வெள்ளி, 14 டிசம்பர், 2012

தமிழக நலனுக்காக திமுக எதையும் வலியுறுத்தத் தயார் : கருணாநிதி

 இரு விவரங்கள் புரியவில்லை. ௧.)<இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன.> வழக்கு தொடுத்ததே தி.மு.க. சட்டத்துறைச் செயலர்தான். அப்படியானால்  தலைவர் கலைஞருக்கே தெரியாமல் வழக்கா? செய்தித்தாள்கள் மூலம்தான் அறிந்து கொண்டாரா?
௨. < தமிழ்நாட்டின் நன்மைக்காக எதையும் வலியுறுத்த தி.மு.க. தயாராக இருக்கிறது  > உணவகங்களில் உணவு தயார் என்ற விளம்பரப் பலகை போல் செய்தி உள்ளது. வலியுறுத்த வேண்டியதுதானே. குடும்பத் தேவைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழர் நலன் தேவைகளை வலியுறுத்துவேன் என மறைமுக வெற்று மிரட்டலா?  குடியரசுத் தலைவரையே வீட்டிற்குவரவழைக்கும் ஏதோ செல்வாக்கு இருப்பினும்  தாயகத் தமிழர் நலனுக்கும் ஈழத்தமிழர் நலனுக்கும் பிற அயலகத் தமிழர் நலனுக்கும் என்ன வலியுறுத்தி உள்ளார்? பழைய பெருங்காய ஏனத்தைக் காட்டக்கூடாது.
எனவே, ஆயத்த(தயார்) பூச்சாண்டி காட்டாமல் உடனே தமிழர் நலனில்  - தமிழர் நலன் என்றால் ,  வீட்டுத் தமிழர் நலன் அன்று ; நாட்டுத் தமிழர் நலனில் - கருத்து செலுத்த கலைஞர் முன்வரவேண்டும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி!எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

தமிழக நலனுக்காக திமுக எதையும் வலியுறுத்தத் தயார் : கருணாநிதி

தமிழக நலனுக்காக திமுக மத்திய அரசிடம் எதையும் வலியுறுத்த தயாராக இருப்பதாக திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
சென்னையில் இன்று நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் திமுக தலைவர் கருணாநிதி.
அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும் கருணாநிதி அளித்த பதிலும் :
செய்தியாளர் : முக்கிய தீர்மானமாக டிசம்பர் 18ந்தேதியன்று அறப்போர் ஆர்ப்பாட்டத்தை அறிவித்திருக்கிறீர்கள். அந்தப் போராட்டம் எப்படி இருக்கும்?
கருணாநிதி :  அறப்போர் ஆர்ப்பாட்டம் அமைதியாக முழக்கம் செய்கின்ற போராட்டமாக இருக்கும். அந்தந்த பகுதிகளுக்கேற்றவாறு, அமைதியான முறையில் முழக்கம் செய்தும்,
சட்டம் ஒழுங்கு இவற்றுக்குக் கட்டுப்பட்டும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். குக்கிராமங்களில் கூட கழகக் கொடிகளோடும் - கழகத்தினர் இந்தப் போராட்டங்களில் ஆங்காங்கு ஈடுபடுவார்கள்.
செய்தியாளர் : சென்னையில் நடைபெறும் அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் நேரடியாக நீங்கள் கலந்து கொள்கிறீர்களா?
கருணாநிதி : இன்னும் அதைப் பற்றி முடிவு செய்யவில்லை.
செய்தியாளர் :- அ.தி.மு.க. அரசு, எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் இரட்டை இலை நினைவுச் சின்னத்தை பெரிதாக வைத்திருக்கிறார்கள். அரசு செலவில் அது கட்டப்பட்டதாகச் சொல்கிறார்கள். அதைப் பற்றி எதுவும் தீர்மானத்தில் இடம் பெறவில்லையே?
கருணாநிதி : இதுபற்றி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறுவதாக செய்திகள் வந்துள்ளன. எனவே அதிலே நான் எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை.
செய்தியாளர் : மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தி.மு.க., ஏன் மத்திய அரசிடம் கூடுதல் மின்சாரத்தைப் பெற்று தமிழகத்திற்குக் கொடுக்கக் கூடாது?
கருணாநிதி : மின்சாரத்தை ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குக் கொண்டு வருவதற்கு, அதற்கான வழிவகைகள் முன்கூட்டியே செய்திருக்க வேண்டும்.
மத்தியிலே இருக்கும் மின்சாரத்தை தென்கோடியிலே உள்ள ஒரு மாநிலத்திற்குக் கொண்டு வருவதென்றால், அதற்கான ஏற்பாடுகள் எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த ஏற்பாடுகளை உடனடியாக செய்து விட முடியாது. தமிழகத்திற்கு மத்திய அரசிடமிருந்து மின்சாரம் பெற வேண்டுமென்றால், அந்த மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை முன் கூட்டியே செய்திட வேண்டும்.
செய்தியாளர் : அந்த ஏற்பாடுகளைச் செய்ய வேண்டுமென்று அதிமுக ஆட்சியாளர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். அந்த நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுமென்று தி.மு.க., மத்திய அரசிடம் வலியுறுத்துமா?
கருணாநிதி : நிச்சயமாக - தமிழ்நாட்டின் நன்மைக்காக எதையும் வலியுறுத்த தி.மு.க. தயாராக இருக்கிறது.
செய்தியாளர் :- வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மதவாதக் கட்சிகள் ஆட்சிக்கு வருவதைத் தடுக்க, தமிழகத்திலே உள்ள மதசார்பற்ற கட்சிகளையும், தி.மு.க. கூட்டணியிலே தற்போது இல்லாத கட்சிகளையும் ஒன்றிணைத்து, ஒரு பலமான கூட்டணியை அமைக்கும் முயற்சியிலே நீங்கள் ஈடுபடுவீர்களா?
கருணாநிதி : நீங்கள் சொன்ன மதச்சார்பற்ற கட்சிகள் ஒருங்கிணைந்து அந்த முயற்சியிலே ஈடுபட்டால், அதனை நாங்கள் ஊக்கப்படுத்துவோம் என்று பதிலளித்தார்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக