திங்கள், 10 டிசம்பர், 2012

சிறுவர் இதழ்களில் காலத்திற்கேற்ற மாறுதல்கள் வேண்டும்

"சிறுவர் இதழ்களில் காலத்திற்கேற்ற மாறுதல்கள் வேண்டும்'

கடந்த, 1949 முதல் 1954 வரையிலான காலம், சிறுவர் இதழ்களின் பொற்காலம். அக்கால இடைவெளியில் பாலர் மலர், பூஞ்சோலை, அணில், சங்கு, டமாரம், அம்புலிமாமா, ஜில்ஜில், கரும்பு, டிங்டாங் மற்றும் கண்ணன் போன்ற சிறுவர் இதழ்கள் அதிகமாக வெளிவந்தன.இத்தகைய இதழ்களில் பணியாற்றிய ஜே.எம்.சாலி, கலைச்செழியன், மாயூரம், ரமணியன், இனியவன், அம்பை, சத்யன், தேவாசிர்வாதம், வள்ளியப்பா மற்றும் கிருஷ்ணமூர்த்தி போன்றோர் குழந்தைகளுக்கான இதழ்களில் பல சரித்திரங்களை படைத்ததாக எழுத்தாளர் இளையவன் கூறுகிறார்.

, "இலக்கியச்சாரல்' இளையவன்:

இதுவரை, 69 விருதுகள் பெற்ற, "இலக்கியச்சாரல்' இளையவன் என அழைக்கப்படும், பாலசுப்பிரமணியத்துக்கு கலைமாமணி விருது கிடைத்த போது, தனது குருநாதர் வள்ளியப்பாவுக்கு வழங்கப்படாத காரணத்தால், அதை வாங்க மறுத்தார்.தற்போதுள்ள சிறுவர் இதழ்கள் குறித்தும், அதில் கொண்டு வரப்பட வேண்டிய மாற்றங்கள், அவரிடம் பேசியதில் இருந்து...கடந்த, 1954க்குப் பின் சிறுவர் இலக்கிய உலகில் என்ன நடந்தது?
கடந்த, 1954 வரை, நிறைய சிறுவர் இதழ்கள் வெளிவந்தன. 1979 முதல், 1987 வரை வெளிவந்த "ரத்தினபாலா' சிறுவர் இதழ், வண்ண பட கதைகளுடன் வெளிவந்தது. அது சிறுவர் இதழ் உலகின், மறுமலர்ச்சியாக அமைந்தது. அதே போல் "பாலமித்ரா' இதழும், காலத்திற்கேற்ற அறிவியல் தொடர்பான பல கதைகளை சிறுவர்களிடையே கொண்டு சென்றது."ரத்தினபாலா' ஆசிரியர் வாசுதேவன். 1987ல் இறந்ததும், இதழ் நின்று போனது. அதன் பிறகு, நாளிதழ்கள், வாரத்திற்கு ஒரு முறை இலவச இணைப்பாக, சிறுவர் இதழை வெளியிட்டன.

அவற்றில், ஒன்றிரண்டு தவிர மற்றவை பக்கத்தை நிரப்ப, கதை மற்றும் துணுக்குகளை சேர்க்கின்றன. தற்போது வெளியாகும் சில சிறுவர் இதழ்களும், குறிப்பிடும்படி இல்லை.

இன்றைய தேவை எதுவாக இருக்கும்?

இன்றைய சிறுவர்கள் திறமைசாலிகள். அவர்களுக்கேற்ற அறிவியல் சார்ந்ததாகவும், நீதி போதனைகளை எடுத்துரைக்கும் வகையிலும் சிறுவர் இதழ்கள் வெளிவரவேண்டும். ராமாயணம், மகாபாரதம், அனுமன் கதைகள் மற்றும் கிருஷ்ணலீலா போன்றவை "அனிமேஷனில்' வெளிவர துவங்கியதும் அவை உலகம் முழுக்க, பேசப்பட்டும், பார்க்கப்பட்டும் வருகின்றன. பாட்டி, ராமாயண கதை சொல்லும் போது கேட்காத சிறுவர்கள், அதை இப்போது "அனிமேஷனில்' பார்த்து கைதட்டி மகிழ்கின்றனர். "ஹாரிபாட்டர்' கதைகள் மூலமாக வெளிநாட்டினர், கோடிக்கணக்கில் பணத்தை வாரி குவிக்கின்றனர்.அதை, அம்புலிமாமாவிலேயே பல ஆண்டுகளுக்கு முன் நாம் வெளியிட்டுள்ளோம். காலத்திற்கேற்ற அறிவியலுடன் சேர்ந்ததாலேயே "ஹாரிபாட்டர்' இப்போது புதுமையாக தெரிகிறது.முன்பெல்லாம், பள்ளிகளில் வகுப்பில் நீதிபோதனை கதைகள் கூறுவது, பாடத்திட்டத்தில் ஒரு பிரிவாகவே இருந்தது. இன்று எத்தனை பள்ளிகளில் நீதிபோதனை கதைகள் கூறப்படுகின்றன?
வீட்டில் இருக்க வேண்டிய தாத்தாவும் பாட்டியும், முதியோர் இல்லத்திலும், வெளிநாட்டிலும் இருக்கின்றனர். இதனால், குழந்தைகளை நல்வழியில் கொண்டு செல்லும் நீதிபோதனை கதைகள் அவர்களை சென்றடையவில்லை. சிறுவர்களை சீரழிப்பதில், சினிமாவும், டிவியும் கைகோர்த்து போட்டி போட்டு செயல்படுகின்றன. எளிதில் சிறுவர்களை சென்றடையும் இவை, கலாசார சீரழிவையே வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

எழுத படிக்க சிரமப்படுகின்றனர்:


இன்று சிறுவர்கள் படிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனரா?தற்போதுள்ள சிறுவர்கள் படக்கதைகளையே அதிகம் விரும்புகின்றனர். அதை "தினமலர்' சிறுவர் மலர், புரிந்து செயல்படுகிறது. அதே போல் தினமணியில் வெளியாகும் சிறுவர் பகுதிகளும் வரவேற்கத் தக்கதாக உள்ளது.தீமை செய்தால் தண்டனை கிடைக்கும் என்பதை, சூரபத்மன் மற்றும் கம்சவதம் போன்றவை மூலம், சிறுவர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்.இன்று பல சிறுவர்கள், ஆங்கிலத்தை காட்டிலும், தமிழில் எழுத படிக்க நிறைய சிரமப்படுகின்றனர். அவர்களுக்கு படிக்கும் ஆர்வத்தை சிறுவர் இதழ்கள் தூண்ட வேண்டும்."டிங்டாங்' இதழின் ஆசிரியர் வெங்கட்ராமன், 1950ல் குழந்தை எழுத்தாளர் சங்கத்தை நிறுவினார். அது குழந்தை எழுத்தாளர்களுக்கு சிறந்த வழிகாட்டியாக இருந்தது. இப்போது அச்சங்கம் முடங்கிவிட்டது. குழந்தை எழுத்தாளர்களை வளர்க்க, பள்ளியில் எழுத்து தொடர்பான நிறைய போட்டிகளை அறிவித்து, விருது வழங்கி கவுரவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக