செவ்வாய், 11 டிசம்பர், 2012

தமிழகத்தில் தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டம் : முதல்வ

தமிழகத்தில் தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டம் : முதல்வர்

தமிழகத்தில் 8 மாவட்டங்களில்  6,475 எக்டேர் பரப்பில் தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டத்தினை செயல்படுத்த தமிழக முதல்வர் நிதி ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2001-2006 ஆட்சிக் காலத்தில், துவங்கப்பட்ட தேக்கு மரத் தோட்டங்கள் ஏற்படுத்தும் திட்டத்தினை மேலும் செம்மைப்படுத்தும் வகையில், 39 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், 19,075 எக்டேர் பரப்பளவில் தேக்கு மரங்கள் நடவு செய்யப்படும் என்றும், ஏற்கெனவே பயிரிடப்பட்டுள்ள தேக்கு மரங்களை பராமரிப்பதற்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்து இருந்தார்.
இதன்படி, முதற்கட்டமாக 6 கோடியே 8 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில், கடலூர், கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், பெரம்பலூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 6,475 எக்டேர் பரப்பில் தேக்கு மரங்கள் வளர்க்கும் திட்டத்தினை நடப்பாண்டில் செயல்படுத்தவும், ஏற்கெனவே பயிரிடப்பட்டுள்ள தேக்கு மரத் தோட்டங்களை பராமரிப்பதற்கென 2 கோடியே 97 லட்சத்து 88 ஆயிரம் ரூபாயினை விடுவித்தும் முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
அரசின் இந்த நடவடிக்கைகள் மூலம், தமிழ்நாட்டின் தேக்கு மரத் தேவை  பூர்த்தி செய்யப்படுவதுடன், ஆறு மற்றும் கால்வாய் கரைப் பகுதிகளில் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, அவற்றின் கரைப் பகுதிகள் பலப்படுத்த வழிவகை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக