காதல்-கலப்புத் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காதல்-கலப்புத் திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 14 டிசம்பர், 2012

ஓடும் தொடரியில் திருமணம்


புதுடில்லி:முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.

"ஆயிரம் காலத்து பயிர்' என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் என, பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது தான்.முன்னெப்போதும் இது போன்ற சம்பவம் நடந்திராது என்று கூறும் அளவிற்கான சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை மதியம், டில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் ஒன்று புறப்பட்டது. இருக்கை வசதி கொண்ட அந்த ரயிலில், எதிரெதிர் இருக்கையில், ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும், முன் பின் சந்தித்திராதவர்கள். ரயில் புறப்பட துவங்கியதும், ஒருவருக்கொருவர் பேசத் துவங்கினர். அந்த இளைஞன், லக்னோ செல்ல டிக்கெட் எடுத்திருந்தார்; இளம்பெண், கான்பூர் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார்.

"நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று பேசத் துவங்கிய இந்த ஜோடி, ஒரு மணி நேரத்திற்குள், தங்களின் பணி, குடும்பம், அந்தரங்கம், ஆசாபாசம், திருமண விருப்பம், எதிர்காலம் என, அனைத்தையும் பேசித் தீர்த்து விட்டது. இதை, அருகில் இருந்த சக பயணிகள், பார்த்துக் கொண்டே இருந்தனர்.இரண்டு மணி நேரம் முடிந்த நிலையில், அலிகார் ஸ்டேஷனை, ரயில் அடைந்தது. இளம் ஜோடி, மிகவும் நெருக்கமாகி விட்டது; இருவருக்கிடையே, அன்பும், காதலும், பாசமும் வெள்ளமென பாய்ந்து கொண்டிருந்தது.எதிரே இருந்தவர்களை சாட்சியாக வைத்து, திருமணம் செய்து கொள்ள, அந்த ஜோடி விரும்பியது. பெட்டியில் இருந்த மற்றவர்களிடம், இது குறித்து வேண்டுகோள் விடுத்தது.

முகத்தில் மகிழ்ச்சியுடனும், கண்களில் கனவுகளுடன் இருந்த அந்த இளம் ஜோடியின் வேண்டுகோளை மறுக்க முடியாத, சக பயணிகள், திருமணம் நடத்தி வைக்க முன்வந்தனர். அங்கிருந்தவர்களில் ஒருவர், "இன்னும் சில நிமிடங்களில், முகூர்த்த நேரம் முடியப் போகிறது' என, கூறியதும், ஓடும் ரயிலிலேயே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அவர்களில் ஒருவரே, புரோகிதர் போல அமர்ந்து, மந்திரங்கள் சொல்ல, பயணிகளின் உற்சாக குரல், கைத்தட்டலில், மோதிரம் அணிந்து, அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.இந்த தகவல், எப்படியோ, அடுத்து வந்த, துண்ட்லா ரயில்வே ஸ்டேஷனுக்கு தெரிய வந்தது. அந்த ஸ்டேஷனில், ரயில் நின்றதும், இளம் ஜோடி இருந்த ரயில் பெட்டிக்குள், போலீசார் நுழைந்தனர். "ரயிலிலேயே திருமணம் செய்து கொண்டது யார்?' என கேட்டனர்.

இருவரும், தம் விருப்பத்தையும், திருமணம் செய்து கொண்டதையும், தாங்கள், "மேஜர்' என்பதையும், ஆதாரங்களுடன் போலீசாரிடம் கூறினர். முறைப்படி மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டதாகவும்; தாங்கள், கணவன் - மனைவி ஆகி விட்டதாகவும் கூறினர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாத போலீசார், வேறு வழியின்றி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிச் சென்றனர்.இளம் ஜோடியாக ரயிலில் ஏறி, திருமண ஜோடியாக இறங்கிச் சென்றதை, அந்த ரயில் பயணிகள், ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஜோடி இறங்கி சென்று, நீண்ட நேரம் ஆன பிறகும், இப்படியும் நடக்குமா என, பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது."கனவு போல, அந்த ஜோடியின் திருமணம் நடந்து முடிந்தது' என, சக பயணிகள், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
 

திங்கள், 3 டிசம்பர், 2012

காதல்-கலப்புத் திருமணத்தை எள்ளி நகையாடி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது: வைகோ

காதல்-கலப்பு  த் திருமணத்தை எள்ளி நகையாடி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது: வைகோ அறிக்கை
காதல்-கலப்பு திருமணத்தை எள்ளி நகையாடி குற்றம்சாட்டுவதை ஏற்க முடியாது: வைகோ அறிக்கை
சென்னை, டிச. 3-
தமிழ்நாட்டில் பொறுப்பான ஒரு அரசியல் கட்சியின் தலைவரான ராமதாஸ், காதலைச் சாடுவதோடு, கலப்புத் திருமணங்களையும் எள்ளி நகையாடி, குற்றம்சாட்டுவது, எவ்விதத்திலும் ஏற்கத்தக்கது அல்ல என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தர்மபுரி மாவட்டத்தில் இருவேறு சாதிகளைச் சேர்ந்த இரண்டு இளம் உள்ளங்கள், காதல் வயப்பட்டு திருமணம் செய்து கொண்டதால், நாய்க்கன்கொட்டாயைச் சேர்ந்த பெண்ணின் தந்தை நாகராஜ், மனம் உடைந்து தற்கொலை செய்து கொண்டது துயரச் சம்பவம் ஆகும். ஆனால், இதற்கு அப்பகுதி வாழ் தலித் மக்கள் பொறுப்பாளிகள் அல்ல.
அதற்காக, காதல் திருமணங்களை எள்ளி நகையாடுவதும், கலப்புத் திருமணங்களை நிந்திப்பதும், மிகவும் தவறான போக்கு ஆகும். கல்வியிலும், சமூக நிலையிலும், தங்களுடைய முயற்சியாலும், உழைப்பாலும் முன்னேறி வரும் தலித் சமூகத்து இளம் தலைமுறையினறை ஏளனம் செய்வதும், பரிகசிப்பதும் பண்புடைமை ஆகாது.
அதிலும், தலித் மக்களுக்காக மட்டும் அன்றி, தமிழ்ச் சமுதாயத்துக்காகப் பாடுபடுகின்ற ஒரு இயக்கத்தைக் கொச்சைப்படுத்தி, திரும்பத் திரும்ப அவர்களை இழிவுபடுத்திப் பேசுவது, மிகவும் கவலை தருகிறது. எனவே, சமய ஒற்றுமைக்கும், சமூக நீதிக்கும் இந்தியாவுக்கே வழிகாட்டி வந்து உள்ள தமிழ்நாட்டின் பெருமைக்குக் குந்தகம் நேராமல், சகோதரத்துவத்துக்குப் பங்கம் ஏற்பட்டு விடாமல், பொது அமைதியைப் பாதுகாக்க வேண்டியது, அனைவரின் கடமை ஆகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.