ஞாயிறு, 9 டிசம்பர், 2012

கழிவுநீரைத் தூய்மையாக்க ஆசுதிரியத் தொழில் நுட்பம்

கழிவு நீரை ச்  சுத்திகரிக்க ஆசுதிரிய த் தொழில்நுட்பம்! ரூ.55 கோடியில் கருப்பு நீர் நிறம்  மாறும் வித்தை

கோவை : கோவை மாநகராட்சியில் வெளியேற்றப்படும் 23 மில்லியன் லிட்டர் கழிவு நீர், ரூ.55 கோடி செலவில் ஆஸ்திரிய தொழில் நுட்பத்தின் உதவியுடன் தெள்ளத்தெளிவான தண்ணீராக மாற்றப்படுகிறது. தென் இந்திய அளவில் முதல் முறையாக, சுத்திகரிக்கப்படும் இந்த சுத்தமான நீரை வாங்க ஆளில்லாததால், அத்தனை தண்ணீரும் நொய்யலாற்றில் வீணாக வெளியேற்றப்பட்டு வருகிறது.



கோவை மாநகராட்சியில் 35 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், ஓட்டல்கள், திருமண மண்டபங்களில் இருந்து, தினசரி 23 மில்லியன் லிட்டர் (எம்.எல்.டி) கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது. மீதமுள்ள வார்டுகளுக்கு தற்போது ஜவகர்லால்நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டத்தின் கீழ், பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.கழிவு நீரை சுத்திகரிக்க, உக்கடம், நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூர் ஆகிய மூன்று இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்ட மாநகராட்சி திட்டமிட்டது. இதில், உக்கடம் பகுதியில் உள்ள கழிவு நீர் பண்ணை மட்டுமே தற்போது செயல்பட்டு வருகிறது. நஞ்சுண்டாபுரம் மற்றும் ஒண்டிப்புதூர் சுத்திகரிப்பு நிலையங்கள் விரைவில் செயல்படவுள்ளன. நஞ்சுண்டாபுரத்தில் தினசரி 40 மில்லியன் லிட்டர் கழிவு நீரும், ஒண்டிப்புதூரில் 60 எம்.எல்.டி., கழிவு நீரும் சுத்திகரிக்கப்படவுள்ளது.உக்கடம் பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் 55 கோடி ரூபாய் செலவில், அமைக்கப்பட்டுள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில், 35 வார்டுகளில் இருந்து வெளியேறும் 23 மில்லியன் லிட்டர் கழிவு நீர் தினமும் சுத்திகரிக்கப்படுகிறது.

"சீக்குவன்ஷியல் பேட்ச் ரியாக்டர்' எனும் ஆஸ்திரிய நாட்டின் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி, இங்கு கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. தமிழகத்தில் கோவை மாநகராட்சியில் மட்டுமே கழிவுநீர் சுத்திகரிப்புத் திட்டம் இவ்வளவு சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது.

சுத்திகரிப்பு நடப்பது எப்படி? :


லாரிகள், குழாய்கள் மூலமாக உக்கடம் கழிவு நீர் பண்ணைக்கு கருப்பாக பாய்ந்து வரும் கழிவு நீரில் கலந்துள்ள 20 மி.மீ., அளவுள்ள சிறு குப்பைகள், "ஸ்க்ரீன் சேம்பரில்' வடிகட்டப்பட்டு, தனியாக வெளியேற்றப்படுகிறது. இதன் பின் அதே வேகத்துடன் ஒன்பது மெகாசைஸ் பம்புகள் கொண்ட "வெட்வெல்' எனும் பாதாள அறைக்குள் நுழைகிறது. கழிவு நீர் உள்ளே பாய்ந்து வரும் வேகத்துக்கு ஏற்ப, தானாக இயங்கி நீரை வெளியேற்றும் விதத்தில் பம்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. (காலை வேளைகளில் கழிவு நீரின் அளவு அதிகமிருக்கும்).
இதன் பின் அனைத்து நீரும் ஒரு "மெகாசைஸ்' குழாய் வழியாக, பிரதான சுத்திகரிப்பு தொட்டிக்கு செலுத்தப்படுகிறது. கழிவு நீரில் மீதமிருக்கும் ஆறு மி.மீ., அளவு வரையிலான சிறு குப்பைகள் வடிகட்டி தனியாக வெளியேற்றப்படுகிறது. குப்பை நீக்கப்பட்ட பிசிறில்லாத கழிவு நீர், இரண்டு "கிரிட் சேம்பர்களுக்குள்' செலுத்தப்படுகிறது. 75 சதவீத துகள்கள் இந்த கிரிட் சேம்பர்களில் அகற்றப்படுகின்றன.

கழிவு நீரை பிரிக்கும் ஆக்சிஜன்! :

தொட்டிகளில் காத்திருக்கும் கழிவு நீரை, "புளோயர்' அறையில் இருந்து தொட்டியின் அடிப்பகுதி வழியாக மேலோக்கி அதிவேகத்தில் பாயும் ஆக்சிஜன், கழிவு நீரில் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கிறது(ஏரேஷன்). இந்த நல்ல பாக்டீரியாக்கள், கழிவு நீரின் மூலக்கூறுகளை பிரித்து துளியும் பிசிறில்லாத தண்ணீராக மாற்றுகிறது.
ஆக்சிஜன் பாய்ச்சுவது நிறுத்தப்படும் போது, சிறு கழிவுகள் அனைத்தும் தொட்டியின் கீழ்ப்பகுதியில் "செட்டில்' ஆகி விடுகிறது. மேல்மட்டத்தில் உள்ள சுத்தமான தண்ணீர், குழாய் வழியாக கீழ்ப்பகுதியில் உள்ள தொட்டிகளில் பாய்கிறது. இங்கு தண்ணீரில் குளோரின் பாய்ச்சி, நுண்கிருமிகள் அழிக்கப்படுகின்றன. இதன் இறுதியில் கழிவு நீரின் கருப்பு கலர் நீங்கி வெளியாகும் சுத்தமான தண்ணீர், நொய்யல் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.

2040ம் ஆண்டு வரை சுத்திகரிக்க வசதி! கிரிட் சேம்பர்களில் இருந்து, குழாய்கள் வழியாக நான்கு "ஏரேஷன் தொட்டிகளில்' ஆர்ப்பரிப்புடன் வந்து விழுகிறது கழிவு நீர். 70 எம்.எல்.டி., கொள்ளளவு வசதியுள்ள இந்த நான்கு தொட்டிகளில், இரண்டு தொட்டிகள் எதிர்கால தேவைக்காக தயாராக வைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் கழிவு நீரின் அளவு பல மடங்கு அதிகரிக்கும் என்பதால், 2040ம் ஆண்டு வரை சுத்திகரிக்கும் வசதியுடன் இந்த தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதற்குப் பின்பும் தேவை என்றால், சுத்திகரிப்பு நிலையத்தை விரிவுபடுத்தவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

கண்காணிக்க "ஸ்காடா'! :

இவ்வளவு பணிகளையும் "ஸ்காடா' (குதணீஞுணூதிடிண்ணிணூதூ இணிணtணூணிடூ அணஞீ ஈச்tச் அஞிணுதடிண்டிtடிணிண) முறையில், கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி கண்காணிக்கவும், இயக்கவும் முடிகிறது. தினசரி எத்தனை லிட்டர் கழிவு நீர் உள்ளே வருகிறது, எவ்வளவு குப்பை வடிகட்டப்படுகிறது, இறுதியில் எவ்வளவு சுத்தமான தண்ணீர் வெளியாகிறது... இப்படி ஒவ்வொரு விஷயத்தையும் "ஸ்காடா' பார்த்துக் கொள்ளும். ஏதாவது ஒரு மோட்டார் பழுது என்றாலோ, மின்தடை ஏற்பட்டாலோ கம்ப்யூட்டர் திரையில் "அலாரம்' அடித்து எச்சரிக்கிறது ஸ்காடா. இதற்காக, 24 மணி நேரமும் ஒரு ஊழியர் கட்டுப்பாட்டு அறையில் இருந்தாக வேண்டும் என்பதால், மூன்று ஷிப்டுகளாக ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
தினமும் 3,200 லிட்டர் டீசல் செலவு! :


24 மணி நேரமும் சுத்திகரிப்பு நிலையத்தை இயக்கி, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை வெளியேற்றியாக வேண்டும். மின்வெட்டு அமலுக்கு வந்தபின் மாநகராட்சிக்கு செலவு எகிறுகிறது. மின்தடை இடைவெளியில்லாமல் சுத்திகரிப்பு பணியை மேற்கொள்ள, 1,250 கிலோ வாட் திறன் கொண்ட ஜெனரேட்டர் பயன்படுத்தப்படுகிறது. இந்த ஜெனரேட்டரை இயக்க, ஒரு மணி நேரத்துக்கு 200 லிட்டர் டீசல் வீதம், தினமும் 16 மணி நேர மின்வெட்டுக்கு, 3,200 லிட்டர் டீசல் செலவாகிறது!

கழிவு நீரின் தரம் அறிய மாசுக்கட்டுப்பாடு"லேப்' :

சுத்தம் செய்தால் மட்டும் போதாது. மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் சூழல் பாதுகாப்பு விதிமுறைகளையும் பின்பற்றியாக வேண்டும். இதற்காக, கழிவு நீரில் கலந்துள்ள "கெமிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட்'(சி.ஓ.டி) மற்றும் "பயோ கெமிக்கல் ஆக்சிஜன் டிமாண்ட்'(பி.ஓ.டி) உள்ளிட்டவற்றை ஆய்வு செய்ய, தனியாக "லேப்' வசதியும் உண்டு. சி.ஓ.டி., மற்றும் பி.ஓ.டி., இரண்டும், மாசுக்கட்டுப்பாடு வாரிய அளவுகளை விட மிகவும் குறைவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர் விற்பனைக்கு தயார்: மாநகராட்சி கமிஷனர்
மாநகராட்சி கமிஷனர் பொன்னுசாமி கூறியதாவது: கோவை மாநகராட்சியின் கழிவு நீர் சுத்திகரிப்பு, சமீபத்தில் டில்லியில் நடந்த தேசிய அளவிலான சுற்றுச்சூழல் கருத்தரங்கில் பாராட்டு பெற்றது. நாற்றம் இல்லாத, சுத்தமான தண்ணீராக மாற்றப்படும் கழிவு நீரை, இறுதியில் நொய்யல் ஆற்றில்தான் திறந்து விடுகிறோம். இறுதியில் சூலூர் குளத்தை சென்றடைகிறது. இந்த தண்ணீரை வாகனங்கள், மெஷின்களை கழுவவோ, தோட்டம், புல்வெளி பராமரிக்கவோ பயன்படுத்தலாம்.

ஆர்வமுள்ளவர்கள் முன் வந்தால் குறைந்த விலைக்கு விற்பனை செய்யத் தயார். இதன் மூலம் நல்ல தண்ணீரை மிச்சப்படுத்தலாம். தற்போது தினமும் 23 எம்.எல்.டி., தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது. பில்லூர் இரண்டாம் குடிநீர் திட்டம் வந்த பின் இது அதிகரிக்கும். நஞ்சுண்டாபுரம், ஒண்டிப்புதூர் கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டங்களும் செயல்பாட்டுக்கு வந்து விட்டால், சுத்திகரிக்கப்படாத ஒரு சொட்டு கழிவு நீர் கூட கோவையில் இருந்து வெளியேறாது.இவ்வாறு, பொன்னுசாமி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக