வியாழன், 13 டிசம்பர், 2012

காதல் மனைவியின் மீதே தீண்டாமைப் பிரிவில் வழக்கு

சேர்ந்து வாழ மறுத்ததால் காதல் மனைவியின் மீதே தீண்டாமைப் பிரிவில் வழக்கு: நெல்லையில் பரபரப்பு

திருநெல்வேலி பேட்டை அருகே, காதலித்துத் திருமணம் செய்து கொண்ட ஒருவர் மனவேறுபாடால் பிரிந்து சென்ற தன் மனைவி தன்னுடன் சேர்ந்து வாழ வரவில்லை என்பதற்காக, தீண்டாமைப் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளார். இது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை பேட்டை அருகே உள்ள நரசிங்க நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக்(30). இவரும், பாளையங்கோட்டையை அடுத்த ரெட்டியார்பட்டியைச் சேர்ந்த கோமதிச்செல்வி என்பவரும் கடந்த 2008ம் ஆண்டு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 3 வயதில் ஒரு மகனும் உள்ளார். காதலித்து திருமணம் செய்துகொண்டாலும், அடிக்கடி இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனவேறுபாட்டால், கார்த்திக்கிடம் சண்டை போட்டுக்கொண்டு கோமதிச்செல்வி தன் தாய்வீட்டுக்குச் சென்றுவிட்டார். இவர்களின் மகன் கார்த்திக்கிடமே வளர்ந்துவந்தார்.
தனது மனைவியை அடிக்கடி சென்று பார்த்து, தன்னுடம் சேர்ந்து வாழ வருமாறு கார்த்திக் அழைத்துள்ளார். ஆனால், அவர் மறுத்துவிட்டாராம். இந்நிலையில், பாளையங்கோட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு வந்திருந்த கோமதிச்செல்வியை தங்கள் மகனையாவது பார்த்துவிட்டுச் செல் என்று கூறி மீண்டும் அழைத்துள்ளார். அப்போது கோமதிச்செல்வியும், அவரது தாயார் முத்துலட்சுமி, அக்கா அனு ஆகியோர் கார்த்திக்கை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதுகுறித்து பாளையங்கோட்டை போலீஸில் புகார் செய்தார் கார்த்திக். ஆனால், போலீஸார் இதனை வாங்க மறுத்துள்ளனர். எனவே இதுகுறித்து திருநெல்வேலி முதலாவது குற்றவியல் நடுவர் மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் கார்த்திக். மனுவை விசாரித்த நீதிபதி ராமலிங்கம், இந்த வழக்கை தீண்டாமைப் பிரிவில் பதிவு செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டார். இதன்படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கணவர் கொடுத்த புகாரில் காதல் மனைவியின் மீதும் அவரது குடும்பத்தார் மீதும் தீண்டாமைப் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக