புதன், 12 டிசம்பர், 2012

"அம்மா' என்ற புதிய உயிரினம்!

சொல்கிறார்கள்

"அம்மா' என்ற புதிய உயிரினம்!

கடலில் புதிய உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ள மகேஷ்: நீலகிரி மாவட்டம், கம்பட்டி அட்டி மலைக் கிராமம் தான், என் சொந்த ஊர்.கிராமத்திலேயே படித்த இளைஞர்களில் நானும் ஒருவன். அது மட்டுமின்றி, தமிழ் வழிக் கல்வி யிலேயே முதுகலைக் கல்வி பயின்றதுடன், ஆராய்ச்சிப் படிப்பிற்காக கடல்வாழ் உயிரினங்களைப் பற்றிய ஆராய்ச்சியில், ஒரு புதிய கடல் வாழ் உயிரினத்தைக் கண்டுபிடித்துள்ளேன்.என் குடும்பம் சாதாரண விவசாயக் குடும்பம்.

நான் வசித்தது மலைக் கிராமம் என்பதால், பள்ளி, கல்லூரிக்கு சென்று வர, சிரமமாக இருக்கும்.இருந்தும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தால், முதுகலைப் பட்டம் பெற்றேன். என் கிராமத்தில், நான் தான் முதல் பட்டதாரி. எம்.எஸ்.சி., மைக்ரோபயாலஜி முடித்து, பிஎச்.டி., ஆய்விற்காக, கேரள பல்கலையில் சேர்ந்தேன். அப்போது, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவரும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும், புதிய கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி, பல ஆய்வுகளை மேற்கொள்ள வந்திருந்தனர்.

அவர்களின் வழிகாட்டுதலின் படி, அரபிக் கடலில் ஆய்வு மேற்கொண்டேன். அப்போது தான், புதிய உயிரினத்தைக் கண்டறிந்தேன். இதை, "ஐசி. ஜெட்' என்ற கமிட்டி அங்கீகரிக்க வேண்டும். அதற்காக, மிகவும் சிரமப்பட்டேன். பலவித ஆய்வுகளுக்குப் பின், வாஷிங்டனின், "ஜகீஸ்' அறிவியல் இதழ் ஏற்று, அங்கீகரித்துப் பாராட்டியது. இதில் இடம் பிடிப்பது அவ்வளவு எளிதல்ல.

நான் கண்டுபிடித்திருக்கும் உயிரினம், பார்ப்பதற்கு மண்புழு போன்று இருக்கும். கடலில் உள்ள, "சல்பைடு' உயிரினத்தை அழித்து விடும். கடுமையான நோய்களையும் எதிர்க்கும், பாக்டீரியாக்களைக் கொண்டது.நான் கண்டுபிடித்த இந்த உயிரினத்திற்கு, என்ன பெயர் வைக்கலாம் என, யோசித்தேன். நான் படிக்கும் போது, இலவச சைக்கிள் கொடுத்து உதவிய, முதல்வர் ஜெயலலிதாவை அனைவரும், "அம்மா' என, அழைப்பது நினைவிற்கு வர, அதையே பெயராக சூட்டி விட்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக