வெள்ளி, 14 டிசம்பர், 2012

ஓடும் தொடரியில் திருமணம்


புதுடில்லி:முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.

"ஆயிரம் காலத்து பயிர்' என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் என, பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது தான்.முன்னெப்போதும் இது போன்ற சம்பவம் நடந்திராது என்று கூறும் அளவிற்கான சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை மதியம், டில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் ஒன்று புறப்பட்டது. இருக்கை வசதி கொண்ட அந்த ரயிலில், எதிரெதிர் இருக்கையில், ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும், முன் பின் சந்தித்திராதவர்கள். ரயில் புறப்பட துவங்கியதும், ஒருவருக்கொருவர் பேசத் துவங்கினர். அந்த இளைஞன், லக்னோ செல்ல டிக்கெட் எடுத்திருந்தார்; இளம்பெண், கான்பூர் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார்.

"நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று பேசத் துவங்கிய இந்த ஜோடி, ஒரு மணி நேரத்திற்குள், தங்களின் பணி, குடும்பம், அந்தரங்கம், ஆசாபாசம், திருமண விருப்பம், எதிர்காலம் என, அனைத்தையும் பேசித் தீர்த்து விட்டது. இதை, அருகில் இருந்த சக பயணிகள், பார்த்துக் கொண்டே இருந்தனர்.இரண்டு மணி நேரம் முடிந்த நிலையில், அலிகார் ஸ்டேஷனை, ரயில் அடைந்தது. இளம் ஜோடி, மிகவும் நெருக்கமாகி விட்டது; இருவருக்கிடையே, அன்பும், காதலும், பாசமும் வெள்ளமென பாய்ந்து கொண்டிருந்தது.எதிரே இருந்தவர்களை சாட்சியாக வைத்து, திருமணம் செய்து கொள்ள, அந்த ஜோடி விரும்பியது. பெட்டியில் இருந்த மற்றவர்களிடம், இது குறித்து வேண்டுகோள் விடுத்தது.

முகத்தில் மகிழ்ச்சியுடனும், கண்களில் கனவுகளுடன் இருந்த அந்த இளம் ஜோடியின் வேண்டுகோளை மறுக்க முடியாத, சக பயணிகள், திருமணம் நடத்தி வைக்க முன்வந்தனர். அங்கிருந்தவர்களில் ஒருவர், "இன்னும் சில நிமிடங்களில், முகூர்த்த நேரம் முடியப் போகிறது' என, கூறியதும், ஓடும் ரயிலிலேயே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அவர்களில் ஒருவரே, புரோகிதர் போல அமர்ந்து, மந்திரங்கள் சொல்ல, பயணிகளின் உற்சாக குரல், கைத்தட்டலில், மோதிரம் அணிந்து, அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.இந்த தகவல், எப்படியோ, அடுத்து வந்த, துண்ட்லா ரயில்வே ஸ்டேஷனுக்கு தெரிய வந்தது. அந்த ஸ்டேஷனில், ரயில் நின்றதும், இளம் ஜோடி இருந்த ரயில் பெட்டிக்குள், போலீசார் நுழைந்தனர். "ரயிலிலேயே திருமணம் செய்து கொண்டது யார்?' என கேட்டனர்.

இருவரும், தம் விருப்பத்தையும், திருமணம் செய்து கொண்டதையும், தாங்கள், "மேஜர்' என்பதையும், ஆதாரங்களுடன் போலீசாரிடம் கூறினர். முறைப்படி மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டதாகவும்; தாங்கள், கணவன் - மனைவி ஆகி விட்டதாகவும் கூறினர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாத போலீசார், வேறு வழியின்றி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிச் சென்றனர்.இளம் ஜோடியாக ரயிலில் ஏறி, திருமண ஜோடியாக இறங்கிச் சென்றதை, அந்த ரயில் பயணிகள், ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஜோடி இறங்கி சென்று, நீண்ட நேரம் ஆன பிறகும், இப்படியும் நடக்குமா என, பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது."கனவு போல, அந்த ஜோடியின் திருமணம் நடந்து முடிந்தது' என, சக பயணிகள், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக