thamizh kappu kazhagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
thamizh kappu kazhagam லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மே, 2012

அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை தொடக்கவிழா

அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை தொடக்கவிழா(ஒளிப்படங்கள் )

நா.மோகன்ராசு
நட்பு இணைய இதழ் : பதிவு செய்த நாள் : 05/05/2012


தமிழ்க்காப்பு கழகம் சார்பில் சிறுவர்சிறுமியருக்குத்  திருக்குறள் முதலான நீதி நெறிப்பாடல்களை பயிற்றுவிக்கும் அறநெறிப் பாடல் பயிற்சிப் பட்டறை  (03  05  2012) அன்று தொடங்கப்பட்டது. தாய்த்தொழில்நுட்பகுழும  மேலாண் இயக்குநர் திரு . அண்ணாமலை அவர்கள் தலைமை தாங்கிப் பேசினார்.
ஒருங்கிணைப்பாளர் திரு நா.மோகன்ராசு வரவேற்புரை ஆற்றினார். திருமதி ஈரோடு தமிழ்ச்செல்வி, திரு அசய்கார்த்திக், திரு ச.முத்துகிருட்டிணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தமிழ்க்காப்புக்கழகத் தலைவர் திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள்   பட்டறையின நோக்கம், பயன் முதலியன பற்றிச் சிறப்புரை ஆற்றித் தொடக்கி வைத்தார். சாந்தோம் மேனிலைப்பள்ளித் தமிழாசிரியர் திரு எலியட்சு வாழ்த்தி நிறைவுரை ஆற்றினார். திரு குமார் நன்றி நவின்றார்.

மே 3 முதல் 18  ஆம் நாள் வரை பதினைந்து நாட்கள்  நடக்கும் இப்பயிலரங்கம்  காலை 8 மணி முதல் 10 வரை  நடைபெறும்.  இறுதி நாளன்று மாணவர்களை மேடையேற்றி அவர்களுடைய திறமையை வெளிக்கொணர்ந்து சான்றிதழும் வழங்கப்படும் . மாணவர்கள் கோடை விடுமுறையை நன்கு பயன்படுத்திகொள்ளவும்  அவர்களுடைய தமிழார்வத்தை வளர்க்கும் விதமாகவும்  மனப்பயிற்சித் திறனை மேம்படுத்தும் நோக்கிலும் அறநெறியில் வாழச் செய்ய வழிகாட்டவும் இப்பயிலரங்கம் தொடங்கப்பட்டுள்ளது.

சனி, 27 ஆகஸ்ட், 2011

மூவர் உயிர் காப்போம் - கருத்தைத் திரட்டும் கவிதை, கட்டுரைப் போட்டி

மூவர் உயிர் காப்போம் - கருத்தைத் திரட்டும் கவிதை, கட்டுரைப் போட்டி

பதிவு செய்த நாள் : August 27, 2011


ஒறுத்தாற்றும் பண்பினார் கண்ணும்கண் ணோடிப்
பொறுத்தாற்றும் பண்பே தலை. (திருக்குறள் 579)
மூவர் உயிரைக் காத்திடுக !            மூவாப்புகழைப் பெற்றிடுக !
தமிழ்க்காப்புக் கழகம் தொகுக்கும்
மக்கள் முறையீட்டுக்
கவிதை, கட்டுரைப் போட்டிகள்
மனிதநேய ஆர்வலர்களே!
மரணத்தண்டனையினும் கொடியது அதனை எதிர்நோக்கிச் சிறை வாழ்க்கையைக் கழிப்பது என நீதிபதிகளாலேயே சொல்லப்பட்ட கொடுந்தண்டனையால் துன்புறுபவர்கள்
பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஆவர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என மக்களின் கருத்துக்களைத் திரட்டி அவை, தடை வழக்கு  நீதிபதி, முதல்வர் முதலானவர்களுக்கு அனுப்பி வைக்கப் பெறும். இதனை முன்னிட்டு விடுதலை முறையீடுகளைக்  கவிதை,  கட்டுரை வடிவில்  அனுப்பி வைக்க வேண்டுகிறோம்.
  • கவிதை 24 வரிகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • கட்டுரை 4 பக்க அளவில்  இருக்க வேண்டும்.
பிழைகளின்றியும் அயற்சொல் கலப்பும் அயலெழுத்துக் கலப்பும்  இன்றியும் படைப்புகள்  இருக்க வேண்டும்.
படைப்புகளை 5.9.2011 ஆம் நாளுக்குள் thamizh.kazhakam@gmail.com என்னும் மின்வரிக்கு அனுப்ப வேண்டும். எல்லா அகவையினரும் எல்லா நாட்டினரும் கலந்து கொள்ளலாம். தங்கள் பெயர், அகவை, பேசி எண் மற்றும் முகவரியைக் குறிப்பிடவும்.
பங்கேற்போர் எண்ணிக்கைக்கேற்ப தமிழ்க்காப்புக்கழக நிறுவனர் பேராசிரியர் சி.இலககுவனார் அவர்களின் 38 ஆவது நினைவு நாளை முன்னிட்டுப் பரிசுகளும்  வழங்கப் பெறும். பரிசுகள் அடிப்படையில்  இல்லாமல் உணர்வின் அடிப்படையில் அனைவரும் பங்கேற்க வேண்டும். இளந்தலைமுறையினரைப் பங்கேற்கச் செய்து தமிழ் அமைப்புகளும் மாணவர் அமைப்புகளும் படைப்புகளைப் பெற்று அனுப்பலாம்.
மக்கள் கருத்தைத் திரட்டி மூவருக்கும் விடுதலை வழங்கச் செய்வோம்.

தொடர்பிற்கு
இலக்குவனார் திருவள்ளுவன்,
தலைவர்
பேசி: 98844 81652

அரு.வள்ளியப்பன்,
செயலர்
பேசி: 98840 57744

வியாழன், 21 ஜூலை, 2011

thamizh kappu kazhagam: தமிழ்க்காப்புக்கழகம்

தமிழ்க்காப்புக்கழகம்

பதிவு செய்த நாள் : July 16, 2011


நாம் தமிழரெனில் உறுதி ஏற்போம்!
உலகத் தமிழன்பர்களே!
தமிழின் வாழ்வே தமிழர் வாழ்வு. எனவே, தமிழ் இறவாதிருக்க நாம் தமிழை மறவாதிருக்க வேண்டும். நம் எண்ணமும் சொல்லும் செயலும் தமிழாகத் திகழ வேண்டும். தமிழர் உலகெங்கும் முதன்மையிடம் பெற வேண்டும் எனில் தமிழ் எங்கெங்கும் தலைமையிடம் பெற வேண்டும். அதற்கு உழைப்பதே நம் ஒவ்வொருவரின் கடமை. இதற்கு உடன்படுபவர்கள், பின்வரும் உறுதிமொழிகளை ஏற்க வேண்டுகிறோம்.
  • தமிழில் பிற மொழிச் சொற்களைக் கலந்து பேசவோ பிற மொழி எழுத்துகளைக் கலந்து   எழுதவோ மாட்டேன்.
  • தமிழ் அறிந்தவர்களுடன் தமிழிலேயே பேசுவேன். தமிழ் அறியாதவர்களைத் தமிழ் அறியச் செய்வேன்.
  • வணக்கத்தையும் வாழ்த்தையும் தமிழிலேயே சொல்வேன்.
  • தமிழ் வழிக் கல்விக்கு என்னால் இயன்ற கருத்துப் பரப்பலையும் உதவியையும் ஆற்றுவேன்.
  • எல்லாத் துறைகளிலும் தமிழ் தலைமையிடம் பெறவும் தமிழர் முதன்மையிடம் பெறவும் இயன்றவரை உதவுவேன்.
  • பெயரின் தலைப்பெழுத்தையும் தமிழிலேயே குறிப்பிடுவேன்.
  • தமிழிலேயே கையொப்பமும் சுருக்கொப்பமும் இடுவேன்.
  • தமிழ்அறிஞர்களையும் தமிழ்க்கலைஞர்களையும் போற்றுவேன்.
  • தமிழ்மொழி பிற மொழிகளுக்கு இணையான சம வாய்ப்பைப் பெற உதவுவேன்.
  • தமிழர் பிற இனத்தவர்க்கு இணையான சம உரிமை பெற உழைப்பேன்.

படிவம்