிலங்கா இராணுவத்தின் இரகசியத் தடுப்பு முகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ‘லங்கா நியூஸ் வெப்‘ இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.
கேணல் நகுலன் என்று அழைக்கப்பட்ட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னத்தம்பி கணபதிப்பிளை சிவமூர்த்தி, கடந்த 2009ம் ஆண்டின் பிற்பகுதியில் சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவினரால் திருகோணமலையில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
மின்னேரியாவில் உள்ள இரகசியத் தடுப்புமுகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்த அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
2009 மே 18ம் நாள் விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், எஞ்சியிருந்த விடுதலைப் புலிகளின் இரண்டு அணிகளில் ஒன்றினது தலைவராக கேணல் நகுலன் செயற்பட்டிருந்தார்.
சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் சிறப்புத் தளபதியாக இருந்த இவர், 2007 இல் மட்டக்களப்பின் மீதான கட்டுப்பாட்டை புலிகள் இழந்த பின்னர், மட்டக்களப்புக்கான தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
2007 மே 23ம் நாள் ஏறாவூரில் இடம்பெற்ற மோதல் ஒன்றில் மரணமான விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகளின் சடலங்களுக்கு அருகே கிடந்த கேணல் நகுலனின் அடையாள அட்டையை வைத்து, அவர் கொல்லப்பட்டு விட்டதாக, 2007 ஜுன் 8ம் நாள் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்த்து.
ஆனால், கேணல் ராமுடன் செய்மதி தொலைபேசி மூலம் கொண்டிருந்த தொடர்பாடல் சமிக்ஞையை அடிப்படையாக கொண்டு, திருகோணமலையில் வைத்து கேணல் நகுலனை 2009 பிற்பகுதியில் சிறிலங்கா புலனாய்வுப் பிரிவினர் கைது செய்திருந்தனர்.
கேணல் நகுலன் கொல்லப்பட்டு விட்டார் என்று ஏற்கனவே பாதுகாப்பு அமைச்சு அறிவித்து விட்டதால், தமது செய்தி பொய்யாகி விடும் என்பதாலும், புலம்பெயர் தமிழர்களுடன் இவர் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாலும், இவரது கைது பற்றி எந்தவொரு ஊடகங்களுக்கும் தெரிவிக்காமல், சிறிலங்கா அரசாங்கம் இரகசியமாகவே வைத்திருந்தது.
ஆனால், புலம்பெயர் தமிழர்கள் பற்றிய தகவல்களை கேணல் நகுலனிடம் இருந்து பெறுவதற்கு பலமுறை இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்தது.
சிறிலங்கா படையினருடன் ஒத்துழைக்க மறுத்ததால், கேணல் நகுலன் கடுமையாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரிடம் இருந்து எந்தத் தகவலையும் பெறமுடியவில்லை.
இந்தநிலையில், அவர் எந்தவகையிலும் பயன்படமாட்டார் என்று உணர்ந்து கொண்ட இராணுவப் புலனாய்வாளர்கள், உயர்மட்ட பணியகத்தில் இருந்து வந்த உத்தரவை அடுத்து, கேணல் நகுலனை படுகொலை செய்துள்ளனர்.
கேணல் நகுலன் தடுத்து வைக்கப்பட்டிருந்த மின்னேரியா தடுப்பு முகாமில் மேலும் பல புலிகள் இயக்கத் தலைவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றும் லங்கா நியூஸ் வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டுள்ளது.

திரைப்படங்களில் தமிழ் – நேரலையில் கலந்துரையாடலாம்

| December 2, 2011 | 0 Comments
பார்வையாளர்களுக்கு வணக்கம், வரும் சனிக்கிழமை (03.12.2013) மாலை 3.00 மணி முதல் 4.00மணி வரை நமது நட்பு இணையத் தொலைக்காட்சியில் தமிழ் காப்புக் கழகத்தின் தலைவர் திரு.இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்,
திரைப்படங்களில் தமிழ் என்பது குறித்துப் பேச இருக்கிறார்.
தமிழ்ப் படங்களின் பெயர்கள், பாடல்கள், கதைப்பாத்திரப் பெயர்கள் போன்றவற்றில் நடக்கும் தமிழ்க் கொலை குறித்தும் பேச உள்ளார். மேலும், தற்போது வெளியாக இருக்கும் “ஒஸ்தி” படத்தின் பெயரை மாற்றகோரியும் கொலை வெறிப் பாடலின் தமிழ்க் கொலை குறித்தும் மாலை மலர், மாலை முரசு, , டெக்கான் கிரானிக்கல், நக்கீரன் போன்ற வார இதழ்களிலும் செய்தித் தாள்களிலும் விடப்பட்ட அறிக்கைகளுக்கு விளக்கமும் அளிக்கயிருக்கிறார். நம் நட்பு நேயர்களான தாங்கள் இந்த நேரலை நிகழ்ச்சியில் ஆவலோடு தொடர்பு கொண்டு பேசி உங்கள் கருத்தையும், தமிழ் உணர்வையும் வெளிப்படுத்த வேண்டுகின்றோம்.
தவறாமல் பாருங்கள்! பங்க‌கேற்றுத் தமிழைக் காக்க உரிய கருத்துகளைத் தெரிவியுங்கள்.
நேரலையில் பேச: 044- 65497744 / +91 72990 40127

Buddhist dominations is the real reason for ethinic problems : பௌத்த மேலாதிக்கமே இனவாதத்திற்கு முதன்மைக் காரணம்!- பேராசிரியர் பீற்றர் சால்ககு


பௌத்த மேலாதிக்கமே இனவாதத்திற்கு முதன்மைக் காரணம்!- பேராசிரியர் பீற்றர் ஸ்சால்க்

| December 2, 2011 | 0 Comments
பௌத்த மேலாதிக்கமும் அதற்குத் துணைப் போகும் சிங்கள சக்திகளும் தமிழர்களிற்கு எதிரான இனவாதத்திற்குக் காரணம் என சுவீடனைச் சேர்ந்த பேராசிரியரும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தன்னை முழுமையாக அர்ப்பணித்தவருமான பீற்றர் சால்க் ரொறன்ரோவில் இடம்பெற்ற கருத்தரங்கில் குறிப்பிட்டார்.
கனடியத் தமிழ் ஒன்றியத்தினால் நேற்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இலங்கை இனப்பிரச்சினையில் மதங்களின் பங்கு என்ற கருத்தரங்கில் உரையாற்றும் போதே பேராசிரியர் பீற்றர் சால்க் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சிங்களமொழி பேசும் கிறிஸ்தவர்களின் தலைமை போர்க்காலத்தில் பௌத்தசிங்களம் மேற்கொண்ட தமிழ் மொழி பேசும் கிறிஸ்தவர்களின் மீதான இனப்படுகொலைக்கு மௌனமாக ஆதரவை வழங்கியதைக் குறிப்பிட்ட அவர், கிழக்குத் திமோரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்ட போது குரல் கொடுத்த பாப்பரசர் மற்றும் வத்திகான் தலைமைகூட தமிழ்க் கிறிஸ்தவர்கள், பாதிரியார்கள் படுகொலை செய்யப்பட்டபோது குரல் கொடுக்கத் தவறி விட்டது எனவும் சுட்டிக் காட்டினார்.
கனடியத் தமிழ் ஒன்றியப் பிரமுகர் திரு. தியோடர் அந்தனி அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் யோர்க் பல்கலைக்கழக பகுதிநேர விரிவுரையாளரான கலாநிதி பார்வதி கந்தசாமி உரையாற்றுகையில், பௌத்த மதப் பரவலாக்கல் வட கிழக்குப் பகுதியில் எவ்வாறு புரையோடிப் போயுள்ளது என்பதை ஆதாரங்களோடு தெளிவுபடுத்தியதோடு,
மாதகல் கடற்கரையே சங்கமித்திரை வந்திறங்கிய இடம் எனக் குறிப்பிட்டு அங்கே பெரிய விகாரை கட்டப்படுவதையும் வவுனியாவிலிருந்து யாழ் செல்லும் பாதையின் பல இடங்களிலும் புத்த கோவில்கள் தற்போது கட்டியெழுப்பப்படுவதையும் குறிப்பிட்டு இதனை இந்தியாவிலுள்ள இந்து மத, சைவ மதத் தலைமைகள் கண்டிக்காதையும் சுட்டிக் காட்டினார்.
இக் கருத்தரங்கில் பேசிய ரொறன்ரோ பல்கலைக்கழகப் பேராசிரியரான கலாநிதி யோசப் சந்திரகாந்தன் அவர்கள் இலங்கையில் இனங்கள் ஒண்றினைந்து வாழுவதற்கு பௌத்த சிங்கள இனவாதமே பெருந்தடையாக உள்ளது என்பதை தெளிவுபட விளங்கப்படுத்தியதோடு அது விரைவில் உலகால் உணரப்படும் என்ற ஆதங்கத்தையும் தனது பேச்சில் தெரிவித்ததோடு,
இனப்பிரச்சினை ஆயுதப் போராட்டத்தின் பின்னர் ஏற்படதொன்றல்ல என்றும் அது பல நூற்றாண்டுகளாகப் புரையோடிப் போயுள்ள ஒரு விவகாரம் என்றும், இரண்டு மொழி பேசும் இரு தேசிய இனங்கள் இலங்கைத் தீவை தமது தாயகமாகக் கொண்டவை என்பதையும், அவை இரு தனித்துவமான பண்பாட்டு விழுமியங்களைக் கொண்டவை என்பதையும் மேற்குலகு தெளிவுபட உணர்ந்த பின்னரே தீர்வு முயற்சிகளிற்கு முனைய வேண்டுமெனவும் கூறினார்.
இவ் விழாவில் மத்திய கன்சவேட்டிவ் கட்சியைச் சார்ந்த திரு. சக் கொங்கல் அவர்களும், மாகாணக் கன்சவேட்டிவ் கட்சியைச் சேர்ந்த திரு. சான் தயாபரன் அவர்களும் கலந்து கொண்டிருந்ததோடு பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் எழுதிய “தமிழர்கள் கடந்த காலத்திலிருந்து நிகழ்காலத்திற்கு” என்ற நூலிற்கான மதிப்பீட்டயையும் திரு. சக் கொங்கல் மேற்கொண்டார்.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

என் தலைவா நீ வருவாய்…..-சங்கிலியன்


என் தலைவா நீ வருவாய்…..-சங்கிலியன்

எட்டாவது அதிசயமே  என் தலைவா !!
எவர் கைகளுக்கும் நீ எட்டாத  அதிசய
-த்தை அறிவதற்கு-சில வல்லசருகள்
வேவுபார்க்கிறது-விஞ்ஞானமே வியப்
-படையும்  மெஞ்ஞானம் கொண்ட
உனை சிறைப்பிடிக்க எலிப்படைகள்
அலைகிறது,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
வலுவற்ற விஞ்ஞானம் விழிபிதுங்கி
கிடக்கிறது-தன்மானத்தலைமகனே!!!
உனை மண்டியிடச்செல்லிக்கெண்டு
சில மடையர் கூட்டம் அலைகிறது -ஒரு
வெற்றுடலை காண்பித்து அது உன் வித்
-துடல் என்றார்கள்
அக்கினிபுத்திரனே உனை நெருங்கவும்
முடியாத கோழைகள் கூடிநின்று -பெருமி
-தம் கொள்கிறனர்-மூடுபனி கூடிநின்று
கொட்டாட்டம் போடுறது-சுட்டெரிக்கும்
சுரியனே உனை தடுக்க சிங்களப்பனி உறை
-ந்து எம் நிலத்தினில் கிடக்கிறது ,,,,,,,,,,,,,,,,
வான் சிவக்க ஒளிபரப்பி நீ வருவாய்
உன் வெப்பம் கண்டு கரையும் பனி -எதிரி
-யின் தேசத்தை சென்று மூழ்கடிக்கும்
என் தலைவா நீ வருவாய்  கிழக்கை நோக்கி
காத்திருக்கிறோம் என் தலைவா
கூன்விழுந்த தமிழ் முதுகு செங்கோல் பிடி
-க்க நீ வருவாய் ,,,,,,,,,,,,,,என் தலைவா நீ
வருவாய்  வல்லை மைந்தா நீ வருவாய்
-சங்கிலியன்,,,,,,,,,,,,,,,,,,,,,

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே.. – வித்யாசாகர் – குவைத்


காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே.. – வித்யாசாகர் – குவைத்

| November 27, 2011 | 0 Comments
தமிழினமே..
தமிழினமே..
என் தமிழினமே..
விண்ணை விரல்நுனியில் சுமக்கவும்
உயரே பறந்து வான்முட்டி நிற்கவும்
என்றோக் கற்ற தமிழினமே…
காலத்தை காற்றுப் போல
கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில்
உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின்
வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே…
தமிழினமே…
தமிழினமே…
என் தமிழினமே…
எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே..
யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய்
யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்..
கடல் தின்றதில் கலங்காத நீ
காற்றுப் புயலென வீசியதில் கலையாத நீ
பூமி இரண்டெனப் பிளந்தபோதும் உள்ளடங்கிவிடாத நீ
இப்போது எங்கிருக்கிறாய்..
எங்கிருக்கிறாய் என் தமிழினமே..
உன் பாட்டன் முப்பாட்டன் ஆண்ட மண் இன்று
உனதில்லை
உன் தாய் உன் தந்தை கொண்டிருந்த மாண்பு
இன்று உனதில்லை
நீ கொண்டாடிய கலை வீரம் விளையாட்டு
வாழ்க்கைக்கான கல்வி
இன்று உனதில்லை
உன் மொழி உன் இனம் பற்றிய சிந்தை
நீ வாழ்ந்த வரலாறு
நீ படைத்த சாதனைக் குறித்த அக்கறை
ஒன்றுமே யின்று உன்னிடமில்லையே என் தமிழினமே..
எவனோ அடிக்கிறான்
எவனோ கொல்கிறான்
எவனெவனோ உன்னையழிக்க
உலகக் கைபிடித்துத் திரிகிறானே ஏனென்றுக் கேட்டாயா
எதற்கென்று யோசிக்கவேனும் செய்தாயா?
நீ யார் ?
உன் வீரமென்ன?
உன் தீரமென்ன ?
நீ கொண்ட திறனென்ன ?
நீ அசைந்தால் இந்த உலகம் சற்று அசைந்துக்கொடுக்க வேண்டாமா?
நீ நில்லென்றால் நிற்கவும்;
போவென்றுச் சொன்னால் போயிருக்கவும்வேன்டாமா?
அதற்கு மாறாக இருக்கிறாயே என் தமிழினமே
எல்லாம் இழந்து நிற்கிறாயே தமிழினமே..
வெறுமனே நாலுபேர் போகும் தெருவில்
நடக்கும் நீயும் ஒன்றாய் ஆனாயே..
யாரோ சிரிக்கும் சிரிப்பிற்குப் பொருளும்
எவனோ முறைக்கும் முறைப்பிற்கும் பயமும் நீயாய் ஆவதா?
நான்குபேர் செத்தாலும்
ஐந்தாவதாய் முலைத்தவரில்லையா நாம்?
நம்மையழிக்க எந்த கொம்பனுண்டு?
எவனுக்கும் திராணி போதாது தமிழினமே நீ
கூடி நின்றால் அழிக்க;
எப்படி அடிப்பது
எதை தடுப்பது
யாருக்கு அஞ்சுவது
யார்யாரை மதிப்பது
எப்படி வாழ்வதென்று என்றோ எழுதி இலக்கியமும் செய்தாயே
இன்றேன் உனக்கு உலகம்
விரோதமாய் ஆனது தமிழினமே..
கிழக்குப் போனால் இருக்கிறாய்
வடக்குத் தெற்கிலிருக்கிறாய்
மேற்குமெட்டு திசையிலும் நீயிருக்கிறாய் தமிழினமே
இருந்தும் ஒரேயொரு சட்டை யின்றி
பார்ப்போருக்கு நிர்வானமாய் தெரிகிறாய்;
வா.. இதோ பறந்துக் கிடக்கும் நம் தமிழரின்
ஒற்றுமை என்னும் ஒன்றை எடு
அதை துணிவென்னும் நூலால் தை
நம்பிக்கையின் நிறம் மட்டும் தோய்த்து
காலத்திற்கும் அவிழாத சட்டையென உடுத்து;
பார்ப்போர் கண்ணை உறுத்தாத உன் வளர்ச்சியில்
உலகம் மீண்டும்புது நாகரிகத்தை
உன்னிடமிருந்து கற்கட்டும்;
எமை இத்தனைக் காலம்
மண்ணில் புதைத்துவைத்திருந்த தேசங்கள்
எம் வாழ்தல் கண்டு தன் தவறுக்கு வருந்தட்டும்;
காற்றுவீசும் திசையெல்லாமென் தமிழர்
அடிமைத் தனமின்றி வாழட்டும்;
கத்தி கதறி அழத தெருக்களெல்லாம்
எம் சுதந்திர கீதம் ஒலிக்கட்டும்;
எமைக் கொன்று கொன்று புதைத்த
மண்ணில் காலத்திற்கும் அது
நிகழாத வரம் வாய்க்கட்டும்;
பசுமை பொங்குமொரு வாழ்வை
உலகம் கண்டு மேச்சட்டும்..
சின்னக் குழந்தைக்குக் கூட
நாம் தமிழரென்னும் பெருமிதம்
ரத்தத்தில் கலந்திருக்கட்டும்;
அந்த பெருமிதத்தின் நிமித்தம்
உயிர்விட்ட நம் மாவீரர்களின் மனசு
நாம் சுவாசிக்கும் சுதந்திரக் காற்றால்
என்றென்றும் நிறையட்டும்!!
——————————————————————————-
வித்யாசாகர்