திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருமணம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

அ) அறிவியல்ஆர்வத்தைஏற்படுத்தினேன்! ஆ.) திருமணமானால் உரிமையரை மாற்றுங்கள்!

http://img.dinamalar.com/data/largenew/Tamil_News_large_80367220130914215016.jpg

அறிவியல்ஆர்வத்தைஏற்படுத்தினேன்!


வீணான பொருட்களை விளையாட்டு பொருட்களாக மாற்றி, குழந்தைகளிடம் அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்தும், அரவிந்த் குப்தா:

என் பெற்றோர், படிப்பறிவு அற்றவர்கள். எனவே, வறுமையிலும் என்னை, ஐ.ஐ.டி., வரை படிக்க வைத்தனர். 1970ல் கான்பூர் ஐ.ஐ.டி., யில், "எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்' படித்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்றினேன். மேற்கொண்டு படிக்க, ஓராண்டு விடுமுறை எடுத்து, மத்திய பிரதேச மாநிலம் சென்றேன்.அங்கு, குழந்தைகளுக்கு அறிவியலை கற்றுத் தருவது குறித்த திட்டத்தில் பங்கேற்றேன். கிராம பள்ளிகளில், அறிவியல் சோதனையை செய்து காட்ட, உபகரணங்கள் இருக்காது. எனவே, "வேஸ்ட்' என, பலராலும் தூக்கி எறியப்படும் பழைய செய்தித் தாள், பாட்டில்கள், சைக்கிள் டியூப், மேக்னட், பென்சில், பேட்டரி, தீக்குச்சிகள் மூலம், பல அறிவியல் விளையாட்டு பொருட்களை, குழந்தைகளிடம் நேரடியாக உருவாக்கி காட்டி, அவர்களையும் உருவாக்க செய்தேன்.
இச்செய்முறை சோதனைகள் மூலம், குழந்தைகளிடம் அறிவியலை எளிதாக புரிய வைத்தேன். இப்பணியே, பிற்காலத்தில் முழு நேரமாக மாறி கடந்த, 30 ஆண்டுகளாக எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், செய்து வருகிறேன். குழந்தைகளுக்காக உருவாக்கிய ஒவ்வொரு விளையாட்டிலும், ஒரு அறிவியல் கோட்பாடு இருக்கும்.இதை என், "வெப்சைட்'டிலிருந்து இலவசமாக, "டவுண்லோடு' செய்யலாம். தற்போது புனேயில் உள்ள, "இன்டர் யுனிவர்சிட்டி சென்டர் பார் அஸ்ட்ரானமி அண்ட் அஸ்ட்ரோ பிசிக்ஸ்' அமைப்பின், குழந்தைகள் அறிவியல் மையத்தில் பணியாற்றுகிறேன்.கிராமத்து குழந்தைகளிடம், அறிவியலை பிரபலப் படுத்தியதற்காக, 1988ல் தேசிய விருதும்; 2001ல் ஐ.ஐ.டி.,யின் சிறந்த முன்னாள் மாணவர் விருதும்; 2008ல் இந்தியன் நேஷனல் சயின்ஸ் அகடமியின், "இந்திரா காந்தி' விருதும் கிடைத்தது. எனினும், பரிசுக்கும், பாராட்டுக்கும் அப்பாற்பட்டு, தொடர்ந்து இச்சேவையில், ஈடுபட்டு வருகிறேன். தொடர்புக்கு:www.aravindguptatoys.com.

திருமணமானால்  உரிமையரை மாற்றுங்கள்!

முதலீடு மற்றும் இன்ஷூரன்ஸ்களில், அடுத்த உரிமையாளரை மாற்ற வேண்டியதன் அவசியத்தை கூறும், இராசன்: நான், நிதி ஆலோசகராக, சென்னையில் பணியாற்றுகிறேன். இன்றைய காலத்தில் பங்கு முதலீடு, மியூச்சுவல் பண்ட், பிராவிடெண்ட் பண்ட், வங்கி சேமிப்பு, இன்ஷூரன்ஸ் என, பல வழிகளில் பணத்தை முதலீடு செய்கிறோம். அச்சமயத்தில், நமக்கு நெருக்கமாக இருப்பவர் அல்லது பெற்றோர் பெயரை, "நாமினி'யாக நியமிக்கிறோம்.சூழ்நிலை மாறும் போது அல்லது திருமணத்திற்கு பின், நம்மையே நம்பியிருக்கும் துணைவர்களின் பெயரை, நாமினியாக மாற்ற மறந்து விடுகிறோம். குறிப்பாக, திருமணத்திற்கு முன் செய்யப்படும் முதலீடுகளில், இருபாலருமே, தம் பெற்றோரையே, நாமினி யாக நியமிப்பர்.திருமணத்திற்கு பின்னும், இதே நிலை தொடரும். அப்போது, ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், நாமினியாக நியமிக்கப்பட்டவரிடமே, இழப்பீடு அல்லது முதலீட்டிற்கான மொத்த தொகையும் தரப்படும். நாமினியாக உங்கள் துணைவர் இல்லாத பட்சத்தில், உங்களின் வாரிசு என்கிற தகுதி பெற்றோர், சகோதரர், சகோதரி போன்றவர்களுக்கு சட்டப்படி போய்விடும்.அச்சமயத்தில், குடும்பத்தினருக்கும், உங்கள் துணைக்கும் பிரச்னை இல்லாதிருந்தால், உங்கள் துணைக்கு பணம் கிடைக்க உதவுவர். மாறாக, இருவருக்கும் இடையே, பிரச்னை இருந்தால், உங்கள் துணைக்கு முழுப் பணமும் சென்று சேர்வதில், சிக்கல் ஏற்படும். எந்த பணமும் கிடைக்காதபட்சத்தில், நீதிமன்றத்தை நாடவேண்டியிருக்கும். எனவே, திருமணம் ஆனதும், துணையாளரை நாமினியாக நியமிக்க வேண்டும்.நாமினியை மாற்றும் நடைமுறை மிக எளிதாகவும், எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்ற தக்கதாகவுமே, மேற்கூறிய அனைத்து முதலீடுகளில் இருக்கும். நாமினி மாற்றத்திற்கு, எவ்வித கூடுதல் ஆவணமும் தேவையில்லை. விண்ணப்ப படிவத்தில் கையெழுத்திட்டாலே போதும். இதன் மூலம், பிற்காலத்தில், பணத்தை, வேறு யாரும் பெறுவது, முற்றிலும் தடுக்கப்படும்.

செவ்வாய், 18 ஜூன், 2013

உடலுறவே திருமணம்தான் - தீர்ப்பு

தாலி கட்டி, மாலை மாற்றி,  தீ வலம் வந்தால்தான் திருமணமா?


கோவையைச் சேர்ந்த, பாத்திமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு:எனக்கும், அன்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும், முஸ்லிம் வழக்கப்படி, 1994ம் ஆண்டு, திருமணம் நடந்தது. எங்களுக்கு, இரண்டு குழந்தைகள். 1999ம் ஆண்டு, எங்களை விட்டு விட்டு, அன்வர் சென்று விட்டார். அவர், வியாபாரம் செய்து வருகிறார். மாதம், 25 ஆயிரம் ரூபாய், சம்பாதிக்கிறார்.ஜீவனாம்சம் கேட்டு, கோவை, குடும்ப நல கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தேன். என் கணவர் தாக்கல் செய்த பதில் மனுவில், "பாத்திமா, என் மனைவி அல்ல; குழந்தைகள் எனக்கு பிறக்கவில்லை; முஸ்லிம் வழக்கப்படி, திருமணம் நடந்திருந்தால், ம‹தியில் உள்ள, அதற்கான பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும். மனுவை, தள்ளுபடி செய்ய வேண்டும்' என, கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த, குடும்ப நல கோர்ட், "இரண்டு குழந்தைகளும், ஜீவனாம்சம் பெற உரிமை உள்ளது. ஆவண சாட்சியங்கள் மூலம், திருமணம் நிரூபிக்கப்படவில்லை. எனவே, ஜீவனாம்சம் பெற, பாத்திமாவுக்கு உரிமையில்லை' என, உத்தரவிட்டது. குடும்ப நல கோர்ட் உத்தரவை, என்னைப் பொருத்தவரை, ரத்து செய்ய வேண்டும். ஜீவனாம்சம் பெற, எனக்கு உரிமையுள்ளது என, உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த, நீதிபதி கர்ணன் பிறப்பித்த உத்தரவு:திருமணம் தொடர்பாக, அனைத்து சடங்குகளையும் பின்பற்றினால் தான், அது, செல்லத்தக்க திருமணம் என்கிற பொருள் அல்ல. இந்த வழக்கைப் பொருத்தவரை, பாரம்பரிய சடங்குகள் பின்பற்றப்படவில்லை; ஆனால், இரண்டாவது குழந்தை பிறக்கும் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புதல் தெரிவித்து, மருத்துவமனை ஆவணங்களில், கணவர் கையெழுத்திட்டுள்ளார்.எனவே, குழந்தைகள், முறைதவறி பிறந்தது என்கிற கேள்வி எழவில்லை. ஏனென்றால், இரண்டாவது குழந்தை பிறப்பின் போது, அறுவை சிகிச்சைக்கு ஒப்புக் கொண்டு, கணவர் கையெழுத்திட்டுள்ளதால், பாத்திமா தனது மனைவி என்பதை, கணவர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார். திருமண சடங்குகள் என்பது வெறும் சம்பிரதாயம்; கண்டிப்பு இல்லை.

ஒரு பெண், 18 வயதை அடைந்து, 21 வயது நிரம்பிய ஆணுடன், செக்ஸ் உறவு கொண்டு, அதன் மூலம், கர்ப்பமுற்றால், அந்தப் பெண்ணை, மனைவி என்றும், ஆணை, கணவன் என்றும் கருத வேண்டும். அந்தப் பெண், கர்ப்பம் அடையவில்லை என்றாலும் கூட, அவர்களது உறவுக்கான ஆவண சாட்சியம் இருந்தால், கணவன், மனைவி என்றே அவர்கள் கருதப்படுவர்.உடல் ரீதியான தொடர்புக்குப் பின், அவர்கள் கருத்து வேற்றுமையால் பிரிந்து விட முடிவெடுத்தால், கோர்ட் மூலம் விவாகரத்து பெறாமல், வேறு திருமணம் செய்ய முடியாது. தாலி கட்டுவது, மாலை, மோதிரம், மாற்றிக் கொள்வது, அக்னி ”ற்றி வருவது, திருமணத்தை பதிவு செய்வது, இவை எல்லாம், சமூகத்தை திருப்திபடுத்த, ஒவ்வொருவரும் தங்கள் மத வழக்கப்படி செய்து கொள்பவை.இருந்தாலும், எந்த ஜோடியும், சட்டப்படி திருமண வயதை எட்டிய பின், உடல் ரீதியான தொடர்பில் ஈடுபட்டால், அதை, செல்லத்தக்க திருமணம் என கருத வேண்டும். அவர்களை, கணவன், மனைவி என, கருத வேண்டும்.மத வழக்கப்படி, சடங்குகளை பின்பற்றி நடத்தப்படும் திருமணங்களிலும், உடல் ரீதியான தொடர்பு நடக்கவில்லை என்றால், அந்த திருமணம் தோல்வியடைந்து, ரத்தாகும் நிலை ஏற்படும். எனவே, செல்லத்தக்க திருமணத்தில், சட்ட ரீதியான முக்கிய அம்சம், கணவன், மனைவிக்கு இடையேயான, உடல் ரீதியான தொடர்பு.இந்த வழக்கைப் பொருத்தவரை, மனுதாரருக்கு, ஜீவனாம்ச தொகை, மாதம், 500 ரூபாய், 2000ம் ஆண்டு முதல், வழங்கப்பட வேண்டும். மூன்று மாதங்களுக்குள், பாக்கித் தொகையை, கணவர் வழங்க வேண்டும். அதன்பின், மாதம் தோறும், வழங்க வேண்டும்.இவ்வாறு, நீதிபதி கர்ணன் உத்தரவிட்டுள்ளார்.

வெள்ளி, 14 டிசம்பர், 2012

ஓடும் தொடரியில் திருமணம்


புதுடில்லி:முன் பின் சந்தித்திராத இளம் ஜோடி, ரயிலில் சந்தித்து பேசிய, இரண்டு மணி நேரத்திலேயே, ஒருவரை ஒருவர் பிடித்துப் போய், திருமணமும் செய்து கொண்ட சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.

"ஆயிரம் காலத்து பயிர்' என, வர்ணிக்கப்படும் திருமண உறவில், இரு உள்ளங்களை இணைக்க, ஜாதி, மதம், ஜாதகம், பொருத்தம் என, பலவும் பார்க்கப்படுகின்றன. ஆனால், பார்த்த சில மணி நேரத்திலேயே, இரு மனமும் ஒன்றாகி, திருமண பந்தம் வரை சென்றுள்ளது, உண்மையில் ஆச்சர்யமானது தான்.முன்னெப்போதும் இது போன்ற சம்பவம் நடந்திராது என்று கூறும் அளவிற்கான சம்பவம், டில்லி ரயிலில் நடந்துள்ளது.

கடந்த செவ்வாய் கிழமை மதியம், டில்லி, நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து, ரயில் ஒன்று புறப்பட்டது. இருக்கை வசதி கொண்ட அந்த ரயிலில், எதிரெதிர் இருக்கையில், ஒரு இளம் பெண்ணும், இளைஞனும் அமர்ந்திருந்தனர். அவர்கள் இருவரும், முன் பின் சந்தித்திராதவர்கள். ரயில் புறப்பட துவங்கியதும், ஒருவருக்கொருவர் பேசத் துவங்கினர். அந்த இளைஞன், லக்னோ செல்ல டிக்கெட் எடுத்திருந்தார்; இளம்பெண், கான்பூர் செல்ல டிக்கெட் வாங்கியிருந்தார்.

"நீங்கள் எங்கே செல்கிறீர்கள்?' என்று பேசத் துவங்கிய இந்த ஜோடி, ஒரு மணி நேரத்திற்குள், தங்களின் பணி, குடும்பம், அந்தரங்கம், ஆசாபாசம், திருமண விருப்பம், எதிர்காலம் என, அனைத்தையும் பேசித் தீர்த்து விட்டது. இதை, அருகில் இருந்த சக பயணிகள், பார்த்துக் கொண்டே இருந்தனர்.இரண்டு மணி நேரம் முடிந்த நிலையில், அலிகார் ஸ்டேஷனை, ரயில் அடைந்தது. இளம் ஜோடி, மிகவும் நெருக்கமாகி விட்டது; இருவருக்கிடையே, அன்பும், காதலும், பாசமும் வெள்ளமென பாய்ந்து கொண்டிருந்தது.எதிரே இருந்தவர்களை சாட்சியாக வைத்து, திருமணம் செய்து கொள்ள, அந்த ஜோடி விரும்பியது. பெட்டியில் இருந்த மற்றவர்களிடம், இது குறித்து வேண்டுகோள் விடுத்தது.

முகத்தில் மகிழ்ச்சியுடனும், கண்களில் கனவுகளுடன் இருந்த அந்த இளம் ஜோடியின் வேண்டுகோளை மறுக்க முடியாத, சக பயணிகள், திருமணம் நடத்தி வைக்க முன்வந்தனர். அங்கிருந்தவர்களில் ஒருவர், "இன்னும் சில நிமிடங்களில், முகூர்த்த நேரம் முடியப் போகிறது' என, கூறியதும், ஓடும் ரயிலிலேயே, திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அவர்களில் ஒருவரே, புரோகிதர் போல அமர்ந்து, மந்திரங்கள் சொல்ல, பயணிகளின் உற்சாக குரல், கைத்தட்டலில், மோதிரம் அணிந்து, அந்த ஜோடி திருமணம் செய்து கொண்டது.இந்த தகவல், எப்படியோ, அடுத்து வந்த, துண்ட்லா ரயில்வே ஸ்டேஷனுக்கு தெரிய வந்தது. அந்த ஸ்டேஷனில், ரயில் நின்றதும், இளம் ஜோடி இருந்த ரயில் பெட்டிக்குள், போலீசார் நுழைந்தனர். "ரயிலிலேயே திருமணம் செய்து கொண்டது யார்?' என கேட்டனர்.

இருவரும், தம் விருப்பத்தையும், திருமணம் செய்து கொண்டதையும், தாங்கள், "மேஜர்' என்பதையும், ஆதாரங்களுடன் போலீசாரிடம் கூறினர். முறைப்படி மாலை மாற்றி, திருமணம் செய்து கொண்டதாகவும்; தாங்கள், கணவன் - மனைவி ஆகி விட்டதாகவும் கூறினர். அவர்களை ஒன்றும் செய்ய முடியாத போலீசார், வேறு வழியின்றி, அடுத்த ஸ்டேஷனில் இறங்கிச் சென்றனர்.இளம் ஜோடியாக ரயிலில் ஏறி, திருமண ஜோடியாக இறங்கிச் சென்றதை, அந்த ரயில் பயணிகள், ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த ஜோடி இறங்கி சென்று, நீண்ட நேரம் ஆன பிறகும், இப்படியும் நடக்குமா என, பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது."கனவு போல, அந்த ஜோடியின் திருமணம் நடந்து முடிந்தது' என, சக பயணிகள், நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.
 

ஞாயிறு, 29 ஜூலை, 2012

நிமிர வைத்த உழைப்பு!


"ஒரு ரூபாய்க்கு சப்பாத்தி விற்கிறோம்!'

குறைந்த விலையில் சப்பாத்தி விற்கும், மகளிர் சுய உதவிக் குழுவைச் சேர்ந்த மாரியம்மா: ஓசூர் அருகில் உள்ள, கொத்தகொண்டப்பள்ளி கிராமத்தில், 400க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கிறோம். கிராமப் பகுதி என்பதால், படித்தவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இங்கு, ஆண்களும், பெண்களும் விவசாயக் கூலி வேலைகளுக்குச் சென்று கொண்டிருந்தோம். வறுமையான சூழ்நிலையிலும், குழந்தைகளை படிக்க வைக்க நினைத்தோம். ஆனால், எங்களுக்கு சாப்பாட்டிற்கே கஷ்டமாயிற்றே... அதனால், கிராமப் பெண்கள், சுயமாக தொழில் செய்து முன்னேற முடிவெடுத்தோம். அந்த சமயத்தில் தான், "வேணுகோபால் சேவைகள் அறக்கட்டளை' சார்பில், பல கிராம மக்களுக்கு, உதவி களும், பெண்களுக்கு இலவசப் பயிற்சிகளையும் செய்து வருவது பற்றி அறிந்து, உதவி யை நாடினோம். எங்கள் ஆர்வத்தைப் புரிந்து கொண்ட அவர்கள், அனைத்துப் பெண்களுக்கும் தரமாக சப்பாத்தி தயாரிப்பது குறித்தும், அதன் வியாபார உத்திகளையும் சொல்லிக் கொடுத்து, இமாச்சலப் பிரதேசத்திலிருந்து பயிற்சியாளர்களை அழைத்து வந்து, இலவசமாக ஒரு மாதம் பயிற்சி அளித்தனர். பயிற்சி முடித்த பின், நம்பிக்கையுடன் தொழிலில் இறங்கினோம். வசதியுள்ளவர்கள் ஒரு, "செட்' சப்பாத்திக்கு, 30 ரூபாய் வரை செலவு செய்து சாப்பிடுவர். ஆனால், ஏழைகள்? அதனால், ஒரு ரூபாய்க்கு சப்பாத்தி விற்கலாம் என, முடிவு செய்து, செயலில் இறங்கினோம். வீட்டில் அதிகளவில், சப்பாத்திகளை செய்ய முடியாது என்பதால், சிறிய தொழிற்கூடத்தை நாங்களே அமைத்தோம். இதற்காக வங்கியில், நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கி, எங்களுக்குச் சொந்தமான நிலத்திலேயே, ஆறு கட்டடங்களை வெற்றிகரமாகக் கட்டி முடித்தோம். எங்கள் பகுதியில் உள்ள, ஆறு சுய உதவிக் குழுக்களையும் சேர்த்து, 110 பெண்கள் இத்தொழிலில் இன்று வரை, ஒற்றுமையாகச் செயல்பட்டு வருகிறோம். குறைந்த விலைக்கு சப்பாத்தி விற்பதால், பல கூலித் தொழிலாளிகள் வயிறும், மனமும் நிறைந்து, வாயாரப் பாராட்டுகின்றனர். அந்தப் பாராட்டு தான், எங்களை மேலும் சிறப்பாகச் செயல்பட வைக்கிறது.

     வீழ்த்திய திருமணம்; நிமிர வைத்த உழைப்பு!    

பால்ய விவாகத்தால் பாதிக்கப்பட்டு, இன்று சாதனைப் பெண்ணாக உருவெடுத்துள்ள கல்பனா: நான் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே, பெற்றோர் எனக்கு திருமணம் செய்து விட்டனர். கணவருடன் மும்பையில் குடியேறிய என்னை, புகுந்த வீட்டினர் கொடுமைப்படுத்தினர். எதிர்த்துப் போராட முடியாத வயதில், தற்கொலைக்கு முயன்றேன்; ஆனால், காப்பாற்றப்பட்டேன். கணவர் குடும்பத்து ஆண்களால், பாலியல் தொந்தரவுகளுக்கும் ஆளானேன். என்னைப் பார்க்க வந்த தந்தை, நான் அனுபவிக்கும் கொடுமைகளைப் பார்த்து தாங்க முடியாமல், அவருடனேயே அழைத்துச் சென்று விட்டார். பெற்றோர் வீட்டிற்கு வந்தும், எனக்கு நிம்மதி இல்லை. அக்கம் பக்கத்தினர், என்னைப் பற்றி அவதூறாகப் பேச துவங்கினர். மீண்டும் தற்கொலைக்கு முயன்றேன்; என் அத்தை காப்பாற்றி விட்டார். என் இரண்டாவது தற்கொலை முயற்சி, வாழ்வின் மீது பிடிப்பை ஏற்படுத்தியது. 16 வயதில் மீண்டும், மும்பைக்கே வந்து விட்டேன். ஒரு நிறுவனத்தில், தையல் இயந்திரங்களை இயக்கும் பணியில் வேலைக்குச் சேர்ந்தேன். என் தங்கை எனக்கு, துணையாக வந்திருந்தாள். நான் கஷ்டத்தில் இருந்த சமயம் தான், பணத்தின் மதிப்பை உணர ஆரம்பித்தேன். வங்கியில் கடன் பெற்று, சிறிய அளவில், "பர்னிச்சர்கள்' வாங்கி விற்கும் தொழில் செய்தேன். இந்த தொழில், எனக்கு இரண்டாவது திருமண பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. என் நண்பர் நடத்தி வந்த சிறிய நிறுவனம், நஷ்டத்தில் இயங்கியதால், மூட தீர்மானித்தார். அந்நிறுவனத்தை நான் நடத்துகிறேன் என, நம்பிக்கையுடன் வாங்கினேன். இரவு, பகல் பாராமல் தொழிலாளர்களுடன் உழைத்தேன். என் கஷ்டம் வீண் போகவில்லை. இன்று என், "கமானி ட்யூப்ஸ்' நிறுவனம் மூலம், ஆண்டிற்கு, 100 கோடி ரூபாய் சம்பாதிக்கிறேன். சிறந்த தொழிலதிபருக்கான ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளேன். பிறரின் கேலி பேச்சுகளுக்கு செவி கொடுக்காமல், உறுதியான உள்ளத்துடன் எந்த வேலையை செய்தாலும் வெற்றி பெறலாம்; அது தான், என் வெற்றி ரகசியம்.

வெள்ளி, 22 அக்டோபர், 2010

ஜீவனாம்சம் கோர என்ன தகுதி வேண்டும்? - உச்ச நீதிமன்றம் தீர்ப்பு


புதுதில்லி,அக்.21: கணவன் -மனைவி போல சேர்ந்து வாழ்ந்தோம் என்று கூறி, அதற்காக ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.தமிழ்நாட்டின் கோயமுத்தூரைச் சேர்ந்த டி. பச்சையம்மாள் என்பவர் டி. வேலுசாமி என்பவருடன் கணவன் - மனைவி போல வாழ்ந்ததாகவும், வேலுசாமி இப்போது தன்னைப் புறக்கணிப்பதால் தனக்கு மாதம்தோறும் ஜீவனாம்சம் தருமாறு அவருக்கு உத்தரவிடவேண்டும் என்றும் வழக்கு தொடுத்தார்.உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, டி.எஸ். தாக்கூர் அடங்கிய பெஞ்ச் மனுவை விசாரித்தது.வீட்டுக்குள் நடக்கும் கொடுமைகளிலிருந்து பெண்களை அதிலும் குறிப்பாக வீட்டு வேலை செய்யும் பெண்களைப் பாதுகாக்கும் 2005-வது சட்டத்தின் அடிப்படையில் பச்சையம்மாள் வழக்கு தொடுத்திருந்தார்.பச்சையம்மாள் தனக்கு மனைவி அல்ல என்றும் லட்சுமி என்பவரே தன்னுடைய மனைவி என்றும் எதிர் வழக்காடிய வேலுசாமி வாதாடினார்.வார விடுமுறைகளில் சேர்ந்து வாழ்வதோ, வாரத்துக்கு ஒரு நாள் ஒரே வீட்டில் தங்கியிருப்பதோ, கணவன் - மனைவிக்கு இடையிலான தாம்பத்ய உறவுக்கு ஈடாகக் கருதப்பட மாட்டாது என்று கூறிய நீதிபதிகள் , கணவனிடமிருந்து ஜீவனாம்சம் கோரும் மனைவியர் 4 அம்சங்களைப் பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும் என்றனர்.1. ஒரு ஆணும் பெண்ணும் வாழ்க்கைத் துணைவர்கள் என்று சமூகம் ஏற்க வேண்டும்.2. இருவரும் திருமண வயதை எட்டியிருக்க வேண்டும்.3. இருவரும் திருமணம் செய்துகொள்வதற்கேற்ற தகுதிகளுடன் இருக்க வேண்டும்.4. இருவரும் விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும்; அதன் மூலம் அவர்களை கணவன், மனைவியராக சமூகம் அங்கீகரிக்க வேண்டும்.இந்த நாலும் இல்லாமல் ஒரு ஆடவனின் அழைப்பை ஏற்று அவருடன் கூடி வாழ்ந்தோம் என்று கூறுவதையெல்லாம் ஏற்று அவர்களுக்கு ஜீவனாம்சம் தர உத்தரவிட முடியாது என்று நீதிபதிகள் உறுதிபடத் தெரிவித்தனர்.இந்த வழக்கில் வேலுசாமி கூறுகிறார்போல அவருக்கு லட்சுமி என்ற முதல் மனைவி இருந்தாரா என்றும் விசாரிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கருத்துக்கள்

முரண்பாடான தீர்ப்பு. ஆண், பெண் இணைவைத் தவிர, திருமணத்திற்குரிய தகுதி என எதை உச்ச நீதிமன்றம் கருதுகிறது. விருப்பப்பட்டே சில காலம் ஒன்றாகத் தங்கியிருக்க வேண்டும் என்றால் விருப்பப்படுவது போல் நடித்துச் சேர்ந்திருந்து பின் கை கழுவுவோரை எப்பட்டியலில் சேர்ப்பது? இன்றைய சமூகத்தில் யார் யார் சேரந்து வாழ்கிறார்கள் எனப் பார்த்து ஏற்பு வழங்குவது வேலையல்ல. திருமண நம்பிக்கையில் சேர்ந்துவாழ்ந்து பின்னர் ஏமாற்றப்படுவோருக்கு வாழ்ககைப் படிச் செலவு உதவுவது தவறல்ல. நீதிபதிகள் எதையும் ஆராய்ந்து தீர்ப்பு வழங்குதல் வேண்டும். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By Ilakkuvanar Thiruvalluvan
10/22/2010 5:05:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்